Sunday, August 30, 2020

எடப்பாடியின் மெடிக்கல் ரிமாண்ட்! - தவிக்கும் தமிழகம்

அரசர்கள் நகர்வலம் செல்வதன் காரணம் தெரியுமா? ‘இது என் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி... இதை நான் ஆள்கிறேன்... என் அதிகாரம் இதுவரை விரிந்திருக்கிறது!’ என்று சொல்லாமல் சொல்லும் ஒருவித உளவியல் நடவடிக்கைதான் அது. தற்போது, ‘ஆய்வுக் கூட்டங்கள்’ என்ற பெயரில் எடப்பாடி தமிழகம் முழுக்க செய்துகொண்டிருப்பது அப்படியொரு ராஜபவனிதான்! அரசியல் வட்டாரத்திலும், மக்கள் மத்தியிலும் எடப்பாடிமீது இப்படி எழுந்திருக்கும் விமர்சனத்துக்கு என்ன காரணம்?

கொரோனா தடுப்புப் பணிகள், பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்டம் தோறும் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்துவருகிறார். கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற்ற முதல்வரின் நிகழ்ச்சியில், கொரோனா `பாசிட்டிவ்’ நோயாளி ஒருவரும் கலந்துவிட, அதிகாரிகள் அதிர்ந்துபோய்விட்டார்கள்.

முதல்வர் பங்கேற்கும் எந்தப் பொது நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அதில் கலந்துகொள்ளும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுதான் வந்தது. திண்டுக்கல் சம்பவத்துக்குப் பிறகு இந்த கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதோடு, `நெகட்டிவ்’ ரிசல்ட் வந்த பிறகுதான் முதல்வரின் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அவர்கள் அனுமதிக்கப்படு கிறார்கள் என்கிற புதிய கெடுபிடி அனைவரையும் எரிச்சலடைய வைத்துள்ளது. இந்தப் பயணம், அ.தி.மு.க-வின் மினி தேர்தல் பிரசாரம் என விமர்சிக்கவும் படுகிறது.

ஆகஸ்ட் 27-ம் தேதி கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி ஆய்வுக்குச் சென்றார். முதல்வரின் வருகைக்காக, ஒரு வாரத்துக்கு முன்னரே கொரோனா டெஸ்ட் கருவிகளுடன் ரவுண்ட் அடித்தது அதிகாரிகள் படை. ஆட்சியர் அலுவலகத்தின் வாட்ச்மேனில் ஆரம்பித்து, அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், அதிகாரிகள், பொதுமக்கள், கார் ஓட்டுநர்கள் வரை அனைவரின் மூக்கிலும் குச்சியைவிட்டு, குடைந்தெடுத்தது மருத்துவக்குழு. தனக்கு கொரோனா தொற்றி விடுமோ என இவ்வளவு தூரம் பதறும் முதல்வர், வீட்டிலிருந்த படியே வீடியோ கான்ஃபரன்ஸ் வழியாக ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளலாமே... தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக ஏன் இத்தனை பேரை இவர் இம்சிக்க வேண்டும்? போலீஸ் பந்தோபஸ்துக்கு மட்டுமே ஏ.ஆர் போலீஸ் சுமார் 300 பேர், அதிகாரிகள் 120 பேர், பொதுமக்கள் 50 பேர், இவர்களோடு முதல்வரை வரவேற்க கட்சிக் காரர்கள் 100 பேர் எனக் கூட்டம் கூடுபவர்களின் எண்ணிக்கையே 500-ஐ தாண்டுகிறது. டெஸ்ட் செலவு, இத்தனை பேரின் மேன் ஹவர்ஸ் எனக் கணக்கிட்டால், இவை மொத்தமாகவே தேவையில்லாத ஆணிகள்!


`இ-பாஸ் முறையை ரத்து செய்யலாம்’ என மத்திய அரசே கூறிவிட்ட நிலையில், `கொரோனா பரவிவிடும்’ என ‘பூச்சாண்டி’ காண்பித்து, இ-பாஸைத் தொடர்கிறது எடப்பாடி அரசு.

ஊரடங்கு தொடங்கிய மார்ச் 24-ம் தேதியிலிருந்து அரசியல் செயல்பாடுகள் எதுவுமே தமிழகத்தில் இல்லை. கரைவேட்டிகள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்கள் யாரும் எந்த மாவட்டத்துக்கும் செல்ல முடிய வில்லை. முதல்வர் மட்டும் இஷ்டத்துக்கு ரவுண்ட் அடித்துக்கொண்டிருக்கிறார். டிசம்பர் வரையில் இப்படியே இ-பாஸ் முறையை நகர்த்திக்கொண்டு, அ.தி.மு.க மட்டுமே களத்தில் இருப்பதைப் போன்ற ஒரு பிம்பத்தை மக்களிடம் விதைக்கவே இந்த ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இது பற்றிப் பேசும் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சேகர்பாபு, ‘‘முதல்வர் நடந்துகொள்வதுபோல, குறைகளுக்காக வரும் பொதுமக்களிடம் தாசில்தார்களும் காவல் ஆய்வாளர்களும் கொரோனா சர்டிஃபிகேட் கேட்டால் நிலைமை என்னாகும்? தன்னைச் சார்ந்ததுதான் இந்த அரசு என்பதை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவும், கட்சி தன் கட்டுப்பாட்டை மீறிப் போய்விடக் கூடாது என்ற பயத்தாலும்தான் முதல்வர் இந்தச் சுற்றுப் பயணங்களை மேற்கொள்கிறார். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, வாரம்தோறும் ஆயிரக்கணக்கான பேருக்கு தளபதி மு.க.ஸ்டாலின் நிவாரண உதவிகளை வழங்கு கிறார். சமூக இடைவெளிதான் தீர்வே ஒழிய, தன்னைச் சந்திக்க வருபவர்களிடமெல்லாம் கொரோனா டெஸ்ட் ரிசல்ட் கேட்பது தேவையில்லாத வேலை’’ என்றார்.

கடந்த வாரம் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற கர்ப்பிணி ஒருவரை, கொரோனா டெஸ்ட் எடுத்துவிட்டு சிகிச்சைக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள் மருத்துவர்கள் சிலர். இது ஆரம்பம்தான்! முதல்வர் ஏற்படுத்தியிருக்கும் ஆபத்தான முன்னுதாரணம் மற்ற இடங்களிலும் எதிரொலிக்க ஆரம்பித்தால், மக்கள் போராட்டம் வெடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் பேசினோம். ‘‘மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தத்தான் முதல்வர் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். எந்த விளம்பரமும் தேடிக்கொள்வதற்காக அல்ல. முதல்வர் செல்லும் மாவட்டங்களிலெல்லாம் மக்கள் பிரதிநிதிகளும், அதிகாரிகளும், பொதுமக்களும் கொரோனா பரிசோதனை எடுத்துக் கொள்கின்றனர். இதில் என்ன தவறு இருக்கிறது?” என்றார்.

கைதுசெய்யப்பட்டவர்களின் பாதுகாப்பு, தேவைப்படும்போது அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திக்கொள்ள போன்ற காரணங் களுக்காக கைதிகளை நீதிமன்றங்கள் ‘நீதிமன்ற ரிமாண்ட்’ செய்யும். அதுபோல, கொரோனாவைக் காரணம் காட்டி, மொத்தத் தமிழகத்தையே ‘மெடிக்கல் ரிமாண்ட்’ செய்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment