Friday, September 25, 2020

இட்லி, சப்பாத்தி லட்சத்தில்... செலவான கணக்கு சர்ச்சையில்!

180.26 லட்சம் இட்லிகள்...


69.31 லட்சம் கலவை சாதங்கள்...


48.83 லட்சம் சப்பாத்திகள்...


இதென்ன கணக்கு என்கிறீர்களா? கொரோனா ஊரடங்கு தீவிரமாக இருந்த காலகட்டத்தில், ஏழை, எளிய மக்கள் பசியைப் போக்கிக் கொள்வதற்காக ஏப்ரல் டு ஜூன் இரண்டாவது வாரம் வரை, சென்னை அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. அந்தக் கணக்குதான் இது. இட்லி, சப்பாத்திகள் எவ்வளவு தயாரிக்கப்பட்டன என்று கணக்கு காட்டும் சென்னை மாநகராட்சி, அதற்கான செலவு விவரம் தெரியாது என்று மறைப்பதுதான் இதில் விநோதம்!



ம.தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன், ‘ஊரடங்கு காலத்தில் சென்னை அம்மா உணவகங்களில் எத்தனை பேருக்கு உணவு வழங்கப்பட்டது... அதற்கான செலவு எவ்வளவு... அது மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து செலவிடப்பட்டதா அல்லது அரசின் வேறு நிதியிலிருந்து செலவிடப்பட்டதா?’ என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டிருந்தார். அதற்கு, `ஊரடங்கு நாள்களில் மொத்தமுள்ள 407 அம்மா உணவகங்கள் மூலம், 180.26 லட்சம் இட்லிகள், 69.31 லட்சம் கலவை சாதங்கள், 48.83 லட்சம் சப்பாத்திகள் இலவசமாக வழங்கப் பட்டுள்ளன. மாநில அரசு நிதியிலிருந்து இது செய்யப்பட்டுள்ளது’ என்று பதிலளித்திருக்கும் மாநகராட்சி நிர்வாகம், ‘செலவினத் தொகை விவரம் கணக்கிடப்படவில்லை’ என்று சொல்லியிருப்பதுதான் சர்ச்சைக்குக் காரணம்.


இது குறித்து ஈஸ்வரன் நம்மிடம் பேசினார். ‘‘உணவுப் பொருள்களைக் கணக்கிடுவதைவிட, செலவுகளைக் கணக்கிடுவது எளிது. அப்படியிருக்கும்போது, செலவு விவரங்களைக் கொடுக்க ஏன் தயங்குகிறார்கள்... ஒருவேளை கணக்கே இல்லாமல் செலவு செய்கிறார்கள் என்றால், அவர்கள் எப்படி நல்ல நிர்வாகம் நடத்துகிறார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியும்? கொரோனா காலகட்டத்தில் எவ்வளவு செலவு செய்திருக்கிறார்கள் என்பதை வெள்ளை அறிக்கையாக வெளியிட்டு மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அப்படிச் செய்யத் தயங்கினால், இதில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது என்று அர்த்தம்’’ என்றார்.



‘‘கொரோனா ஊரடங்கு காலத்தில், தமிழகம் முழுவதுமுள்ள அம்மா உணவகங்களுக்கு அ.தி.மு.க சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. சென்னை அம்மா உணவகங்களுக்கு அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் 50 லட்சம் ரூபாய் வரை வழங்கியிருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, மாநகராட்சி அளித்திருக்கும் பதிலில் அதைப் பற்றிச் சொல்லாமல், `மாநில அரசு நிதியிலிருந்து பெறப்பட்டுள்ளது’ என்று மட்டும் சொல்லியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. ஊரடங்கு காலத்தில் சென்னை அம்மா உணவகங்களில் 40 கோடி ரூபாய் வரை செலவாகியிருப்பதாக மாநகராட்சியில் கணக்கிட்டு, அதற்கான நிதி கேட்டு அரசுக்குக் கடிதமும் எழுதியிருக்கிறார்கள். ஆனால், ஆர்.டி.ஐ-யில் தகவல் கேட்கும்போது, முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோலச் செலவினங்களை மறைக்கிறார்கள்.


அம்மா உணவகங்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிவருகின்றன. கடந்த 2018-19 நிதியாண்டில், சென்னை மாநகராட்சி அம்மா உணவகங்களின் செலவு 112 கோடி ரூபாய். ஆனால், அதன்மூலம் கிடைத்த விற்பனைத் தொகை 24.87 கோடி ரூபாய்தான். எனவே, கொரோனா பெயரைப் பயன்படுத்தி, மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கினோம் என்று சொல்லி, பெரிய தொகையைப் பார்க்கத் திட்டமிட்டி ருக்கலாம்’’ என்கிறார்கள் இதன் உள் விவரங்களை அறிந்தவர்கள்.



இது குறித்து விளக்கம் கேட்க சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷைத் தொடர்புகொண்டோம். அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. அதையடுத்து, மாநகர நல அலுவலர் ஜெகதீசனிடம் பேசினோம். ‘‘இதில் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை. சென்னை அம்மா உணவகங்களுக்குத் தேவையான அரிசி மற்றும் கோதுமையை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திலும், காய்கறி, மளிகைப்பொருள்களை நகரக் கூட்டுறவுச் சங்கம் மூலமும் கொள்முதல் செய்கிறோம். தயிர் ஆவினிலிருந்து வாங்குகிறோம். தனியாரிடமிருந்து நாங்கள் எதுவுமே வாங்குவதில்லை. அரிசிக்கு மட்டும்தான் அட்வான்ஸ் கொடுத்து வாங்குகிறோம். மற்ற பொருள்களுக்குச் சம்பந்தப்பட்ட துறைகள் பில் அனுப்பிய பிறகுதான், எங்கள் விற்பனை விவரங்களையும் சரிபார்த்து செலவினங்களைக் கணக்கிட முடியும். அவர்கள் இன்னும் பில் அனுப்பவில்லை. அதனால்தான் செலவினங்களைக் கணக்கிடுவதில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நடைமுறைகளெல்லாம் முடிந்த பிறகு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டால், செலவினங்களைக் கொடுப்போம்” என்றார்.


மருத்துவச் சிகிச்சையிலிருந்தபோது, ‘அம்மா’ சாப்பிட்ட உணவுக்குச் செலவிடப் பட்ட கணக்கு இரண்டாண்டுகளுக்கு முந்தைய சர்ச்சையென்றால், `அம்மா உணவக’ச் செலவு கணக்கு வெளியிடப்படாதது இப்போதைய சர்ச்சை. இட்லி, சப்பாத்திகளை எண்ணிய நேரத்தில், அதற்கு ஆன செலவையும் கணக்கிட்டிருக்கலாமே!


News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment