Wednesday, August 26, 2020

கோடிக்கணக்கில் பண மோசடி! - லட்சக்கணக்கில் போலி விவசாயிகள்

ஒரு திட்டத்தைத் தொடங்கும்போதே அதில் ஊழல் செய்வதற்கான ஓட்டைகளையும் உருவாக்கிவிடு கிறார்கள் சில அதிகாரிகள். அப்படித்தான் ‘பிரதம மந்திரி கிசான் சம்மான்’ திட்டத்தில் போலி விவசாயிகளை உருவாக்கி, கோடிக்கணக்கான ரூபாயைச் சுருட்டிவிட்ட தாகப் புகார் எழுந்துள்ளது.

‘குறு, சிறு விவசாயிகளுக்கு ஆறாயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும்’ மேற்கண்ட திட்டத்தைக் கடந்த 2018 டிசம்பர் 1-ம் தேதி மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. `இந்தத் திட்டத்துக்கு ஐந்து ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் குறு, சிறு விவசாயிகள் தகுதி உடையவர்கள். அதேசமயம், அவர்கள் வருமானவரி செலுத்துபவர்களாக இருக்கக் கூடாது’ போன்ற சில விதிமுறைகள் இருக்கின்றன.


இதற்காக ‘தமிழ் நிலம்’ என்ற செயலி உருவாக்கப்பட்டது. அதில் கிராம நிர்வாக அலுவலர் பட்டா, சிட்டா சான்றிதழ்கள், சர்வே எண்கள் ஆகியவற்றைச் சரிபார்த்து சான்றிதழ் வழங்குவார். அந்தச் சான்றிதழுடன் ஆதார் அட்டை, குடும்ப அட்டையை இணைத்து வட்டார வேளாண்மை அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். அவர்கள் அதைச் சரிபார்த்து, துறை சார்ந்த இணையதளத்தில் பதிவு செய்வார்கள். அதன் அடிப்படையில், மாவட்ட வேளாண்மை அலுவலகத்தின் பரிந்துரையின்படி பயனாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ. 2,000 வீதம், மூன்று தவணைகளாக ஆறாயிரம் ரூபாய் செலுத்தப்படும். `குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பயன்பெற வேண்டும்’ என்பதற்காகக் குடும்ப அட்டை கட்டாயமாக்கப்பட்டது.

ஆறு மாதங்கள் கடந்தநிலையில், `இந்தத் திட்டம் பரவலாக விவசாயிகளுக்குச் சென்றடை யவில்லை’ என்று புகார்கள் எழுந்தன. இதனால் 2019, மே மாதத்துக்குப் பிறகு, ‘கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதிலாக, வட்டார மற்றும் மாவட்ட அளவிலான வேளாண்மை அதிகாரிகளே பயனாளர்களைத் தேர்வு செய்யலாம்’ என்று விதிமுறை திருத்தி அமைக்கப்பட்டது. இதுதான் முறைகேடுகளுக்குக் காரணமாக அமைந்துவிட்டது.

களத்தில் குதித்த வேளாண்மை அதிகாரிகள் பலரும், “ஆதார் மற்றும் குடும்ப அட்டையுடன் தலைக்கு 500 ரூபாய் கமிஷன் கொடுத்தால், குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமல்ல... அனைவருக்குமே தலா ஆறாயிரம் கிடைக்கும். ஆனால், கமிஷன் கட்டாயம்” என்று புரோக்கர்கள் மூலம் அறிவித்திருக்கிறார்கள்.

கடலூர் மாவட்டம், காரைக்காடு ஊராட்சி, பிள்ளையார்மேடு கிராமத்தில் நடந்த முறைகேடுதான் இந்த விவகாரத்தை அம்பலப்படுத்தி யிருக்கிறது. அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவர், 300 பேரின் ஆதார் அட்டை விவரங்களை முறை கேடாகப் பயன்படுத்தி, அவராகவே விண்ணப் பித்துள்ளார். பிறகு வீடு வீடாகச் சென்று கமிஷன் கேட்டிருக்கிறார். இந்தத் தகவல் காட்டுத்தீயாகப் பரவி, விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்குச் சென்றது. அவர்கள் இதை வேளாண்மைத் துறை இயக்குநர் ககன்தீப் சிங் பேடியிடம் கொண்டு சென்றனர். அதிர்ச்சியடைந்த அவர், ‘முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, கடலூர் மாவட்டத்தில் வருவாய்த்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகள் தலைமையில் விசாரணைக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. `கடந்த 2020, ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு, கடலூர் மாவட்டத்தில் இந்தத் திட்டத்தில் தாமாக இணைந்த 80,040 பேரின் ஆவணங்களை ஆய்வுசெய்து 2020, ஆகஸ்ட் 21-ம் தேதிக்குள் அறிக்கை தர வேண்டும்’ என்று ஆட்சியர் சந்திரசேகர் சாகமுரி உத்தர விட்டிருந்தார். தொடர்ந்து, ஆகஸ்ட் 22-ம் தேதி ககன்தீப் சிங் பேடியிடம் “விசாரணை அறிக்கை வந்துவிட்டதா?” என்று கேட்டோம். “முதற்கட்ட விசாரணையில் விவசாயிகள் அல்லாத போலி நபர்கள் பங்கெடுத்திருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளின் முழுமையான விசாரணைகள் முடிந்த பிறகு, சம்பந்தப்பட்டவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.


தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளரான கோ.மாதவன், “திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநரின் பாஸ்வேர்டைப் பயன்படுத்தி முறைகேடுகள் நடந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு தமிழகம் முழுவதும் சுமார் ஐந்து லட்சம் பேர் இவ்வாறு போலியாக பதிவுசெய்து, முறைகேடாகப் பணம் பெற்றிருக்கிறார்கள்.

விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், பெரம்பலூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 14 மாவட்டங்களில்தான் அதிகமாக போலி பதிவு நடந்திருக்கிறது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1.79 லட்சம் பேர் இந்தத் திட்டத்தில் பலனடைந் திருக்கும் நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு சுமார் 60,000 பேர் புதிதாகப் பதிவுசெய்திருக்கிறார்கள். இதில் எவ்வளவு பேர் முறையாகப் பதிவுசெய்தவர்கள் என்பதைக் கண்டுபிடித்து, தகுதியானவர்களுக்கு உதவி சென்று சேர வேண்டும்.” என்றார்.

ககன்தீப் சிங் பேடி, மாதவன்
இது குறித்து வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிடம் கேட்டோம். “இது விவசாயிகளே நேரடியாக விண்ணப்பிக்கும் திட்டம். இதில் அதிகாரிகளுக்கோ கட்சிக்காரர்களுக்கோ தொடர்பு கிடையாது. உரிய விசாரணை நடத்த முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். துறை சார்பில் ஆய்வு நடக்கிறது. ஆய்வின் முடிவில்தான் உண்மை தெரியவரும்” என்றார்.

தவறிழைத்த அதிகாரிகளை ‘ஊழல் பெருச்சாளிகள்’ என்று சொல்லி, பெருச்சாளிகளை அசிங்கப்படுத்த விரும்பவில்லை. ‘படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால், போவான்... போவான்... ஐயோவென்று போவான்!’ என்ற பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment