Friday, September 04, 2020

40 வருடங்கள்... 123 திருட்டு வழக்குகள்...

 ‘எங்கள் ஆருயிர் அண்ணன், திருடர்குலத் திலகம், ஸ்டைல் பாண்டியின் 100-வது திருட்டுவிழா வெற்றிபெறவும், மேலும் பல வீடுகளில் திருடி 1,000-வது திருட்டுவிழாவைக் கொண்டாடவும் மனமார வாழ்த்துகிறோம்’ என்று விழுதுகள் போஸ்டர் அடிக்கத் தகுதியானவர் இவர். காரணம், திருட்டில் இவர் அடித்த செஞ்சுரி!


அந்தத் ‘திருடன்’ பெயர் கமலக்கண்ணன், வயது அறுபது. சீனியர் சிட்டிசன்! இப்படியான கட்டுரைகள் எழுதும்போது, அறுபது வயதான ஒரு நபரை ‘அவன் இவன்’ என்று எழுதுவதா என்ற குழப்பம் இருக்கும். சரி... ஊழல் செய்யும் அரசியல்வாதிகளையும், ஊரையே உலையில் போட்டுச் சம்பாதித்து வெளிநாடுகளுக்கு உல்லாசமாகப் பறந்துகொண்டிருக்கும் தொழிலதிபர்களையும் ‘அவர் இவர்’ என்று எழுதும்போது, ஒப்பீட்டளவில் ‘சிறிய’ திருட்டுகள் செய்கிற, மாட்டிக்கொண்டு தண்டனை அனுபவிக்கிற ‘திருடரை’ மட்டும் மரியாதைக் குறைவாகப் பேசுவானேன்..!Get Noticed!


`கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில், பள்ளிக்கரணை காவல்நிலைய எல்லைக்குட் பட்ட பகுதியில், ஏழு திருட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்தன. பொதுமக்களின் பீதி அதிகரிக்கவே, திருட்டு வழக்கில் தொடர்புடையவர்களைக் கைதுசெய்ய பரங்கிமலை துணை கமிஷனர் பிரபாகரன் உத்தரவிட்டார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாம்வின்சென்ட் தலைமையிலான போலீஸ் டீம் விசாரணையில் களமிறங்கியது.


ஒரு வீட்டின் முன்பிருந்த சி.சி.டி.வி பதிவில், திருடன் செல்லும் டூ வீலரில் ஃப்ளோரசன்ட் பச்சையில் ஒரு Tag தொங்கிக்கொண்டிருந்திருக் கிறது. நம்பரும் தெளிவாகத் தெரியாததால், Tag மட்டும்தான் க்ளூ. அதைவைத்து தனிப்படை விசாரித்ததில், சோழிங்கநல்லூரிலுள்ள ஒரு குற்றவாளியின் டூ வீலர் அது என்று தெரிய வந்துள்ளது. பிறகு, சிட்லபாக்கத்தில் நடந்த வாகனச் சோதனையில் அந்த டூ வீலர் சிக்கியது. ‘Dio - Get Noticed’ என்று எழுதப்பட்ட அந்த Tag-ஐ நோட்டீஸ் செய்த போலீஸார் மேலும் விசாரிக்க, அவர் பெயர் குமார் என்று தெரியவந்தது. ‘‘நீங்க சொல்ற திருட்டு நான் பண்ணினதுதான். ஆனா, பெரும்பாக்கம் டாக்டர் வீட்ல திருடினது நான் மட்டுமில்லை. அது கமலக்கண்ணன்கூடசேர்ந்து பண்ணினது” என்று குமார் சொல்லவும்தான், கமலக்கண்ணன் பக்கம் போலீஸின் ரூட் திரும்பியது.1980-ம் ஆண்டு பதிவான முதல் வழக்கு தொடங்கி, 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் வரை 123 திருட்டு வழக்குகள் கமலக்கண்ணன்மீது உள்ளன. ``என்னோட இருபது வயசுல ஒரு லெதர் கம்பெனியில வேலை பார்த்துக் கிட்டிருந்தேன். அங்கே திருடினப்போ பல்லாவரம் போலீஸார் அரெஸ்ட் பண்ணி கேஸ் போட்டாங்க. விருகம்பாக்கம், கோடம்பாக்கம், மடிப்பாக்கம், கொரட்டூர், சங்கர் நகர், ஆதம்பாக்கம், சேலையூர்னு சென்னை முழுக்க எல்லா ஸ்டேஷன்லயும்... ஏன், தமிழ்நாடு பூராவும் என்மேல திருட்டு கேஸ் இருக்கு. டாக்டர் வீட்ல 40 சவரனுக்கு மேல திருடிட்டு நடந்தேதான் போனேன். என் ஸ்டைல்ல தனியாவே திருடியிருந்தாக்கூட மாட்டியிருக்க மாட்டேன். இவனால சிக்கிட்டேன்...” என்று கமலக்கண்ணன் கைகாட்டியது குமாரை.


சைக்கிள்... பூதக்கண்ணாடி... மரக்கட்டை!


அந்த ‘டாக்டர் வீட்டுத் திருட்டு’ நடந்தது பெரும்பாக்கம், ராதாநகரில். அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண் மருத்துவர் கொரோனா பணியில் இருந்ததால், வீட்டிலுள்ளவர்களை உறவினர்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டுத் தனியாக இருந்துள்ளார். இரவுப் பணிக்காக அவர் கிளம்பிச் செல்வதை கவனித்த கமலக்கண்ணன், குமாரையும் கூட்டுச் சேர்த்துக்கொண்டு அடுத்த அரை மணி நேரத்தில் பூட்டை உடைத்து உள்ளே சென்றார். மூன்று மணி நேரம் பொறுமையாக வீட்டுக்குள்ளிருந்து நிதானமாகத் திருடியிருக்கிறார்.


கமலக்கண்ணனின் திருட்டு ஸ்டைல் வித்தியாசமானது. திருடச் செல்லும்போது எக்காரணம் கொண்டும் பைக்கில் செல்ல மாட்டார், சைக்கிள்தான்! ஒன்றிரண்டு கிலோமீட்டர்களுக்கு முன்பே சைக்கிளை நிறுத்திவிட்டு, நடந்துபோவதே வழக்கம். வீட்டின் வெளியில் தொங்கும் பூட்டுகள்தான் கமலக்கண்ணனின் வீக்னெஸ். பார்த்தாலே கை பரபரவென்று அரிக்க ஆரம்பித்துவிடும். கையுறை களை அணிந்துகொள்வார். நகை மதிப்பீட்டாளர்கள் பயன்படுத்தும் பூதக்கண்ணாடியை இடுப்பிலேயே வைத்திருப்பார். நகையிலிருக்கும் முத்திரைகளைச் சரிபார்த்து, ‘ஒரிஜினல் நகைகள்தான்; கவரிங் அல்ல’ என்பதை உறுதிப்படுத்திக்கொள்வார். `கவரிங் நகைகளைத் திருடுவது தன் தொழிலுக்கு இழுக்கு’ என்று கருதும் கமலக்கண்ணன், திருடர்களில் ஒரு ‘கவரி’மான்!எப்போதும் சிறிய அளவிலான ஒரு மரக்கட்டையைக் கையில் எடுத்துச் செல்வார். அந்த மரக்கட்டையைக் கதவின் நிலைக்கும் கதவுக்கும் இடையிலுள்ள ‘கேப்பில்’ விட்டு நெம்புவார். பின்னர், அதே கட்டையைக்கொண்டு பூட்டின் மேற்பகுதியில் நுழைத்து நெம்புவார். அழுத்துகிற அழுத்தில் பூட்டின் லாக் உடைந்துவிடும். ‘அதெப்படி?’ என்று சந்தேகித்த போலீஸார், கமலக்கண்ணனிடம் ஒரு பூட்டைக் கொடுத்திருக்கிறார்கள். ஐந்தே நிமிடத்தில் அந்தப் பூட்டை போலீஸாரின் கண்முன்னால் கமலக்கண்ணன் உடைத்துக் காட்டியிருக்கிறார். ‘இரும்புக்கம்பியைக் கையில் வைத்திருந்தால் போலீஸாரிடம் சிக்கிக்கொள்வேன் என்பதால் இந்த மரக்கட்டை டெக்னிக்’ என்று சிரித்திருக்கிறார் கமலக்கண்ணன்.


திருடிய நகைகளை விற்கும்போது தான் சிக்காமலிருக்க, கூட்டாளிகளிடம் கொடுத்தனுப்பி விற்பாராம். இவரது திருட்டுப் பழக்கத்தால் முதல் மனைவி பிரிந்துவிட, இன்னொரு திருமணம். அவரும் பிரிந்துவிட, இன்னொரு காதல். அவரும் பிரிந்து சென்றுவிட, கமலக்கண்ணனுக்கு திருட்டுத் தொழில்மீது மட்டுமே காதல். சிறையில் பழகிய நண்பர்களின் வீடுகளில் தங்கிக்கொள்வாராம். போலீஸிடம் சிக்காமலிருக்க, ஸ்மார்ட்போன்கூடப் பயன்படுத்துவதில்லை. `சாகும் வரை திருடணும் சார்... வெளியில இருக்கறதைவிட ஜெயில்ல இருக்கறதுதான் பாதுகாப்பா இருக்கு’ என்று போலீஸாரிடம் கூறியிருக்கிறார் கமலக்கண்ணன்.


குற்றத்தில் கிடைக்கும் தடயங்கள், சில சமயம் சுவாரஸ்யமான செய்திகளைக்கொண்டிருக்கும். போலீஸிடம் கமலக்கண்ணன் மாட்டிக்கொள்ள காரணமாக இருந்த கூட்டாளியின் டூ வீலரில் அப்படி ஒரு செய்தி இருந்தது. அதன் பின்புறத்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது:


‘‘தன்னைக் காயப்படுத்திக்கொள்ளாமல் எந்த மனிதனும் முன்னேற முடியாது. ஏனெனில் கல்லும் அவனே... சிற்பியும் அவனே!’’


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment