Tuesday, May 07, 2019

காவிரியாற்றில் தொடரும் உயிர் பலி... காகித ஆலை காரணமா?

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே காவிரி ஆற்றில் குளிக்கச் செல்பவர்களில் பலர், நீரில் மூழ்கிப் பலியாவது தொடர்கதையாகி வருகிறது. ஏப்ரல் 23-ம் தேதி பொத்தனூர் பகுதி காவிரி ஆற்றில், குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர். “இந்தச் சோக நிகழ்வுக்குக் காரணம், அங்குள்ள தமிழ்நாடு காகித ஆலையின் செயல்பாடு கள்தான்” என்று அதிர்ச்சியூட்டுகிறார்கள், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசியவர்கள், “பொத்தனூர் காவிரியாற்றின் தென் பகுதி யான புகளூரில் தமிழ்நாடு காகித நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம், தங்களுக்குத் தேவையான தண்ணீரைக் காவிரி ஆற்றிலிருந்துதான் எடுக்கிறது. ஆற்றில் நீர்வரத்து குறைவாக இருக்கும் காலங்களில், ஆற்றின் நடுவே வாய்க்கால் அமைத்து 20 அடி ஆழம்வரைப் பள்ளம் தோண்டி, அதற்குள் மோட்டார் வைத்துத் தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. சிலசமயங்களில் மணல் படுகையில் பெரியளவில் குளம் வெட்டியும், 40 அடி ஆழத்தில் கிணறுகள் அமைத்தும் தண்ணீர் எடுக்கப்படுகிறது. ஆற்றில் நீர்வரத்து அதிகமாகும்போது ஆற்றில் இறங்குபவர்கள் இத்தகைய குழிகளில் சிக்கி உயிர் இழக்கிறார்கள். தற்போது ஆறு நபர்கள் இறந்த இடம், காகித ஆலை வாய்க்கால் அமைத்திருந்த பகுதிதான்” என்றனர்.

தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கத் தலைவர் நா.மதியழகன், “தமிழ்நாடு காகித ஆலைக்குச் சொந்தமான நீர் உந்து நிலையம் மூலம் மூன்று கிணறுகள் வெட்டப்பட்டுள்ளன. இவற்றில், இரண்டு கிணறுகள் அனுமதி பெறாதவை. மேலும் ஆற்றின் பல பகுதிகளில் இப்படிக் கிணறுகள், வாய்க்கால்களை வெட்டுவதால், ஆற்றில் தண்ணீர் பரவிச் செல்வதில்லை. அந்த வாய்க்கால்களில் மட்டும்தான் தண்ணீர் ஓடுகிறது. ஆண்டுதோறும் ஜனவரி 8-ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதிவரை தண்ணீர் எடுக்கக்கூடாது. ஆனால், ஆலை நிர்வாகம் இந்த விதியை மதிப்பதில்லை” என்றார்.
பரமத்தி வேலூர் தி.மு.க எம்.எல்.ஏ-வான மூர்த்தி, “தமிழ்நாடு காகித ஆலை, விதிமுறைகளை மீறியதால், காவிரி ஆறே திசை திரும்பியுள்ளது. அத்துடன், அதிக அளவில் மணல் அள்ளியிருப்பதால், புதைமணல் உருவாகியுள்ளது. இங்குப் பாதுகாப்பு வசதிகளும் முறையாகச் செய்யப்படவில்லை. பொதுப்பணித் துறையினரின் அலட்சியத்தால்தான் ஆறு உயிர்கள் பறிபோயுள்ளன” என்றார்.

இதுபற்றி காகித ஆலையின் பி.ஆர்.ஓ உதயகுமாரிடம் கேட்டபோது, ‘‘ஆறு பேர் இறந்ததற்கும் ஆலைக்கும் தொடர்பு இல்லை. ஆற்றில் புதை மணல் இருப்பது இயல்பு. இதுபோன்ற விபத்துகள் இயற்கையாக நடப்பவை. எங்களால்தான் ஆற்றில் குழிகள் ஏற்பட்டன என்பது பொய். எங்களின் ஆலை விதிமுறையை மீறி எதையும் செய்யவில்லை” என்றார்.

உயிரிழப்புகள் ஏற்படாமல் தடுக்க வேண்டியது அரசின் கடமை!

- ரகுபதி
படங்கள்: க.தனசேகரன்
News2.in
News2.in

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment