Wednesday, August 26, 2020

ஆயுஷ் மொழிச் சர்ச்சை

யோகா மற்றும் நேச்சுரோபதி மருத்துவர்கள் காணொலி வாயிலாகப் பங்கேற்ற தேசிய அளவிலான பயிற்சி நிகழ்ச்சியில், இந்தித் திணிப்பு நடைபெற்றது சர்ச்சையாகியுள்ளது.

மத்திய ஆயுஷ் (ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி) அமைச்சகம் சார்பில் ஆகஸ்ட் 18, 19, 20 மூன்று நாள்களில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சி, முழுக்க முழுக்க இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டது; ‘ஆங்கிலத்தில் பேசுங்கள்’ என்று தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவர்கள் கூறியபோது, ‘இந்தி தெரியாதவர்கள் இங்கிருந்து வெளியேறலாம்’ என்று ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் கொட்டேச்சா கூறியதுதான் சர்ச்சைக்குக் காரணம்.

இது குறித்து சித்த மருத்துவர் கு.சிவராமனிடம் பேசினோம். அவர், ‘‘இந்த நிகழ்வு வேதனையளிக்கிறது. ஆயுஷ் அமைச்சகம் என்பது ஐந்து வேறுபட்ட பாரம்பர்ய, மரபு மருத்துவ முறைகளுக்கானது. அந்தப் புரிந்துணர்வு அந்தத் துறையின் செயலாளராக இருப்பவருக்கு இருக்க வேண்டும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக ஆயுர்வேதத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, சித்த மருத்துவம் உட்பட மற்ற மருத்துவங்கள் இரண்டாம்பட்சமாகவே பார்க்கப்படுகின்றன. மற்ற மருத்துவங்கள் மொழி சார்ந்து, இனம் சார்ந்து பாகுபாட்டுடன் பார்க்கப்படுகின்றன. இந்த மனப்போக்குதான் ஆயுஷ்துறை சார்பில் நடத்தப்பட்ட அந்த நிகழ்ச்சியில் வெளிப்பட்டுள்ளது.


மூன்று நாள்கள் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியை, முதல் இரண்டு நாள்கள் இந்தியிலேயே நடத்தியிருக்கிறார்கள். மூன்றாம் நாள் ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளரும் இந்தியில் பேசியபோதுதான், ‘ஆங்கிலத்தில் பேசுங்கள்’ என்று பங்கேற்பாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். உடனே, ‘இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள்’ என்று அவர் கூறியிருக்கிறார். அனைத்து மருத்துவ முறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய நேரத்தில் மொழி சார்ந்து, பகுதி சார்ந்து பிரித்துப் பார்க்கும் மனோபாவம் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். மருத்துவத்துக்குள் அரசியலைக் கொண்டுவருவதை ஏற்க முடியாது” என்றார்.

இது குறித்து பா.ஜ.க-வின் மாநிலத் துணைத் தலைவரான புரட்சிக்கவிதாசனிடம் பேசினோம். அவர், ‘‘ஆயுஷ் அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு 350 பேருக்குத்தான் அனுமதி. அவர்களுக்குத்தான் லிங்க் அனுப்பப்பட்டது. ஆனால், 450 பேர் பங்கேற்றுள்ளனர். 100 பேர் போலியாக உள்ளே போயிருக்கிறார்கள். அவர்கள்தான் பிரச்னை செய்திருக்கிறார்கள். ‘எனக்கு இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளும் தெரியும். இந்தி தெரிந்தவர்களுக்கு இந்தியில் பேசிவிட்டு, ஆங்கிலத்தில் பேசுகிறேன்’ என்று ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் கூறியிருக்கிறார். அதைக் கேட்காமல், `ஆங்கிலத்தில் மட்டும்தான் பேச வேண்டும்’ என்று திட்டமிட்டே பிரச்னை செய்திருக்கிறார்கள்.

‘இந்தி தெரியாத நீங்கள் இந்தியரா?’ என்று தம்மிடம் விமான நிலையத்தில் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் கேட்டதாக தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கிளப்பிய பிரச்னையையும் ஆயுஷ் விவகாரத்தையும் தி.மு.க-தான் முடிச்சுப் போட்டு பெரிதுபடுத்துகிறது. இதன் பின்னால் தி.மு.க-வின் ஐ.டி பிரிவு செயல்படுகிறது. மொழி உணர்ச்சியைத் தூண்டிவிட்டு, தேர்தலில் வெற்றிபெற்று விடலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆயுஷ் நிகழ்ச்சியில் போலியாக உள்ளே நுழைந்த நபர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அனைத்து உண்மைகளும் வெளியே வரும்” என்றார்.

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment