Sunday, August 30, 2020

ஆய்வுக் கூட்டமா... அ.தி.மு.க விழாவா?

மாவட்டம்தோறும் கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்துவருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இந்தக் கூட்டங்களில் ஆளுங்கட்சி எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் கலந்துகொள்கிறார்கள். நூற்றுக்கணக்கான அ.தி.மு.க நிர்வாகிகளும் அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், எதிர்க்கட்சி பிரதிநிதிகளுக்கு அழைப்பு இல்லை. அப்படியே அவர்கள் வந்தாலும், குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியேற்றப் படுகிறார்கள். ஏன் இந்த அடக்குமுறை?

ஆகஸ்ட் 20-ம் தேதி, தருமபுரிக்கு வந்த முதல்வரை அந்தத் தொகுதியின் தி.மு.க எம்.பி செந்தில்குமார் சந்திக்கச் சென்றார். அவரை போலீஸார் அனுமதிக்கவில்லை. ஆனாலும், விடவில்லை செந்தில்குமார். திமிறி எழுந்து கேள்விக்கணைகளால் முதல்வரைத் துளைத் தெடுத்தார். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங் களில் வைரலாகின. அன்றைய தினமே வேலூரிலும் முதல்வருக்கு எதிராகக் கொந்தளித்தார் தி.மு.க-வின் மூத்த தலைவர் துரைமுருகன். ‘‘அரசு நடைமுறைகளை முதல்வர் ஆய்வு செய்வது தவறில்லை. ஆனால், அ.தி.மு.க உறுப்பினர்களை மட்டும் வைத்துக்கொண்டு கூட்டம் நடத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது. இதுவா நிர்வாகம்? திருட்டுத்தாலி கட்டிவிட்டுச் செல்கிறார் முதல்வர்’’ என்று காட்டமாக விமர்சித்தார்.

தருமபுரி எம்.பி செந்தில்குமாரிடம் பேசினோம். “அரசு விதிமுறைகளின்படி, அரசு நிகழ்வுகளில் கட்சிப் பாகுபாடின்றி அனைத்து மக்கள் பிரதிநிதிகளுக்கும் அழைப்புவிடுக்க வேண்டும். எனது மாவட்டத்துக்கு முதல்வர் வருகிறார் என்று பத்திரிகை நண்பர்கள் சொல்லித்தான் எனக்குத் தெரிந்தது. இதையடுத்து, தொகுதிப் பிரச்னைகள் தொடர்பான மனுவைக் கொடுப்பதற்காகச் சென்றேன். போலீஸார் என்னை உள்ளே விடவில்லை. அவர்களிடம், ‘அ.தி.மு.க பிரதிநிதிகள் கலந்துகொள்ளும்போது, இந்தத் தொகுதியின் எம்.பி-யான நான் கலந்துக்கொள்ளக் கூடாதா... எனக்கு மட்டும் அனுமதியில்லை என்பதற்கான ஆணையைக் காட்டுங்கள்’ என்றேன். போலீஸாரோ, ‘இது வாய்மொழி உத்தரவு’ என்றனர்.

ஆமா... துரைமுருகன்தான்!

உடனடியாக கலெக்டருக்கு போன் செய்தேன், அவர் எனது அழைப்பை ஏற்கவில்லை. அரசு நிகழ்ச்சிக்கு எனக்கு அழைப்பு விடுக்காதது, நிகழ்ச்சிக்குச் செல்லவிடாமல் என்னைத் தடுத்தது என அனைத்துப் பிரச்னைகளுக்கும் கலெக்டர்தான் காரணம். அவர் எனக்கு பதில் சொல்லியாக வேண்டும். ‘ஆய்வுக் கூட்டத்துக்கு எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளை ஏன் அழைக்க வேண்டும்?’ என்று முதல்வரும் கேட்கிறார். அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட நிகழ்ச்சிக்கான சர்க்குலரில், ‘ஆய்வுக் கூட்டம் மற்றும் அரசு விழா’ என்றுதான் குறிப்பிட்டுள்ளனர். ‘விழா என்றால், அதில் கட்சிப் பாகுபாடின்றி மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் பங்கேற்கலாம்’ என்பதுகூட முதல்வருக்குத் தெரியாதா? கொரோனா ஆய்வுக் கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் அல்லது சுகாதாரத்துறைச் செயலாளராவது இருந்திருக்க வேண்டும். இருவருமே இல்லாமல் ஆய்வுக் கூட்டம் நடத்தியிருப்பதுதான் வேடிக்கை. தகராறு செய்ய வேண்டும் என்பது எங்களுடைய நோக்கம் அல்ல. மக்கள் பிரச்னைகளை எடுத்துச்சொல்ல வாய்ப்பளிக்காததுதான் கோபத்தை ஏற்படுத்துகிறது’’ என்றார்.

வேலூர் மாவட்ட தி.மு.க செயலாளரும் அணைக்கட்டுத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான நந்தகுமார், ‘‘கொரோனா தடுப்புப் பணியில் பெரிய அளவில் ஊழல் நடக்கிறது. நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை யையும், இறப்பு விகிதத்தையும் குறைத்துக் காட்டுகிறார் முதல்வர். ஆய்வுக் கூட்டத்துக்கு எங்களை அழைத்தால் ‘குட்டு’ வெளிப்பட்டுவிடும். அதனாலேயே எங்களைப் புறக்கணிக்கிறார்கள். வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் வீரமணியோ, ‘முதல்வர் வந்தாரு போனாரு... நானும் தகவல் தெரிஞ்சுதான் போனேன்’ என்கிறார். பிறகு எப்படி முதல்வர் வருகைக்கு முந்தைய நாள் கலெக்டர், எஸ்.பி-யுடன் அமைச்சர் வீரமணி விழா அரங்கை ஆய்வு செய்தார்? அது தொடர்பான படங்களும் பத்திரிகைகளில் வந்துள்ளன. முதல்வர் மட்டுமல்ல... அமைச்சர்களும் வடிகட்டிய பொய் பேசுகிறார்கள்’’ என்றார் காட்டமாக.

முதல்வர் ஆய்வுசெய்கிறார்...

‘ஏன் இந்த அடக்குமுறை?’- முதல்வர் தரப்பில் அமைச்சர் வீரமணியிடம் பேசினோம். ‘‘கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற இந்த அரசு தீவிர முயற்சி எடுத்துவருகிறது. இப்படியான இக்கட்டான சூழலிலும், மாநிலம் முழுவதும் சென்று முதல்வர் ஆய்வுசெய்கிறார். ஆனால், தி.மு.க-வினர் இது போன்ற ஆய்வுக் கூட்டங்களிலும் அரசியல் செய்கிறார்கள், அறிக்கை விடுகிறார்கள், குழப்பம் ஏற்படுத்து கிறார்கள். தி.மு.க தலைவரால் வெளியே வர முடியவில்லை. வீட்டில் உட்கார்ந்துகொண்டு அறிக்கை மட்டுமே விடுகிறார். செயல்படாத எதிர்க்கட்சியின் விமர்சனத்தைப் பற்றி எங்களுக்குக் கவலை இல்லை’’ என்றார்.

கட்சி விழாவா, அரசு நிகழ்ச்சியா அல்லது அரசு செலவில் கட்சி விழாவா?

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment