Sunday, August 30, 2020

மயில்மீது காட்டும் கருணையைக் கொஞ்சம் மாணவர்களிடமும் காட்டுங்களேன்!

சட்டத்தின்படி சிறைக்கைதிகள் அரைஞாண் கயிறு அணியக்கூட அனுமதி கிடையாது. ஆனால், சுவாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார், சிறையிலேயே மின்சார வயரைக் கடித்து, ‘தற்கொலை’ செய்து தமிழகத்தையே ஷாக் அடிக்கவைத்தார்.

இந்திய எல்லையான கார்கிலில், பாகிஸ்தான் ஊடுருவியதை முதன்முதலில் இந்திய ராணுவத்துக்குச் சொன்னவர்கள் அங்கிருக்கும் ஆடு மேய்ப்பவர்கள்தான்.

500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளை ஒழித்துவிட்டு, கோபால் பல்பொடி கலரில் 2,000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தி, பண மதிப்பிழப்பை மோடி அறிவித்தபோது அவர் சொன்ன இரண்டு முக்கியக் காரணங்கள், ‘இதன் மூலம் தீவிரவாத நடவடிக்கைகள் தடுக்கப்படும், கள்ளநோட்டு ஒழிக்கப்படும்!’


கூடுதலாக, ‘2,000 ரூபாய் நோட்டில் சிப் இருக்கிறது. இதைச் சட்டைப்பையில் வைத்திருக்கும் தீவிரவாதிகள் உடனடியாகப் பிடிபடுவார்கள்’ என்று தன் மகன் அஷ்வின் சேகருக்கு வைத்திருந்த கதையை அதிரடியாகப் பொதுவெளியில் சொன்னார் பால் பாக்கெட் புகழ் எஸ்.வி.சேகர். ஆனால், அதற்குப் பிறகுதான் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் புல்வாமா தாக்குதல் நடந்தது. அதுகூடப் பழைய கதை. ஆனால், சமீபத்தில் ஒரு புள்ளிவிவரம் வெளியாகியிருக்கிறது. 10 ரூபாய், 200 ரூபாய் கள்ள நோட்டுகளின் எண்ணிக்கை முறையே 144.6 சதவிகிதம், 151.2 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித் திருக்கிறது.

ஆனால், இங்கெல்லாம் கோட்டைவிட்ட பாதுகாப்பு, பரிசோதனை, பக்கா அதிரடி நடவடிக்கைகள் கறாராகக் கடைப்பிடிக்கப்படும் இடம் ஒன்றிருக்கிறது. அதுதான் நீட் தேர்வு மையம்.

கிராமப் பள்ளிகளில் மாணவர்கள் சாதிக் கயிறுகள் அணிவதைத் தடுக்க முடியாதவர்கள், தேர்வு மையத்துக்கு வரும் மாணவர்களின் அரைஞாண் கயிறு வரை அகற்றினார்கள். மாணவிகளின் கம்மல், மூக்குத்தி அனைத்தும் கழற்றப்பட்டன இதையெல்லாம் கழற்றி அடகு வைத்தால்தான் நீங்கள் படித்து முடிக்க முடியும் என்பதற்கான குறியீடோ என்னவோ!. உச்சமாக, ஒரு மாணவியின் உள்ளாடை கழற்றப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. ‘உங்க ஆட்சியில் என்னத்தைத்தான் கழட்டினீங்களோ?’ என்று யாரும் கேள்வி எழுப்ப முடியாதபடி இந்தக் கழற்றல், அகற்றல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இவ்வளவு கறாராக நடத்தப்படும் நீட் தேர்வுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. ஆண்டிபட்டி மாணவனுக்கு அருணாசலப்பிரதேசத்தில் தேர்வு மையம் ஒதுக்கப்படும். தமிழ் மொழிபெயர்ப்பில் குளறுபடிகள் ஏற்படும். சரி, ‘டிஜிட்டல் இந்தியா’, ‘சுயச்சார்பு இந்தியா’, ‘அண்ணாமலை ஆட்டுக்குட்டி இந்தியா’ போன்ற புதுப்புது இந்தியாக்கள் பிறக்கும்போது இது போன்ற பிரசவவலிகள் ஏற்படுவது சகஜம்தான் என்று சமாதானம் செய்துகொள்ளலாம்தான்.

ஆனால், நாடே அதிரும்படி ஒரு மோசடி நடந்தது. தேனி மருத்துவக்கல்லூரி மாணவர் உதித் சூர்யா, நீட் தேர்வே எழுதவில்லை. அவருக்கு பதில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர் இன்னொருவர் என்று தெரியவந்தது. அடுத்தடுத்து ஆள்மாறாட்ட மோசடிகள் குறித்த தகவல்களும் வெளியாகின. ‘மீசைவெச்சா சந்திரன், எடுத்துட்டா இந்திரன். தில்லுமுல்லு தில்லுமுல்லு’ என்று ரஜினி படமும் ‘மார்க்கபந்து, முதல் சந்து, நீயும் நானும் இந்து, நீட் தேர்வில் பொந்து’ என்று ‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ கமல் படமும் ஒரே நேரத்தில் ஓட்டப்பட்டன. சரி, இவ்வளவு கறாராக நடத்தப்படும் தேர்வில் இவ்வளவு முறைகேடுகள், மோசடிகள் நடப்பது ஒருபுறம் இருக்கட்டும். இப்போது நாட்டின் நிலை என்ன?

ஒட்டுமொத்த இந்தியாவும் கொரோனா அச்சத்தில் உறைந்திருக்கிறது. பேருந்துகள், ரயில்கள் ஓடவில்லை. மசூதிகள், சர்ச்சுகள், கோயில்கள் மூடப்பட்டிருக்கின்றன. ஞாயிற்றுக்கிழமை மட்டன், சிக்கன், மீன் வாங்கினால் கொரோனா பரவும் என்று கறிக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பத்தாம் வகுப்புத் தேர்வு முதல் பல்கலைக்கழகத் தேர்வுகள் வரை ரத்து செய்யப்பட்டுள்ளன. அரியர் தேர்வுகளிலும் தேர்ச்சி அறிவித்து, தாராள மனதை நிரூபித்துள்ளார் தமிழ்நாட்டின் சே குவேரா எடப்பாடி பழனிசாமி. பிரதமர் மோடியே வெளிநாட்டு சுற்றுப்பயணம் போக முடியாத விரக்தியில் ‘குயிலைப்பிடிச்சு கூண்டில் அடைச்சு கூவச் சொல்லுகிற உலகம், மயிலைப்பிடிச்சு காலை உடைச்சு ஆடச் சொல்லுகிற உலகம்’ என்று மைண்ட் வாய்ஸில் பின்னணி இசையுடன் மயில், குயில், மைனா, கொக்கு, வாத்து என்று விதவிதமான பறவைகளுடன் வித்தியாசமான போட்டோஷூட் நடத்துகிறார்.

முழுநாடும் கொரோனாவுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கிறது. ஆனால், மக்கள் நலனில் அக்கறையுள்ளவர்கள் கூடுதலாக ‘நீட் தேர்வை இந்த ஆண்டாவது ரத்து செய்யுங்கள்’ என்று போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ‘நீங்கள் போராட வேண்டியது நோயுடன்தானே தவிர, நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவர்களைத் தேர்வு செய்யும் நீட் தேர்வுக்கு எதிராக அல்ல’ என்று ‘லொக் லொக்...’ என இருமியபடியே பதில் சொல்கிறது மத்திய அரசு.


பா.ஜ.க அல்லாத ஏழு மாநில முதல்வர்கள் இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். ‘ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்பில் இடம் ஒதுக்குங்கள்’ என்று ஸ்டாலின் கோரிக்கைவைக்க, ‘‘இதெல்லாம் ரொம்பத் தப்புங்க’’ என்று எகிறிக் குதித்து எடப்பாடி பழனிசாமியும் பிரதமருக்குக் கடிதம் எழுதி யிருக்கிறார். மீண்டும் ஒரு முறை அதை நினைவூட்டி, பிரதமருக்கு இன்னொரு கடிதம் எழுதியிருக்கிறார் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர். ஆனால் நீட் தேர்வுக்கு எதிராக இயற்றப்பட்ட தமிழக சட்டசபைத் தீர்மானம், ஏழு தமிழர்களின் விடுதலைக்கான கருணை மனுக்கள், மின்சாரச் சீர்திருத்தச் சட்டம், மும்மொழிக் கொள்கை ஆகியவற்றை எதிர்த்தும் தமிழகத்துக்கு அளிக்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையை அளிக்க வேண்டியும் தமிழக அரசு அனுப்பிய கடிதங்களால் ஏற்கெனவே குப்பைத்தொட்டிகள் நிரம்பி வழிவதால், புதிய குப்பைத்தொட்டிகள் வாங்க டெண்டர் அறிவிக்கும் யோசனையில் மத்திய அரசு இருப்பதாக ‘மயிலார்’ தெரிவிக்கிறார்.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அமித் ஷா முதல் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வரை கொரோனாவிலிருந்து மீண்டிருக்கிறார்களே, அவர்களுக்கு சிகிச்சையளித்து மீட்ட மருத்துவர்கள் நீட் தேர்வு எழுதி மருத்துவர்கள் ஆனவர்கள் அல்லர். இந்தியா முழுவதும் இப்போது கொரோனாவுக்கு எதிரான போரில் முன்களப் பணியாளர்களாக இருக்கும் மருத்துவர்கள் யாரும் நீட் எழுதித் தேறியவர்கள் அல்லர். வீடுகளுக்கே செல்லாமல் வாரக்கணக்கில், மாதக்கணக்கில் மருத்துவமனையில் பி.பி.இ உடைகளுடன் சிகிச்சையளிப்பவர்கள், வீட்டுக்குச் சென்றாலும் தங்கள் குழந்தைகளைக் கூடத் தொடாமல் தள்ளி நிற்பவர்கள் இந்த மருத்துவர்கள். கொரோனா சிகிச்சையின்போது தமிழகத்தில் 32 மருத்துவர்கள் இறந்ததாக இந்திய மருத்துவச் சங்கம் அறிவித்திருக்கிறது. அர்ப்பணிப்புணர்வுடன் அறப்பணி புரிந்த இந்த மருத்துவர்களெல்லாம் அரைஞாண் கயிற்றை அகற்றிவிட்டு நீட் தேர்வு எழுதியவர்கள் அல்லர். எல்லோரும் ப்ளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்தவர்கள்.

நீட் தேர்வு எழுதினால்தான் தகுதி, திறமை இருக்கும் என்னும் மாயையைத் தமிழகம் எப்போதோ தகர்த்துவிட்டது. இதை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு மனமில்லாமல் இருக்கலாம். ஆனால், ஏற்கெனவே இருக்கும் ஏகப்பட்ட கெடுபிடிகளுடன் வீட்டிலிருந்தே சானிடைஸர், தண்ணீர் பாட்டில் கொண்டுவந்து, ஏற்கெனவே அணிந்த முகக் கவசத்தை அகற்றிவிட்டு நீங்கள் தரும் முகக் கவசத்தை அணிந்து, வெப்பப் பரிசோதனையில் ஒரு டிகிரி வெப்பநிலை கூடுதலாக இருந்தால் இன்னொரு அறையில் தேர்வெழுதி... இத்தனை பதற்றத்துடன் எப்படி மாணவர்களால் கவனத்துடன் தேர்வெழுத முடியும்?

நீட் தேர்வு அறிவித்தவுடனும், தேர்வு முடிவுகள் வெளியானதும் தற்கொலைகள் நடக்கின்றன. இனி இன்னும் அவை அதிகரிக்க வேண்டுமா? எவ்வளவு கறாராக இருந்தாலும் தேர்வறையில் கொரோனா பரவினால் யார் பொறுப்பு?

சிறைக்குச் சென்ற சப்பாணி சீக்கிரம் திரும்புவார் என்று காத்திருக்கும் ‘16 வயதினிலே’ மயில்போல காத்திருக்கிறார்கள் மாணவர்களும் பெற்றோர் களும். மயில் போட்டோ ஷூட் பிரதமரே, மயில்மீது காட்டும் கருணையைக் கொஞ்சம் மாணவர்களிடமும் காட்டுங்களேன்!

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment