Wednesday, August 26, 2020

நாங்கள் என்ன வாட்ச்மேன்களா?

தற்போதைய தமிழ்நாடு சட்டமன்றத்தின் ஆயுட்காலம் முடிய இன்னும் எட்டு மாதங்களே எஞ்சியுள்ளன. அதற்குள் எப்படியெல்லாம் மக்கள் பணத்தில் கைவைக்க முடியும் என மந்திரிகள் ஒவ்வொருவரும் ரூம் போட்டு யோசிக்காத குறையாக களத்தில் இறங்கியுள்ளனர். `அவ்வாறு களமிறங்கியிருக்கும் துறைகளில் முன்னணி வகிப்பது அமைச்சர் வேலுமணியின் பொறுப்பிலுள்ள உள்ளாட்சித்துறை’ என்ற பேச்சு நிலவுகிறது.

கிராம ஊராட்சித் தலைவர்களின் அதிகாரங்களைப் பறிக்கும் வகையில், ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் அனைத்தும் ‘பேக்கேஜ் டெண்டர்’ என்ற புதிய முறையில் மேற்கொள்ளப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது. பஞ்சாயத்து விதிகளின்படி, கிராம ஊராட்சித் தலைவர்களின் கையில் இருந்துவந்த வளர்ச்சிப் பணிகளுக்கான ‘டெண்டர்விடும் அதிகாரம்’ இந்தப் புதிய முறையின் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் கொதித்தெழுந்த ஊராட்சித் தலைவர்கள், மாவட்டம்தோறும் அரசுக்கு எதிராகக் கொடிபிடிக்கத் தொடங்கி யுள்ளனர். மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 29 ஊராட்சித் தலைவர்கள், இதற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ராமநாதபுரத்திலுள்ள ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தங்கள் எதிர்ப்பைக் காட்டியதுடன், ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளனர்.

இது குறித்து விரிவாகப் பேசிய ‘கடலாடி’ ஒன்றிய ஊராட்சித் தலைவர்கள் கூட்டமைப்பின் பொருளாளரும், கீழச்செல்வனூர் ஊராட்சித் தலைவருமான முகம்மது இக்பால், “ராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஒன்றியங்களில் 429 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றுக்குக் கடந்த ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு, இந்த ஆண்டு ஜனவரியில் தலைவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டோம். கிராமத்துக்குத் தேவையான அடிப்படைப் பணிகளான குடிநீர் வசதி, சிமென்ட், மெட்டல் மற்றும் பேவர் பிளாக் சாலைகள், ஊரணி மராமத்து, பொதுக்கழிப்பறை போன்றவற்றை ஊராட்சியின் மூலம் தீர்மானம் நிறைவேற்றி மேற்கொள்வது வழக்கம். ஆனால், கடந்த மூன்றரை ஆண்டுகளாகத் தேர்தல் நடத்தப்படாததால், அதிகாரிகளே இந்தப் பணிகளை மேற்கொண்டுவந்தனர். தேர்தல் முடிந்து தலைவர் - உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு எட்டு மாதங்கள் ஆன நிலையில், தற்போதும் அதிகாரிகளே இந்தப் பணிகளைத் தங்கள் விருப்பம்போல் செய்துவருகின்றனர்.

‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்ட’த்தின் கீழ், ஒவ்வோர் ஊராட்சிக்கும் அதன் மக்கள்தொகையின் அடிப்படையில், வேலைகள் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பது அடிப்படை விதி. ஆனால் இவற்றுக்கு நேர்மாறாக, எங்களுக்குத் தெரியாமலேயே பணிகளைத் தேர்வு செய்வதுடன், அதற்கான ஒப்பந்தப் புள்ளிகளையும் ‘பேக்கேஜ் டெண்டர்’ முறையில் நிறைவேற்றிவருகின்றனர். அதன் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் முழுமையாகவோ, தரமான தாகவோ இருப்பதில்லை. ஆனால் திட்டத்துக்கான தொகையைப் பெற மட்டும் எங்களிடம் தீர்மானமும் கையெழுத்தும் கேட்கின்றனர். ஊராட்சி களில், குப்பை அகற்றுவதில் தொடங்கி ரோட்டில் அடிபட்டு இறந்துகிடக்கும் நாய் உள்ளிட்ட விலங்குகளின் உடலை அப்புறப்படுத்துவது வரை ஊராட்சித் தலைவரே பொறுப்பு. ஆனால், அரசால் அறிவிக்கப்படும் திட்டங்களையெல்லாம் அதிகாரிகள் மட்டத்திலேயே முடிவெடுப்பது என்ன நியாயம்? மக்களால் தேர்வுசெய்யப்பட்ட தலைவர் களான எங்களை ஊராட்சியின் வாட்ச்மேன்கள் போல நடத்துகிறார்கள் ஆட்சியாளர்கள்.


முகம்மது இக்பால், வீரராகவ ராவ்
ஊராட்சிகளில் பணிகளை மேற்கொள்ள உதவும் 14 மற்றும் 15-வது நிதிக்குழு மானிய நிதிகூட கடந்த எட்டு மாதங்களாக வழங்கப்படவில்லை. இந்நிலையில், மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள ‘ஜல் ஜீவன் மிஷன்’ திட்டத்தின் கீழ், குக்கிராமங்களிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு, அங்கன்வாடி, பள்ளிகள், ஊராட்சிக் கட்டடங்கள், கால்நடை களுக்கென பிரத்யேக குடிநீர்த் தொட்டிகள், ஆழ்துளைக் கிணறுகள் எனப் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. இத்திட்டங்கள், ஊராட்சி அளவில் குழு அமைத்து நிறைவேற்றப்பட வேண்டும் என்பது அடிப்படை விதி. ஆனால் அமைச்சர் முதல் அதிகாரிகள் வரை கமிஷன் பெற ஏதுவாக இந்தப் பணிகளையும் ‘பேக்கேஜ் டெண்டர்’ விட திட்டமிட்டுள்ளனர்.” என்றார்.

பெயர் குறிப்பிட விரும்பாத சிறு ஒப்பந்ததாரர் ஒருவர், “2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே இந்த ‘பேக்கேஜ் டெண்டர்’ முறையைக் கொண்டு வந்து விட்டார்கள். ஜெயலலிதா இருந்தவரை ஐந்திலிருந்து பத்து கோடி வரை அளிக்கப் பட்டுவந்த பேக்கேஜ் டெண்டர், இப்போது 200 கோடிகளுக்குக் குறையாமல் ஒரு பேக்கேஜாக அளிக்கப்படுகிறது. இதனால், பெரிய பெரிய நிறுவனங்கள் மட்டுமே இப்போது டெண்டர் எடுக்கின்றன. சிறு ஒப்பந்ததாரர்கள் பெருமளவு காணாமல் போய்விட்டனர்.” என்றார்.

`பெயர் குறிப்பிட வேண்டாம்’ என்ற கோரிக்கையுடன் பேசிய உள்ளாட்சித்துறை மூத்த அதிகாரி ஒருவர், “ஒரு கண்மாயைத் தூர் வார வேண்டுமென்றால், ஆள் வைத்துத்தான் பணி செய்ய வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் பினாமி பெயரில் டெண்டர் எடுக்கும் ஊராட்சித் தலைவர்கள் சிலர், ஜே.சி.பி இயந்திரத்தைவைத்து பெயரள வுக்குத் தூர்வாரிவிட்டு, போலியாக ஆட்கள் பணிசெய்ததாக பில் போட்டுக் கொள்வார்கள். இதை ஒழிப்பதற்காகத் தான் ‘பேக்கேஜ் டெண்டர்’ கொண்டு வரப்பட்டு, அதிகாரம் கலெக்டர்கள் கையில் சென்றது. சிறு ஒப்பந்ததாரர்கள் ஒழிந்துவிட்டார்கள் என்பதெல்லாம் பொய். பெரிய ஒப்பந்ததாரர்களிடம் ‘சப் கான்ட்ராக்ட்’ எடுத்து அவர்களும் பணி செய்கிறார்கள். இது தேர்தல் நேரம் என்பதால், ஊராட்சித் தலைவர்கள் சிலருக்கு கமிஷன் கிடைப்ப தில்லை என்பதால்தான் இப்போது இந்தப் பிரச்னை எழுப்பப்படுகிறது” என்றார்.

ஊராட்சித் தலைவர்களின் பிரச்னை குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவிடம் பேசினோம். “மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும் முறையே இங்கேயும் உள்ளது. இந்நிலையில் ஊராட்சித் தலைவர்களின் கோரிக்கை குறித்து அரசுக்குத் தெரியப்படுத்தப் படும்” என்றார்.

இது குறித்து விளக்கம் பெற உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியைப் பல முறை தொடர்பு கொள்ள முயன்றும், நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை. அவரது அதிகாரபூர்வ இ-மெயில் ஐ.டி-யான mlathondamuthur@tn.gov.in என்கிற முகவரிக்கு மெயில் அனுப்பியிருக்கிறோம். விளக்கம் வரும்பட்சத்தில் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறோம்.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment