Sunday, September 13, 2020

ரௌடிகள் சமூக சேவை செய்யவா கட்சிக்கு வருகிறார்கள்?

வடசென்னை `கல்வெட்டு’ ரவி, சத்யா, நெடுங்குன்றம் சூர்யா எனத் தமிழக பா.ஜ.க-வில் ஐக்கியமாகிவரும் குற்றப் பின்னணி நபர்களால் அரசியல் வட்டாரம் `கிடுகிடு’த்துக் கிடக்கிறது. சேலம் மாவட்டத்தில் குற்றச் செயல்களில் ஈடுபட்டுவந்த `முரளி’ என்கிற முரளிதரனுக்கு பா.ஜ.க இளைஞரணியில், சேலம் கிழக்கு மாவட்டத் தலைவர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து, மேலும் பல ரௌடிகளும் பா.ஜ.க-வில் சேர ஆர்வம் காட்டிவருவதாகச் செய்திகள் வெளிவருகின்றன.


‘‘குற்றப் பின்னணிகொண்டவர்களைக் கட்சியில் சேர்ப்பதில் பா.ஜ.க தலைவர் எல்.முருகன் மிகுந்த ஆர்வம் காட்டிவருகிறார். இதற்கான அசைன்மென்ட் தமிழக பா.ஜ.க வழக்கறிஞர்கள் அணித் தலைவர் ஆர்.சி.பால் கனகராஜிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது’’ என்கிறது பா.ஜ.க வட்டாரம். இந்நிலையில், பால் கனகராஜைத் தொடர்புகொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம்.


‘‘கட்சிக்குள் ரௌடிகளைச் சேர்ப்பதே நீங்கள்தான் என்கிறார்களே?’’


‘‘கட்சிக்குள் வருபவர்கள் அனைவருமே எனக்குப் பழக்கமானவர்கள் என்று கூற முடியாது. குறிப்பாக, `கல்வெட்டு’ ரவி என் மூலமாகக் கட்சியில் சேரவில்லை. அவர், எஸ்.சி பிரிவுத் தலைவர் மூலமாகக் கட்சியில் சேர வந்தார். எல்லோரும் வருகிறார்களென்றால், பா.ஜ.க மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையைத்தான் இது காட்டுகிறது. `இந்தக் கட்சியில் பாதுகாப்பு கிடைக்கும்’ என நம்புகிறார்கள்.


“என்ன மாதிரியான பாதுகாப்பு?”


“அது சமுதாயரீதியான பாதுகாப்பா, போலீஸ் பாதுகாப்பா என எனக்குத் தெரியவில்லை. நான் இந்தக் கட்சிக்குள் வந்தது, அவர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்திருக் கலாம். குற்றப் பின்னணி உள்ளவர்கள், தங்கள் தொழிலை விட்டுவிட்டு உண்மையில் சமூக சேவை செய்யவா கட்சிக்கு வருகிறார்கள்? ரௌடிகள் தங்கள் பாதுகாப்புக்காகத்தான் கட்சியில் சேர வருகிறார்கள். அந்தப் பாதுகாப்பு இங்கே கிடைக்கும் என நம்புகிறார்கள்.”


‘‘இத்தனை நாள்களாக இல்லாத நம்பிக்கை, இப்போது வருவது ஏன்?’’


‘‘பா.ஜ.க வளரும் கட்சி என்பதால், வாழ்க்கையில் ஏதாவது முன்னேற்றம் கிடைக்கும் என நம்பிச் சேர்கிறார்கள். எந்தக் கூட்டணி அமைந்தாலும், அதை பா.ஜ.க-தான் கட்டுப்படுத்தும் என்ற எண்ணமும் ஒரு காரணம். பொய் வழக்கு போடாமல் தடுக்க பா.ஜ.க-வால் முடியும்... இப்படிப் பல நம்பிக்கைகள் இருப்பதால்தான், பாதுகாப்புக்காக இங்கு வருகிறார்கள்.’’


‘‘ ‘குற்றப் பின்னணி உள்ள நபர்களுக்குச் சட்டப் பாதுகாப்பும், வக்கீல்களாக இருந்தால் மத்திய அரசு வழக்கறிஞர் பதவியும் வழங்கப்படும்’ எனப் பல வாக்குறுதிகள் கட்சியிலிருந்து கொடுக்கப்படுவதாகச் சொல்கிறார்களே?’’


``இருக்கலாம். எதிர்பார்ப்பு யாருக்குத்தான் இல்லை... ஒரு சாதாரண ரௌடிக்கு இருக்கும் எதிர்பார்ப்பு மற்றவர்களுக்கும் இருக்கும்தானே. ஒரு வக்கீல் கட்சிக்குள் இணையும்போது, தொழில்சார்ந்த உயர்வை எதிர்பார்ப்பது இயல்புதானே. மத்திய அரசின் வக்கீல் பதவியை அனைவருக்குமே கொடுக்க முடியாது. சீனியாரிட்டி, கட்சிப் பணி ஆகியவற்றைக் கணக்கிட்டுத்தான் கொடுக்க முடியும்.’’


“ `அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கிறோம்’ என்கிற பெயரில், மக்களிடம் கட்சிப் பிரசாரம் செய்கிறீர்கள் என்ற குற்றச்சாட்டு உள்ளதே?”


“சாதாரண மக்களுக்கென ஐம்பதுக்கும் மேற்பட்ட திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்திவருகிறது. இதை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கிறோம், அவ்வளவுதான்... உதாரணமாக, 5,00,000 ரூபாய்க்கு இலவசக் காப்பீட்டுத் திட்டம் இருக்கிறது. இந்தத் திட்டத்தை மக்களிடம் பா.ஜ.க பொறுப்பாளர்கள் எடுத்துக் கூறி கார்டு வாங்கிக்கொடுக்கிறார்கள். இதனால் பயனடைகிறவர்கள், பா.ஜ.க பக்கம் வருகிறார்கள். இதில் என்ன தவறு?’’


பால் கனகராஜ்

‘‘ `பூத்’களைக் கைப்பற்றி, 2021 சட்டமன்றத் தேர்தலில் கலவரம் உருவாக்கத்தான் குற்றப் பின்னணிகொண்டவர்களைக் கட்சிக்குள் இழுக்கிறீர்கள் என்றொரு பேச்சு இருக்கிறதே?’’


‘‘நிச்சயமாகக் கிடையாது. `பூத்’களைக் கைப்பற்றுவதெல்லாம் பழைய கதை. 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற்றதை அடுத்து, நடந்த உள்ளாட்சித் தேர்தலில் `பூத்’களைக் கைப்பற்றுவது நடந்தது. `தேர்தலையே ரத்துசெய்வோம்’ என உயர் நீதிமன்றம் எச்சரித்ததும் நடந்தது. இதே சம்பவம், அடுத்து வந்த தேர்தல்களில் நடக்கவில்லை. ஏனென்றால், ஒவ்வொரு `பூத்’திலும் சிசிடிவி கேமரா வந்துவிட்டது. அந்த பயமே குற்றத்தைக் குறைத்துவிட்டது. ரௌடிகள் நேரடியாகக் களத்துக்கு வந்து பிரச்னை செய்தால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கும் தெரியும். அதேபோல், குற்றப் பின்னணி உள்ளவர்கள் கட்சிக்குள் வருவதால் கூடுதலாக நூறு பேர் எங்களுக்கு ஓட்டுப் போட்டுவிடுவார்களா என்ன... அந்தக் காலம்போல இப்போது இல்லை. முன்புபோல அராஜகம் செய்ய முடியாது. இன்னொன்றையும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன், தவறு செய்பவர்களை பா.ஜ.க ஒருபோதும் ஆதரிக்காது!’’


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment