Tuesday, May 07, 2019

ஜவாஹிருல்லா Vs ஹைதர்அலி! - கோஷ்டிப் பூசலால் தவிக்கும் தொண்டர்கள்!

னித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் ஹைதர் அலி ஆகியோர் இடையே நடக்கும் ஈகோ யுத்தம் காரணமாக, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகி இருக்கிறது. என்னதான் நடக்கிறது உள்ளே?

மக்களுக்குச் சேவைசெய்யும் நோக்கத்தில் தொடங்கப்பட்டதுதான், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். ரத்ததானம், இலவச ஆம்புலன்ஸ் சேவை, பேரிடர் சமயங்களில் மீட்புப் பணிகள்... என்று தன்னார்வ இளைஞர்கள்மூலம் களப்பணியாற்றி வருகிறது த.மு.மு.க. இக்கழகத்தை அடிப்படையாகக்கொண்டு அரசியல் அமைப்பாக ஆரம்பிக்கப்பட்டதுதான், மனித நேய மக்கள் கட்சி.
இந்தநிலையில்தான் ஜவாஹிருல்லா, ஹைதர் அலி இடையே நடந்துவரும் பிரச்னையால் கட்சிக்குள் கோஷ்டிப் பூசல் ஏற்படுவதாகக் கவலைப்படுகிறார்கள் ம.ம.க நிர்வாகிகள். இதுகுறித்து நம்மிடம் பேசிய சில நிர்வாகிகள், “கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.க ஆதரவுடன் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜவாஹிருல்லா, மாநிலங்களவைத் தேர்தலின்போது கட்சியினரிடம் கருத்துக் கேட்காமல், கனிமொழிக்கு ஆதரவாக வாக்களித்தார். அப்போதே ஹைதர் அலி கண்டித்தார். நடந்து முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலின்போது, அறிவாலயம் சென்று தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்தார் ஜவாஹிருல்லா. அவர் கிளம்பிச் செல்லும்போது, ஹைதர் அலி அலுவலகத்தில்தான் இருந்தார். ஆனாலும், அவரைத் திட்டமிட்டே தவிர்த்தார் ஜவாஹிருல்லா.

ஒருமுறை ரகசியக் கூட்டம் நடத்தியதற்கு விளக்கம் கேட்டு ஹைதர் அலிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு, ஹைதர் அலி அனுப்பிய பதில் கடிதத்தில் ஜவாஹிருல்லாவின் நடவடிக்கைகள் குறித்து சில கேள்விகளை எழுப்பினார். உடனே, திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரையிருந்த ஹைதர் அலியின் ஆதரவு நிர்வாகிகள் அனைவரும் ஒட்டு மொத்தமாக நீக்கப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையத்தில் உள்ள மதரசாவில் நடந்த ஒரு பரிசளிப்பு விழாவுக்கு ஹைதர் அலியைச் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். ஆனால், ம.ம.க மாவட்டத் தலைவரே காவல் நிலையத்துக்குச் சென்று, ‘அனுமதி அளிக்கக் கூடாது’ என்று தெரிவித்திருக்கிறார். அத்துடன், நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த வார்டு அமைப்பையும் கலைத்துவிட்டார்கள்” என்று ஜவாஹிருல்லா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினர்.

இதுகுறித்துப் பேசிய ஹைதர் அலி, “தொண்டர்களின் தியாகத்தில் உருவான இந்த அமைப்பைக் கார்ப்பரேட் கம்பெனிபோல நடத்த ஜவாஹிருல்லா முயற்சி செய்கிறார். ‘ஆரம்பித்த நோக்கத்தை விட்டுத் திசை மாறக் கூடாது’ என்று நாங்கள் சொல்கிறோம். அதனால், கட்சிக்கு உழைப்பவர்களையும் நல்லவர்களையும் விளக்கமே கேட்காமல் நீக்குகிறார்கள். வரம்பு மீறிச் செயல்படுவோர் மற்றும் கிரிமினல்களுக்குப் பொறுப்புகளைக் கொடுக்கிறார்கள். ஜவாஹிருல்லா, ‘நானே எல்லாம்’ என்கிற பாசிச மனப்பான்மையில் இருக்கிறார். எல்லா அதிகாரமும் தன்னிடம் மட்டுமே இருக்க வேண்டும் என நினைக்கிறார். அதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்றார்.
மனித நேய மக்கள் கட்சியின் திருநெல்வேலி மாவட்டத் தலைவர் ரசூல் மைதீன், “திருநெல்வேலி மாவட்டத்துக்கு, தேர்தல் பிரசாரத்துக்காக ஏப்ரல் 5-ம் தேதி ஹைதர் அலி வர இருப்பதாகத் தலைமையிடமிருந்து தகவல் வந்தது. உடனடியாக ஹைதர் அலியிடம் பேசினேன். ஆனால், நெல்லைக்கு வந்த ஹைதர் அலி, ஹோட்டலில் தங்காமல் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஒருவரின் வீட்டில் தங்கினார். மதரசா நிகழ்ச்சிக்கு வந்தபோதும் மாவட்ட நிர்வாகத்துக்கு அவர் தகவல் தெரிவிக்கவில்லை. மதரசா மற்றும் பள்ளிவாசல் அமைக்க 29-வது வார்டில் நிலம் வாங்கியபோது, வார்டு நிர்வாகி மைதீன் சேட்கான் என்பவரின் பெயரில் அந்த நிலத்தைப் பதிவு செய்ய முயற்சி நடந்தது. அதனால்தான், வார்டு அமைப்பைக் கலைத்தோம். ஹைதர் அலி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காகக் கலைக்கவில்லை” என்றார்.

ஜவாஹிருல்லாவிடம் இந்த விவகாரங்கள் குறித்துப் பேசினோம். “கட்சி விதிகளின்படி, தலைமை நிர்வாகக் குழுவில் இருக்கும் 24 பேர் சொல்வதை நிறைவேற்ற வேண்டிய கடமை தலைவருக்கு இருக்கிறது. தலைவர் சொல்வதைச் செய்ய வேண்டியது, பொதுச் செயலாளரின் கடமை. இங்கு யாருக்கும் தன்னிச்சையான அதிகாரம் கிடையாது. ஹைதர் அலி, கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டுவரை கட்சியைவிட்டு ஒதுங்கியிருந்தார். கடந்த 2018-ம் ஆண்டு பொதுச் செயலாளராகத் தேர்வானார். அதற்குப் பிறகு, ஒரு குழுவை உருவாக்கிக்கொண்டு கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். திருச்சியில் நாங்கள் நடத்திய ‘அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநாடு’ தோல்வியடைய வேண்டும் என்று நாகர்கோவிலில் ரகசியக் கூட்டம் நடத்தினார். அதில் பங்கேற்றவர்களைத் தற்காலிகமாகக் கட்சியைவிட்டு நீக்கினோம். நீக்கப்பட்ட நிர்வாகிகளோடு சேர்ந்துகொண்டு, இப்போதும் கட்சி விரோதச் செயல்களில் ஈடுபட்டுவருகிறார். கட்சி விதிமுறைகளை அவர் மதிப்பதில்லை. அவருக்கும் எனக்கும் தனிப்பட்ட முறையில் எந்தப் பிரச்னையும் கிடையாது” என்றார்.

சகோதரர்களுக்குள் சண்டை எதிராளிக்கே லாபம் என்பதை அறியாதவர்கள் அல்ல இருவரும்!

- ஆண்டனிராஜ்
படங்கள்: எல்.ராஜேந்திரன்
News2.in
News2.in

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment