Wednesday, May 08, 2019

தொங்கும் ஸ்பெயின்! - தாங்கிப் பிடிக்குமா சிறு கட்சிகள்?

மக்கு ஒரு பொதுத் தேர்தலுக்கே நாக்கு தள்ளிவிட்டது. ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளுக்குள் ஸ்பெயின் நாட்டில் மூன்று பொதுத்தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. தற்போது நடைபெற்ற மூன்றாவது பொதுத்தேர்தலிலும், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், ஸ்பெயினில் மீண்டும் ஸ்திரமற்ற ஆட்சி தொடர்கிறது. ஆனாலும், இந்தத் தேர்தல் நாட்டில் பல திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஏப்ரல் 28-ம் தேதி, ஸ்பெயினில் பொதுத்தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 350 இடங்களுக்கான தேர்தலில், ஆளும் கட்சியான சோஷலிசத் தொழிலாளர் கட்சி 123 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை 85 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த இந்தக் கட்சி, இந்த முறை அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தாலும், ஆட்சி அமைக்க 176 இடங்கள் தேவை. இதனால், பிரதமர் பெட்ரோ சான்செஸின் பதவியும் ஆட்டம் கண்டுள்ளது.

மறுபக்கம் கன்சர்வேடிவ் மக்கள் கட்சி வெறும் 66 இடங்களை மட்டுமே வென்று தோல்வி அடைந்துள்ளது. ஆனால், எதிர்க் கட்சிகள் வரிசையில் மற்ற கட்சிகளைவிடக் கன்சர்வேட்டிவ் மக்கள் கட்சி அதிக இடங்களை வென்றுள்ளதால், பிரதான எதிர்க் கட்சி என்கிற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. இவை தவிர சியூடா டேனோஸ் கட்சி 57 இடங்களையும் காட்டலோனியா விடுதலைக்கு ஆதரவு அளித்த இடது தேசியவாத கட்சி 15 இடங்களையும், மாநிலக் கட்சியாக இருந்து குறுகிய காலத்தில் தேசிய அளவில் பிரபலமடைந்த வாக்ஸ் கட்சி 24 இடங்களையும் கைப்பற்றியுள்ளன. மீதியுள்ள 65 இடங்களை முப்பது சிறு கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் சுயேச்சை வேட்பாளர்களும் கைப்பற்றியுள்ளனர்.

இந்தத் தேர்தல் பல முக்கிய மாற்றங்களை ஸ்பெயினில் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக சோஷலிசத் தொழிலாளர்கள் கட்சி மற்றும் கன்சர்வேட்டிவ் மக்கள் கட்சி என்று இரு கட்சிகள் மட்டுமே ஸ்பெயினின் அரசியலில் கோலோச்சி வந்தன.  தற்போது சிறு கட்சிகள், சுயேச்சைகள் உட்பட பல்வேறு கட்சிகளின் மீதும் வெளிச்சம் பாய ஆரம்பித்துள்ளது. காட்டலோனியா விடுதலைக்கு ஆதரவு அளித்த இடது தேசியவாத கட்சி கணிசமான இடங்களை வென்றிருப்பது, ஒடுக்கப்பட்டிருந்த காட்டலோனியா மக்களுக்குப் புது ரத்தத்தைப் பாய்ச்சியுள்ளது. கடந்த 1975-ம் ஆண்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த ஸ்பெயின் சர்வாதிகாரி ஃப்ரான்சிஸ்கோ ஃப்ரான்கோ-வின் மறைவுக்குப் பிறகு, தலைதூக்க முடியாமல் இருந்தனர் வலதுசாரிகள். ஆனால், தற்போது (வாக்ஸ் கட்சி) வலதுசாரிகள் பெற்றிருக்கும் மகத்தான வெற்றி, இடதுசாரிகளைக் கலங்கவைத்துள்ளது.


தற்போது பெரும்பான்மை இல்லாத நிலையில், சோஷலிசக் கட்சி ஆட்சி அமைக்க, மற்ற கட்சிகளின் தயவு தேவை. கூட்டணியைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் பிரதமர் சான்செஸ் கையில் உள்ளது. ஸ்பெயின் அரசியலில் மிகப் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியவர், சான்செஸ். இரண்டரை ஆண்டுகளுக்கு முன், உட்கட்சிப் பூசலால் சொந்தக் கட்சியிலிருந்து தூக்கி வீசப்பட்டவர், குறுகிய காலத்தில் மீண்டெழுந்து, 2016-பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றார். கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் பிரதமரான இவர், தற்போது சிறு கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சியைத் தக்க வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்பெயின் அரசியலை உற்றுநோக்கும் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள், “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து, பிரிட்டன் வெளியேற முடிவுசெய்துவிட்டதால், ஐரோப்பிய ஒன்றியத்தை ஒருங்கிணைப் பதற்கு தெற்கில் ஸ்பெயின் போன்ற ஒரு பெரிய நாட்டின் உதவி தேவை. அதற்கு ஸ்பெயினில் ஒரு ஸ்திரமான அரசு தேவை. அதை நிலைநாட்டுவது, சிறு கட்சிகளின் கைகளில்தான் உள்ளது” என்கிறார்கள். அது முற்றிலும் உண்மை!

- கே.ராஜு

நான்கு வருடமாக இதே கதிதான்!

டந்த நான்கு ஆண்டுகளாகவே ஸ்பெயினில் தொங்கு நாடாளுமன்றச் சூழலே நிலவுகிறது. கடந்த 2015-ம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலில், யாருக்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால், எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடிவில்லை. மீண்டும், ஜுன் 2016-ம் ஆண்டில் நடந்த பொதுத் தேர்தலிலும் தொங்கு நாடாளுமன்றம்தான் அமைந்தது. அப்போது முதலில் சோஷலிசக் கட்சி ஆட்சி அமைக்க முயன்று தோற்றது. அடுத்து, மக்கள் கட்சித் தலைவர் மரியானோ ரஜாய் பிரதமரானார். அவரது சிறுபான்மை அரசு, 21 மாதங்கள் மட்டுமே நீடித்தது. ரஜாய் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதால், சோஷலிசக் கட்சி, எதிர்க் கட்சிகள் துணையுடன் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்து, ரஜாயைப் பதவியிலிருந்து தூக்கி வீசியது. பிறகு, சோஷலிசக் கட்சியின் தலைவர் பெட்ரோ சான்செஸ் பிரதமரானார். காட்டலோனியா தேசியவாதக் கட்சி, காட்டலோனியாவுக்கு விடுதலை வழங்க வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்தியது. சான்செஸ் அதற்குச் சம்மதம் தெரிவிக்காததால், ஆட்சியைக் கவிழ்த்தது காட்டலோனியா தேசியவாதக் கட்சி. அதனால்தான் தற்போது, பொதுத்தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
News2.in
News2.in

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment