Wednesday, September 30, 2020

அமைச்சர் செய்தது அதிகார துஷ்பிரயோகம்!

மாணவர்களின் உயிரைக் காவு வாங்கிய ‘நீட்’ தேர்வையே நடத்திவிட்டார்கள். ஆனால், தமிழகத்தில் அரியர்ஸ் தேர்வுகளை ரத்து செய்து, ‘மாணவர்களின் விடிவெள்ளியே...’ என்று ‘போஸ்டர் அரசியல்’ செய்கிறார்கள். தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கிறார் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி. கோவையிலுள்ள அவரது வீட்டில்வைத்து பாலகுருசாமியைச் சந்தித்தோம். துணைவேந்தர்கள், இன்றைய ஆட்சியாளர்கள் என அனைவரையும் சகட்டுமேனிக்கு வெளுத்துவாங்குகிறார் பாலகுருசாமி.


“அரியர்ஸ் ரத்து முடிவை எப்படிப் பார்க்கிறீர்கள்... எதற்காக வழக்கு தொடர்ந்தீர்கள்?”


“அரியர்ஸ் தேர்வு, தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்வு. லட்சக்கணக்கான மாணவர்கள் அரியர்ஸ் வைத்திருக்கிறார்கள். அதை ரத்து செய்யும் அதிகாரம் அரசாங்கத்துக்கு இல்லை. கல்வி தொடர்பான முடிவுகளை அந்தந்தப் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட்தான் எடுக்க முடியும்.”


“அ.தி.மு.க அரசின் நோக்கம் என்னவாக இருக்கும்?”


“கொரோனாவைக் காரணம் காட்டி, `தேர்வு நடத்த முடியவில்லை’ என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீட், ஜே.இ.இ தேர்வுகள் நடந்து முடிந்துவிட்டன. டாஸ்மாக்கூட திறக்கப்பட்டுவிட்டது. அப்படியிருக்கும்போது, ‘மாணவர்கள் தேர்வு எழுத முடியாது’ என்று சொல்வது சரியான வாதம் கிடையாது. கல்லூரிகளில் நிறைய இடம் இருக்கிறது. எனவே, தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் தேர்வை நடத்த முடியும்.”


பாலகுருசாமி


“அரியர் ஆல் பாஸ் முடிவு, சமூகத்தில் என்ன மாதிரியான தாக்கங்களை ஏற்படுத்தும்?”


“இந்த மாணவர்கள் தேர்வெழுதி ஃபெயில் ஆனவர்கள். அவர்களைத் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்தால், பல்கலைக்கழகத்தின் பெயர் கெட்டுவிடும். கல்வியில் சிறந்த மாநிலமான தமிழகத்தின் பெயரும் கெட்டுவிடும். அந்த மாணவர்களுக்குமே வேலைவாய்ப்பில் சிக்கல்கள் ஏற்படும். அவர்களுக்கு மரியாதையே இருக்காது. 45 அரியர்ஸ் வைத்திருப்பவன் ஆல் பாஸாகி வந்தவன் என்றால், அவனுக்குத் திருமணத்துக்குப் பெண்கூட கிடைக்காது.”


“ஆனால், தங்கள் அறிவிப்பில் மாற்றமில்லை என்பதில் அ.தி.மு.க அரசு உறுதியாக இருக்கிறதே?”


“ஈகோதான் காரணம். தவறு என்று தெரிந்துவிட்டால், அதை மாற்றிக்கொள்ள வேண்டும். அதுதான் புத்திசாலித்தனம்.”


“இதை எதிர்க்கும் துணிவு கல்வித்துறையில் ஒருவருக்குக்கூட இல்லையா?”


“நேர்மையான துணைவேந்தர்கள் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. இப்போதிருப் பவர்கள் எல்லோரும் சுயநலவாதிகள். ஏதாவது தவறு செய்யும்போது, அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவிடுமோ என்று பயப்படுகிறார்கள். தவற்றைச் சுட்டிக்காட்ட முடியாதவர்களெல்லாம் எதற்காகத் துணைவேந்தராக வேண்டும்?”


“ `பல்கலைக்கழகங்களில் அரசு தலையிட முடியாது’ என்று சொன்னீர்கள். ஆனால், ‘ஏ.ஐ.சி.டி.இ கடிதம் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவிடம் விளக்கம் கேட்போம்’ என்று உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் சொன்னாரே..?”


“அமைச்சர் செய்தது அதிகார துஷ்பிரயோகம், மிரட்டல். துணைவேந்தரைக் கேள்வி கேட்க அமைச்சருக்கு அதிகாரமே கிடையாது. ஒருவேளை துணைவேந்தர் ஏதாவது தவறு செய்தால்தான் கேள்வி கேட்க முடியும்.”


“இந்தக் காலகட்டத்தில் நீங்கள் துணைவேந்தராக இருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?”


“கட்டாயம் இதை அமல்படுத்தியிருக்க மாட்டேன். சிண்டிகேட் கூட்டத்தைக் கூட்டி, ஆலோசனை நடத்தியிருப்பேன்.”


“உங்களது பார்வையில் தமிழகத்தில் கல்வியின் நிலை எப்படியிருக்கிறது?”


“துணைவேந்தர்கள் தங்களது அதிகாரத்தைச் சரியாகப் பயன்படுத்தாதே தமிழ்நாட்டின் உயர் கல்வி மோசமடையக் காரணம். இது தலைமைச் செயலாளருக்கு இணையான பதவி. ஆனால், தலைமைச் செயலகத்தில் செயலாளரைப் பார்க்க பொக்கேவுடன் காத்திருக்கிறார்கள் துணைவேந்தர்கள். வெட்கக்கேடானது இது. அரியர்ஸ் ரத்து முடிவை அனைத்துத் துணைவேந்தர்களும் எதிர்த்திருக்க வேண்டும். கல்வியின் தரத்தைப் பாதுகாப்பதுதான் துணைவேந்தர்களின் பணி. அதை அனைவருமே தவறவிட்டுவிட்டனர்.”


“துணைவேந்தர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியைப் பாராட்டி, போஸ்டர் ஒட்டுவது தொடங்கி நன்றி சொல்லியெல்லாம் நாளிதழ்களில் விளம்பரங்கள் கொடுக்கிறார்களே..?”


“அதுதான் சொல்கிறேன்... இது மிகவும் தவறான அணுகுமுறை. கல்வியைவைத்து அரசியல் செய்யக் கூடாது; ஓட்டு வாங்கக் கூடாது. பல்கலைக்கழகங்கள் ஒன்றும் ரேஷன் கடைகள் இல்லை. இங்கு எல்லாவற்றையும் இலவசமாக வழங்க முடியாது. மாணவர்களுக்கு லேப்டாப் கொடுங்கள், வேலை கொடுங்கள். ஆனால், கல்வியின் தரத்தில் மட்டும் தலையிடாதீர்கள். அப்படிச் செய்தால் தமிழ்நாடு உருப்படாது, நாசமாகிவிடும்.”


“சென்னை மற்றும் பாரதியார் பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் தேர்வு நடத்துகின்றன. புதுச்சேரியில் ‘புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதலாம்’ என்று சொல்கின்றனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில், ‘மாணவர்கள் வீட்டிலேயே தேர்வு எழுதலாம். அவர்கள் பிட் அடிக்கவில்லை என்று பெற்றோர் கையெழுத்திட வேண்டும்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இதையெல்லாம் எப்படிப் பார்க்கிறீர்கள்?”


“மூன்றுமே முட்டாள்தனம். மாணவர்கள்மீது நம்பிக்கை இருப்பதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கூறுகிறார். இப்போது எந்தத் துணைவேந்தர் நேர்மையாக இருக்கிறார், மாணவர்களை நம்புவதற்கு. துணைவேந்தர்களுக்கு ஆன்லைன் தேர்வு என்றால் என்னவென்றே தெரியவில்லை. ஆன்லைன் தேர்வில் பேப்பர், பேனாவுக்கு வேலையே இல்லை. இவர்கள் இப்போது நடத்துவது தேர்வு இல்லை; அசைன்மென்ட். இப்படிச் செய்வதற்கு துணைவேந்தர்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போய்விடலாம். அரசின் உத்தரவைச் செயல்படுத்த ஒரு கிளார்க் போதும்.”


“கல்வி விஷயங்களில் தலையிடும் ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாதா?”


“அரசாங்கத்தை எதுவும் செய்ய முடியாதுதான். ஆனால், எடுத்துச் சொல்லலாம்; தடுக்கலாம். நான் துணைவேந்தராக இருந்தபோது, அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம், ‘அரசாங்கத்தின் உத்தரவுகளைச் செயல்படுத்த முடியாது; பல்கலைக்கழகத்தின் பெயர் கெட்டுவிடும்’ என்று சொல்லியிருக்கிறேன். ‘சரி’ என்று கேட்டுக்கொண்டார். நான் சொன்னதற்காக, கல்விச் செயலாளரையே மாற்றியிருக்கிறார்.”


“இப்போது இருப்பதும் அ.தி.மு.க அரசுதானே... ஆட்சியாளர்களிடம் பேசலாமே?”


“அதை இன்றைய துணைவேந்தர்கள்தான் எடுத்துச் சொல்ல வேண்டும். நான் பொறுப்பிலிருந்தபோது, ஒரு பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்துக்கான தேர்வுக் குழுவுக்கு நான்தான் தலைவர். பல்வேறு திசைகளிலிருந்தும் அழுத்தங்கள் வந்தன. ஒரு மந்திரி தலைமீது ஏறி நின்று பார்த்தார். அதையெல்லாம் திட்டவட்டமாக மறுத்து, திறமையானவரைத் தேர்ந்தெடுத்தோம். இன்றைய மந்திரிகளுக்கு ரூல்ஸ் தெரியாது. தவிர, ஜெயலலிதாவின் அறிவுக்கூர்மையை இப்போதைய ஆட்சியாளர்களுடன் ஒப்பிடவே முடியாது.”


“அரியர்ஸ் விவகாரத்தில் அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள்?”


“வழக்கு தொடர்ந்திருக்கிறேன். செப்டம்பர் 30-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. தீர்ப்பு எப்படி வந்தாலும் ஏற்றுக்கொள்வேன்.”


“அ.தி.மு.க அரசுக்கு ஒரு மெசேஜ்?”


“கல்வியில் இந்தியாவிலேயே நாம் முன்னிலையில் இருக்கிறோம். அதைத் தக்கவைக்க வேண்டும். உயர் கல்வி விஷயங்களில் துணைவேந்தர்களைக் கேட்டு முடிவெடுங்கள்.”


“மாணவர்களுக்கு ஒரு மெசேஜ்?”


“சக்சஸுக்கு ஷார்ட் கட் இல்லை. கடின உழைப்புடன், விடாமுயற்சியுடன் உழைத்தால் வெற்றி பெறலாம்.”


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment