Tuesday, May 07, 2019

“எங்கள் பகுதியின் பெயரை மாற்றுங்கள்”

சுயமரியாதைக்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட மக்கள்!
‘‘மனிதக் கழிவுகளை அள்ளுபவர்கள் என்று காலங்காலமாக எங்களை ஒதுக்கிவைத்திருப்பதுடன், எங்கள் குடியிருப்புப் பகுதியை ‘தோட்டி லைன்’ என்று பெயர்வைத்து அழைக்கிறார்கள். எங்களுக்கு சமூக அந்தஸ்து எல்லாம் வேண்டாம். எங்களின் குடியிருப்புப் பகுதியின் பெயரை மாற்றினால் போதும்” என்று கொந்தளிக்கிறார்கள் வேலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள்.

வேலூர் மாநகராட்சி கஸ்பாவில், ‘ஸ்கேவஞ்சர் காலனி’ என்ற பகுதியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 1,500 பேர் வசிக்கிறார்கள். ஆங்கிலேயா் காலத்திலிருந்தே இந்த மக்கள் பல்வேறு துப்புரவுத் தொழில் செய்துவருகிறார்கள். காலப்போக்கில் இவர்களின் துப்புரவுப் பணிகள் படிப்படியாகக் குறைந்துவிட்டன என்றாலும் முழுமையாக நிறுத்தப்படவில்லை. வேலூரின் மாநகராட்சி அலுவலர்களே, இவர்கள் வசிக்கும் பகுதியை ‘தோட்டி லைன்’ என்றுதான் அழைக்கிறார்கள். கிட்டத்தட்ட ஐந்து தலைமுறைகளாகச் சாதியின் பெயரால் ஓரங்கட்டப்பட்டிருக்கும் இம்மக்கள், “எங்கள் பகுதிக்கு ‘டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் நகர் கஸ்பா’ என்று பெயர் மாற்றுங்கள்’’ என்று பல ஆண்டுகளாகப் போராடி வருகிறார்கள்.
இப்பிரச்னை குறித்து நம்மிடம் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பேசினார்கள். “வெள்ளைக்காரங்க ஆட்சி செய்த சமயத்துல, ரயில் தண்டவாளங்களில் கிடக்கும் மலத்தை அள்ளிச் சுத்தம் செய்றதுக்காக எங்களைப் பயன்படுத்தினாங்க. அதுக்காக தண்டவாளங்களை ஒட்டிக் குடிசைகள் போட்டுக் கொடுத்தாங்க. வேலூரில் அப்படி வந்தவங்கதான் எங்க மூதாதையர்கள். எங்க தாத்தா, பாட்டி எல்லாம் காலங்காத்தால நாலு மணிக்கே எழுந்து, மனிதக் கழிவுகளை அள்ளுறதுக்காகத் தண்டவாளத்துக்குப் போயிடுவாங்க. அவங்க மதியம் 12 மணி வரைக்கும் தண்டவாளத்தைச் சுத்தம் செய்யணும். வெள்ளைக்காரங்க எங்களை ‘ஸ்கேவஞ்சர்’னுதான் கூப்பிடுவாங்க. காலப்போக்குல மனிதர்களே, மனிதக்கழிவுகளை அள்ளுறதைத் தடை செஞ்சிட்டாங்க. இப்போ, நாங்களும் படிச்சு வேலைக்குப் போக ஆரம்பிச்சு இருக்கோம். ஆனா ஸ்கூல், காலேஜ், வேலை செய்கிற இடம்ன்னு எதுவாக இருந்தாலும், ‘நாங்க யார்’னு தெரியாதவரைக்கும் தான் எங்களுக்கு மரியாதை. நாங்க ஸ்கேவஞ்சர் காலனியைச்் சேர்ந்தவங்கனு தெரிந்தால் போதும்... எங்ககிட்ட இருந்து விலகிடுவாங்க. எங்களைப் பார்த்தா சிரிக்கக்கூட மாட்டாங்க. எங்களை அருவருப்பாகப் பார்க்க ஆரம்பிச்சுடுவாங்க. இப்பவும் வேலூர்ல இருக்குற லாட்ஜ்கள், உணவு விடுதிகளுக்கு எங்க பகுதி இளைஞர்களைக் கூட்டிட்டுப்போய், பணமும் மதுவும் கொடுத்து செப்டிக் டேங்குகளையும் சாக்கடைகளையும் சுத்தம் செய்ய வைக்கிறாங்க. எங்களை இழிவாக நடத்தறதை மாத்தறதுக்காகப் பல முயற்சிகள் எடுத்தோம். தொடர் போராட்டங்கள் நடத்தின பிறகு, எங்க ஏரியா பெயரை மாத்துறதுக்காக வேலூர் மாநகராட்சி கூட்டத்துல தீர்மானம் நிறைவேத்தினாங்க. 

ஆனா, நகராட்சி நிர்வாகத்துறை, பெயர் மாற்ற ஒப்புதல் வழங்கலை. அதனால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம். நீதிமன்றம், பெயரை மாத்தச்சொல்லி முதன்மைச் செயலாளருக்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனா, பெயர் மாத்துறதுல நிறைய பிரச்னைகள் இருக்குன்னு முதன்மைச் செயலாளர் அலுவலகத்துல இருந்து பதில் கொடுத்தாங்க. சாதியை வெச்சு எங்களை ஒதுக்குறதால, கடும் மன உளைச்சலுக்கு ஆளாகுறோம். இதனால, நாங்களாகவே அம்பேத்கர் நகர்ன்னு ஒரு போர்டு வெச்சிக்கிட்டோம். இருந்தாலும் அரசிடம் இருந்து எங்களுக்கு அதிகாரபூர்வமான பெயர் வேணும்’’ என்றார்கள் வருத்தத்துடன்.
இதுகுறித்து வேலூர் மாநகராட்சி அதிகாரிகளிடம் பேசியபோது, ‘‘அம்பேத்கர் நகர் என்று பெயர் மாற்றம்செய்து, தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பினோம். அரசு தரப்பில், தீர்மான நகலைத் திருப்பி அனுப்பிட்டாங்க. இனிமே அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களால் ஒன்றும் செய்ய முடியாது’’ என்றார்கள். வேலூர் சட்டமன்ற தி.மு.க உறுப்பினர் கார்த்திகேயனிடம் பேசியபோது, ‘‘அந்தப் பகுதியின் பெயரை மாற்றக்கோரி சட்டமன்றத்தில் சபாநாயகரிடம் கேள்வியாகக் கொடுத்துள்ளேன். அம்பேத்கர் நகர் எனப் பெயர் மாற்றுவதற்கான ஏற்பாடுகளைக் கண்டிப்பாகச் செய்வேன்’’ என்றார்.

இந்தப் பிரச்னையை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ராமன், “அந்த மக்களின் பிரச்னைகள் குறித்து மாநகராட்சி கமிஷனரிடம் விளக்கம் கேட்டு நடவடிக்கை எடுக்கிறேன்’’ என்று முடித்துக்கொண்டார். 

நினைத்த மாத்திரத்தில், நினைத்த மேடை யிலிருந்தே சென்ட்ரல் ரயில் நிலையத்தின் பெயரை எம்.ஜி.ஆர் ரயில் நிலையம் என்று மாற்ற முடிகிறது. ஆனால், ஆண்டாண்டு காலங்களாக கோரிக்கை வைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஒடுக்கப்பட்ட மக்கள். அதை மாற்றத்தான் நாதியில்லை இந்த நாட்டில்!

- கோ.லோகேஸ்வரன்
படங்கள்: ச.வெங்கடேசன்
News2.in
News2.in

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment