Sunday, August 30, 2020

ஜம்மு காஷ்மீர்... சத்தமின்றி சில நகர்வுகள்!

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில், பல முக்கிய நகர்வுகள் அங்கு சத்தமின்றி நடந்துவருகின்றன. துணைநிலை ஆளுநராக இருந்த கிரிஷ் சந்திர முர்முவுக்கு விடைகொடுக்கப்பட்டு, மனோஜ் சின்ஹா களமிறக்கப்பட்டுள்ளார். ஆனாலும், அங்கு அரசியல் சூடு இன்னமும் தணியவில்லை.

கடந்த 2017-ம் ஆண்டு உத்தரப்பிரதேசச் சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் பதவிக்கான ரேஸில் இருந்தவர், மனோஜ் சின்ஹா. கடைசி நிமிடத்தில் யோகி ஆதித்யநாத்துக்கு அந்த யோகம் அடித்தது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, காஷ்மீரில் சில முக்கியப் பணிகளுக்காக இப்போது தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார் மனோஜ்.

மாற்றங்களை நோக்கி பா.ஜ.க

ஸ்ரீநகரில் ஆகஸ்ட் 15-ம் தேதி, தேசியக்கொடியை ஏற்றிவைத்து சுதந்திர தின உரையாற்றிய மனோஜ், ‘இனவாதத்திலிருந்து அமைதி, வளர்ச்சி, முன்னேற்றம், சமூக நல்லிணக்கம் ஆகிய மாற்றங்களை நோக்கிச் செல்ல வேண்டும்’ என்று குறிப்பிட்டார். இந்த மாற்றம்தான் மனோஜுக்கு மோடி கொடுத்த அசைன்மென்ட். பதவியேற்ற சூட்டுடன், ‘வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தும் எந்தவிதத் தொய்வுமின்றி நடைபெற வேண்டும்’ என்று அதிகாரிகளுக்குப் புதிய துணைநிலை ஆளுநர் `கறார்’ உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருக்கிறார்.


மீண்டும் ‘குப்கார்’

கடந்த 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 4-ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் ஆறு கட்சிகளின் தலைவர்கள் குப்கார் சாலையிலுள்ள ‘ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி’யின் மூத்த தலைவரான ஃபரூக் அப்துல்லா வீட்டில் ஒன்றுகூடினார்கள். ஃபரூக் அப்துல்லா தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி (மக்கள் ஜனநாயகக் கட்சி- பி.டி.பி), குலாம் அகமது மிர் (காங்கிரஸ்), முகமது யூசுப் தாரிகாமி (சி.பி.எம்), சஜ்ஜத் லோன் (ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாடு - ஜே.கே.பி.சி), முஸாபர் ஷா (அவாமி தேசிய மாநாடு) உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றார்கள். பரபரப்பாக நடந்த அந்தக் கூட்டத்தில் ‘குப்கார் பிரகடனம்’ வெளியிடப்பட்டது.

‘ஜம்மு காஷ்மீரின் அடையாளம், தன்னாட்சி அதிகாரம், சிறப்பு அந்தஸ்து ஆகியவற்றைப் பாதுகாப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயல்பட வேண்டும்; பிரிவு 370 மற்றும் 35ஏ நீக்க நடவடிக்கைகள் ஜம்மு, காஷ்மீர் மக்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட தாக்குதல் களாகும்’ என்பவை உள்ளிட்ட அம்சங்கள் ‘குப்கார்’ பிரகடனத்தில் இடம்பெற்றன. இந்த ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி ஒன்றுகூடிய ஆறு கட்சிகளும் அதில் பங்கேற்ற தலைவர்களும் மீண்டும் அதே பிரகடனத்தை வலியுறுத்தி யிருக்கிறார்கள்.

தேர்தல் எப்போது?

டெல்லி செங்கோட்டையில், இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று தேசியக்கொடியை ஏற்றிய பிரதமர் மோடி, ‘ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்தப்படும்’ என்றார். தற்போது, காஷ்மீரில் பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டு, மாநிலம் முழுக்கவே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தச் சூழலில், அங்கு தேர்தலை நடத்தினால் அது தங்களுக்குச் சாதகமாக அமையும் என்று நினைக்கிறார் மோடி. எனவே, தொகுதி வரையறைக்கான பணிகள் சூடுபிடித்துள்ளன. ஆனாலும், இந்தப் பணிகள் முடிந்து, தேர்தலை நடத்துவதற்கு ஓராண்டு காலம் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.

மனோஜ் சின்ஹா

அதேசமயம், ‘தேர்தலில் பங்கேற்பது குறித்து ஆறு கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி முடிவெடுப்போம்’ என்று ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஃபரூக் அப்துல்லாவின் மகனும், முன்னாள் முதல்வருமான உமர் அப்துல்லா, ‘ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும்வரை எந்தவொரு தேர்தலிலும் பங்கேற்கப் போவதில்லை’ என்று கூறியிருந்தார். ஆனால், ‘அது அவரது தனிப்பட்ட கருத்து; கட்சியின் கருத்து அல்ல’ என்று தெளிவுபடுத்தி யிருக்கிறார் ஃபரூக் அப்துல்லா.

ஃபரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, யூசுப் தாரிகாமி உள்ளிட்ட தலைவர்கள் வீட்டுச் சிறையிலிருந்து வெளியே வந்து விட்டார்கள். ஆனால், பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் சிறைவைக்கப்பட்டுள்ள ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’யின் தலைவரான மெஹபூபா முப்தி இன்னும் விடுதலை செய்யப்படவில்லை.

தொகுதி வரையறை குறித்து வரும் மே மாதம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நேரத்தில், ஒரு பெரும் சர்ச்சையை அது உருவாக்கலாம். ‘இவர்கள்’ அங்கு கட்டியெழுப்ப நினைக்கும் சொர்க்கபுரி, ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு என்னவாக இருக்கப்போகிறது என்பதுதான் முக்கியமான கேள்வி!

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment