Sunday, August 30, 2020

ரஜினிஃபோபியா! - பதற்றத்தில் திராவிடக் கட்சிகள்

கூட்டணிக் கட்சிகளைத் தக்கவைத்துக்கொள்ளும் நிர்பந்தத்தில் அ.தி.மு.க., தி.மு.க இரு கட்சிகளுமே தீர்மானமாக இருக்கின்றன. விரதம் இருப்பதுபோல அடுத்த நான்கு மாதங்களுக்கு அமைதியாக இருக்க வேண்டிய நெருக்கடி இரு கட்சிகளுக்குமே ஏற்பட்டிருக்கிறது. காரணம்... ரஜினி!

2016 சட்டமன்றத் தேர்தலின்போது, விஜயகாந்தின் கூட்டணியை தி.மு.க எதிர்பார்த்திருந்த நேரம். ‘பழம் கனிந்துவிட்டது. சீக்கிரமே பாலில் விழும்’ என்று மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி நம்பிக்கையோடு இருந்தார். ஆனால், பழம் நழுவி மக்கள்நலக் கூட்டணிக்குள் விழுந்துவிட்டது. இதைத் தொடர்ந்து, தே.மு.தி.க கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த சந்திரக்குமார் தலைமையில் கட்சி பிளவுற்றதை, தி.மு.க-வின் சதியாகவே விஜயகாந்தின் ஆதரவாளர்கள் பார்த்தனர். அது உண்மை என்று சொல்வதுபோல், சந்திரக்குமார் அணியும் தி.மு.க-வில் ஐக்கியமானது. இந்தப் பழைய கதையையெல்லாம் மறந்துவிட்டு, அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க இருந்து கொண்டிருக்கும்போதும், ஆகஸ்ட் 25-ம் தேதி கொண்டாடப்பட்ட விஜயகாந்த்தின் 68-வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின். ஆனால், தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதாவின் ரெஸ்பான்ஸ் `தெறி’ ரகம்.


‘‘தேசியக்கொடியை அவமதித்த ஸ்டாலின்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தியைக் குப்பையில் போட்டார் பிரேமலதா. இதற்கு தி.மு.க தரப்பிலிருந்து பதிலடி வரும் என்று பார்த்தால், உதயநிதியிடமிருந்து வாழ்த்துதான் வந்தது. திருமாவளவன் பிறந்தாளுக்கு ‘எழுச்சித் தமிழரே...’ என்றும், ராமதாஸ் பிறந்தநாளுக்கு ‘மருத்துவர் ஐயா...’ என்றும் வாழ்த்துகளைத் தட்டிவிட்ட ஸ்டாலினின் அரசியலைப் பார்த்து தமிழகமே வியந்துபோனது.

அ.தி.மு.க-வினரும் பதிலுக்கு உருட்டாமல் இருப்பார்களா என்ன?

தி.மு.க கூட்டணியில் அங்கம்வகிக்கும் ‘இந்திய ஜனநாயகக் கட்சி’யின் தலைவர் பாரிவேந்தர், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு பெரம்பலூர் எம்.பி-யானவர். எதிர்முகாமைச் சேர்ந்த இவருக்கும் தனது தாராளமான பிறந்தநாள் வாழ்த்தை வாரி வழங்கினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

ஆகஸ்ட் 26-ம் தேதி, பூம்புகார் சட்டமன்றத் தொகுதி கட்சி நிர்வாகிகளிடம் பேசிய பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி, ‘‘நாம் கோரிக்கை எழுப்பும் இடத்தில் இருக்கக் கூடாது. நிறைவேற்றும் இடத்தில் இருக்க வேண்டும்’’ என்று கர்ஜிக்கிறார். கூட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்களோ, ‘‘அண்ணே, நீங்கதான் அடுத்த முதல்வர்’’ என்று முழங்குகிறார்கள். அன்புமணியின் இந்த அதிரடிக்கு, “யார் முதல்வர் வேட்பாளர்?’ என குஸ்திபோடும் அ.தி.மு.க தரப்பிலிருந்து எந்த ரியாக்‌ஷனும் இல்லை. இரண்டு திராவிடக் கட்சிகளுமே கூட்டணிக் கட்சிகளைத் தக்கவைத்துக்கொள்வதிலும், புதிதாகக் கட்சிகளை இணைத்துக்கொள்வதிலும் பயங்கர ஆர்வமாக இருக்கின்றன.

ஏன் இந்த பயம்? `ரஜினிஃபோபியா’ என்கிறது அரசியல் வட்டாரம்!

தமிழக அரசியலை உன்னிப்பாக நோக்கும் ஒரு சில அரசியல் பார்வையாளர்களிடம் பேசினோம். ‘‘ரஜினி அரசியல் கட்சியை இன்னும் தொடங்கவில்லை. அவர் வருவாரா, மாட்டாரா என்பதே இன்னும் உறுதியாகவில்லை. ஆனால், இரண்டு திராவிடக் கட்சிகளுமே, `அவர் அரசியலுக்கு வந்துவிட்டால் நிலைமை தலைகீழாக மாறிவிடுமோ...’ என்கிற பதற்றத்தில் இருக்கின்றன. 1972-ல் தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் வெளியேற்றப்பட்டு, அ.தி.மு.க-வைத் தொடங்கியபோது, அவருக்கு வலுவான கட்டமைப்பு கிடையாது. காளிமுத்து, எஸ்.எம்.துரைராஜ், குழ.செல்லையா, செளந்திரபாண்டியன், ஜி.ஆர்.எட்மண்ட் என ஐந்து எம்.எல்.ஏ-க்கள்தான் எம்.ஜி.ஆரின் பின்னால் அணிவகுத்தனர். ஆனால், பல மாவட்டச் செயலாளர்களின் ஆதரவு

எம்.ஜி.ஆருக்குக் கிடைத்தது. கட்சியின் கட்டமைப்பை அவர்கள் வளர்த்தெடுத்தார்கள். 1977 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க ஆட்சியமைத்தது. இதேநிலை, ரஜினியாலும் ஏற்படக்கூடும் என்கிற அச்சம் தி.மு.க., அ.தி.மு.க கட்சிகள் இரண்டுக்குமே உள்ளது. ஏனென்றால், இரு கட்சிகளிலும் பதவி கிடைக்காதவர்கள், அதிருப்தியில் இருப்பவர்கள், தேர்தலில் சீட் கிடைக்காதவர்கள் என ஒரு பெரிய பட்டாளமே இருக்கிறது. அவர்கள் ரஜினியின் பக்கம் வரக்கூடும்.

எனவே, கூட்டணிக் கட்சிகள் என்ன குடைச்சல் கொடுத்தாலும் சரி, இரண்டு பெரிய கட்சிகளும் அதைத் துடைந்தெறிந்துவிட்டு, வரும் டிசம்பர் வரை வாய்மூடி அமைதி காப்பார்கள். டிசம்பர் தாண்டிவிட்டால், அடுத்த ஐந்து மாதத்தில் தேர்தல் வந்துவிடும். அதன் பிறகு, ரஜினி வந்தாலும் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படாது, கூட்டணிக் கட்சிகள் தங்கள் கையைவிட்டுப் போய் விடாது என்பது திராவிடக் கட்சிகளின் கணக்கு. இதற்காகத்தான் விரதம் இருப்பதுபோல நான்கு மாதங்களுக்குக் கூட்டணியைத் தக்கவைத்துக்கொள்ளத் தவிக்கிறார்கள். அதோடு, புதிய கூட்டணிக்கும் அச்சாரம் போடுகிறார்கள்” என்றனர்.


சரி, ரஜினி என்ன திட்டத்தில் இருக்கிறார்? அவர் ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ மூடில் இருக்கிறார் என்கிற ரஜினி ரசிகர் மன்ற வட்டாரம், ‘‘இப்போதேகூட கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால், ஒரு சில வாரங்களிலேயே நிர்வாகிகளை இரண்டு திராவிடக் கட்சிகளும் போட்டி போட்டு அள்ளிச் சென்றுவிடுவார்கள். தே.மு.தி.க., ம.தி.மு.க-வுக்கு நிகழ்ந்தது எங்களுக்கும் நிகழும். இந்தக் குதிரைப் பேரத்துக்கு இடம்கொடுக்கக் கூடாது என்பதற்காகத்தான் ரஜினி பொறுமை காக்கிறார். ஜனவரியில் அவர் கட்சியை அறிவித்தாலே போதும். நிர்வாகிகள் எல்லோருக்கும் தேர்தல் சிந்தனை மட்டும்தான் இருக்கும்; ஜெயிப்பதற்காக ஓடுவார்கள்; அணிமாறும் யோசனை வராது. கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை புதுச்சேரியில் ஆரம்பித்து திண்டிவனம் வரை நடக்கிறது. ரஜினி தன்னைத் தயார் செய்துகொண்டிருக்கிறார்’’ என்கிறது.

2021 சட்டமன்றத் தேர்தல் சுவாரஸ்யப் புயலை கிளப்பப்்போகிறது என்பதில் சந்தேகமில்லை!

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment