Wednesday, August 26, 2020

ஜெயில்... மதில்... திகில்! - 51 - கட்டளையிட்ட கலைஞர்... கற்பூரம் ஏற்றிய அசோக் சிங்கால்!

ஜெயேந்திரரை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளச் சொல்லி எனக்குத் தொலைபேசியில் அன்புக்கட்டளைபோட்டவர், கலைஞர்.

அவர்தான் என்னிடம் பேசி, “அவரை பத்திரமாகப் பார்த்துக்கொள். எங்களுக்குள் கொள்கை முரண்கள் இருந்தாலும், அவர் ஏராளமான மக்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பவர். அதனால் அவரைக் காக்க வேண்டியது அவசியம். அது மட்டுமன்றி அவருக்கு ஏதாவது ஒரு பாதிப்பு ஏற்பட்டாலும், அது கொள்கைக்கு முரணானவர்கள் செய்த காரியமாகக் கருதப்படவும் வாய்ப்புண்டு. அதில் உன் பெயரும் பழுதாகிவிடும்!’’ என்று எச்சரித்தார்.

ஜி.ராமச்சந்திரன் ஓய்வுபெற்ற டி.ஐ.ஜி., சிறைத்துறை

ஓர் இந்துமதத் துறவியை, ஜனாதிபதி இருக்கையில் அமரவைத்து அழகு பார்க்கிறார் ஓர் இஸ்லாமியர். அவரை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளச் சொல்லி வேண்டுகோள்விடுக்கிறார் பகுத்தறிவு பேசும் அரசியல் தலைவர். ஆனால், இந்து மதத்தில் தீவிரமான பற்றும் பக்தியும் கொண்ட ஒருவரின் ஆட்சியில் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். `வேற்றுமையில் ஒற்றுமைதான் நம் தேசமோ...’ என்று தோன்றியது எனக்கு.

1962-ல் விலைவாசிப் போராட்டத்தில் கலந்துகொண்டு கைதாகி, இதே சிறையில் ஆறுமாதச் சிறை தண்டனை அனுபவிக்க அனுமதிக்கப்பட்டார் அறிஞர் அண்ணா. அவர் அடைக்கப்பட்டிருந்த அறையின் பக்கத்திலிருக்கும் அறையில் இப்போது ஜெயேந்திரர் அடைக்கப்பட்டிருக்கிறார். இருவரும் இரு துருவங்கள். இருவர் வந்ததும் காஞ்சியிலிருந்துதான்.

இதேபோல சென்னை மத்தியச் சிறையில், ஜெயலலிதாவுக்காகத் தயார் செய்யப்பட்ட இடத்தில், கலைஞர் வைக்கப்பட்டார். காலத்தின் தீர்ப்புகளை யாரறிவாரோ?

செல் பூட்டப்பட்டு இருப்பதால் தூக்கமே வரவில்லைபோல. “நான் என்ன ஓடியா போய்விடுவேன்... கொஞ்சம் திறந்துவைக்கக் கூடாதா?” என்று கேட்டார் ஜெயேந்திரர். ‘‘நீங்கள் கிரிமினல் குற்றத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கிறீர்கள். சிறை விதிகளின்படி, மாலை 6 மணிக்கு உங்கள் அறை பூட்டப்பட்டு காலை 6 மணிக்குத் திறக்கப்படும். உங்களைப் பூட்டி வைக்காவிட்டால் என்னைப் பூட்டிவிடுவார்கள்” என்றேன் நான்.


‘‘நான் என்ன ஓடியா போய்விடுவேன்?’’

இது எங்கேயோ கேட்ட குரலாகத் தெரிந்தது எனக்கு. 2001-ம் ஆண்டு, மேம்பால ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு சென்னை மத்தியச் சிறைக்குக் கொண்டுவந்து பூட்டப்பட்ட கலைஞரும் இதே கேள்வியைத்தான் என்னிடம் கேட்டார். “மூச்சு முட்டுகிறது... கொஞ்சம் கதவைத் திறந்துவைக்கச் சொல்லப்பா!” என்றார். அவரிடமும் இதே பதிலைத்தான் நான் சொன்னேன். மீண்டும் அதே கேள்வி... அதே பதில்!

காலை 6:00 மணிக்கு ஜெயேந்திரரின் அறை திறக்கப்படும். வெளியே வந்து சற்று உலாவுவார். பிறகு, நாளிதழ்களைப் படித்து முடிப்பார். குளித்து முடித்ததும், ஏழு மணிக்கெல்லாம் ஒரு குவளை ராகி கஞ்சி கொடுக்கப்படும். சிறைக்குள் வரும்போது மகா பெரியவரின் படமொன்றைக் கொண்டுவந்திருந்தார். சிறைக்குள் கிடைக்கும் பூக்களைக்கொண்டு இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பூஜை செய்வார். காலை 11:00 மணிக்கு எனது அலுவலகத்துக்கு அழைத்துவரப்படுவார். அரசு மருத்துவமனையிலிருந்து மருத்துவக்குழு ஒன்று தினமும் வந்து அவரது உடல்நிலையைப் பரிசோதித்து அறிக்கை கொடுப்பார்கள். அவருக்கு சர்க்கரைநோய் இருந்தது. அதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டன.

வழக்கு பற்றி விவாதிப்பதற்காக தினமும் அவருடைய வழக்கறிஞர் வருவார். சிறிது நேரம் பேசி அனுப்புவார். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த அத்வானி, சுஷ்மா சுவராஜ் போன்ற பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள், தமிழகத்தின் அரசியல் பிரமுகர்கள் பலரும் அவரைப் பார்க்க வந்துகொண்டேயிருந்தனர். அவரைச் சிறையில் பார்த்ததுமே அவர்கள் கதறி அழத் தொடங்கிவிடுவார்கள்.

அவர் அமைதியாக, ‘‘யாரையும் பழிக்க வேண்டாம்... நான் சௌக்கியமாக இங்கு இருக்கிறேன். ஜெயில் சூப்பிரண்டு ராமச்சந்திரன் என்னை நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்!’’ என்று சொல்லி அனுப்புவார். அவரது சிறைவாசத்தை அப்போது மத்தியில் ஆண்டுவந்த பா.ஜ.க அரசு உன்னிப்பாகக் கவனித்துவந்தது.

சிறை நிகழ்வுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், அவரது உடல்நிலை, அவரைச் சந்திக்க வந்த பிரபலங்கள் பற்றி உடனுக்குடன் உளவுத்துறை மூலமாக டெல்லிக்குத் தகவல்கள் பறந்துகொண்டிருந்தன.
ஒருநாள் அவருடைய தொகுதிக்கு அருகில் ஒரு பாம்பு சென்றுவிட்டது. சிறிது நேரத்தில் ஜனாதிபதி மாளிகையிலிருந்து தொலைபேசியில் அது பற்றி விசாரிக்கப்பட்டது. ஆனால், அவருடைய ஜாமீன் மனுக்கள் கீழ் கோர்ட்டிலும், உயர் நீதிமன்றத்திலும் நிராகரிக்கப்பட்டன. உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு செய்திருந்தார். அதற்குள் காஞ்சி மடத்தில் போலீஸ் வேட்டை தொடங்கியது.

ஜெயேந்திரருக்கு வேண்டியவர்கள், மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் எனப் பலரும் கைது செய்யப்பட்டார்கள். உச்சமாக இளைய பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் கைது செய்யப்பட்டார். செய்தித்தாளைப் பார்த்து அவர் கைது செய்யப்பட்டதைத் தெரிந்துகொண்ட ஜெயேந்திரர் பெரும் வேதனையுற்றார். காலை உணவைப் புறக்கணித்தார்.

அவரோ சர்க்கரை நோயாளி. காலை உணவை உட்கொள்ளாவிட்டால் சர்க்கரை அளவு குறைந்து உயிருக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும். தகவலறிந்து விரைந்து சென்ற நான், ‘‘சிறைக்குள் உண்ணாவிரதம் இருப்பது சிறைக் குற்றம். ஆகையால், உடனே நீங்கள் சாப்பிட்டாக வேண்டும்!’’ என்றேன். சாப்பிடாவிட்டால் உடலில் ஏற்படும் பிரச்னைகளையும் விளக்கினேன். எதையும் அவர் கேட்பதாக இல்லை.

‘விஜயேந்திரர் குழந்தையைப் போன்றவர்... அவருக்கு எதுவுமே தெரியாது. மடத்தின் எந்தப் பிரச்னையிலும் அவர் தலையிடுவதே இல்லை. அவரை ஏன் கைதுசெய்தார்கள்?’’ என்று கேட்டு அழ ஆரம்பித்துவிட்டார். கண்ணீரோடு ‘‘மெளலீஸ்வரருக்கு பூஜை செய்யாமல் நாங்கள் சாப்பிடக் கூடாது. நாங்கள் இருவரும் மடத்தில் இல்லை. அந்த பூஜை நடக்காமல் நாங்கள் இருவருமே சாப்பிட முடியாது!’’ என்றார்.

எந்தச் சமாதானத்தையும் அவர் ஏற்பதாக இல்லை. கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தார். நான் குழப்பத்துடன் அலுவலகம் திரும்பினேன். தொலைபேசி மணி அடித்தது. டெல்லியிலிருந்து வந்த அழைப்பு அது. மறுமுனையில் பேசியவர், ஜெயேந்திரரின் வழக்கறிஞர்.

‘‘அவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. அதற்குரிய ஃபேக்ஸ் மெசேஜ் அனுப்ப, உங்கள் ஃபேக்ஸ் தொலைபேசி எண்ணை உச்ச நீதிமன்ற ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் கேட்கிறார்கள். கொடுக்க முடியுமா?’’ என்றார். அடுத்த சில நிமிடங்களில் அந்த ஃபேக்ஸ் வந்தது. ஜாமீன் கிடைத்துவிட்டது. குழப்பம் தீர்ந்துவிட்டது. அவரைவிட நான் அதிகமாக மகிழ்ச்சியடைந்தேன்.


`அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்’ என்று ஜாமீனுக்கான உத்தரவில் கட்டளை இடப்பட்டிருந்தது. அதனால், ஒரிஜினல் ஆர்டர் வரும்வரை காத்திருக்காமல் ஃபேக்ஸ் மெசேஜை மீண்டும் ஒரு முறை ரெஜிஸ்ட்ரார் அலுவலகத்தில் உறுதி செய்துகொண்டு, விடுதலைக்கு ஏற்பாடு செய்தேன். அன்று மாலை 4 மணிக்கே சிறையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

நேராக அவர் கலவையிலுள்ள மடத்துக்குச் சென்றார். காஞ்சிபுரத்திலிருந்து சந்திரமௌலீஸ்வரர் சிலை கலவை மடத்துக்குக் கொண்டுவரப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. அதன் பிறகே ஜெயேந்திரர் உணவை எடுத்துக்கொண்டார். இறைவனின் திருவிளையாடலை நான் உணர்ந்த நாள் அது.

அவர் விடுதலையானதில் எனக்கிருந்த நெருக்கடி நீங்கியது. ஏனெனில், அவரைப் பார்க்க எக்கச்சக்கமான வி.ஐ.பி-க்கள் நாடு முழுவதிலுமிருந்தும் வந்துகொண்டே இருந்தனர். அதனால் அவருக்கான நேர்காணல் கட்டப்படுத்தப்பட்டது. அரசு அனுமதிக்கும் நபர்கள் மட்டுமே அவரைச் சந்திக்க அனுமதிக்கப்பட்டது. வி.ஹெச்.பி தலைவர் அசோக் சிங்கால்கூட ஜெயேந்திரரைப் பார்க்க அனுமதிக்கப்படவில்லை.அவர் எங்களிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தார். இறுதியில் கிளம்பும்போது, நடுரோட்டில் அமர்ந்து ஜெயேந்திரர் இருக்கும் திசைநோக்கி கற்பூரம் கொளுத்தி பூஜை செய்துவிட்டுச் சென்றார். இறுதியில், கொலை வழக்கிலிருந்து 2013-ம் ஆண்டில் ஜெயேந்திரர் விடுவிக்கப்பட்டார்.

இதில், ஆச்சர்யப்படத்தக்க விஷயம்... இந்து மதத்தைக் காக்கவும், ஆலயங்களை மீட்கவும், இந்து மதத்திலுள்ள ஏற்றத் தாழ்வுகளை நீக்கவும் அத்தனை காரியங்களை முன்னெடுத்த அவரைச் சிறையில் அடைத்ததற்கு அன்றைக்கு ‘விஸ்வ ஹிந்து பரிஷத்’ தவிர வேறு எந்த இந்து அமைப்புகளும் பெரிதாகக் குரல் கொடுக்கவே இல்லை. அவரால் பயன் பெற்றவர்கள், பக்தர்கள் எல்லோருமே வாயடைத்து அமைதிகாத்தனர்.

சபரிமலை மேல்சாந்தி முதல் பந்தள ராஜ குடும்பம் வரை நாடெங்கிலுமுள்ள வி.ஐ.பி-க்கள் பலரும் அந்தக் கைது நடவடிக்கை பற்றி தங்களுடைய குமுறல் களைப் பல்வேறு ஊடகங்களிலும் வெளிப்படுத்தினர். இன்றைக்கு இருப்பதைப்போல சமூக ஊடகங்கள் அன்றைக்கு இருந்திருந்தால் அவருடைய சிறைவாசம், தேசம் தாண்டி பேசுபொருளாக மாறியிருக்கும். ஜெயேந்திரர் ஜோதியாகி இரண்டு ஆண்டுகள்தான் கடந்துள்ளன. அதற்குள் அவர் செய்த பல அளப்பரிய சேவைகளை, ஆன்மிகப் பணிகளை குறுகிய காலத்திலேயே பலரும் மறந்துவிட்டனர். சமீபத்தில் ராமருக்கு கோயில் கட்டும் விழாவை தேசமே கோலாகலமாகக் கொண்டாடியது. இதை முதலில் முன்மொழிந்தவர் ஜெயேந்திரர்!

(கதவுகள் திறக்கும்)

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment