Saturday, September 12, 2020

காக்கிக்குள் சாதி! - அனைவருக்கும் கிடைக்குமா நீதி?

சம்பவம் 1: சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ரெளடி துரைமுத்துவைப் பிடிக்கச் சென்ற காவலர் சுப்பிரமணியன், வெடிகுண்டு வீசிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவத்தில் துரைமுத்துவும் பலியானார். துரைமுத்து இறப்புக்கு நெல்லை ஆயுதப்படை காவலர் சுடலைமுத்து என்பவர் சாதிப் பாசத்துடன், சர்ச்சைக்குரிய வாசகங்களை ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் செயலைத் தொடர்ந்து, சுடலைமுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன் பிறகும் காவலர்களில் சிலரது சாதிப் பாசம் தணியவில்லை. நாங்குநேரி காவல்நிலையத்தில் காவலராக இருக்கும் சுப்பிரமணியன் என்பவர் துரைமுத்துவின் புகைப்படத்தைத் தன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்திருந்தார். இதையறிந்த அதிகாரிகள் செப்டம்பர் 8-ம் தேதி அவரைப் பணியிட மாற்றம் செய்தார்கள்.


சம்பவம் 2: கடந்த மார்ச் மாதம், செங்கம் அருகே குப்பநத்தம் பேருந்து நிறுத்தத்தில், தன் சகோதரியின் தோழியிடம் பேசிய இளைஞர் கௌதம பிரியனை சாதிரீதியாக இழிவாகப் பேசி, கட்டிவைத்துத் தாக்கினார் செங்கம் காவல் நிலையத்தில் காவலராக இருக்கும் ஈஸ்வரன்.


சம்பவம் 3: கடந்த மே மாதம், கோவை பாரதியார் பல்கலைக் கழகம் அருகில், வீட்டிலிருந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஈஸ்வரனை வடவள்ளி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் சாதிரீதியாக இழிவுபடுத்திப் பேசியதுடன், கையை உடைத்தார்.


சம்பவம் 4: சில மாதங்களுக்கு முன்னர் ராஜபாளையம் அருகே சோமையாபுரத்தில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த தலைமனை என்பவரின் வீட்டில் புகுந்த ரெளடிகள், வீட்டை உடைத்து சொத்துகளைச் சேதப்படுத்தினர். இதற்கு ராஜபாளையம் தாலுகா காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பார்த்திபன் உடந்தை என்று பல்வேறு அமைப்புகள் புகார் தெரிவித்தன.


சம்பவம் 5: 2018-ல் தேனி மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றும் கணேஷ், ரகு ஆகியோர் தங்களை இன்ஸ்பெக்டர் சீனிவாசன் சாதிரீதியாக இழிவுபடுத்தினார் என்று எஸ்.பி-யிடம் புகார் செய்தார்கள். நடவடிக்கை இல்லை. இதனால், மதுரை ஐ.ஜி அலுவலகத்துக்கு முன் தற்கொலைக்கு முயன்றார்கள். சஸ்பெண்ட் செய்யப்பட்ட இருவரும், உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.


இவையெல்லாம் சில சாம்பிள் சம்பவங்களே. தமிழகத்தில் அனைத்து மாவட்ட காவல்துறையிலும் சிறிதும் பெரிதுமாகச் சாதியப் பாகுபாடுகள் இருந்தாலும், தென் மாவட்டங்களில்தான் இது அதிகம். பணி நியமனம், பணியிட மாற்றம், பதவி உயர்வு தொடங்கி அன்றாட ‘டூட்டி’ போடுவது வரை போட்டி போட்டுக்கொண்டு தாண்டவமாடுகிறது சாதிவெறி. துறைக்குள்ளேயே இப்படி என்றால், மக்கள் குறை தீர்ப்பதில் இவர்கள் எந்த அளவுக்குச் சாதியப் பாகுபாடு பார்ப்பார்கள் என்று சொல்லித் தெரியவேண்டியதில்லை.


அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளிலும் சங்கம் வைத்துக்கொள்ள அனுமதி உண்டு. ஆனால், சீருடைப் பணியான காவல்துறையில் மட்டும் சங்கத்துக்கு அனுமதி கிடையாது. நாட்டில் சாதி, மதக் கலவரங்கள் வந்துவிடக் கூடாது; அப்படியே வந்தாலும் இரும்புக்கரம் கொண்டு உடனடியாக அடக்க வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் காவல்துறையிலேயே சங்கம் வைத்திருந்தால், சாதிரீதியிலான சங்கங்களும் உருவாகி நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாது. அதனாலேயே சங்கம் அமைக்க, காவல்துறையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக, ‘சங்கம்’ அமைக்கவே அனுமதி மறுக்கப்படும் காவல் துறையில், சாதிச் சங்கம் அமைக்காத குறையாக பலரும் செயல்படுவதுதான் வேதனை.


காவல்துறையினரால் பாதிக்கப்பட்ட வர்களுக்காக சட்ட உதவிகள் செய்துவரும் சமூகநீதி அமைப்பின் ஆறுமுகம், இது பற்றி நம்மிடம் பேசினார். “தென் மாவட்டங்களில் காவல்துறையையும், சாதியப் பாகுபாட்டையும் பிரிக்க முடியவில்லை. புகார் கொடுக்க வரும் மக்களை அணுகுவதிலிருந்து, சக ஊழியர்களிடம் நடந்துகொள்வது வரை சாதிவெறி அப்பட்டமாகத் தெரிகிறது. என்னிடம் சட்ட ஆலோசனைக்கு வருபவர்களில் பலரும் காவல்துறையினரின் சாதிரீதியான பாகுபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள்தான். தென் மாவட்டங்களின் காவல் நிலையங்களில் ஒருவர் நுழையும்போதே, அவரிடம் கேட்கப்படும் கேள்விகளில் முக்கியமானது, ‘நீ என்ன ஆளு?’ என்பதுதான்.


சில ஆண்டுகளுக்கு முன்னர், சிவகாசியில் சாலையோரம் நின்றிருந்த வாலிபர்களை எஸ்.ஐ. ஒருவர் விசாரித்திருக்கிறார். அப்போது அவர்கள் இருவரும் பட்டியல் சமூகத்தினர் என்று தெரிந்திருக்கிறது. உடனே சாதிரீதியாகத் திட்டி, ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று ஜட்டியுடன் நிற்கவைத்திருக்கிறார். பிறகு இருவரையும் உறவினர்கள் சென்று மீட்டுவந்தார்கள்” என்றவர், காவல்துறைக்குள் சாதிப் பின்னணி கொண்டவர்கள் நுழைவது குறித்தும் பகிர்ந்துகொண்டார்.


“அந்தந்த மாவட்டங்களில் செல்வாக்காக இருக்கும் சாதியினர்தான், மாவட்டத்தின் காவல்துறையிலும் அதிகம் இருக்கிறார்கள். காவல்துறையினர் தேர்வு வாரியத்தால் கல்வி, உடல் தகுதி, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தேர்வுசெய்யப்பட்டாலும், அதன் பிறகு சாதிப் பின்னணிகொண்ட அதிகாரிகளைப் பிடித்து, குறிப்பிட்ட பகுதிக்குள் நுழைந்துவிடுவார்கள். இப்படி ஒரு மாவட்டத்தின் பெரும்பான்மைச் சாதியினர், சுமார் 50 சதவிகிதத்துக்கு மேல் காவல்துறைக்குள் நுழைந்துவிட்டால், பிற சாதியினர் இயல்பாகவே பாதிக்கப்படுவார்கள். இப்படியான சூழலில், தனி நபருக்கு நியாயம் கிடைக்கச் செய்வதில் தொடங்கி சாதிக் கலவரம் வரை இவர்கள் எப்படி நேர்மையாகக் கையாள்வார்கள்?எனவே, தமிழக அரசு ஒவ்வொரு மாவட்ட காவல்துறையிலும் ஆய்வு மேற்கொண்டு, குறிப்பிட்ட சாதியினர் அங்கு பெரும்பான்மையாக இருந்தால், அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும். சமநிலையை ஏற்படுத்த வேண்டும். காவல்துறையினருக்கு மனித உரிமைகள் தொடர்பான பயிற்சிகளை வழங்க வேண்டும். பழங்குடியினர், பட்டியல் சமூகத்தினர் பாதுகாப்புக்காக இயற்றப்பட்ட சட்டங்களைக் கற்பிக்க வேண்டும். சாதிரீதியாக நடந்து கொள்பவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.


இது குறித்துப் பேசிய வழக்கறிஞர் பி.ஸ்டாலின், “ஆரம்பத்தில் காவல்துறையினரைச் சொந்த மாவட்டத்தில் பணி நியமனம் செய்யாமல் இருந்தார்கள். அது இப்போது நடைமுறையில் இல்லை. சொந்த தாலுகாவில்... ஏன், அவர்கள் வசிக்கும் பகுதியின் காவல் எல்லைக்குள்கூட நியமிக்கப்படுகிறார்கள்.அதனாலேயே மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில், சாதி அமைப்புகளின் வாட்ஸ்அப் குழுக்களில் காவல்துறையினர் இருப்பது தொடர்கிறது’’ என்றார். இதன் பின்னணியில்தான், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி-யான ஜெயக்குமார், ‘காவல்துறையினர் சாதிரீதியாக வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கியிருந்தாலோ, சாதிய அமைப்புகள் நடத்தும் குழுக்களில் இணைந்திருந்தாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று காவல் நிலையங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார்.


இதுபற்றி தென் மண்டலக் காவல்துறை ஐ.ஜி-யான முருகனிடம் கேட்டோம். “ஆமாம், காவல்துறையிலும் சிலர் இப்படி இருக்கிறார்கள்தான். அவர்கள்மீது நடவடிக்கை எடுத்துவருகிறோம். சாதியம் ஊறிப்போன இந்தச் சமுதாயத்திலிருந்துதானே காவல் துறையினரும் வருகிறார்கள்... அதனால், அதன் கூறுகள் சிலரிடம் ஒட்டிக்கொண்டிருப்பது இந்தத் துறையின் சாபக்கேடு. பெரும்பாலும் கிராமப்புறத்திலிருந்து வருகிறவர்களிடம் இந்த மனநிலை இருக்கிறது. அது அவ்வளவு சீக்கிரம் மாறுவதில்லை.


ரெளடிக்கு இரங்கல் தெரிவித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்ட காவலர்மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம். வாட்ஸ்அப்பில் ரெளடியின் படத்தை ஸ்டேட்டஸாக வைத்தவரையும் இடமாற்றம் செய்துள்ளோம். ஃபேஸ்புக்கில் மதரீதியாகக் கருத்து வெளியிட்ட இரண்டு இன்ஸ்பெக்டர்கள்மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேசமயம், அரிதாக நடக்கும் சில சம்பவங்களைவைத்து ஒட்டுமொத்த காவல்துறையையும் எடைபோடக் கூடாது’’ என்றார் விளக்கமாக.


‘பாகுபாடற்ற’ என்கிற சமநிலைத் தத்துவத்தின் பொருள் வடிவமே ‘சீருடை.’ அதில் சாதியம் வேர்விடுவது மொத்தச் சமூகத்துக்கும் பேராபத்து!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment