Wednesday, August 26, 2020

ஒரே நாடு... ஒரே தேர்வு... வரமா, வஞ்சகமா?

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’, ‘ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு’ வரிசையில் தற்போது ‘ஒரே நாடு ஒரே தேர்வு’ என்ற புதிய தேர்வு முறையை மத்திய அரசு கொண்டுவருகிறது. மத்திய அரசுப் பணிகளுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்வதற்காக என்.ஆர்.ஏ (National Recruitment Agency) எனப்படும் ‘தேசிய பணியாளர் தேர்வு முகமை’ என்கிற புதிய அமைப்பை மத்திய அரசு அமைக்கவிருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கியுள்ளன.

மத்திய அரசுப் பணிகளுக்குப் பணியாளர்களைத் தேர்வு செய்ய, பல்வேறு தேர்வாணையங்கள் செயல்படுகின்றன. இவை தனித்தனியாகத் தேர்வுகள் நடத்தி, பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றன. இதில்தான் ஒரு மாற்றத்தை மத்திய பா.ஜ.க அரசு கொண்டுவருகிறது. அதன்படி, மத்திய அரசுத்துறைகளில் ‘குரூப்-பி’ (Non Gazetted) மற்றும் குரூப்-சி (தொழில்நுட்பம் அல்லாத பணிகள்) ஆகியவற்றுக்கு தேசிய அளவில் தேர்வுகளை நடத்துவதற்காக என்.ஆர்.ஏ என்ற அமைப்பு உருவாக்கப்படும். அந்த அமைப்பு நடத்தும் அடிப்படைத் தகுதித் தேர்வை எழுதிய பிறகே சம்பந்தப்பட்ட தேர்வாணையங்களின் தேர்வை எழுத முடியும்.

பிரதமர் மோடி தலைமையில், ஆகஸ்ட் 19-ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், என்.ஆர்.ஏ அமைப்பை உருவாக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. `இதற்காக, இந்தியாவில் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்’ என்றும் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட பொதுத் தகுதித்தேர்வில் கிடைக்கும் மதிப்பெண், மூன்று ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும். அந்த மதிப்பெண்ணைச் சம்பந்தப்பட்ட தேர்வாணையங்களுக்கு என்.ஆர்.ஏ அனுப்பிவிடும். அதன் பிறகு, அந்தந்தத் தேர்வாணையங்கள் பிரதான தேர்வை நடத்தி, பணியாளர்களை நியமிக்கும். என்.ஆர்.ஏ அமைப்புக்கு 1,517 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதன் மூலம், 117 மாவட்டங்களில் தேர்வு மையங்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.

‘ஒரே நாடு ஒரே தேர்வு’ முறைக்கு, தமிழகத்தில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவிடமிருந்து முதல் எதிர்ப்புக் குரல் வந்துள்ளது. ‘‘இது, மத்திய அரசின் வஞ்சகத் திட்டம். முறைகேடாகத் தேர்வு களை நடத்தி, தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பணிகளில் வட மாநிலத்தவரை அமர்த்து வதற்கான முயற்சி நடக்கிறது” என்று அவர் விமர்சித்துள்ளார்.


சரி, மற்ற கட்சிகள் என்ன சொல்கின்றன?

தி.மு.க-வைச் சேர்ந்த திருவண்ணாமலைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சி.என்.அண்ணாதுரை, ‘‘இது மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல். முறைகேடுகளும் நடக்க வாய்ப்புள்ளன. ‘மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வில் ஆங்கிலம், இந்தியுடன் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளும் இருக்கும்’ என்கிறார்கள். ஏற்கெனவே தபால்துறைக்கான தேர்வில் தமிழ் தெரியாத, வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழில் 100-க்கு 98 மதிப்பெண்களை மோசடியாக எடுத்து தேர்ச்சி பெற்றார்கள். இதிலும் அதுதான் நடக்கும்” என்றார்.

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரான கல்யாணசுந்தரம், ‘‘புதிதாக ஓர் அமைப்பை ஏற்படுத்துவதாகக் கூறும் மத்திய அரசு, ஏற்கெனவே இருக்கும் ரயில்வே பணியாளர் தேர்வாணையம் போன்ற அமைப்புகள் கலைக்கப்படும் என்று சொல்லவில்லை. அப்படியென்றால், தேர்வுகளின் எண்ணிக்கையைத்தான் இவர்கள் அதிகப்படுத்துகிறார்கள்” என்றார்.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கும் பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளரான நாராயணன் திருப்பதி, “மத்திய அரசு வேலைகளுக்கான தேர்வுகளை எளிமையாக எதிர்கொள்ளவே இந்தப் புதிய முறை கொண்டு வரப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு மையங்களை ஏற்படுத்துவதால், அனைத்துப் பகுதி மக்களாலும் குறிப்பாக, கிராமப்புறப் பெண்களாலும் மத்திய அரசுப் பதவிகளுக்கான தேர்வை எளிதாக எழுத முடியும்’’ என்றார்.


இதற்கிடையே ‘என்.ஆர்.ஏ தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் மாநில அரசுப் பதவிகளுக்கும் பணி நியமனம் நடைபெறும்’ என்று மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் அறிவித்துள்ளார். இதை முன்வைத்து, “தமிழக அரசு இதில் என்ன முடிவை எடுக்கப்போகிறது?” என்று பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, ‘‘இது கொள்கை முடிவு சம்பந்தப்பட்டது. புதிய தேர்வு முறை குறித்த அறிக்கை, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசால் அனுப்பப்படும். அப்போது, அதில் இருக்கக்கூடிய சாதக, பாதகங்களை ஆராய்ந்து தமிழக அரசு முடிவெடுக்கும். மாநில நலன்தான் எங்களுக்கு முக்கியம். அதற்கு உகந்ததாக இல்லையென்றால், அதை எதிர்ப்போம்” என்றார்.

எப்படி... நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தது போலவா அமைச்சர் அவர்களே!?

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment