Tuesday, May 07, 2019

பின் வழியாக நுழைந்த பி.டி கத்திரி!

கண்ணை மூடிக்கொண்ட சுற்றுச்சூழல் அமைச்சகம்!
ந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த முதல் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுப்பொருள் ‘பி.டி கத்திரிக்காய்’. ஆரம்பத்திலிருந்தே சூழல் ஆர்வலர்கள், ‘பி.டி கத்திரிக்காயை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது’ என்று போராடி வருகிறார்கள். அதே நேரத்தில் பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவுக்குள் எப்படியாவது இதைப் புகுத்திவிட வேண்டும் என்று கடுமையாக முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இயற்கை விவசாயிகள், சூழல் ஆர்வலர்களின் தொடர் போராட்டங்களால், 2010-ம் ஆண்டு இந்தியாவில் பி.டி கத்திரிக்காய்க்குத் தடை விதிக்கப்பட்டது. இன்று வரை தடை அமலில் இருக்கிற நிலையில், ஹரியானா மாநிலத்தில் ஒரு விவசாயி பி.டி கத்திரிக்காயைப் பயிரிட்டு விற்பனை செய்துவரும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் இயங்கிவரும் ‘குதார்தி கேட்டி அபியான்’ என்ற அமைப்பு, மரபணு மாற்றம் செய்யப்பட்டப் பயிர்களுக்கு எதிராகப் போராடிவருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த ராஜிந்தர் சவுத்ரி, புதுடெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், “ஹரியானா மாநிலத்தின் ஃபாடேஹாபாத் மாவட்டத்தில் ஒரு விவசாயி சட்டவிரோதமாக பி.டி கத்திரிக்காயைச் சாகுபடி செய்துவருவது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் விளைவித்த கத்திரிக்காய்களை ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பிச் சோதனை செய்தபோது, அவை பி.டி ரகம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழுவிடமும் மாநில வேளாண் துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு, ‘உரிய விசாரணை நடத்தப்படும்’ என்று ஹரியானா அரசு தெரிவித்துள்ளது. இடைத்தரகர் ஒருவர்தான் தடைசெய்யப்பட்டுள்ள பி.டி கத்திரி நாற்றுகளை ஒரு நாற்று எட்டு ரூபாய் என்ற விலைக்கு அந்த விவசாயிக்கு விற்பனைசெய்துள்ளார். விவரம் அறியாத அந்த விவசாயி, மூவாயிரம் நாற்றுகளை வாங்கி, பயிர் செய்துள்ளார். ‘மான்சாண்டோ’ போன்ற நிறுவனங்களின் மோசடி நடவடிக்கைகளால், விவசாயிகள் தங்களை அறியாமல், பி.டி விதைகளைப் பயிரிடும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். அந்த விவசாயியின் நிலத்தில் உள்ள பயிர்களை அழிப்பதுடன், வேறு விவசாயிகள் இதைப் பயிரிட்டுள்ளார்களா என்பதையும் ஆய்வுசெய்ய வேண்டும்” என்றார்.

இதுகுறித்துப் பேசிய பாதுகாப்பான உணவுக்கான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனந்து,“2000-ம் ஆண்டில் பல இடங்களில் பி.டி பருத்தி சட்ட விரோதமாகச் சாகுபடி செய்யப்பட்டது. அதைக் காட்டித்தான், 2002-ம் ஆண்டு பி.டி பருத்திக்கு அனுமதி கொடுக்கப்பட்டது. அதேபாணியில் சட்டவிரோதமாக பி.டி கத்தரியை ஊடுருவவிட்டு, இதற்கும் அனுமதி வாங்கப் பார்க்கிறார்கள்.  ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்யப்பட்ட விதைகள் நிலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே, மரபணு பொறியியல் மதிப்பீட்டுக்குழு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், பி.டி கத்திரிதான் என்று நிரூபித்து, புகார் கொடுக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், மரபணு பொறியியல் மதிப்பீட்டுக்குழு, மான்சாண்டோ நிறுவனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகத் தோன்றுகிறது. வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் அனுமதி பெற்று அந்நாடுகளின் வழியாக இந்தியாவுக்குள் பி.டி விதைகள் கொண்டுவரப்படுகின்றன” என்றார்.
தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் அரச்சலூர் செல்வம், ‘‘ஏற்கெனவே, பி.டி சோளம், பி.டி சோயா பீன்ஸ் போன்ற பயிர்கள் இந்தியாவில் சட்டவிரோதமாகப் பயிரிட்டு விற்பனை செய்யப்படுகின்றன  என்று புகார் கொடுத்தோம்.அப்போதே மரபணு பொறியியல் மதிப்பீட்டுக்குழு கடுமையான நடவடிக்கைகள் எடுத்திருந்தால், இப்போது பி.டி கத்திரி உள்ளே நுழைந்திருக்காது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்தான் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மரபணு பொறியியல் மதிப்பீட்டுக்குழுவின்மேல் சூழல் ஆர்வலர்களுக்கு எழுந்துள்ள சந்தேகத்தை நீக்க வேண்டியது, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கடமை!

- துரை.நாகராஜன்

தோல்வியைத் தழுவிய பி.டி கத்தரி!

தெ
ற்கு ஆசியாவிலேயே வங்கதேசத்தில்தான் முதன்முதலாக பி.டி கத்தரி அறிமுகப்படுத்தப்பட்டது. ‘விவசாயிகளுக்கு லாபத்தை அள்ளிக் கொடுக்கும்... மகசூலை இரட்டிப்பாக்கும்’ என்றெல்லாம் சொல்லி அறிமுகம் செய்யப்பட்டது இது. அதனால், விவசாயிகள் கூட்டம் கூட்டமாக பி.டி கத்தரியைப் பயிர் செய்தனர். அதே நேரத்தில் பி.டி கத்தரிக்கு எதிரான கண்டனக் குரல்களும் எழுந்தன. சமீபத்தில் வங்கதேசத்தில் யு.பி.ஐ.என்.ஜி என்கிற அமைப்பு நடத்திய ஆய்வில், ‘பி.டி கத்தரி பயிரிட்ட நான்கு பேரில், மூன்று பேர் நஷ்டத்தைச் சந்தித்திருக்கிறார்கள்’ என்று தெரியவந்துள்ளது.
News2.in
News2.in

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment