Sunday, August 30, 2020

ஜெயில்... மதில்... திகில்! - 52 - குடத்துக்குள் கேட்ட டிக்... டிக்... டிக்...

‘‘குளிர் தாங்க முடியவில்லை. என்னிடம் இருபது ரூபாய்தான் இருக்கிறது. ஒரு ஸ்வெட்டர் வாங்கித்தர முடியுமா?’’ என்று கேட்டார் அவர். ‘‘இருபது ரூபாய்க்கு பிளாட்பாரத்தில் விற்கும் ஸ்வெட்டர்தான் கிடைக்கும்’’ என்றேன். ‘‘பரவாயில்லை. அது போதும் எனக்கு’’ என்றார். இப்படிச் சொன்னவர் ஒரு மாநிலத்தின் முதல்வர். அந்த ஆச்சர்ய மனிதர், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அன்றைய திரிபுரா முதல்வர் நிருபன் சக்கரவர்த்தி.

1975-ம் ஆண்டில், பிரதமர் இந்திரா காந்தி எமர்ஜென்சியை அறிவித்தார். நாடு முழுவதும் ஜெகஜீவன்ராம், ஜெயப்பிரகாஷ் நாராயணன், சந்திரசேகர், பிஜு பட்நாயக், அடல் பிகாரி வாஜ்பாய், அத்வானி, மொரார்ஜி தேசாய், ஸ்டாலின், வைகோ எனத் தலைவர்கள் பலரும் சிறையில் அடைக்கப் பட்டனர். திரிபுராவில் அப்போது முதல்வராக இருந்த நிருபன் சக்கரவர்த்தியுடன் 12 எம்.எல்.ஏ-க்கள், 2 எம்.பி-க்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என மொத்தம் 32 பேர் வேலூர் மத்தியச் சிறைக்குக் கொண்டு வரப்பட்டனர்.

ஜி.ராமச்சந்திரன் - ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை

சிறைக்குள் வரும்போது நிருபன் சக்கரவர்த்தியிடம் ஒரு டிரங்க் பெட்டி இருந்தது. தோளில் ஒரு துணிப்பை. பெட்டி நிறைய புத்தகங்கள். தோள்பையில் ஒரு வேட்டி, சட்டை, ஒரு லங்கோடு, ஒரு பனியன், பற்பசை, பிரஷ், சோப்பு ஆகியவை இருந்தன. அப்போது அவருக்கு வயது 70. மனிதர் ஆரோக்கியமாக இருந்தார். எளிமையான தோற்றம்; அழகான ஆங்கிலம். சட்டென்று மனதில் ஒட்டிக்கொண்டார் நிருபன்.


நிருபன், தன் அறையை அவரே பெருக்குவார். அவரது துணிகளை அவரே துவைத்துக்கொள்வார். அவருக்குரிய உணவையும் அவரே தயாரித்துக் கொள்வார். அந்த வயதிலும் அவரது கையெழுத்து தட்டச்சு செய்ததுபோல அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். ‘மிஸஸ் காந்தி’ என்று விளித்து, இந்திரா காந்திக்கு சிவப்பு மையால் அடிக்கடி கடிதம் எழுதுவார். ஒவ்வொரு கடிதமும் வரலாற்றுப் பொக்கிஷம். ‘மிசா கொடுமைகள் அனைத்துக்கும் நீங்களே பொறுப்பு ஏற்க வேண்டிய காலம் வரும். இறுதியில் நீங்கள் தனிமைப்படுத்தப்படுவீர்கள்’ என்று அவர் எழுதிய வரிகள் இப்போதும் என் கண்களில் நிழலாடுகின்றன.

பாதுகாப்பு சிறைவாசி என்பதால், அவருக்கு மாதத்துக்கு 60 ரூபாய் அலவன்ஸ் உண்டு. சோப்பு, பற்பசை, பிரஷ், பழங்கள் எல்லாவற்றையும் அதில்தான் வாங்கிக்கொள்ள வேண்டும். அதில் மிச்சம் பிடித்திருந்த 20 ரூபாயை வைத்துக் கொண்டுதான் என்னிடம் ஸ்வெட்டர் வாங்கித்தரச் சொன்னார். ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் அவர். எனக்கு நெஞ்சம் கனத்துவிட்டது. பிளாட்பாரத்தில் பர்மா அகதிகள் விற்கும் ஸ்வெட்டர் ஒன்றை வாங்கிக்கொடுத்தேன். அதையும் அணிந்துகொண்டு, ‘‘ரொம்பவே நன்றாக இருக்கிறது. 20 ரூபாய்க்கு இது பரவாயில்லை’’ என்று ஒரு குழந்தையைப்போல சந்தோஷமாகச் சொன்னார்.

சிறைக்குள் இருக்கும் மற்றொரு சிறைதான் குளோஸ்டு பிரிசன். அதிலும் வேலூர் குளோஸ்டு பிரிசன் வரலாற்றுச் சிறப்புமிக்கது. ராஜாஜி, காமராஜர், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, பக்தவத்சலம், ஆர்.வெங்கட்ராமன், அவினாசிலிங்கம், சி.சுப்பிரமணியம், இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், கே.டி.கே.தங்கமணி, வைகோ, காஞ்சி சங்கராச்சாரியார் எனத் தலைவர்கள் பலரும் அடைக்கப்பட்ட சிறை அது. அங்குதான் நிருபனையும், 48 மிசா கைதிகளையும் வைத்திருந்தோம்.

அந்த வளாகத்தைச் சுத்தம் செய்வதற்காக, சாராய வழக்கு தொடர்புடைய தண்டனைக் கைதிகள் அழைத்துவரப்பட்டார்கள். அப்படி வந்த கைதிகளில் ஒருவர் அங்கிருந்த காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட, அந்தக் கைதியைக் காவலர்கள் தாக்கினர். நிருபன் சக்கரவர்த்தி உள்ளே புகுந்து, காவலர்களிடமிருந்து கைதியைக் காப்பாற்றினார்.

அடுத்த நாள் சிறைத்துறைத் தலைவர் வருடாந்தர ஆய்வுக்காக வந்திருந்தார். அவரைச் சந்தித்த நிருபன், கைதி தாக்கப்பட்டதற்கு எதிராகப் பேசியதோடு, அந்தச் சம்பவத்துக்குத் தொடர்பில்லாத என்மீதும் புகார் கூறினார். இதனால், அவர்மீது எனக்குக் கோபம் ஏற்பட்டது.

அடுத்த சில நாள்களில் நிருபனின் அறையைச் சுத்தம் செய்யச் சென்ற யாரோ ஒரு கைதி, அவரது கைக்கடிகாரத்தைத் திருடிவிட்டார். அது பழைமையான ரோமர் கடிகாரம். அதை அவர் ஐம்பது ஆண்டுகளாகக் கட்டிக்கொண்டிருந் திருக்கிறார். அது காணாமல் போனதில் ரொம்பவே கவலையாகிவிட்டார். ஆனால், என்னிடம் சொல்லவில்லை. ஒருவேளை என்மீது அவர் ஐ.ஜி-யிடம் புகார் கூறியிருந்ததால், என்னிடம் அதுபற்றிச் சொல்லாமல் விட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். கைதிகள் பலரிடமும் விசாரித்திருக்கிறார், ஒரு தகவலும் இல்லை. வேறு வழியின்றி என்னிடம் வந்து விஷயத்தைச் சொன்னார். நான் அங்கு வேலை செய்த கைதிகள் இருபது பேரையும் அழைத்து அவர் முன்பாகவே விசாரித்தேன்.

‘‘நீங்கள் யாராவது அந்தக் கடிகாரத்தை எடுத்திருந்தால் கொடுத்துவிடுங்கள். அவரைப் பொறுத்தவரை அந்தக் கடிகாரம் விலை மதிப்பிட முடியாதது. அது இல்லாமல் அவரால் இருக்க முடியாது. தயவுசெய்து கொடுத்துவிடுங்கள்’’ என்று கேட்டேன். எல்லோருமே மறுத்தனர்.

ஏமாற்றமடைந்த நிருபன், ‘‘இப்படி நீங்கள் மென்மையாக விசாரித்தால் எப்படிச் சொல்வார்கள், கடுமையாக விசாரியுங்கள்’’ என்றார். அதற்கு நான், ‘‘இரண்டு அடி போட்டால் உண்மையைச் சொல்லிவிடுவார்கள். ஆனால், நீங்கள்தான் கைதிகளை அடிப்பதற்கு நான்தான் காரணம் என்று ஐ.ஜி-யிடம் புகார் சொல்லியிருக்கிறீர்களே...’’ என்று கிண்டலாகச் சொன்னேன்.


‘‘தவறு செய்தால் அடிக்கத்தான் வேண்டும். நான்தான் கொஞ்சம் அவசரப்பட்டு உங்கள்மீது புகார் கூறிவிட்டேன்” என்று வருத்தமாகக் கூறினார். ``எப்படியும் உங்கள் கடிகாரத்தைக் கண்டுபிடித்துத் தருகிறேன்’’ என்று அவரைச் சமாதானப்படுத்தி அனுப்பினேன்.

அந்த இருபது கைதிகளையும் கூப்பிட்டு, ‘‘உங்களில் ஒருவன்தான் கடிகாரத்தை எடுத்திருக்கிறான். கடிகாரம் கிடைக்கவில்லை யென்றால் அனைவரையும் செல்லில் பூட்டிவைத்துவிடுவேன். இன்னும் சில கடுமையான நடவடிக்கைகளையும் எடுப்பேன்’’ என்று மிரட்டினேன். மேலும், ‘‘உங்களில் யார் திருடியிருந்தாலும் எனக்கு அது தேவையில்லை. நாளை ஒவ்வொருவரும் என் அலுவலகத்துக்குள் சென்று வர வேண்டும். அங்கே யாரும் இருக்க மாட்டார்கள், ஒரு குடம் இருக்கும். யாருக்கும் தெரியாமல் கடிகாரத்தை அதில் போட்டுவிடுங்கள்’’ என்று சொன்னேன். மறுநாள் இருபது பேரும் என் அலுவலகத்துக்கு வந்து சென்ற பிறகு, குடத்துக்குள்ளிருந்து கேட்டது `டிக்... டிக்... டிக்...’ சத்தம்!

கடிகாரத்தைக் கொண்டுபோய் நிருபனிடம் கொடுத்தேன். அதைப் பார்த்ததும் அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அவருடன் வந்த 32 பேரிடமும் இதைச் சொல்லி, எனக்கு ‘ஜிந்தாபாத்’ என்று வாழ்த்துத் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தைப் பிறிதொரு தருணத்தில் சிறைக்குள்ளிருந்த கலைஞரிடம் தெரிவித்தேன். அவர் அதை, ‘காணாமல் போன கடிகாரம்!’ என்ற தலைப்பில் அழகான சிறுகதையாக எழுதினார்.

அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, நிருபன் நல்ல நண்பராகிவிட்டார். எங்களுடன் வாலிபால் விளையாடுவார். சிறை திறந்ததும் சமையலறைக்குச் சென்று டீ போடுவார். எனக்கும் ஒரு கப் டீ கொடுப்பார். நான் வேண்டுமென்றே, “கைதிகள் சமைத்த உணவைச் சாப்பிட மாட்டேன்” என்று வீம்புக்குச் சொன்னால், ‘‘எனக்குப் பிள்ளைகள் கிடையாது. நீங்கள் என் மகன் போன்றவர். தந்தை மகனுக்கு டீ கொடுத்தால் குடிக்க மாட்டீர்களா?’’ என்று பொய்க் கோபம் காட்டுவார்.

இவருக்கு நேரெதிராக இன்னொரு முதல்வர் இருந்தார். அவர்...

(கதவுகள் திறக்கும்)

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment