Wednesday, August 26, 2020

கழுகார் பதில்கள்

@எம்.கல்யாணசுந்தரம், கணபதிபுதூர், கோயம்புத்தூர்-6.

ரெளடிகள் இல்லாமல் அரசியல் செய்ய முடியுமா?

அடியாள் இன்றி அரசியலில் ஓர் அணுவும் அசையாது. ஒருகாலத்தில் அரசியலில் கோலோச்சிய ஆண்டைகள், தங்களுக்குப் பிரச்னைகள் வரக் கூடாது என்பதற்காக ரெளடிகளைத் துணைக்கு வைத்துக்கொண்டு அரசியல் செய்தார்கள். சாதிக்கு ஒரு ரெளடியை உருவாக்கி, ஒட்டுமொத்த மக்களையும் அடக்கி ஆண்டார்கள். வீசப்படும் எலும்புத் துண்டுகளுக்காக ஓடோடி உழைப்பது மட்டும்தான் அந்த அடியாட்களின் வேலை. மன்னர்கள் காலத்திலும்கூட இத்தகைய அடியாட்கள் வெவ்வேறு பெயர்களில் அங்கீகரிக்கப்பட்டவர்களாக வலம்வந்த வரலாறும் உண்டு. ஒருகட்டத்தில், ‘அதிகார ருசி’ அந்த அடியாட்களைச் சிந்திக்கவைக்க, இன்றைக்கு அனைத்துக் கட்சிகளிலும் பல்வேறு பிரிவுகளில் ‘தலைவர்கள்’ அளவுக்கு வளர்ந்துவிட்டனர். இவர்களில் பலர், மக்கள் பிரதிநிதிகளாகவும்கூட பரிணாம வளர்ச்சி பெற்றுவிட்டனரே!

ச.வசுமதி, வேங்கைவாசல், சென்னை-73.

‘மேட்டூர் அணையிலிருந்து காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டாலும் கிராமப்புற வாய்க்கால்கள், கண்மாய்கள் நிரம்பவில்லை. தூர்வாராமல்விட்டதுதான் பிரச்னை’ என்று குற்றம்சாட்டும் விவசாயிகள், தாங்களாகவே ஊர்க்கால்வாய்களைத் தூர்வாரிக்கொண்டால் என்ன?

“வானம் பொழிகிறது, பூமி விளைகிறது உனக்கேன் கொடுப்பது கிஸ்தி... எங்களோடு வயலுக்கு வந்தாயா; ஏற்றம் இறைத்தாயா; நீர்ப்பாய்ச்சி நெடுவயல் நிறையக் கண்டாயா; நாற்று நட்டாயா; களை பறித்தாயா; கழனிவாழ் உழவர்க்கு கஞ்சிக்கலயம் சுமந்தாயா; அங்கு கொஞ்சி விளையாடும் எம்குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துப் பணிபுரிந்தாயா அல்லது மாமனா, மச்சானா; எதற்குக் கேட்கிறாய் திறை.... யாரைக் கேட்கிறாய் வரி?’’ இப்படியெல்லாம் விவசாயிகள் வீர வசனம் பேசினால், பொதுப்பணித்துறையைக் கையில்வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி பதில் தர வேண்டியிருக்குமே பரவாயில்லையா!


@சா.ஜெகதீசன், குத்தாலம், மயிலாடுதுறை மாவட்டம்.

இரண்டாம் உலகப்போர் 1939 ஆண்டு முதல் 1945 ஆண்டு வரை நடைபெற்றது. மூன்றாம் உலகப்போர் ஆரம்பித்தால், ஒரு மாதத்துக்குள் முடிந்துவிடும்தானே?

ஒரே நாளில்கூட முடித்துவிடலாம். இந்த 75 ஆண்டுகளில் அந்த அளவுக்கு ஆயுத வியாபாரிகள் உலக அளவில் அபரிமிதமான ‘வளர்ச்சி’யை அடைந்துள்ளனர்.

@கு.பாலசுப்பிரமணியன், நங்கநல்லூர், சென்னை-61.

இந்திக்கு எதிர்ப்பு காட்டாமல், 1960-களில் கூடுதலாக இந்தியும் கற்றிருந்தால், மத்திய அரசியலிலும், மத்திய அரசு அலுவலகங்களிலும் இன்னும் சிறப்பான நிலையைப் பெற்றிருக்கலாம்தானே?

‘தமிழை வேற்றுந்மொழி அழித்துவிடக் கூடாது’ என்பது எவ்வளவு முக்கியமோ... அதே அளவுக்குப் பிற மொழிகளைக் கற்று முன்னேறுவதும் அவசியமே. அந்த வகையில், இந்தியைக் கற்றிருந்தால் இன்னும் கூடுதலாக ஒரு சில வேலைகள் கிடைத்திருக்கலாம். அதேசமயம், ஆங்கிலம் கற்றதால் உலக அளவில் பரவி, கூடுதல் வேலைகளிலும் உலகின் உச்சபட்ச பதவிகளிலும் தற்போது தமிழர்கள் அமர்ந்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம்.

இந்தி கற்றிருந்தால் வடநாட்டு அரசியலில் கால்பதித்திருக்க முடியும் என்பதெல்லாம் கவைக்குதவாத பேச்சுகளே. இன்றைக்கு ஆட்சியிலிருப்பது பா.ஜ.க-தான். அந்தக் கட்சியில் இல.கணேசன், ஹெச்.ராஜா, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தமிழக அரசியல் பிரபலங்களெல்லாம் இந்தி தெரிந்தவர்கள்தான். ஆனால்?

@ப.ஜனசேகரன், தஞ்சாவூர்.

உலக அளவில் எப்போதுமே தர்மம் வென்றதாகத் தெரியவில்லை. ஆனால், ‘தர்மம் வெல்லும்’ என்று சொல்லிச் சொல்லி நம்மையும் பிறரையும் ஏமாற்றிக்கொண்டுதானே இருக்கிறோம்?

‘வாய்மையே வெல்லும்’ என்பதைவிட, ‘வலியதே வெல்லும்’ (Survival of the fittest) என்பதுதான் உலக நிதர்சனம். எனவே, வலிமையை வளர்த்துக்கொள்ளுங்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை!

@டி.சந்திரன், ஈரோடு.

ஊடகங்கள், பெரும்பாலும் தவறுகளை மிகைப்படுத்தியே குளிர்காய்கின்றனவே... என்ன காரணம்?

‘தவறு நடக்கிறது’ என்பதை ஊருக்கு அறிவிப்பதே ஊடகங்கள்தான். ஆட்டோ சங்கர், பிரேமானந்தா, நிர்பயா என நேற்றைய அதிர்ச்சிகரமான வழக்குகள் தொடங்கி இன்றைய பொள்ளாச்சி, சாத்தான்குளம் போன்ற கொடூரமான கொடுமைகள் வரை வெளிக்கொண்டு வந்ததாகட்டும்... குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கச் செய்வதாகட்டும்... ஊடகங்களின் பங்கை மறைக்கவோ மறுக்கவோ முடியாது. அதற்காக மிகைப்படுத்துதல் இல்லை என்று சொல்லவில்லை. ‘பொய்மையும் வாய்மை யிடத்து’ என்பதுபோல சிலபல சந்தர்ப்பங்களில் மிகைப்படுத்துதலும் தேவையே. வெகுஜனத்தின் கவனமும், அரசாங்கத்தின் கவனமும் அப்போதுதானே அங்கே திரும்புகின்றன... தவறாக மிகைப்படுத்தினால்தான் தவறு.

@ஆர்.எஸ்.அசோக், சென்னை.

‘ஈ.வெ.கி.சம்பத், எம்.ஜி.ஆர், கோபால்சாமி போன்ற ஆற்றல்மிக்க தலைவர்கள் விலகிய பிறகும் தி.மு.க வலுவாகத்தான் உள்ளது’ என்கிறாரே தி.மு.க-வின் பொருளாளர் துரைமுருகன்?

கட்சி வலுவாக இருக்கலாம். ஆனால், ஆற்றல்மிக்க கொள்கைகளெல்லாம் கரைந்து காணாமல் போய்விட்ட பிறகு, கட்சி மட்டும் இருந்தென்ன லாபம்!

@ப.கார்த்திக், மதுரை.

கொரோனா காலத்திலும் உயர் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் முழுக்கல்விக் கட்டணம், பேருந்துக் கட்டணம், விடுதிக் கட்டணம் என்று வசூலிக்கும் தனியார் பள்ளி, கல்லூரிகளை கவனித்து அரசாங்கம் நடவடிக்கைகள் எடுக்காதா?

‘கவனி’க்காத வரை கவனித்துக்கொண்டுதானிருப்பார்கள். ‘கவனித்து’ விட்டால்... ‘கவனிக்க’ மாட்டார்கள்.

@மூர்த்தி பாலகிருஷ்ணன், அனுப்பானடி, மதுரை-9.

மனித இனத்தின் ஆதி உணவு சைவமா... அசைவமா?

உணவில் சைவம், அசைவம் என்றெல்லாம் எந்தப் பாகுபாடும் கிடையாது. உயிர்கள் அனைத்துக்குமான உணவுகளை மட்டும்தான் இயற்கை உருவாக்கிவைத்துள்ளது. அவற்றுக்குப் பெயர் சூட்டுவது... பிறந்தநாள் கொண்டாடுவது... கேக் வெட்டுவதெல்லாம் நம்முடைய கற்பிதங்களே!

@கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூர்-77.

ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் இருவரில் யார் சசிகலாவின் கைப்பாவை, யார் பா.ஜ.க-வின் கைப்பாவை?

இத்தனை நாள்களாக இருவருமே பா.ஜ.க-வின் கைப்பாவையே. தேர்தல் வரப்போவதால், ‘சசிகலாவின் கைப்பாவையாக முதலில் மாறுபவருக்கு ஜாக்பாட் அடிக்கலாம்’ என்கிற நம்பிக்கையில் இருவருக்கு இடையேயும் பலத்த போட்டி நிகழ்வதாகக் கேள்வி.


@ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம், ஈரோடு மாவட்டம்.

2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க இரண்டு கட்சியினரும் மூட்டை மூட்டையாகப் பணத்தைக் கொட்டுவார்கள். ரஜினியும் கொட்டுவாரா?

மூட்டைகட்டி வைத்திருப்பவர்களில் சிலர் ஏற்கெனவே ‘கொட்டி’க் கொண்டேதான் இருக்கிறார்கள். ‘வெட்டித்தர’ வேண்டியதுதான் பாக்கி.

@செய்யது முகம்மது, மேலப்பாளையம்.

இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதே?

‘நம் பிள்ளையும் தனியார் பள்ளியில் படித்து முன்னேற வேண்டும்’ என்பதற்காக வாயைக்கட்டி, வயிற்றைக் கட்டித்தான் பலரும் படிக்க வைத்தார்கள். இப்போது, கையிருப்பை மட்டுமல்ல... வாழ்வாதாரத்தையும் கூட கொரோனா ‘கொள்ளை’ அடித்து விட்டது. மேற்கொண்டு ‘கல்விக் கொள்ளையர்’ களுக்கு அள்ளிக் கொடுக்க ஏது மில்லாத சூழலில், பரிதாபத்துக்குரிய அந்தப் பெற்றோர் களால் வேறென்ன தான் செய்ய முடியும்... பண வசதியில்லாதவர் களும் தனியார் பள்ளிகளை நாடுவதற்குக் காரணமே, ஓரளவுக்கு அங்கிருக்கும் உள்கட்டமைப்பு களும் தேர்ச்சி விகிதமும்தான். எனவே, இன்றைய கொடுஞ்சூழலைப் புரிந்துகொண்டாவது உள்கட்டமைப்பு தொடங்கி அனைத்து வகைகளிலும் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும். அதைவிடுத்து புதிது புதிதாகக் கொள்கைகளை அள்ளிவிடுவதில் எந்தப் பலனும் இல்லை. பூ வைத்து, பொட்டு வைப்பதால் மட்டும் வயிறு நிறைந்துவிடாது... பொங்கலும் வைக்க வேண்டும்.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment