Wednesday, May 08, 2019

கழுகார் பதில்கள்!

அ.ச. நாராயணன், பாளையங்கோட்டை.
‘அடுத்த பிரதமர்’ என்று நிதின் கட்கரியை அடிக்கடி கொம்பு சீவிவிடுகிறவர்கள் பற்றி?


சீவச் சொல்கிறார்கள்... சீவுகிறார்கள்.
@ ‘காட்டாவூர்’ இலக்கியன், செங்குன்றம், சென்னை-52.
பல்வேறு துறைகளிலும் பிரபலங்கள் இருக்கிறார்கள். ஆனால், பெரும்பாலும் தங்களின் சுயவாழ்க்கையைத்தான் அவர்களெல்லாம் முக்கியமாகக் கருதுகிறார்கள். இத்தகையோருக்கு மக்களிடம் கிடைக்கும் அங்கீகாரமும் புகழும்... மக்களுக்காக உண்மையிலேயே போராடுபவர்களுக்குக் கிடைப்பதில்லையே?


இது வியாபார உலகம்.... இங்கே விளம்பரப்படுத்திக்கொள்வது மிக முக்கியம். வரலாறு முக்கியம் இலக்கியரே!

@மு.கமால், கொல்லாபுரம்.
தெய்வநீதிக்கு மாறாகப் பணம் சேர்த்த அரசியல்வாதிகளிடமிருந்து ஓட்டுக்காக வாங்கும் பணத்துக்கு தெய்வசத்தியம் செய்தாலும், வாக்கு மாறியவர்களை எந்த தெய்வசக்தியாவது பழிவாங்கியிருக்கிறதா?


ஆனாலும் இந்த ஆண்டவனை வைத்துக்கொண்டு நாம் காட்டும் ஆட்டங்கள், அந்த ஆண்டவனுக்கே அடுக்காது. உப்பைத் தின்னவன் தண்ணி குடித்தே ஆகணும்.

@ஜி.ஆர். மாதேஸ்வரன், புளியம்பட்டி, ஓமலூர்.
அரசியலுக்கும் ஆன்மிகத்துக்கும் என்ன தொடர்பு... இதில், ஆன்மிக அரசியல் எப்படி நடக்கும்?

இரண்டின் நோக்கங்களும் வெவ்வேறானவை. ஆனால், உள்நோக்கத்தோடு இரண்டுக்கும் ஆதிகாலம்தொட்டே பாலம் போடப்பட்டு விட்டது. உலகம் முழுக்கவே ஆன்மிக அரசியல்தான் நடக்கிறது. ஆற்றங்கரையோரத்து அரச மரத்தடி, அடுத்த தெரு முனை, சாலையோரம் என்று அனைத்துமத பிம்பங்களும் முளைத்து நிற்பதிலும் அரசியல் நிலைகொண்டிருக்கிறது. ஊருக்கு ஊர் அரசர்கள் மதவழிபாட்டுத் தலங்களை எழுப்பியதும் அரசியலின் அதி ஆழம்தான். ‘ஆன்மிக நாட்டமில்லை’ என்று சொல்லிக்கொண்ட/சொல்லிக்கொள்ளும் அரசியல்தலைவர்கள்கூட, அந்தரங்கமாக ஆன்மிகவாதிகளுடன் கூடிக்குலவத் தவறுவதில்லை என்பதற்குக் கடந்தகால, நிகழ்கால எடுத்துக்காட்டுகள்கூட உண்டு. ஆக, நடப்பதெல்லாமே ஆன்மிக அரசியலே!

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை, சேலம்.
‘நம் வரிப்பணத்திலிருந்து கொள்ளையடித்த பணம்தானே... அதை வாங்கினால் என்ன தப்பு?’ என்கிற மனநிலைக்குப் பெரும்பாலான வாக்காளர்கள் வந்து விட்டார்களே?


‘பணம் கொடுத்துத்தானே ஓட்டு வாங்குகிறோம். கொள்ளையடித்தால் என்ன தப்பு’ என்கிற மனநிலைக்குப் பெரும்பாலான அரசியல்வாதிகளும் வந்து நீண்ட நாள்களாகின்றன! 

@திருப்பூர். அர்ஜுனன். ஜி. அவிநாசி.
மூன்றாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் உலகின் மிகப் பழைமையான மொழிகளின் வரிசையில் தமிழ் விடுபட்டுள்ளதே?


அந்தப் புத்தகத்தில் இருக்கும் பாடத்தின் பெயர் ‘தமிழின் சிறப்புகள்’. ஆனால், தமிழைத் தாழ்த்துவது போலத்தான் பாடமே எழுதப்பட்டுள்ளது. உலகின் பழைமையான மொழிகள் என்று கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, வடமொழி போன்றவற்றை அதில் பட்டியலிட்டுள்ளனர். தமிழ் இடம்பெறவில்லை. கிரேக்கம் போன்ற மொழிகளின் வரலாறே சுமார் 3000, 4000 ஆண்டுகள்தான். ஆனால், சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்துகள், தமிழுடன் ஒப்பிட்டுப் பேசப்படுகின்றன. தமிழகத்தின் ஆதிச்சநல்லூர், கீழடி போன்ற புதையுண்ட நகரங்கள், பழனி உள்ளிட்ட இடங்களில் இருக்கும் குகை ஓவியங்கள் எல்லாம் இப்போதும் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துக்கொண் டுள்ளன. 

உலகில் மனிதன் தோன்றிய காலம் சுமார் ஒரு லட்சம் ஆண்டுகள் என்று ஆப்பிரிக்க ஆதாரங்களை வைத்துச் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஆனால், அதற்கும் முன்னதாகவே தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டம் குடியம் பகுதி குகைகளில் ஆதிமனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான தடயங்களை ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்திலேயே கண்டறிந்து பதிவு செய்துள்ளனர். இதைப் பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்யக்கூட தமிழக அரசுக்கு மனது வரவில்லை.
சீப்பை ஒளித்துவிட்டு, கல்யாணத்தை நிறுத்தப் பார்க்கிறார்கள். பெயர், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம். தமிழாய்ந்த ‘நல் அறிஞர்கள்’தான் இந்தப் பாடப்புத்தகத்தை உருவாக்கியுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த அவர்களுக்கே தமிழின் வரலாறும் பெருமையும் தெரியாத நிலையில், தமிழ் மட்டுமல்ல, நம் குழந்தைகளும் பாவம்தான்.
தாமஸ் மனோகரன், புதுச்சேரி-10.
‘விஜய் மல்லையா, நீரவ் மோடி மட்டுமல்லாமல், 36 பேர் கடன் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு ஓடிவிட்டதாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்திருப்பது மோடி அரசின் தோல்வியைத்தானே காட்டுகிறது?


‘இந்தக் காவலாளியைக் கண்டு ஓடி ஒளிந்துவிட்டனர்’ என்று  பெருமையோடு சொல்லிக் கொண்டிருக்கிறாரே ‘சௌக்கிதார்’.

எம்.டி. உமாபார்வதி, சென்னை.
முந்தைய ஆட்சியாளர்களைக் குறைசொல்லி ஆட்சிக்கு வருபவர்கள், தங்களின் பதவிக்காலம் முடியும் சூழலிலும்கூட முந்தையவர்களைக் குறை சொல்லிக்கொண்டே இருக்கிறார்களே?


எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். அவர்கள் ஆட்சிக்கு வந்தால்... அம்பானி. இவர்கள் ஆட்சிக்கு வந்தால் அதானி. நம்மைப்போன்ற அருக்காணிகளுக்காக யாரும் ஆட்சிக்கு வருவதே இல்லை. 

மீஞ்சூர் கோதை ஜெயராமன், சென்னை.
இடைத்தேர்தலைவிட (சட்டமன்றம்), பொதுத்தேர்தலில் (நாடாளுமன்றம்) வாக்கு சதவிகிதம் குறைவாக இருக்கிறதே. மக்களின் மனநிலையில் ஏன் இந்தத் தடுமாற்றம்?


இ.தே. பொ.தே இரண்டையும் வைத்து வாக்கு சதவிகிதம் குறைந்தது என்று சொல்வதே தவறானது. ஆறு சட்டமன்றத் தொகுதிகள் சேர்ந்ததுதான் ஒரு நாடாளுமன்றத் தொகுதி. இடைத்தேர்தல் நடந்த தொகுதியைத் தவிர்த்த மற்ற ஐந்து சட்டமன்றத் தொகுதிகளையும் சேர்த்துக் கணக்கிடும்போது, வாக்கு சதவிகிதம் குறைவாகத்தான் இருக்கும். உதாரணமாக, நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவாரூரில் இடைத்தேர்தல் நடைபெற்றது. திருவாரூரில் 76 சதவிகித வாக்குகள்தான் பதிவாயின. அதேசமயம், அங்கு இடைத்தேர்தல் நடைபெறாத கீவளூர் சட்டமன்றத் தொகுதியில் 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. அதாவது, இடைத்தேர்தல் நடைபெற்ற திருவாரூரைவிட 4 சதவிகிதம் அதிகம். 

தர்மபுரி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பாப்பிரெட்டிபட்டி, அரூர் சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றன. பாப்பிரெட்டிபட்டி 80, அரூரில் 82 என்று பதிவாகியுள்ளது. ஆனால், இடைத்தேர்தல் நடைபெறாத பென்னாகரம் சட்டமன்றத் தொகுதியில் 83 சதவிகிதம் பதிவாகியுள்ளது. 

எனவே, இந்தக் கணக்குகளை எல்லாம் வைத்துக்கொண்டு ‘புள்ளிவிவர ராஜா’வாக மாறப் பார்ப்பது, வேண்டாத வேலை.
பா.சீமான்ஜி, வெள்ளானைக்கோட்டை, திருநெல்வேலி.
முதல்வராகப் பதவி வகிக்காதவர்களின் படங்கள் எல்லாம்கூட தமிழக சட்டமன்றத்தில் இருக்கின்றன. ஆனால், முதல்வராக இருந்த பி.எஸ்.குமாரசாமிராஜாவின் படம் இல்லையே... சாதி ஓட்டுகள் குறைவு என்பதாலா?


திருவள்ளுவர் படத்தைக்கூடத்தான் சட்டமன்றத்தில் வைத்துள்ளனர். அவர் என்ன சாதி? முதல்வராக இருந்த பக்தவத் சலத்தின் படம் வைக்கப்படவில்லை. ஆனால், வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் படத்தை, ஜெயலலிதா வந்ததும் அகற்றிவிட்டார். ஆக, முதல்வராக இருந்தார்கள் என்கிற காரணத்துக்காகப் படங்கள் வைக்கப்பட வில்லை. முதல்வராக இருப்பவர்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்பவே வைக்கப்படுகின்றன.

அ.யாழினி பர்வதம், சென்னை-78.
வாக்குச்சாவடியைக் கல்வி நிலையங்களில் அமைப்பதேன்?


நினைத்தவுடன் அரசாங்கத்தால் கைப்பற்றக்கூடிய ஒரே பொது இடம் அதுதான். இஷ்டம்போல பயன்படுத்தலாம். கேள்வி கேட்பவர்களே இருக்கமாட்டார்கள். தேவைப்பட்டால், விடுமுறை கொடுத்து மாணவர்களை விரட்டியும் அடிக்கலாம். தேர்தலுக்கு மட்டுமல்ல, உள்ளூரில் நடக்கும் திருவிழாக்களுக்குக் காவல் பணியாற்ற வரும் காவலர்களுக்குத் தங்குமிடம், பேரிடர் காலங்களில் நிவாரண முகாம், உள்ளூர் முக்கியப்புள்ளிகள் வீட்டு நிகழ்ச்சிகளுக்கான மண்டபம் என்று கல்வி நிலையங்கள்தான் எப்போதுமே பயன்படுத்தப் படுகின்றன. இதிலிருந்தே, கல்விக்கு எந்த அளவுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 
757, அண்ணா சாலை, சென்னை- 600002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!
News2.in
News2.in

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment