Tuesday, May 07, 2019

ஆள் கடத்தல்... மூன்று நாள் அலைக்கழிப்பு! - திக் திக் நிமிடங்கள்... ‘த்ரில்’ சேஸிங்... சாதித்த போலீஸ்!

சூதாட்டம், ஆள் கடத்தல், சேஸிங், சொதப்பல்கள் என விதம்விதமான திருப்பங்களைக் கடந்து சுபமாக முடிந்திருக்கிறது திருவண்ணாமலையில் நடைபெற்ற நடுங்கவைக்கும் நிஜம். திருவண்ணாமலை கலசப்பாக்கத்தை அடுத்த வில்வாரணி கிராமத்தில் மரச்செக்கு எண்ணெய்க் கடை வைத்திருப்பவர் சரவணன். அவரைப் பணயமாக வைத்து ரூ.25 லட்சம் பறிக்கத் திட்டமிட்டது ஒரு கடத்தல் கும்பல். சரவணனைக் கடத்தி மூன்று நாள்களாக காரிலேயே வைத்துச் சுற்றிய கடத்தல் காரர்களை விரட்டிப் பிடித்து வேட்டையாடிய ‘த்ரில்லர்’ சம்பவம் திருவண்ணாமலையைத் தெறிக்கவிட்டுள்ளது.
வசதிக்குக் குறைவில்லாத சரவணனுடைய கெட்டப் பழக்கம் பொழுதெல்லாம் சூதாட்டத்தில் நேரத்தைக் கழிப்பதுதான். கடந்த 28-ம் தேதி இரவு புல்லட்டில் திருவண்ணாமலை சென்று விட்டு வீடு திரும்பிய சரவணனை, காரில் வந்த கும்பல் ஒன்று காப்பலூர் கூட்டுச் சாலையில் வழிமறித்துக் கடத்தியது. மறுநாள் காலை சரவணனின் செல்போனிலிருந்து அவரின் மனைவி குணாவுக்கு போன் போயிருக்கிறது. கடத்தல்காரர்கள், சரவணனையே பேச வைத்தனர். ‘‘என்னை யாரோ கடத்திவிட்டார்கள். ரூ.25 லட்சம் கொடுத்தால்தான் உயிரோடு விடுவார்கள். பணத்தை உடனே தயார்செய்’’ என்று கூறியிருக்கிறார் சரவணன். பதறிப்போனார் குணா. அடுத்து பேசிய கடத்தல்காரர்களிடம், ‘‘அவரை ஒன்றும் செய்துவிடாதீர்கள். எப்படியாவது பணத்தைத் தயார் செய்துவிடுகிறேன்’’ என்று அழுதிருக்கிறார். ஆள் காணாமல் போனதும்... அதைத் தொடர்ந்து குணா பணத்துக்குப் போராடிக்கொண்டிருப்பதும் உளவுத்துறை போலீஸார் காதுகளுக்கு எட்ட, இந்தத் தகவல் திருவண்ணாமலை எஸ்.பி-யான சிபிசக்கரவர்த்திக்கு வந்து சேர்ந்தது. உடனடியாக தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தினர். ஆக்‌ஷன் திரைப்படங்களுக்கு நிகரான விறுவிறுப்புடன் நடந்திருக்கிறது கடத்தல்காரர்களைப் பிடிப்பதற்கான இந்தப் பரபரப்பான வேட்டை.

இந்த வேட்டையில் திருவண்ணாமலை டவுன் 10-வது புதுத்தெருவைச் சேர்ந்த அன்சர் அலி என்பவர் பிடிபட்டார். இவர்தான் கடத்தலுக்குத் திட்டம் வகுத்து மூளையாகச் செயல்பட்டவர். அன்சர் அலியைப் பொறியாக வைத்து வியாபாரி சரவணனை உயிருடன் மீட்ட போலீஸார், கடத்தலில் ஈடுபட்ட திருவண்ணாமலையைச் சேர்ந்த அன்சர் அலியின் கூட்டாளிகள் சையத் முஸ்தபா, தஸ்தகீர், இம்தியாஸ், துரைப்பாண்டியன் ஆகியோரைக் கைதுசெய்தனர்.
வேகமாகக் காய்நகர்த்தி செயல்பட்ட எஸ்.பி சிபிசக்கரவர்த்தியிடம் பேசினோம். ‘‘சரவணன் சூதாட்டப் பைத்தியம். அதேசமயம் அதில் பணத்தை அதிகமாக விட்டதில்லை. பணத்துடன்தான் வீடு திரும்புவார். சரவணன் பல இடங்களில் சூதாட்டம் விளையாடச் சென்றபோது, அன்சர் அலி என்பவர் இதைக் கவனித்திருக்கிறார். அப்போதுதான் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சரவணனிடம் லட்சக்கணக்கில் பணம் புழங்கியதைப் பார்த்த அன்சர் அலியின் மூளை, குறுக்குசால் ஓட்டியது. போகிற இடத்தில் எல்லாம் பணமாக அள்ளுகிற சரவணனையே அள்ளிவிட திட்டமிட்டு, கூட்டாளிகள் ஆறு பேரைவைத்து சரவணனைக் கடத்தியிருக்கிறார் அன்சர் அலி. முகத்தில் மாஸ்க் மாட்டி கையைக் கட்டி காரின் பின்பக்க இருக்கையில் அவரைத் தள்ளியிருக்கிறார்கள் அன்சரின் கூட்டாளிகள். பின்னர், போன் மூலம் சரவணின் மனைவி குணாவை தொடர்புகொண்டு, ‘பணத்துடன் பூந்தமல்லி வா... உத்தரமேரூர் வா’ என்று மூன்றுக்கும் மேற்பட்ட இடங்களைச் சொல்லியிருக்கிறார் கள். இறுதியில் உத்தரமேரூர் அருகில் உள்ள மானாமதி என்ற இடத்தைத் தேர்வுசெய்தனர்.

ஏப்ரல் 30-ம் தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் மானாமதியில் உள்ள லெதர் கம்பெனி அருகில் சரவணனின் மனைவி குணாவின் காரை நிறுத்தச்செய்தோம். நானும் என் டீமும் சாதாரண உடையில் அந்தப் பகுதியில் மறைந்திருந்தோம். அந்த கம்பெனிக்குள் இருந்த பெண் தொழிலாளர்கள் எங்களின் நடமாட்டத்தைப் பார்த்து கொள்ளைக் கும்பல் என்று எங்கள்மீது சந்தேகப்பட்டுவிட்டனர். கம்பெனி உரிமையாளருக்குத் தகவல் கொடுத்து எங்களைப் பிடிக்க ஆள் அனுப்பிவிட்டார்கள். அவர்கள் எங்களைச் சுற்றி வளைக்க... ஒரு வழியாக அவர்களிடம் நாங்கள் யார் என்று விளக்கிச் சொல்லி நிலைமையைச் சமாளிப்பதற்குள் போதும்போதும் என்றாகிவிட்டது. அப்போது சற்று தூரத்தில் ஒரு கார் வந்து தயங்கி நின்றது. சட்டென சுதாரித்து காரைச் சுற்றி வளைத்தோம். அதில் இருந்தவரைப் பிடித்தால், ‘நான்தான் இந்த கம்பெனியின் ஓனர்’ என்று சொன்னார். சரியான சொதப்பல். பணம் கைமாறும் இடத்தில் ஆள்நடமாட்டம் இருந்ததைத் தூரத்திலிருந்து கவனித்த கொள்ளையர்கள், காரை நிறுத்தாமல் சென்றுவிட்டனர்” என்றவர், அடுத்தடுத்த நாள்களில் நடந்த சேஸிங் சம்பவங்களையும் விவரிக்கத் தொடங்கினார்.
“அதன் பின்னர் பொறுமையாகக் காத்திருந் தோம். எதிர்பார்த்தபடியே கொள்ளை யர்களிடமிருந்து குணாவுக்கு போன் வந்தது. அவரை வந்தவாசிக்கு வரச் சொன்னார்கள். நாங்களும் அங்கு விரைந்தோம். அன்றும் யாரும் சிக்கவில்லை. சரவணனின் செல்போன் சிக்னலை ஆய்வுசெய்ததில், கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகத்தில் கொள்ளையர்கள் இருப்பதாகத் தெரியவந்தது. அங்கும் வீடு வீடாகச் சென்று சோதனையிட்டோம். அதற்குள், கொள்ளையர்கள் தப்பிச் சென்றுவிட்டனர். செங்கத்துக்கு பைக்கில் வரும்படி குணாவுக்கு அழைப்பு வந்தது. மே 1-ம் தேதி மதியம் ஆறு பேர்கொண்ட தனிப்படையுடன் சென்றேன். ஆனால், கொள்ளையர்கள் ஏனோ இடத்தை மாற்றினர்.

ஊத்தங்கரை மார்க்கமாக வருமாறு சொன்னதால், சரவண னின் தம்பியுடன் குணாவை பைக்கில் முன்னால் போகச் சொல்லிவிட்டு, நான் மஃப்டியில் லோடு ஆட்டோவில் பின்தொடர் ந்தேன். அப்போது, வழியில் பறக் கும்படையினர் வாகனங்களை மடக்கி விசாரித்துக்கொண் டிருந்தனர். லோடு ஆட்டோக்காரர் வண்டியை நிறுத்திவிட, பைக்கில் சென்றவர்கள் முன்னால் சென்றுவிட்டனர். வண்டியை எடுத்து பைக்கை ஃபாலோ செய்யச் சொன்னால், ‘எஸ்.ஐ திட்டுவார் சார்’ என நேரத்தைக் கடத்தினார் ஆட்டோ டிரைவர். ‘நான் எஸ்.பி... எஸ்.ஐ கேட்டால் நான் பார்த்துக்கொள்கிறேன். ஆட்டோவை எடுங்கள்’ என்று எவ்வளவோ கூறினேன். அந்த ஓட்டுநர், ‘உங்களுக்கென்ன சார்... இன்னைக்கு ஒருநாள் வந்துட்டு போயிடுவீங்க. நான் இந்த ரோட்டில்தான் ரெகுலரா ஆட்டோ ஓட்டியாக வேண்டும். கொஞ்சம் அமைதியாக உட்காருங்க சார்’ என்று நிலைமை புரியாமல் கட்டையைப்போட்டார்.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது. சிறிது தூரத்தில் பைக் ஒரு மரத்தடியில் நிற்க, அதை நோக்கி ஒரு கார் நெருங்கி வந்துவிட்டதைப் பார்த்தேன். ஆட்டோவை நம்பிப் பயனில்லை. இறங்கி, வேகமாக காரை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். ஓடினால் காரில் உள்ளவர்கள் உஷாராகி விடுவார்களே? காரில் வந்த அன்சர் அலி, குணா விடம் பணத்தை வாங்க முயன்றபோது, நான் கண் இமைக்கும் நேரத்தில் வேகமாகச் செயல்பட்டு, கார் சாவியை எடுத்துவிட்டேன். உடனே, அதே நேரத்தில் வெவ்வேறு வாகனங் களில் பின்தொடர்ந்த என் குழுவினரும் நான்கு பக்கமும் காரை சுற்றிவளைத்தனர்.

கடத்தல்காரர்கள் என்ன ஆயுதங்களை வைத்திருக்கிறார்கள் என்பது தெரியாததால், தற்காப்புக்காக என்னுடைய துப்பாக்கியை  தயாராக வைத்திருந்தேன். டிரைவர் சீட்டில் அமர்ந்திருந்த அன்சர் அலியைத் துப்பாக்கி முனையில் எங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வந்தோம். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரின் கூட்டாளிகள் பதுங்கியிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தோம். அன்சர் அலியை வைத்தே சரவணனை மீட்டோம். இது, எங்களுக்கு ஒரு சவாலான ஆபரேஷனாக இருந்தது. பணத்தையும் இழக்காமல், சரவணனையும் பாதுகாப்பாக மீட்டதற்கு முழுக்க முழுக்க என் டீமின் ஒத்துழைப்புதான் காரணம்’’ என்றார்.

கணவனுக்காகப் போராடிய குணாவின் முகத்தில் இன்னும் அச்சம் அப்படியே உறைந்திருந் தது. மீட்கப்பட்ட சரவணன், “என்னைக் கடத்தியவர்கள் கழுத்தில் பெரிய கத்தியை வைத்து என் மனைவியிடம் பேச வைத்தார்கள். தப்பிக்க முயன்றபோது, கடுமையாகத் தாக்கினார்கள். என்னைக் கொலை செய்துவிடுவார்கள். சடலம்கூட வீடுபோய் சேராது என்று பயந்தேன். மலம்கூட காரிலேயே கவர் கொடுத்து கழிக்க வைத்தார்கள். கட்டிங் பிளேயரால் விரலை நசுக்கி கொடுமைப் படுத்தினார்கள். கடத்திய காரிலிருந்து எகிறி வெளியே குதித்துவிடலாம். எதிரே வரும் லாரி, கார்களில் அடிபட்டு செத்துவிடலாம். அப்போதாவது, என் பிணம் வீட்டுக்குப் போகும் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், எஸ்.பி சிபிசக்கரவர்த்தி கடவுள் மாதிரி வந்து என்னைக் காப்பாற்றினார்” என்றார் உருக்கமாக.

வாழ்த்துகள் எஸ்.பி!

- கோ.லோகேஸ்வரன், கா.முரளி
News2.in
News2.in

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment