Wednesday, August 26, 2020

ஒரு கிராம் 3 கோடி ரூபாய்! - ரவுசுகட்டும் சிவப்புப் பாதரச மோசடி

‘பச்சைப் பாதரசம் செக்ஸ் எனர்ஜியை அதிகரிக்கும். சில்வர் பாதரசம், எப்பேர்ப்பட்ட நோயையும் குணமாக்கும். கறுப்புப் பாதரசத்தால் ‘ஜின்’ பூதத்தைக்கூட வரவழைக்க முடியும்.

‘‘உங்களைச் சுத்தி இருக்குற நெகட்டிவ் எனர்ஜியை விரட்டிட்டு, பாசிட்டிவ் வைப்ரேஷனை உருவாக்குற அற்புதமான பொருள்தான் சிவப்புப் பாதரசம். ஒரு கிராம் 3 கோடி ரூபாய். இதை மட்டும் வீட்டுல வெச்சுருந்தீங்கன்னா, கோடி கோடியா பணம் குவியும். போன வாரம்கூட இரண்டு அரசியல் வி.ஐ.பி-க்களுக்கு வித்திருக்கோம்...’’ - ‘சதுரங்க வேட்டை’ பட பாணியில் இப்படிப் பேரம் பேசிய ஐந்து பேரை கடந்த ஜனவரி மாதம் கைது செய்தது சேலம் போலீஸ். அதன் பின்னர்தான் இப்படியொரு பொருளைவைத்து மோசடி வியாபாரம் நடப்பதே போலீஸுக்குத் தெரியவந்தது.

சமீபத்தில், மதுரை அருகே நிலையூர் கண்மாயில் 30-க்கும் மேற்பட்ட பழைய கறுப்பு வெள்ளை டி.வி-யின் பிக்சர் டியூப்கள் குவிந்துகிடந்தன. விசாரணையில், சிவப்புப் பாதரசத்துக்காக அலையும் கும்பல், பிக்சர் டியூபுக்குள் சிவப்புப் பாதரசம் இருப்பதாக நம்பி இந்த வேலையைச் செய்திருக்கலாம் என்று தெரியவந்தது. சிவப்புப் பாதரசத்தை வாங்குவதாகவும் விற்பதாகவும் சொல்லிக்கொள்ளும் கும்பலைப் பற்றித்தான் பல மாவட்டங்களிலும் பேச்சாக உள்ளது.


சிவப்புப் பாதரசம் என்றால் என்ன? 1990-ல் சோவியத் யூனியன் சிதற ஆரம்பித்த நேரத்தில், அந்த நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தது. ராணுவத்துக்குச் சம்பளம் கொடுக்க முடியாமல் அப்போதைய சோவியத் யூனியன் அதிபர் மிக்கெயில் கோர்பசேவ் திண்டாடினார். பல ராணுவ அதிகாரிகள் பணத்துக்காக ராணுவக் கிடங்கிலிருந்த ஆயுதங்களையெல்லாம் விற்க ஆரம்பித்தனர். அப்போதுதான் ‘சிவப்புப் பாதரசம்’ பற்றிய தகவல் பெரும் பரபரப்பானது. ‘இதைப் போர் விமானத்தில் பூசினால் ரேடாரிலிருந்து தப்பிக்கலாம். அணு ஆயுதம்கூட தயாரிக்கலாம். வீட்டில் வைத்திருந்தால் பாசிட்டிவ் எனர்ஜி மூலமாக பணம் அள்ளிக் கொடுக்கும்’ என்றெல்லாம் கதைகள் தீயாகப் பரவின. இதை நம்பிப் பல ஐரோப்பியப் பணக்காரர்கள் பணத்தை இறைத்தார்கள்.

2013-ல் சிரியா போர் உச்சத்தில் இருந்தபோது, அணு ஆயுதம் தயாரிக்கலாம் என நம்பி, சிவப்புப் பாதரசத்தைத் தேடி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், ஆட்களை அனுப்பிய கதையெல்லாம் உண்டு. சஃபி அல் சஃபி என்ற கடத்தல்காரன், ‘‘பச்சைப் பாதரசம் செக்ஸ் எனர்ஜியை அதிகரிக்கும். சில்வர் பாதரசம், எப்பேர்ப்பட்ட நோயையும் குணமாக்கும். கறுப்புப் பாதரசத்தால் ‘ஜின்’ பூதத்தைக்கூட வரவழைக்க முடியும்’’ என அளித்த பேட்டியை நவம்பர் 2015-ல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்டது. வேதியியல் உலகில், ‘சிவப்புப் பாதரசம்’ என்ற ஒன்றே இல்லை என்பதையும் அந்தப் பத்திரிகை தெளிவுபடுத்தியது. கைப்பற்றப்பட்ட சிவப்புப் பாதரசங்களை ஆராய்ந்ததில், ‘மெர்க்குரி ஐயோடைடு(HgI2)’ வேதிப்பொருள் கலந்திருப்பதால் பாதரசம் சிவப்பு நிறத்தில் இருப்பதாகவும், இதில் எந்த அற்புத சக்தியும் ஒளிந்திருக்கவில்லை என்பதும் தெரியவந்தது. இந்த அளவுக்கு சர்வதேச அளவில் தேடப்படும் ஒரு பொருளைத்தான் தமிழகத்திலும் விற்கக் கடைவிரித்துள்ளது மர்மக் கும்பல் ஒன்று.

‘சிவப்புப் பாதரசத்திடம் தங்கம், காந்தம், இரும்பைக் காட்டினால் அருகே வரும். பூண்டைக் காட்டினால் விலகி ஓடும்’ என்பது போன்ற வீடியோக்களைக் காட்டி பல கோடி ரூபாயில் விலை பேசுகின்றனர். ‘இதை உட்கொண்டால் குழந்தைப்பேறு கிடைக்கும்’ என்று குழந்தையில்லாத பெரும் பணக்காரத் தம்பதிகளிடம் கூறுவதால், நம்பி ஏமாறுபவர்கள் அதிகரித்திருப்பதாகத் தகவல்.

ஓய்வு பெற்ற மதுரை காமராசர் பல்கலைக்கழக வேதியியல்துறை முன்னாள் தலைவர் டாக்டர் ராமுவிடம் பேசினோம். ‘‘பாதரசம் உண்ணக்கூடிய பொருளே அல்ல. விஷத்தன்மை வாய்ந்தது. அதில் வேறு எந்த சக்தியும் கிடையாது. இயற்கையான முறையில் பாதரசம் கிடைத்தாலும், செயற்கையாகவும் உருவாக்கப்படுகிறது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்று சொல்வது முட்டாள்தனம். சில குளியல் சோப் மற்றும் அழகுசாதனப் பொருள்களில் பாதரசம் சேர்க்கப்படுகிறது. நாளடைவில் இது தோல் நோயையும் கேன்சரையும் உண்டாக்கும். கருவிலிருக்கும் சிசுக்களுக்கு ஆபத்தை உண்டாக்கும். சில உணவுப் பொருள்களிலும் பாதரசம் உள்ளது. இது கொஞ்சம் கொஞ்சமாக உயிரைக் கொல்லும். இதை உட்கொள்பவர்கள் சிறிது சிறிதாக உடல் செயலிழந்து பாதிக்கப்படுவார்கள். சிவப்புப் பாதரசம் என்று எதுவுமே இல்லை. வழக்கமான பாதரசத்தை வைத்து இப்படிச் சிலர் ஏமாற்றலாம். இதைப் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

வெள்ளை நிறத்திலிருக்கும் விஷத்தன்மை கொண்ட பாதரசத்தின் விலை, ஒரு கிலோ 2,000 ரூபாய். அதைத்தான் சிலர் தங்கள் டிமிக்கி வேலைக்கு வாங்கி, சாய வேதிப்பொருள் கலந்து பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது. மதுரை நிலையூர் கண்மாயில் குவிந்துகிடந்த டி.வி-க்கள் குறித்து திருப்பரங்குன்றம் காவல் உதவி ஆணையர் சிவராஜ் பிள்ளையிடம் கேட்டோம். ‘‘எங்களுக்கு இது சம்பந்தமாக எந்தப் புகாரும் வரவில்லை. இது சீட்டிங் கும்பல் வேலை என்று யாராவது புகார் கொடுத்தால், நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

பல ‘அற்புதங்கள்’ கொண்ட அந்தச் சிவப்புப் பாதரசத்தால் கொரோனாவை ஒழிக்க முடியுமா?

News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment