Wednesday, May 08, 2019

மிகக் குறைவாகப் பதிவான திருநங்கைகள் வாக்குகள்... - காரணம் என்ன?

தேர்தலில் போட்டியிடுவதிலும் மக்கள் பிரதிநிதிகளைத் தேர்வுசெய்வதிலும் ஆண், பெண், மூன்றாம் பாலினத்தார் என்ற பாகுபாடு கூடாது... அனைத்து தரப்பு மக்களும் இடம்பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில்தான் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதை நடைமுறைப்படுத்தவே நூறு சதவிகித வாக்குப்பதிவுக்கு நாடு முழுவதும் விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால், அது முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக, மூன்றாம் பாலினம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ள திருநங்கைகளின் வாக்குகள், தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மிகவும் குறைவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் தேர்தல் அதிகாரி களின் அலட்சியமே என்று புகார் எழுப்பியுள்ளார்கள் திருநங்கைகள்.  தமிழகம் முழுக்கப் பல்லாயிரக் கணக்கில் திருநங்கைகள் இருந்தாலும், 5,800 திருநங்கைகள் மட்டும்தான் வாக்காளர்களாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அதிலும், நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தலில், 1,011 பேர்தான் வாக்களித்துள்ளார்கள்.  இது மொத்த திருநங்கைகளில் 17.43 சதவிகிதம் ஆகும். மதுரை உட்பட தென் மாவட்டங்களில் 1,136 திருநங்கைகள் வாக்காளர்களாக இருந்தும் 180 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதற்கு காரணம், எந்த வாக்குச் சாவடியில் தங்களுக்கான வாக்கு இருக்கிறது என்பதே பலருக்கும் தெரிந்திருக்க வில்லை. பூத் ஸ்லிப்பும் சரிவர கிடைக்கவில்லை. அதற்கு வழிகாட்டவும் ஆளில்லை. அதனாலேயே இவர்களின் வாக்குகள் மிக குறைவாகப் பதிவாகியுள்ளன.
இதுபற்றி, திருநங்கைகளின் உரிமைகளுக்காக இயங்கி வருபவரும் திருப்பரங்குன்றம் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட முயன்றவருமான பாரதி கண்ணம்மாவிடம் கேட்டோம். ‘‘உண்மைதான். தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கில் திருநங்கைகள் இருந்தும் 5,800 திருநங்கைகள் மட்டும்தான் வாக்காளர்களாக தங்களைப் பதிவு செய்திருக்கிறார்கள். இவர்களிலும் அனைவரும் வாக்களிக்கவில்லை; மிகக் குறைவானவர்களே வாக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். ‘ஜனநாயகத் திருவிழாவில் அனைவரும் பங்களிக்க வேண்டும்’ என்று அரசு உண்மையாகவே விரும்பினால், ஒவ்வொரு திருநங்கைக்கும் வாக்குச்சாவடி சீட்டை விநியோகம் செய்திருக்க வேண்டும். அவர்கள் எல்லோரும் சுலபமாக வந்து வாக்களிக்க ஒரு குறிப்பிட்ட மையத்தை அறிவித்திருக்க வேண்டும். அது மட்டுமல்ல... திருநங்கைகள் தேர்தலில் போட்டியிட விதிகளை கொஞ்சம் தளர்த்த வேண்டும். ஏனென்றால் பெரும்பாலான திருநங்கைகள் குடும்பத்தினரின் ஆதரவு இல்லாமல் தனித்து வாழ்வதால், அவர்களால் குறிப்பிட்ட சில சான்றுகளை வழங்க இயலாது. இதைத் தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். அடுத்து நடைபெறும் தேர்தலிலாவது திருநங்கைகள் அனைவரும் வாக்களித்து நூறு சதவிகித வாக்குப்பதிவு நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்றார்.

பாரதி கண்ணம்மா கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மதுரைத் தொகுதிக்கு வேட்பு மனுதாக்கல் செய்தபோது, அது முழுமையாக இல்லை எனக்கூறி அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. தற்போது திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும்,  ‘பாரதி கண்ணம்மாவின் வேட்புமனுவில், ‘வேட்பாளராக முன்மொழிவதற்கான கையெழுத்துகள் போதிய அளவில் பெறப்படவில்லை’ எனக் காரணம் கூறி வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, திருநங்கைகள் வாக்கு அதிகமாகப் பதிவாகாமல் போனதற்கு கடந்த ஏப்ரல் மாதம் 16 மற்றும் 17-ம் தேதிகளில் கூவாகத்தில் நடைபெற்ற திருவிழாவும் ஒரு காரணம் என்கிறார்கள் தேர்தல் அதிகாரிகள் தரப்பில். 

- செ.சல்மான்,   படம்: ஈ.ஜெ.நந்தகுமார்
News2.in
News2.in

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment