Wednesday, August 26, 2020

தினகரன் தலைமறைவு மர்மம்!?

சட்டமன்றத் தேர்தலுக்கு எட்டு மாதங்களே இருக் கின்றன. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஹேர் ஸ்டைலையே மாற்றி உடன்பிறப்புகளை அசத்துகிறார். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், எந்நேரமும் வீடியோ காலிலேயே தரிசனம் தருகிறார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தேர்தல் பிரசாரத்தையே துவங்கிவிட்டார். ஆனால், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ-வுமான தினகரன் ஏதோ வேற்றுக் கிரகத்தில் இருப்பதைப்போல் எங்கும் தலையைக் காட்டாமல் அறிக்கை மட்டும் விடுகிறார். கட்சியின் தொண்டர்களாலேயே அவரைச் சந்திக்க முடியவில்லை. இதற்கு முன்னர் அ.தி.மு.க-வின் தலைவி ஜெயலலிதாவை, ‘பால்கனி அரசியல்’ நடத்தியதாக விமர்சிப்பார்கள். தினகரனோ ‘பண்ணை வீடு’ அரசியல் நடத்துகிறார்.

சில நாள்களுக்கு முன்னர் தினகரனின் தொகுதியான ஆர்.கே.நகரில், சசிகலாவின் 66-வது பிறந்தநாள் விழாவில்கூட தினகரனின் தலை தென்படவில்லை. 150 நாள்களாக யார் கண்ணிலும் படாமல் தலைமறைவாகியுள்ள தினகரன், திரைமறைவில் இருந்தபடி அரசியல் நடத்துவது பல்வேறு வதந்திகளைக் கிளப்பியுள்ளது.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் சிலரிடம் பேசியபோது, ‘‘கொரோனா பயம் காரணமாக எங்கள் தலைவர் 150 நாள்களாக வெளிவராமல் இருக்கிறாரா அல்லது அவரது இல்லத் திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக இருக்கிறாரா என்று தெரியவில்லை. அவர் மீதுள்ள வழக்கு தொடர்பான சட்ட ஆலோசனையில் இருக்கிறார் என்றும் சிலர் சொல்கிறார்கள். சசிகலா விடுதலை தொடர்பான சில வேலைகளை புதுச்சேரி அருகிலுள்ள பண்ணை வீட்டில் இருந்தபடியே செய்துவருவதாகச் சொல்லப்படுகிறது. எதையும் உறுதியாக நம்ப முடியவில்லை. என்ன இருந்தாலும், தொண்டர் களாகிய எங்களை அவர் நேரடியாகச் சந்திக்காமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’’ என்று புலம்பினார்கள்.


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது 20 ரூபாயை டோக்கன்போல முன்பணமாகக் கொடுத்து, ‘ஜெயித்தால் பத்தாயிரம் கிடைக்கும், இருபதாயிரம் கிடைக்கும்’ என்று அ.ம.மு.க-வினர் பிரசாரம் மேற்கொண்டதாகப் பரபரப்பு கிளம்பியது. ஜெயித்த பிறகு தொகுதிப் பக்கம் தினகரன் வந்தபோது, வாக்காளர்களில் சிலர் இருபது ரூபாய் நோட்டுகளைக் காட்டி, ‘‘நம்பி ஒட்டுப் போட்டோமே... எங்கே பணம்?’’ என்று கேட்டு கூச்சல் போட்டனர். அதை விமர்சித்த அ.தி.மு.க-வினர், ‘‘இதற்கு தினகரன் பதில் சொல்ல மாட்டார். ஏன்... தொகுதிப் பக்கமே வர மாட்டார்” என்று பந்தயம் கட்டினர்.

இதுவரை ஆர்.கே.நகர் தொகுதியில் 87 பேர் கொரோனா பாதிப்பில் இறந்திருக்கிறார்கள். 4,302 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்கள் 288 பேர். ‘‘தொகுதி மக்களுக்குத் தேவையான கொரோனா நிவாரண உதவிகளைச் செய்யக்கூட தொகுதி எம்.எல்.ஏ-வான தினகரன் வரவேயில்லை’’ என்ற புலம்பல் குரல்கள் கேட்கின்றன. அ.ம.மு.க-வின் மாவட்டச் செயலாளர் வெற்றிவேல்தான் தொகுதியிலிருக்கும் எம்.எல்.ஏ அலுவலகத்தின் பொறுப்பாளர். அவரும் சமீபகாலமாக அங்கு வருவதில்லை. ‘கடந்த ஐந்து மாதங்களாக தினகரனையும் அங்கு சந்திக்க முடியவில்லை... பொறுப்பாக பதில் சொல்லவும் யாருமில்லை’ என்ற கடுப்பில் சிலர், ‘எம்.எல்.ஏ-வைக் காணவில்லை’ என்று போஸ்டர் அடித்து ஒட்டிவிட்டனர்.

‘மத்திய அரசின் திட்டங்கள் எந்த அளவில் நிறைவேற்றப்படுகின்றன... குறை ஏதும் இருக்கிறதா?’ என்பதை கவனிக்க DISHA கமிட்டி செயல்படுகிறது. சென்னையிலுள்ள மூன்று நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து, வருடத்துக்கு மூன்று முறை சென்னை கலெக்டர் அலுவலகத்தில் கமிட்டி கூடும். மத்திய சென்னை எம்.பி-யான தயாநிதி மாறன்தான் அதன் தலைவர். கொரோனா காரணமாகக் கடந்த முறை இந்தக் கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது. தினகரனுக்குத் தகவல் அனுப்பியும், அவர் கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து தி.மு.க-வினரும் அ.தி.மு.க-வினரும் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினர்.

இந்தக் குற்றச்சாட்டுக்கெல்லாம் விளக்கம் கேட்டு அ.மு.மு.க-வின் மாவட்டச் செயலாளர் வெற்றிவேலிடம் பேசினோம். ‘‘கொரோனாவால் பாதிக்கப்பட்ட தொகுதி மக்களுக்கு உதவி செய்ய ஒன்பது முறை அனுமதி கேட்டோம். கிடைக்கவில்லை. `கும்பல் கூடினால், நோய்த் தொற்று பரவ வாய்ப்புகள் அதிகம்’ என்று அனுமதி மறுக்கப்பட்டது. அதைப் புரிந்துகொண்ட எங்கள் தலைவர் எங்கும் வராமலிருக்கிறார். ஆனால், கட்சிரீதியாக எல்லோருடனும் நெருக்கமாகத்தான் இருக்கிறார். கட்சிப் பத்திரிகையில், சமூக வலைதளங்களில் அவர் படு பிஸியாக இருப்பதை அனைவரும் அறிவர்.


கொரோனாவுக்கு முன்னர் தொகுதியில் நிலவிய குடிநீர்ப் பஞ்சத்தைப் போக்க வாகனங்களில் தொடர்ந்து தண்ணீர் சப்ளை செய்தோம். இப்போது விமர்சிப்பவர்கள் அப்போது எங்கே போனார்கள்? கும்பல் கூடாமல் ஆங்காங்கே எங்கள் கட்சிப் பிரமுகர்கள் கொரோனா நலத்திட்ட உதவிகளைச் செய்துதான் வருகிறார்கள். புதுச்சேரி அருகேயுள்ள தனது இடத்தில் கட்சியின் முக்கியத் தலைவர்களை வரவழைத்து ஆலோசனை நடத்துகிறார். தினமும் மாவட்டச் செயலாளர்களுடன் போனில் பலமுறை பேசுகிறார். தொகுதியி லுள்ள சிலரை அ.தி.மு.க-வினர் தூண்டிவிட்டு இது போன்ற பொய்களைப் பரப்புகிறார்கள். அதற்கெல்லாம் தலைவர் விரைவில் பதில் சொல்வார்’’ என்றார்.

முதல்ல தலைவர் வெளியில வரட்டும்!

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment