Wednesday, August 26, 2020

சல்லாப சாம்ராஜ்யம்! - ஆன்லைன் அநாகரிகம்! சக்கைபோடு போடும் சல்லாப ‘ஆப்’கள்!

ஓர் அந்தப்புரக் கட்டிலின் அசைவில், பல அரசுக்கட்டில்களே கவிழ்ந்த கதைகளைப் படித்திருக்கிறோம். காமம் துரத்தத் துரத்த மனிதன் வரலாறு முழுக்க ஓடிக்கொண்டே யிருக்கிறான். ‘செக்ஸ்’, எப்போதும் தீராத பிரச்னை; எல்லோரும் சிக்குகிற வலை; எந்நாளும் விலைபோகும் சரக்கு...

ஊரடங்கில் தொழில்கள் பலவும் முடங்கிவிட்டன; பொருளாதாரம் படுத்து விட்டது; வாழ்வாதாரங்கள் எப்போது வலுப்பெறுமென்று யாருக்கும் தெரியாது. ஆனால், முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தக் கொடூர காலத்தில், ஆன்லைனில் கொடிகட்டிப் பறக்கிறது பாலியல் தொழில். நெட்டைத் தட்டினால் ஏகப்பட்ட லிங்க்குகளில் கசிகின்றன கசாமுசா விவகாரங்கள். வயது, நிறம், மாநிலம், குடும்பப் பெண்கள், திருமணமானவர், திருமணம் ஆகாதவர் என தகவல்களையும் நிர்வாண உடல்களையும் திரையில் கொண்டுவந்து கொட்டுகிறது ஆன்லைன்! கையடக்க போனில் திறக்கும் ரகசியப் பாதைகளில், திரும்பிய பக்கமெல்லாம் சிவப்பு விளக்குப் பகுதிகள்!

சக்கைபோடு போடும் சல்லாப ‘ஆப்’கள்!

ஆன்லைன் பாலியல் தொழிலில் இப்போது இந்தியாவில் முன்னணியிலிருக்கிறது பன்னாட்டு வெப்சைட் ஒன்று (சமூகநலன் கருதி பெயரை நாம் வெளியிடவில்லை). இந்த வெப்சைட், உலகில் 60-க்கும் அதிகமான நாடுகளில் பயன்பாட்டில் இருக்கிறது. ரியல் எஸ்டேட், மேட்ரிமோனியல் என இந்த வெப்சைட் பல தளங்களில் இயங்கினாலும், இந்தியாவில் சபலத்துக்கான சாய்ஸாகவே பலரும் இதை நாடுகிறார்கள்.

ஆரம்பத்தில் தமிழகத்தின் பெரு நகரங்களில் மட்டுமே இந்த ஆன்லைன் தொழில் நடந்து வந்தது. இப்போது சிறுநகரங்களையும்கூட விட்டு வைக்கவில்லை. கண்ணுக்குத் தெரியாத இந்தப் பாலியல் வலை நம் பக்கத்து ஊர்வரை வந்துவிட்டது. நமக்குத் தெரிந்த முகம் எதுவும் தென்பட்டுவிடுமோ என்கிற அளவுக்குப் பதற்றம் தருகிறது அந்த வெப்சைட்!

குரல்வழி செக்ஸ், காட்சிவழி செக்ஸ், நேரடி செக்ஸ்...மணிக்கணக்கு தொடங்கி மாதக்கணக்கு டீலிங் வரை விதவிதமான ஆஃபர்கள். உங்கள் ஊரில், உங்களுக்குத் தெரிந்த லாட்ஜில், உங்களுக்குப் பிடித்த எண்ணில் ரூம் புக் செய்வதாகச் சொல்கிறது கடல்கடந்த தேசத்திலிருந்து வரும் குரல்! ஆண், பெண், மூன்றாம் பாலினம் என எந்தப் பேதமுமில்லை. ‘எல்லா உடல்களும் விற்பனைக்கு...’ என்று வலைவிரிக்கிறது அந்த விபரீத வெப்சைட்!


ஆண்களின் அதிகாலை ‘மூட்’ சூடேற்றும் ‘குட்மார்னிங்’ அப்டேட்!

ஆன்லைன் பாலியல் தொழிலில் பலரும் பயன்படுத்தும் ஒரு யுக்தி ‘குட் மார்னிங்’ மெசேஜ். கஸ்டமர்களைக் கைவிட்டுப் போகாமல் கட்டிக் காப்பாற்றும் ‘தொழில் பக்தி’யும்கூட. வாடிக்கையாளர் ஒருமுறை அவர்களது அந்தப்புரத்துக்குச் சென்றுவிட்டால் போதும்... தினமும் அதிகாலையில் வாடிக்கையாளர்களின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ‘குட் மார்னிங்’ மெசேஜுடன் வந்து சூடேற்றும் அழகிய இளம்பெண்களின் கிளுகிளு படங்கள். இப்படி அதிகாலையில் படங்கள் அனுப்புவதற்குக் காரணம் சொல்பவர்கள், “பொதுவாகவே அதிகாலையில் ஆண்களுக்குப் பாலியல் நாட்டம் அதிகமிருக்கும். அதற்காகவே இந்த யுக்தி” என்றார்கள்.

பிரபல பன்னாட்டு வெப்சைட்டிலிருக்கும் அலைபேசி எண்ணுக்கு அழைத்தால், வாட்ஸ்அப்பில் ‘ஹாய்’ மெசேஜ் அனுப்பச் சொல்லி தொடர்பைத் துண்டிக்கிறார்கள். ‘ஹாய்’ அனுப்பியதும் நம் தகவல்களைக் கேட்கிறார்கள். பெண்களின் புகைப்படம், இடம், ரேட் அனைத்தும் வாட்ஸ்அப்பில் பரிமாறப் படுகின்றன. அதேசமயம், பணத்தை முன்கூட்டியே அவர்கள் சொல்லும் வங்கிக் கணக்கு எண்ணுக்கு அனுப்பினால் மட்டுமே அடுத்தடுத்த செயல்பாடுகளைத் தொடர முடியும். “அந்த வெப்சைட், வல்லரசு நாடு ஒன்றில் இயங்கினாலும், அதன் இந்தியத் தலைமையிடம் மும்பையில் இருக்கிறது. அங்கிருந்துதான் நாடு முழுவதுமே அறைகள் உட்பட அனைத்து ஏற்பாடுகளும் செய்துதரப் படுகின்றன” என்கிறார்கள் இந்தத் தொழிலின் உள்விவரம் அறிந்தவர்கள்.

படம் பார்... பறிகொடு!

கோடிகள் புரளும் ஆன்லைன் பாலியல் வர்த்தகத்தில் பண மோசடிகளெல்லாம் சகஜம். `ஃபிஃப்டி ஃபிஃப்டி சக்சஸ் ரேட்’ என்கிறார்கள். இளம் பெண்களின் புகைப்படங்களை அனுப்பி, ‘இவரின் அந்தரங்கப் படங்கள் வேண்டுமா? ஆயிரம் ரூபாய் அனுப்புங்கள்...’, ‘இந்தப் பெண்ணுடன் வீடியோ காலில் செக்ஸியாகப் பேச வேண்டுமா? இரண்டாயிரம் அனுப்புங்கள்...’ என்கிறார்கள். வீடியோ காலில் இளம்பெண் ஒருவர் ‘முழுமையாக’த் தோன்றி, வாடிக்கையாளர் விருப்பத்துக்கு ஏற்ப அவர் சொல்கிறபடி சில்மிஷங்களை அரங்கேற்றுவார். இதற்கு பத்தாயிரம் ரூபாய் வரை விலை பேசுகிறார்கள். இரண்டு பெண்கள் திரைக்கு வர வேண்டுமென்றால் அப்படியே தொகை ரெட்டிப்பாகும். பல நேரங்களில் தொகையும் திரும்பாது; காட்சியும் கிடைக்காது. அந்த எண்ணைத் தொடர்புகொண்டால் ‘பீப்’ சவுண்ட் மட்டுமே வரும்.

அதேசமயம், வாடிக்கையாளரின் அலைபேசி எண்ணைவைத்து அவரது ஃபேஸ்புக் கணக்கை அலசி ஆராய்ந்துவிடுகிறார்கள். ஆளைப் பொறுத்து, அவர்களது ஸ்டேட்டஸைப் பொறுத்து வேறு ஒரு நம்பரில் வந்து மிரட்ட ஆரம்பிக்கிறார்கள். `கடந்த முறை வாட்ஸ்அப்பில் எங்களுடன் நீங்கள் செய்த மொத்த ‘சாட்’-ஐயும் ஸ்க்ரீன் ஷாட் எடுத்துவைத்திருக்கிறோம். பணம் கொடுக்காவிட்டால், ஃபேஸ்புக்கில் போட்டுவிடுவோம்’ என்று மிரட்டுகிறார்கள். சமீபத்தில், சென்னை கல்லூரி இளைஞர் ஒருவரை இப்படி மிரட்டியே இரண்டு லட்சம் ரூபாயைக் கறந்திருக்கிறது ஒரு கும்பல். இந்த விவகாரத்தில் ஏராளமானோர் ஏமாந்திருந்தாலும், கெளரவம் கருதி போலீஸில் புகார் கொடுப்பதில்லை.


‘சுகர் அங்கிள்ஸ்’ எனும் சுகவாசிகள்!

நாற்பது வயதைத் தாண்டிய அங்கிள்களைக் குறிவைத்து ‘சுகர் அங்கிள்’ என்கிற பெயரில் வலைவீசுகிறார்கள். இன்சுலின் குறைபாட்டால் செக்ஸில் ஆர்வமிருந்தும் ‘செயல்பட’ முடியாத நிலையில் இருப்பவர்கள்தான் இவர்களின் இலக்கு. இந்த நெட்வொர்க்கும் ஆன்லைன் மூலமே இயங்குகிறது. லட்சங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆன்லைனில் புக் செய்ததும், பலவிதமான இளம்பெண்களின் புகைப்படங்கள் வாட்ஸ்அப்புக்கு வரும். பணம் ஆன்லைனில் கைமாறியதும், ஹோட்டல் அல்லது சர்வீஸ் அப்பார்ட்மென்ட் அட்ரஸ் மற்றும் ஸ்பாட்டில் சொல்ல வேண்டிய OTP எண் அனுப்பப்படும். ‘மற்றவை நேரில்!’

இதற்காக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா எனப் பல மாநிலங்களிலிருந்தும் பெண்களை விமானத்தில் கொண்டு வந்து இறக்குகிறார்கள். வாடிக்கையாளரால் ‘செயல்பட முடியா விட்டாலும்’ தங்கள் சேவையைக் கச்சிதமாக முடித்து பணத்தைக் கறந்துவிட்டு, மீண்டும் விமானத்தில் பறந்துவிடுகிறார்கள். தமிழகத்தில் முக்கிய வி.வி.ஐ.பி-கள் சிலரும் இந்த வலைப்பின்னல் தொழிலில் வாடிக்கையாளர்கள் என்கிறார்கள்!

அரேபிய மஜா... நடிகையின் புது ரூட்!

ஆன்லைனில் மட்டுமல்லாமல் வழக்கமான வழிகளில் நடக்கும் ‘மரபான’ பாலியல் தொழிலும் இந்த சீஸனில் சூடுபிடித்துள்ளது. இந்தியாவுக்கு சிகிச்சைக்காக வெளிநாடுகளிலிருந்து வருபவர்களின் முக்கியத் தேர்வாக இருக்கிறது சென்னை பெருநகரம். குறிப்பாக, வளைகுடா நாடுகளிலிருந்து பல்வேறு சிகிச்சைகளுக்காக இங்கு வரும் செல்வந்தர்கள் அதிகம். அவர்கள் இங்கே நான்கைந்து மாதங்கள் வரைகூடத் தங்கி சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். வளைகுடா நாடுகளில் பாலியல் தொழிலுக்குக் கடும் தண்டனை என்பதால், சிகிச்சை பெறும் சாக்கில் பாலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதற்காகவும் இந்த வாய்ப்பைச் சிலர் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

1980-களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த ஒருவர், இது போன்ற வளைகுடாவாசிகளைத் திருப்திப்படுத்தவே சமீபத்திய சில ஆண்டுகளாக இந்தப் புது ரூட்டில் செல்கிறாராம். இவர் கைவசம் நூற்றுக்கும் மேற்பட்ட இளம்பெண்கள் வரிசைகட்டுகிறார்கள். வளைகுடா நாட்டுப் பிரமுகர்களுடன் இளம்பெண்கள் மூன்று மாதங்கள் வரை... கிட்டத்தட்ட குடும்பம் நடத்த லட்சங்களில் தொடங்கி கோடிகள் வரை ‘பேக்கேஜ்’ கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னை விமான நிலையத்தில் இறங்கியது தொடங்கி, அவர்களைத் தங்கும் இடத்துக்கு அழைத்துச் சென்று ‘கவனிப்பது’வரை பார்த்துப் பார்த்து ‘உபசரிக்கிறார்கள்.’ இணையதளம் ஒன்று இதற்காகவே பிரத்யேகமாகச் செயல்படுகிறது. `திரைப்படங்களில் சம்பாதித்ததைவிட இந்தத் தொழிலில் அந்த நடிகை சம்பாதித்ததுதான் அதிகம்’ என்கிறார்கள்.


கூட்டுக்குடும்ப செட்அப்... குரூப் செக்ஸ் பிசினஸ்!

சென்னை, செங்குன்றம் பாடியநல்லுர் பகுதியில் லாரி டிரைவர், தன் மனைவி மற்றும் மனைவியின் தங்கை குடும்பத்துடன் கூட்டுக்குடும்பமாக வசித்துவருகிறார். ஆகஸ்ட் முதல் வாரம் இவர்கள் வீட்டில் புகுந்த கும்பல் ஒன்று ஏழரை சவரன் தங்க நகைகள் உள்ளிட்ட பொருள்களைக் கொள்ளையடித்தது. இது குறித்து டிரைவர், செங்குன்றம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

இதில் வியாசர்பாடியைச் சேர்ந்த ரகு உட்பட பத்துப் பேர் பிடிபட்டனர். போலீஸார் அவர்களை விசாரித்தபோது, விவகாரமே வேறு என்பது தெரியவந்தது. டிரைவரின் மனைவிக்கும் ரகுவுக்கும் ஏற்கெனவே தொடர்பு இருந்திருக்கிறது. கொள்ளை நடப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் டிரைவரின் வீட்டுக்கு வந்த ரகுவும், அவரின் நண்பரும் அங்குள்ள பெண் களுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். இதற்காகக் கணிசமாகத் தொகையும் கைமாறியுள்ளது. இதற்காகவே தனியறையும் அந்த வீட்டின் மாடியில் உள்ளது. அங்கு பல நேரங்களில் கஸ்டமர் களுடன் குரூப் செக்ஸ் உள்ளிட்ட அநாகரிகங்கள் அரங்கேறியிருக்கின்றன. விசாரணைக்குப் பின்னால் இந்த மொத்தக் கதையும் அறிந்த டிரைவர் அதிர்ந்து போயிருக்கிறார்!

வாக்குமூலம்!

இந்தத் தொழிலில் இருபது ஆண்டுகளாக ஈடுபட்டுவரும் ஒரு புரோக்கரைப் பிடித்தோம். “இப்பல்லாம் இந்த தம்மாத்தூண்டு போன்ல வேலை முடிஞ்சுடுது. பிரச்னையும் இந்த போன்தான்... எல்லாத்தையும் மொத்தமா காட்டிக் கொடுத்துடும். வறுமையில வர்றது, வசதியா வாழணும்னு வர்றது, சினிமா ஆசையில வந்து மாட்டிக்கிறது, காதல் கருமம்னு ஓடிவந்து இங்கே சிக்கிக்கிறதுனு என் சர்வீஸ்ல நிறைய பார்த்திருக்கேன். இப்போ இந்த கொரோனா, ஊரடங்குனு பொழப்பு இல்லாம நிறைய பொம்பளைங்க இந்தத் தொழிலுக்கு வர்றாங்க. குடும்பங் குட்டியா வாழுற பொண்ணுகளே வாழ வழியில்லாம இவ்வளவு பேர் தொழிலுக்கு வர்றது இதுதான் முதல்முறை!” என்று முடித்தார்.

‘விபச்சாரத் தடுப்பு காவல் துறையினர் நம்மிடம் சில விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்கள். “பாலியல் தொழில் தொடர்பாக, கடந்த ஆறு மாதங்களில் சென்னையில் மட்டும் 120 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் ஆன்லைன் பாலியல் தொழில் தொடர்பாக மட்டுமே 80 வழக்குகள். ஆன்லைனில் தரப்படும் அலைபேசி எண்களில் பேசுபவர்கள் தமிழகத்தில் இருப்பதில்லை. வட மாநிலங்களில் இருக்கிறார்கள். அவர்களைக் கண்டறிவது எளிதல்ல. நீங்கள் குறிப்பிடும் பன்னாட்டு வெப்சைட், இந்தியாவின் முக்கியமான நட்பு நாட்டிலிருந்து செயல்படுகிறது. நாங்கள் ஏற்கெனவே அந்த வெப்சைட்டை முடக்குவதற்குப் பரிந்துரை செய்தும் எதுவும் நடக்கவில்லை. அதைத் தடைசெய்ய மத்திய அரசு யோசிக்கிறது” என்றார்கள்.

ஆடம்பர வாழ்க்கையின்மீதான ஆசையில் வருபவர்கள், அவர்களின் உடலைச் சுரண்டிக் கொழுக்க நினைத்து இங்கு வருபவர்கள் பற்றிக் கவலைப்பட ஒன்றுமில்லை. ஆனால், வறுமையின் காரணமாக, அதுவும் இந்த கொரோனா காலத்தின் கொடுமை காரணமாக பாலியல் தொழிலுக்குள் வரும் அப்பாவிப் பெண்களை நினைத்தால் நெஞ்சு பதறுகிறது!

ஜாமீன் கையெழுத்துக்கு ஆளில்லை!

பாலியல் தொழிலாளிகள் தொடர்பான வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞரான எஸ்.டி.எஸ்.டென்னி, இந்தத் தொழிலில் இருப்பவர்களின் மற்றொரு கோணத்தையும் பகிர்ந்துகொண்டார். “பாலியல் தொழில் தொடர்பான வழக்குகளில் சிக்கும் பெண்களில், வயதானவர்களை ‘புரோக்கர்’ என்று வழக்கு பதிவுசெய்கிறது காவல்துறை. வாடிக்கையாளராக வரும் ஆண்கள் வழக்கிலிருந்து எளிதில் தப்பிவிடுவார்கள். தொழிலில் ஈடுபடும் பெண்கள், நீதிமன்றம் மூலம் அரசுக் காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். அவர்களுக்கு ரத்த உறவினர்கள் ஜாமீன் கொடுத்தால் மட்டுமே வெளியே வர முடியும். இந்தத் தொழிலில் இருக்கும் பெண்கள் பலரும் ரகசியமாகத் தொழில் செய்வதாலும், பலர் குடும்ப உறவிலிருந்து வெளியேறியவர்களாக இருப்பதாலும் கையெழுத்துப்போட உறவினர்கள் கிடைப்பதில்லை. இதனால், ஜாமீன் கிடைக்காமல் மாதக்கணக்கில் காப்பகத்திலேயே தங்கும் நிலையும் ஏற்படுகிறது” என்றார்.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment