Wednesday, September 09, 2020

கழுகார் பதில்கள்

 @ஆ.மாடக்கண்ணு, பாப்பான்குளம், தென்காசி மாவட்டம்.


அரசியல் தலைவர்கள், வீட்டில் புத்தக அலமாரிகள் வைத்திருக்கிறார்களே... அவற்றில் ஒரு புத்தகம் கூடவா அவர்கள் மனதை உருகவைத்து, திருத்தி, நல்வழிப்படுத்தவில்லை?


அவையெல்லாம் சேக்கிழார் எழுதிய ‘கம்பராமாயண’மாக இருந்தால் என்ன செய்வது!


எஸ்.ராமதாஸ், சேலம்-30.


‘நான் ஒரு பகுத்தறிவாளன்’ என்று சொல்லிக்கொள்ளும் கமல், கிறிஸ்தவ மிஷனரிகள் நடத்தும் கூட்டங்களில் மட்டும் கலந்துகொள்வது ஏன்?


திராவிட குலக்கொழுந்து!


@காந்தி, திருச்சி.


எல்லாத் தேர்தலுக்கும் ஒரே வாக்காளர் பட்டியல் சாத்தியமா?


சாத்தியமாக வேண்டும். எத்தனை தேர்தல் நடத்தினாலும், வாக்காளர் ஒருவரேதானே!


@ந.அய்யப்பசாமி, தேவாரம், தேனி மாவட்டம்.


அமைச்சர்களை அளவுக்கு மீறி விமர்சிக்கும் கழுகாரே, பின்விளைவுகளைச் சந்திக்கத் தயாராகத்தான் இருக்கின்றீரா?


அளவுக்கு மீறி என்பது அவரவர் எடுத்துக் கொள்வதில்தான் இருக்கிறது. மற்றபடி ‘PENவிளைவு’களைச் சந்திக்க எப்போதுமே தயார்தான். ஆனால், இந்த அரிவாள், நாட்டு வெடிகுண்டு, நாட்டுத் துப்பாக்கி போன்ற ‘வன்விளைவு’ களெல்லாம்தான் நமக்குக் கொஞ்சம் அந்நியம்!


@ப.த.தங்கவேலு பண்ருட்டி, கடலூர் மாவட்டம்.


‘மணல் கடத்தல் வழக்கில் சிக்குபவர்களுக்கு இனி ஜாமீன் கிடையாது’ என உயர் நீதிமன்றம் அறிவித்திருப்பதன் மூலமாக மணல் கடத்தல் குறையுமா?


‘திட்டம் போட்டுத் திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது...


அதைச் சட்டம் போட்டுத் தடுக்குற கூட்டம் தடுத்துக்கொண்டே இருக்குது!


ரஜினிகாந்த் - துரைமுருகன் - டி.ஆர்.பாலு


@மு.மதிவாணன், அச்சல்வாடி, அரூர்.


தி.மு.க பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிகளுக்குப் புதிதாகத் தேர்வாகியிருக்கும் துரைமுருகன், டி.ஆர்.பாலுவை ரஜினிகாந்த் வாழ்த்தியிருக்கிறாரே?


தி.மு.க-வில் ‘சிஸ்டம்’ சரியாகிவிட்டது போல!


@மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை-9.


அரசுத்துறைகளில் ஆண் அதிகாரிகளுக்குச் சரிநிகர் சமமாகப் பெண் அதிகாரிகளும் கையூட்டு வாங்குகிறார்களே..?


இதிலும்கூட ஆணாதிக்கம்தான் இருக்க வேண்டுமோ!


@கே.கே.பாலசுப்ரமணியன், குனியமுத்தூர், கோயம்புத்தூர்.


பூமி ஓய்வின்றி சூரியனைச் சுற்றிக்கொண்டிருக்கிறது எனும்போது, திசை என்பதே தவறு. உண்மைநிலை இவ்வாறிருக்க, வாஸ்து சாஸ்திரம் என்பதெல்லாம் எப்படிச் சரியாகும்?


திசை, நமக்காக நாமே உருவாக்கிக்கொண்ட கற்பிதங்களில் ஒன்று. வாஸ்து சாஸ்திரம், அனுபவபூர்வமாகக் கண்டறிந்து தொகுக்கப்பட்ட சூத்திரங்களின் தொகுப்பு. அவை, இந்த மண்ணில் (பூமி, வஸ்து) வீடு, கோயில், அரண்மனை போன்றவற்றைக் கட்டுவதற்கான சிறந்த இடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான சூத்திரங்கள்.


‘ஓரிடத்தில் கட்டடம் கட்டப்போகிறோம் என்றால், ஓரடி நீள, ஆழ அகலத்தில் குழியெடுத்து, அந்த மண்ணை அந்தக் குழியிலேயே மீண்டும் நிரப்ப வேண்டும். மொத்த மண்ணும் உள்வாங்கியதோடு பள்ளமாகவும் இருந்தால், அது தகுதியற்ற இடம். பள்ளம் நிரம்பிவிட்டால், பரவாயில்லை ரகம். மண் மிச்சப்பட்டால், மிகச் சிறப்பான இடம். அது, தளர்வு மண் (லூஸ் சாயில்) இல்லாத இறுக்கமான பூமி. கட்டடம் கட்ட தோதான இடம்’ - இப்படிப் பட்டறிவின் மூலமாக ஏகப்பட்ட அனுபவப் பாடங்களை நம் முன்னோர்கள் நமக்குச் சொல்லிக்கொடுத்துவிட்டுப் போயிருக்கிறார்கள். காலப்போக்கில் பணம் பண்ணும் விஷயமாக மாற்றப்பட்டு, இடைச்செருகல்களாக ஏகப்பட்ட வஸ்துகளும் சேர்ந்துவிட்டன. ‘இந்த மூலையில் குபேரன் சிலை வைத்தால் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும்’ என்று ஆரம்பித்தவர்கள், சீன வாஸ்துவைக்கூட இறக்குமதி செய்கிறார்கள். மழை வந்தால் மொத்தமாக மூழ்கிப்போகும் ஏரிக்குள் கட்டப்பட்ட வீட்டுக்குக்கூட வாஸ்து சாஸ்திரம் சொல்கிறார்கள். அதையும் நம்புகிறார்கள்!


@மா.வெங்கடேஷ்வரன், பவானி, ஈரோடு மாவட்டம்.


சமூகநீதிப் போராளி, இளைஞர்களின் எழுச்சி நாயகன், மாவீரன், வாழும் காமராஜர், அஞ்சா நெஞ்சன், தியாகச் செம்மல் என்றெல்லாம் தன் அரசியல் தலைவனுக்குப் பட்டம்சூட்டி மகிழும் அந்த அப்பாவித் தொண்டனுக்கோ, பட்டங்களைப் பெற்றுக்கொள்ளும் தலைவனுக்கோ அந்தப் பட்டங்களின் உண்மையான அர்த்தம் தெரியுமா?


ஹலோ வெங்கடேஷ்வரன்... ஏன் இவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்கிறீர்கள்... சொல்லப்போனால், இதையெல்லாம் அவர்களே சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லையே. கொடுத்தார்கள்... போஸ்டரில் போட்டுக்கொண்டு அலைகிறார்கள், அவ்வளவுதான். பார்த்தோமா... சிரித்தோமா... என்று போய்க்கொண்டே இருங்கள்.


@செபாஸ்டியன். எம், சென்னை-18.


ஒரு கட்சியின் சார்பாக வெற்றிபெறும் மக்கள் பிரதிநிதிகள் கட்சி தாவும்போது, பதவியைப் பறித்தால் மட்டும் போதுமா... ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க முடியாது என்றும் சட்டம் வந்தால்தானே கட்சித்தாவல், குதிரைப் பேரம் தடுக்கப்படும்?


ம்ஹூம்... தாவியதற்கான சன்மானத்தோடு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான ‘இழப்பீட்டை’யும் சேர்த்தே கொடுத்துவிட்டால் போச்சு.


@செ.சண்முகஅரசன், திருச்செங்கோடு.


‘மூன்று மாதங்களுக்கு வங்கிக் கடன் தவணைக்கு விலக்கு’ என்று மத்திய அரசு அறிவித்ததை நம்பி, ஜூன் மாதம் கூட்டுறவு வங்கிக்குச் சென்றால், மொத்தமாக நான்கு மாதங்களுக்கும் சேர்த்து வட்டி கணக்கிட்டு வசூலித்துவிட்டார்களே?


நீங்கள் என்ன ஏர்டெல், டாடா, வோடாஃபோன் நிறுவனமா நடத்துகிறீர்கள்... 10 ஆண்டுகள் வரை அவகாசம் கொடுக்க.


@வெங்கட் கே.


இந்தியாவில், சீனர்களின் உணவைப் பற்றியே அதிகம் விமர்சனம் செய்கிறார்களே..?


உணவு என்பது உயிர் வாழத்தான். நம் உயிரை எடுக்காத எந்த உணவும் உணவுதான். அந்தந்த மண்ணின் தன்மைக்கும் தட்பவெப்பச் சூழலுக்கும் ஏற்ப ஒவ்வொரு நாட்டின் மக்களும் அந்தந்த நாடுகளில் கிடைப்பதை உண்கிறார்கள். ஆடு, மாடு, கோழிபோலத்தான் பாம்பு, பல்லி, தேள் போன்ற உயிரினங்களும். ஆனால், சிலவற்றை அருவருப்பாகவும், கேலியாகவும் காட்டியே நாம் பழக்கப்படுத்தப்பட்டுவிட்டதால், மற்றவர்களுடைய நடை, உடை, உணவு, மொழி என அனைத்தையும் கேலியாகவே பார்க்கிறோம். `கேலி செய்வதில் என்ன தவறு...’ என்று நியாயப்படுத்தவும் செய்கிறோம். தமிழகத்தில் வேட்டி கட்டியிருக்கின்றனர். வடக்கே அதே வேட்டியை வரிந்துகட்டிக் கொண்டிருக்கின்றனர். தமிழகப் பெண்கள் இடது பக்கம் முந்தானையைப் போடுகிறார்கள். வடக்கே வலது பக்கம் முந்தானையைப் போடுகிறார்கள். பாலைவனப் பெண்கள் முகத்தை முழுமையாக மூடியிருக்கிறார்கள். தேவையும் இருப்பும்தான் எதையுமே தீர்மானிக்கும்.


@தாமஸ், கடையம்.


மேற்குத் தொடர்ச்சி மலையில் கனிமவளமும் மூலிகைகளும் கொள்ளை போய்க்கொண்டிருப்பது பற்றி..?


பழங்குடிகள் மற்றும் விலங்குகளின் கட்டுப்பாட்டில் இருந்தவரை, காடுகள் காடுகளாகவே இருந்தன. இயற்கைவளம் இயல்பாகவே காப்பாற்றப்பட்டது. தேவைக்கு மட்டும் பரஸ்பர வேட்டை நடந்தது. ஒரு தோட்டத்தைப் பராமரித்து வாழ்வதற்கு இணையான ஒன்றாகவே இருந்தது அந்த வேட்டை. ஆனால், அரசாங்கம் என்ற ஒன்று உருவாகி, ‘வனத்துறை’யும் உருவாக்கப்பட்ட பிறகு பழங்குடிகளைத் துரத்த ஆரம்பித்துவிட்டனர். விலங்குகளுக்கும் பாதுகாப்பில்லாமல் போய்விட்டது. `நாகரிகம்’ என்ற பெயரில் நமக்கு நாமே வைத்துக்கொண்ட சூன்யங்களில் இதுவும் ஒன்று!


@ஆர்.ஜி.


‘ஊழல் புகாரில் சிக்கியிருக்கும் அன்புமணி போன்றவர்களுடன் கூட்டணி வைக்கப்போகிறார் ரஜினி’ என்று பரவிவரும் செய்திகள் ஒரு மாதிரி உதைக்கின்றன. ‘சிஸ்டம் மாறும்’ என்று எப்படி மக்கள் நம்புவார்கள்?


‘இதையெல்லாம் நம்பி மக்கள் வாக்களிப்பதில்லை’ என்பதுதானே நம் அரசியல்வாதிகளின் அசுர பலம்.


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment