கையில் தண்ணீர் பாட்டிலுடன் என்ட்ரி கொடுத்தார் கழுகார். “நாங்கள் என்ன அண்டை மாநிலமா, எங்களிடம் தண்ணீர் கேட்டால் தர மாட்டோமோ?” பொய்க் கோபத்தைக் காட்டினோம். “இந்த பாட்டிலின் கதையே வேறு!” என்றபடி, தான் கொண்டு வந்திருந்த சூடான சமோசாவை பேப்பர் தட்டில் பரப்பிவிட்டு செய்திகளுக்குள் தாவினார் கழுகார்.
“தி.மு.க கிச்சன் கேபினெட், சமீபத்தில் தண்ணீர் பாட்டில் பிசினஸைத் தொடங்கியிருக்கிறதாம். திருவள்ளூர் மாவட்டத்தில் வாட்டர் ப்ளான்ட் ஒன்றையும் அமைத்திருக்கிறார்கள். ‘வசந்த காலத்தை’க் குறிக்கும் பெயரில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்தத் தண்ணீர் பாட்டிலை, தண்ணீர் பிசினஸ் செய்யும் கட்சிக்காரர்கள் அனைவரும் வாங்கியாக வேண்டும் என்று உத்தரவாம். சந்தையில் மொத்த விற்பனையில், ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் எட்டு ரூபாய்க்குத்தான் விற்கப்படுகிறது. ஆனால், தங்களிடம் பத்து ரூபாய்க்கு வாங்கிக்கொள்ளும்படி அடம்பிடிக்கிறதாம் கிச்சன் கேபினெட். ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் மாதம் இவ்வளவு தண்ணீர் பாட்டிலை விற்றுத் தர வேண்டுமென்றும் டார்கெட் வேறு பிரித்து கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘கட்சியில் புதிய உறுப்பினர்களை இணைக்கச் சொல்லி ஐபேக் தரும் தொல்லை போதாதென்று இந்தத் தொல்லை வேறா?’ என்று புலம்புகிறது தி.மு.க வட்டாரம்.”
“தண்ணீரிலேயே வெண்ணெய் எடுப்பவர் களாயிற்றே!” என்று கமென்ட் அடித்தோம். கண்டுகொள்ளாத கழுகார், “சென்ற இதழில் உதயநிதிக்காக அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சந்நிதியில் நடத்திய அர்ச்சனையைச் சொல்லியிருந்தேன் அல்லவா... அதுபோல பழநியிலும் படுரகசியமாக ஒரு தாந்திரீக பூஜையை நடத்தியிருக்கிறார் அன்பில்” என்று சமோசாவை வாயில் போட்டுக்கொண்டு தொடர்ந்தார்.
“சமீபத்தில் பழநிக்கு விசிட் அடித்த அன்பில், அங்கு புகழ்பெற்ற தாந்திரீகக் குடும்பம் ஒன்றைச் சந்தித்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கு நெருக்கமான அந்தக் குடும்பம், அவருக்காகப் பல பூஜைகளைச் செய்திருக்கிறது. அந்தக் குடும்பத்தின் வாரிசு ஒருவர்தான் இப்போது முக்கிய வி.ஐ.பி-க்களுக்கு தாந்திரீக ஆலோசனைகளையும் பரிகாரங்களையும் செய்துவருகிறார். ‘கேப்டன்’ என்றழைக்கப்படும் அந்த தாந்திரீக வாரிசைச் சந்தித்த அன்பில், ஸ்டாலின் முதல்வராவதற்குச் சில பரிகாரங்களைச் செய்யச் சொல்லியிருக்கிறார். அந்தப் பரிகாரங்களை இரண்டு நாள்கள் பழநியில் முகாமிட்டு முடித்த பிறகே திருச்சிக்குத் திரும்பினாராம் அன்பில். பரிகார பூஜைப் பிரசாதங்கள், தனி காரில் செனடாப் சாலைக்குப் பறந்திருக்கின்றன!”
“தேர்தல் ஜுரம் என்று சொல்லும்!”
“தி.மு.க கூட்டணிக் கட்சிகள் அறிவாலயத்தின் மீது ஆத்திரத்தில் இருக்கின்றன. ‘2021 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் போட்டியிட வேண்டும்’ என்பதில் கிச்சன் கேபினெட் தெளிவாக இருக்கிறதாம். இதற்காக காங்கிரஸ், இடதுசாரிகள் தவிர்த்து இதர கூட்டணிக் கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும்படி மறைமுக அழுத்தம் கொடுக்கப்படுகிறது. சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம், உழுந்தையிலிருக்கும் பண்ணை வீட்டில் ஸ்டாலினைச் சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பொங்கித் தீர்த்துவிட்டாராம். ‘எங்களைக் கூட்டணியில் வைத்துக்கொண்டே பா.ம.க-வுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறீர்கள்; உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அழுத்தம் கொடுக்கிறீர்கள்... இதெல்லாம் நியாயமா?’ எனக் கொதித்திருக்கிறார்!”
“ஸ்டாலின் ரியாக்ஷன்?”
“அவரால் என்ன பேச முடியும்... அமைதியாகக் கேட்டுக்கொண்டவர், ‘உங்கள் ஆதங்கம் புரிகிறது. நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சமாதானப்படுத்தி அனுப்பிவைத்திருக்கிறார். இது குறித்துக் கட்சி சீனியர்களிடம் ஸ்டாலின் விவாதித்தபோது, ‘விடுதலைச் சிறுத்தைகள் 17 தொகுதிகளில் தேர்தல் வேலை பார்க்க ஆரம்பித்துவிட்டனர். அது அவர்கள் விருப்பம். சொந்தச் சின்னத்தில் போட்டியிடுவதாக இருந்தால் ஐந்து தொகுதிகளுக்கு மேல் ஒதுக்கக் கூடாது’ என்று சொல்லியிருக்கிறார்கள். சின்னம் விவகாரத்தில் தி.மு.க தலைமையின் அழுத்தத்துக்கு வைகோ தரப்பில் சம்மதித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் நெருக்கத்தில் இந்த விவகாரம் கூட்டணிக்குள் பெரிய சலசலப்பை ஏற்படுத்தும்.”
“ம்ம்... அ.தி.மு.க-வில் ஒரு சர்வே முடிவு கலகலத்திருக்கிறதாமே..?”
“ஆமாம். பெங்களூருவைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம், கட்சியின் கிளைச் செயலாளர் முதல் மூத்த நிர்வாகிகள் வரை ஒரு சர்வேயை நடத்தியிருக்கிறது. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள்தான் இந்த சர்வேக்கான ஏற்பாட்டைச் செய்தார்களாம். ‘முதல்வர் வேட்பாளருக்கு உங்கள் சாய்ஸ்?’ என்பதுதான் கேள்வியாம். இதற்கு 96 சதவிகிதம் பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்திருப்பது ஓ.பி.எஸ் தரப்பை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. போதாக்குறைக்கு இதே கேள்வியை முன்வைத்து மத்திய உளவுத்துறையும் ரகசிய சர்வே ஒன்றை அ.தி.மு.க-வினர் மற்றும் மக்களிடம் நடத்தியிருக்கிறது. அதில் பங்கேற்றவர்களில் 34 சதவிகிதம் பேர் எடப்பாடிக்குப் பச்சைக்கொடி காட்டியிருக் கின்றனர். பன்னீருக்கு வெறுமனே
3.3 சதவிகிதம் பேரும், தினகரனுக்கு 1.3 சதவிகிதம் பேரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இந்த சர்வே முடிவுகள் அரசல் புரசலாக லீக் ஆகிவிட, எடப்பாடி தரப்பு படு குஷி. ஆனால், பன்னீர் தரப்பும் எதிர்க்கட்சியான தி.மு.க-வும் சர்வே முடிவுகளால் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லையாம்!”
“சரிதான்...”
“டெல்லியைச் சேர்ந்த மூத்த உளவுத்துறை அதிகாரி ஒருவர், தமிழக அரசியல் பிரமுகரைக் கடந்த வாரம் சந்தித்தாராம். பேச்சு, தமிழக சட்டமன்றத் தேர்தலை நோக்கித் திரும்பியிருக்கிறது. அப்போது அந்த அதிகாரி, ‘ஜனவரி மாதத்துக்குள் சசிகலாவை விடுதலை செய்வதற்கு கிரிக்கெட் கவுன்சில் தொடர்புடைய வழக்கறிஞர் ஒருவர் மூலமாக தினகரன் காய்நகர்த்துகிறார். ஆனால், பேச்சுவார்த்தை இன்னும் முடியவில்லை. தேர்தல் நெருக்கத்தில் இரட்டை இலைச் சின்னத்தை முடக்குவதற்கான வேலையை டெல்லி ஆரம்பித்துவிட்டது. சின்னத்தை முடக்கிவிட்டால், கட்சி உடையும். கட்சி உடைந்தால், அதிருப்தியில் வெளியேறுபவர்களுடன் தினகரன், பா.ம.க., ரஜினி என ஒரு பெரிய கூட்டணியை உருவாக்க டெல்லி பா.ஜ.க தரப்பு முயல்கிறது. இந்தக் காய்நகர்த்தலில் ஐந்து அமைச்சர்களைக் கைது செய்யும் திட்டம் ஒன்றும் இருக்கிறது’ என்று `பகீர்’ கிளப்பியிருக்கிறார்.”
“அடேங்கப்பா... பெரிய திட்டமாகத்தான் இருக்கிறது!”
“ஆமாம். இன்னொரு விவகாரமும் பேசப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த ஸ்டார் நடிகர் ஒருவரின் 350 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து விவரங்களை அமலாக்கத்துறை தோண்டி எடுத்திருக்கிறது. அவரது வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை ரெய்டின்போது கிடைத்த ஆவணங்களிலிருந்து, கனடாவிலும் அமெரிக்காவிலும் அந்த நடிகர் செய்திருக்கும் முதலீடு விவரங்களை எடுத்திருக்கிறார்கள். ஆனால், அமலாக்கத்துறையில் இதுவரை எந்த வழக்கும் அந்த நடிகர்மீது பதிவாகவில்லை. இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி, தேர்தல் நெருக்கத்தில் அந்த நடிகரைவைத்து, ‘திராவிடக் கட்சிகள் வேண்டாம். தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை உருவாக்குவோம்’ என்று குரல் கொடுக்கவைக்க டெல்லி பா.ஜ.க திட்டமிட்டிருக்கிறதாம். நடிகரின் ரத்த உறவு ஒருவர் மூலம் இந்த மெசேஜை அழுத்தமாக அனுப்பியிருக்கிறார்கள். ஆடிப்போயிருக்கிறது நடிகர் தரப்பு” என்று கிளம்ப எத்தனித்த கழுகார்,
“கொங்கு பகுதி நாடார் வாக்குகளை ஒருங்கிணைக்க, நடிகர் சரத்குமாரை வேட்பாளராகக் களமிறக்கலாமா என்று யோசிக்கிறதாம் அ.தி.மு.க தலைமை” என்றபடி சிறகுகளை விண்ணில் விரித்தார்.
கழுகார் கான்ஃபிடென்ஷியல் நோட்!
l தி.மு.க குடும்பப் பிரமுகர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு ரகசிய சிகிச்சையில் இருக்கிறாராம். விஷயம் வெளியே கசிந்தால், தலைமையின் உடல்நிலை குறித்தும் தேவையில்லாத சர்ச்சை கிளம்பும் என்பதால் இந்த மெளனமாம்.
l கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி சட்டமன்ற உறுப்பினராகப் பொன்விழா கொண்டாடுவதைத் தொடர்ந்து, அவரின் மகள் பொன்விழா மலர் ஒன்றைத் தயார் செய்கிறார். அதில், தமிழகத்தைச் சேர்ந்த உச்ச நடிகரின் வாழ்த்துகளைப் பெற முயன்றிருக்கிறார். ஆனால், நடிகர் தரப்பிலிருந்து எந்த ரெஸ்பான்ஸும் இல்லையாம்.
l சமீபத்தில் தமிழகத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் மிகப்பெரிய டெண்டர் ஃபைலை ஓகே செய்யும்படி தன் துறையின் உயரதிகாரிக்கு அனுப்பியிருக்கிறார். அதில் கையெழுத்திட்டால் சிக்கல் வந்துவிடும் என்று சத்தமில்லாமல் ஃபைலை ஓரமாக வைத்துவிட்டாராம் உயரதிகாரி. அமைச்சர் தரப்பு அழுத்தம் கொடுத்ததும், சத்தமில்லாமல் விடுப்பில் சென்றுவிட்டாராம் அதிகாரி.
l கட்சியிலும் ஆட்சியிலும் செல்வாக்கு குறைவதால், சமீபத்தில் கொல்லிமலை சாமியார் ஒருவரை ரகசியமாகச் சந்தித்திருக்கிறார் கொங்கு அமைச்சர் ஒருவர். கொல்லிப்பாவையிடம் அந்த சாமியார் பூஜித்து தந்த தாயத்தை இடுப்பில் கட்டிக்கொண்டு திரிகிறாராம் அந்த அமைச்சர்.
l வரும் சட்டமன்றத் தேர்தலில், மதுரை அல்லது விருத்தாசலத்தில் போட்டியிடத் திட்டமிட்டிருக்கிறாராம் பிரேமலதா விஜயகாந்த்.
‘கதிராட்டம்’ புலம்பும் துரை!
No comments:
Post a comment