Wednesday, May 08, 2019

எங்கள் பள்ளியைத் தரம் உயர்த்த மாட்டீர்களா? - சாதனைப் பள்ளியின் வேதனைக் குரல்!

கோடிக்கணக்கில் முதலீடு செய்து ஆயிரக் கணக்கில் கல்விக்கட்டணம் வசூலித்து கார்பரேட் நிறுவனங்களைப் போல இயங்கிவரும் தனியார்ப் பள்ளிகளே 100 சதவிகிதத் தேர்ச்சியை எட்ட முடியாத சூழ்நிலையில்… கடந்த 19 ஆண்டுகளாகத் தொடர்ந்து பத்தாம் வகுப்பில் 100 சதவிகிதத் தேர்ச்சிபெற்று வருகிறது, ஓர் அரசுப்பள்ளி!

கரூர் மாவட்டத்தில் க.பரமத்தி ஒன்றியத்தில் உள்ள ஓர் உள்ளடங்கிய கிராமம் கார்வழி. இக் கிராமத்தில்தான் ஒவ்வோர் ஆண்டும் தேர்ச்சியில் சாதனை செய்யும் அந்த அரசு உயர்நிலைப் பள்ளி இருக்கிறது. ஆனால், மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தாத காரணத்தால், ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பள்ளியில் மாணவர் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருவதுதான் வேதனை.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஓய்வுபெற்ற ஆசிரியர் பத்துமலை, “கரூர் மாவட்டத் திலேயே மிகவும் பின்தங்கிய கிராமங் களில் கார்வழி கிராமமும் ஒன்று. நான் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவன். 1986-ம் ஆண்டு இந்தப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியில் சேர்ந்து, 2007-ம் ஆண்டில் பணி ஓய்வுபெற்றேன். எங்கள் பள்ளியில், பத்தாம் வகுப்பு மாணவர்களைப் பள்ளியிலேயே தங்க வைத்துச் சிறப்பு வகுப்புகள் நடத்த ஆரம்பித்தோம். அத னால், 2001-ம் ஆண்டில் எங்கள் பள்ளி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவிகிதம் தேர்ச்சி பெற்றது. கடந்த பொதுத்தேர்வு வரை எங்கள் பள்ளி 100 சதவிகிதத் தேர்ச்சியைப் பெற்றுள்ளது. ஆனால், எங்கள் பள்ளி மாணவர்கள் மேல்நிலைப் படிப்பில் சேர, 12 கி.மீ தூரத்திலிருந்து 20 கி.மீ தூரம் வரைப் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதோடு மேல்நிலைப் பள்ளி பொதுத்தேர்வு எழுத 25 கி.மீ தூரமுள்ள பரமத்திக்குத்தான் செல்ல வேண்டும். இதனால், பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்த மாணவர்கள்கூட மேல்நிலைக் கல்வியில் சேரத் தயங்குகிறார்கள். குறிப்பாக மாணவிகளில் பெரும்பாலானோர் மேல்நிலை வகுப்பில் சேர்வதேயில்லை. அப்படியே பக்கத்துக் கிராமங்களில் உள்ள பள்ளிகளில் சேர்ந்தாலும் தினமும் 20 கி.மீ தூரம் பயணிப்பதால், படிப்பில் ஆர்வம் குறைந்துவிடுகிறது. இப்படி பக்கத்துக் கிராமங்களுக்குச் சென்று படிக்கும் மாணவர்கள், பிளஸ் டூ தேர்வில் குறைவான மதிப்பெண்தான் எடுக்கிறார்கள். அதனால்தான் எங்கள் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தித்தரச் சொல்லிப் பல ஆண்டுகளாகக் கோரிக்கைவிடுத்து வருகிறோம்” என்றார்.

இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவி கனி ஓவியா, “எங்கள் பள்ளியில் குடிதண்ணீர் உட் பட எந்த அடிப்படை வசதிகளும் இல்லாததால், வீட்டிலிருந்தே இரண்டு, மூன்று வாட்டர் கேன்களில் தண்ணீர் எடுத்து வருகிறார்கள் மாணவர்கள். தரமான கல்வி கொடுத்தும் சரியான பஸ் வசதி இல்லாததால்,  பக்கத்துக் கிராம மாணவர்கள் எங்கள் பள்ளியில் சேர்வதில்லை. இங்கு, தையல் ஆசிரியர் மற்றும் உடற் கல்வி ஆசிரியர் பணியிடங்கள் இரண்டு ஆண்டுகளாகக் காலியாக இருக்கின்றன. முன்பு எங்கள் பள்ளி மாணவர்கள், கோகோ மற்றும் கபடி விளையாட்டுகளில் வட்டார அளவில் பல முறை பரிசுகள் வாங்கியுள்ளனர்.

இங்குள்ள வகுப்பறைகள் பாழடைந்த கட்டடங்களாக உள்ளன. எங்கள் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த் தக்கோரி, கடந்த ஐந்து ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். மேல்நிலைப் பள்ளியாக மாறினால் அடிப்படை வசதிகள் கிடைத்துவிடும். இதற்காகக் கல்வி அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்து மனு கொடுத்துள்ளோம். கரூர் எம்.பி தம்பிதுரை, போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் என்று ஆளுங்கட்சி தரப்பினர் பலரையும் பார்த்து, கோரிக்கை வைத்திருக்கிறோம். ஆனால், ஒரு நடவடிக்கையும் இல்லை. வெறும் 50 மாணவர்கள் படிக்கும் பள்ளிகளெல்லாம் தரம் உயர்த்தப் பட்டிருக்கின்றன. கடந்த 19 ஆண்டுகளாகத் தொடர்ந்து 100 சதவிகிதத் தேர்ச்சி பெற்றுவரும் எங்கள் பள்ளியைத் தரம் உயர்த்த மறுக்கிறார்கள். மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்த ஊர் சார்பில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் கொடுக்க வேண்டும். முன்னாள் மாணவர்கள் இணைந்து அந்தத் தொகையையும் செலுத்தத் தயாராக இருக்கிறோம். இது மேல்நிலைப் பள்ளியானால், கண்டிப்பாக எங்கள் ஊர் மாணவர்கள் பல சாதனைகளை நிகழ்த்துவார்கள்” என்றார், நம்பிக்கையோடு.
கரூர் மாவட்ட கல்வி அதிகாரி பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் சூழ்நிலையில், கல்வித்துறை அதிகாரி ஒருவரிடம் விசாரித்தோம், “அதுகுறித்த கோப்புகள் என்ன நிலையில் இருக்கின்றன என்று தெரியவில்லை. புதிய மாவட்ட கல்வி அதிகாரி வந்தபிறகுதான் அதுபற்றிச் சொல்ல முடியும்” என்றார்.

- துரை.வேம்பையன் 
படங்கள்: நா.ராஜமுருகன்
News2.in
News2.in

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment