Wednesday, May 08, 2019

தமிழர்களின் கவனத்துக்கு... இனி உங்களுக்கு வேலையில்லை! - இது ரயில்வே ‘ராக்கிங்’

மிழகத்தை மோடி புறக்கணிக்கிறார் என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதும், அவர் தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் ‘#GoBackModi என்று ஹேஷ்டேக் போடுவதும் வாடிக்கையாகிவிட்டது. இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற தென்னக ரயில்வே துறை பணி நியமனங்களில் தமிழகம் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பது தமிழக மக்களிடம் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நியமிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களில் 90 சதவிகிதம் பேர் வடமாநிலத்தவர்கள் என்பதே கொதிப்பின் பின்னணி.
ரயில்வே துறையைக் கண்டித்துத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையை முற்றுகையிடும் போராட்டம் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. போராட்டத்துக்கு அனுமதி மறுத்து திருச்சி மாநகர காவல் துறை, போராட்டத்தை ஒடுக்கும் வேலைகளைச் செய்தது.

ஆனால், பகல் 11.30 மணியளவில் ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் பொன்மலை ரயில்வே பணிமனையை முற்றுகையிட முயன்றனர். இதையடுத்து, த.தே.பே தலைவர் பெ.மணியரசன், அமைப்பின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் அருணபாரதி உள்ளிட்டோரை போலீஸார் கைதுசெய்தனர். தமிழக விவசாயிகள் சங்கத்தினர், சமூக நீதிப் பேரவையினரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்று கைதாகினர்.
போராட்டம் குறித்துப் பேசிய பெ.மணியரசன், “மத்திய அரசுக்குச் சொந்தமான ரயில்வே துறை, தபால்துறை, வருமானவரித் துறை மற்றும் துப்பாக்கித் தொழிற்சாலைகள் உள்ளிட்ட 18 பொதுத்துறைகளில், சமீபகாலமாகத்  தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு முற்றிலும் மறுக்கப்படுகிறது. தமிழே தெரியாத வட  மாநிலத்தவர்கள் தபால்துறைத் தேர்வின்போது தமிழில் அதிக மதிப்பெண் எடுத்த மோசடிகள் எல்லாம் அரங்கேறின. அதேபோல் இப்போது ரயில்வே துறையில் வெளிமாநிலத்தவர்களுக்கே வேலை தரப்பட்டுள்ளது. இது மிகப் பெரிய இனப் பாகுபாடு.

பொன்மலை ரயில்வே பணிமனையில் சமீபத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட 325 பேர்களில் ஒருவர்கூட தமிழர் இல்லை. மத்திய அரசு நிறுவனங்களில் நடத்தப்படும் தேர்வுகளில் திட்டமிட்டு தமிழர்களைத் தோல்வியடையச் செய்கிறார்கள். இது மொழிவழி மாநிலச் சட்டத்துக்கு முற்றிலும் எதிரானது. வேண்டு மானால் வெளி மாநிலத்தவருக்கு 10 சதவிகித ஒதுக்கீடு தரலாம். இதற்கும் அதிகமாக நியமிக்கப்பட்டுள்ள வெளி மாநிலத்தவரை அப்புறப்படுத்திவிட்டு, அந்த வேலைகளைத் தமிழக இளைஞர் களுக்கு வழங்கவேண்டும். ஆந்திரம், கர்நாடகம், குஜராத் மாநிலங் களில் மத்திய அரசு நிறுவனங்களில் அந்தந்த மாநிலத்தவருக்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை தரப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் அப்படியில்லை. அந்த மாநிலங்களில் உள்ளதைப் போன்ற சட்டத்தைத் தமிழகத்திலும் கொண்டுவர வேண்டும். அதை அரசு செய்யத் தவறினால் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்” என எச்சரித்தார்.

சமூக நீதிப்பேரவையின் மாவட்டத்தலைவர் ரவிக்குமார், “கடந்த டிசம்பர் மாதம் தென்னக ரயில்வேதுறை 4,429 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கான அழைப்பு விடுத்தது. இதற்கு ஆன்லைனில் விண்ணப் பிக்க வேண்டும். தமிழகத்திலிருந்து விண்ணப்பித்தவர் களுக்கு இணையதளம் ‘ஹேங்’ ஆகி விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. வந்த விண்ணப்பங்களில் சான்றிதழ் சரிபார்த்து, 1,765 பேருக்கு ஆணை வழங்கப்பட்டது. அதில் 1,600 பேர் வட மாநிலத்தவர்கள். இவர்கள் இப்போது தமிழகத்தில்தான் வேலை செய்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு இதே ரயில்வே துறையில் 2,600 புதிய பணி நியமனங்கள் செய்யப்பட்டதில் 2,300 பேர் வட மாநிலத்தவர்கள். திருச்சி பொன் மலையில் தற்போது வேலை செய்யும் 3,800 பேரில் 1,200 பேர் வட இந்தியர்கள். இதுதொடர்ந்தால் இன்னும் ஐந்து ஆண்டுகளில் ரயில்வேதுறை முழுமையாக வட இந்தியர்கள் வசமாகிவிடும். பயணச்சீட்டு பரிசோதனை செய்வதில் 300-க்கு 100 வட இந்தியர்கள் நியமிக்கப் பட்டுள்ளார்கள். அவர்களிடம் மொழி தெரியாமல் மக்கள் சிக்கித் தவிக்கிறார்கள். மும்பையில் நவ நிர்மான் சேனை ‘மராத்தியர்களுக்கே முன்னுரிமை’ எனும் கோஷத்தை முன் வைத்தது. இதன் பின்னரே அம்மாநில ரயில்வே துறையில், மராத்தியர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. தமிழகத்திலும் இதற்காகப் போராடுவதற்கு இளைஞர்கள் முன்வர வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.

இந்தப் போராட்டத்துக்குப் பின், சமூக வலைத்தளங்களில் #தமிழக வேலை தமிழருக்கே, #TamilNaduJobsForTamils உள்ளிட்ட ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டிங்கில் இருக்கின்றன.

ஹேஷ்டேக் டிரெண்ட் ஆவது நிலைமை யின் வீரியத்தை வெளிப்படுத்தும். ஆனால், அது தமிழர்களுக்கான வேலைகளையும் பெற்றுத்தர வேண்டுமானால், இந்தப் போராட்டங்கள் இத்தோடு நின்றுவிடக் கூடாது. தேசியக் கட்சிகள், அவற்றுடன் கூட்டணி போட்டு பதவி சுகம் அடைந்த - அடைந்துகொண்டிருக்கிற, அந்தச் சுகம் கிடைக்குமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற மாநிலக் கட்சிகள் அனைத்தையும் மிரளவைக்கும் வகையில் தொடரவேண்டும். அது மட்டுமே உண்மையான தீர்வாகவும் இருக்கும்.

- சி.ய.ஆனந்தகுமார்
படம்: தே.தீட்ஷித்
News2.in
News2.in

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment