Sunday, May 12, 2019

கழுகார் பதில்கள்!

@லி.சீனிராஜ், தொம்பக்குளம். 
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் புகாரை, நீதிபதிகள் குழு தள்ளுபடி செய்திருப்பதோடு, அறிக்கையையும் வெளியிட மறுத்துள்ளதே?


எல்லா அமைப்புகளுமே மக்களுக்காக இயங்கும்போது, ஒரு சிலவற்றுக்கு மட்டும் உச்சபட்ச விதிவிலக்குக் கொடுத்திருப்பது உண்மையான ஜனநாயக அமைப்பாக இருக்கமுடியாது. எல்லாமுமே இங்கே கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டும். எந்தப் பதவியாக இருந்தாலும், அதில் அமர்பவர்கள் ரத்தமும் சதையும் கொண்ட சராசரி மனிதர்கள்தான். எனவே, அனைவருமே மக்கள் மன்றத்துக்குப் பதில் தந்தே ஆகவேண்டும். இதை மனதில்கொண்டு சட்டங்களையே திருத்தியாக வேண்டியது காலத்தின் கட்டாயம். யாராக இருந்தாலும்... எத்தகைய சந்தர்ப்பமாக இருந்தாலும் ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’  என்பதை நினைவூட்டிக்கொண்டே இருக்கவேண்டும்.

@திருப்பூர் அர்ஜுனன்.ஜி.அவிநாசி.
‘வங்கிகளில் பேலன்ஸ் இல்லாததால், பிடித்தம் செய்யப்பட்ட தொகை, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் திரும்பச் செலுத்தப்படும்’ என ப.சிதம்பரம் வாக்குறுதி அளித்துள்ளாரே?


வெறும் நாக்குறுதிதானே?


ஆர்.பொன்னுச்சாமி, கன்டோன்மென்ட், திருச்சி-1.
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் பிரியங்கா போட்டியிடாமல் பின்வாங்கியது ஏன்?
‘போட்டியிடுவேன்’  என்று அவராகச் சொல்லியிருந்தால்தான் அது ‘பின்வாங்குதல்’. இது, ‘போட்டுவாங்குதல்’.

@கே.ஆர்.உதயகுமார், சென்னை-1.
‘தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு ஜனாதிபதி ஆகும் தகுதியுள்ளது’  என்கிறாரே துரைமுருகன்?


ஸ்டாலின், தமிழக முதல்வர் கனவில் இருக்கிறார். ஆனால், துரைமுருகனோ அவரை டெல்லி பக்கம் துரத்திவிடப் பார்க்கிறாரே. ஒருவேளை, இப்போதே உதயநிதிக்கு முடிசூட்ட நினைக்கிறாரோ துரை!
@இ.முத்துக்குமார், கிருஷ்ணாபுரம்.
‘2.0’ போல் அறிவியலுக்குப் புறம்பான விஷயங்களைப் பேசக்கூடாது, ‘தேவராட்டம்’  போல் சாதியை உயர்த்திப் பிடிக்கக்கூடாது என்றெல்லாம் சினிமாக்களுக்குக் கட்டுப்பாடு விதிக்க முயன்றால், படைப்புச் சுதந்திரம் கேள்விக்குறியாகிவிடும்தானே?


படைப்புச் சுதந்திரம் சரி. இப்படி ஒன்றைச் சொல்லிக்கொண்டே மற்றவர்களின் சுதந்திரத் துக்குள் தலையிடவும் உரிமை இல்லைதானே! மாற்றுத்திறனாளிகளைக் கிண்டலடிப்பது; மூன்றாம் பாலினத்தவரை கேவலமாகச் சித்திரிப் பது; சமூகத்துக்குள் மோதல் ஏற்படுத்துவதுபோன்ற வசனங்களையும் பாடல்களையும் எழுதிச் சேர்ப்பது; பார்க்கும்வேலையை வைத்துக் கேவல மான வார்த்தைகளால் விமர்சிப்பது; மூடநம்பிக்கையான விஷயங்களையெல்லாம் உயர்த்திப்பிடித்துக் குழந்தைகளின் மனதில் தவறான கருத்துகளைப் பதிப்பது... இவையெல் லாம் எந்தப் படைப்புச் சுதந்திரத்தில் வரும்?

எம்.டி. உமா பார்வதி, சென்னை.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ‘பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் வாழும் 120 கோடி மக்களின் பிரச்னைகளை, தனிநபர் சிந்தனையால் தீர்க்க முடியாது’ என்கிறாரே?


நூற்றில் ஒரு வார்த்தை. இதை, தான் சார்ந்த கட்சித் தலைமைக்கும் அவர் அழுத்தமாகச் சொல்லவேண்டும்.


@சரவணன் ஓ.ஏ.கே.ஆர், சென்னை.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில், ப. சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரத்தைக் கைது செய்வதற்கு மட்டும் தொடர்ந்து நீதிமன்றத்திலிருந்து தடை விதிக்கப்படுகிறதே?

ஹலோ மிஸ்டர் சரவணன்... ‘நீதிமன்றத்தின் செயல்பாடு களுக்கு உள்நோக்கம் கற்பிக்கக்கூடாது’  என்பது தெரியும்தானே!

எம்.தமிழ்மணி, வெள்ளக்கோவில், திருப்பூர்.
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளர் களுக்குக் கொடுப்பதற்காக வைத்திருந்த பணத்தைக் கைப்பற்றியதால், தேர்தலை நிறுத்தியுள்ளதாகக் கூறும் தேர்தல் ஆணையம், மற்ற தொகுதிகளில் தேர்தலை நடத்தியிருப்பதால், அங்கெல்லாம் பணம் தரப்படவில்லை என்றுதானே சொல்கிறது?


ம்ஹூம்... ‘ஏன் இன்னும் மக்களுக்குப் பணத்தை பட்டுவாடா செய்யாமல் பதுக்கியே வைத்திருக்கிறீர்கள்’ என்கிற கோபத்தில்கூட வேலூர் தேர்தலை நிறுத்தியிருக்கலாம் அல்லவா! எல்லா திருடர்களும் பிடிக்கப்பட வேண்டும் என்பதுதான் உண்மை. ஆனால், அப்படி பிடிக்கப்படுவதில்லை என்பதற்காக ஒரு திருடனைக்கூட பிடிக்கக்கூடாது என்று கூறமுடியாது. சட்டங்கள் கடுமையாகத்தான் இருக்கின்றன. ஆனால், அமல்படுத்துவதில்தான் பாகுபாடு காட்டப்படுகிறது.

வி.கருணாநிதி, திருமக்கோட்டை.
‘மோடி, ராகுல் இருவரும் கிடையாது. காங்கிரஸின் ஆதரவோடு வேறு ஒருவர் பிரதமர் ஆவார்’  என்கிற பிரபல ஜோதிடரின் கணிப்பு பலிக்குமா?


நீங்கள் எல்லாம் இப்படி அவசரப்படுவதால் தான், ஜோதிடர்களின் காட்டில் மழை பெய்கிறது!

பி. மணி, ஆந்திரா மாநிலம்.
அரசியல் கட்சி கொறடாக்களுக்கு மதிப்பு இருக்கின்றனவா?


நம்பிக்கை வாக்கெடுப்பின்போது மட்டுமே அதன் மதிப்பு தெரியும்.

வி.ஹரிகிருஷ்ணன், திருக்கழுக்குன்றம்.
ஃபானி புயல் வருவதற்கு முன்பே 380 கோடி ரூபாய், புயல் வீசியதுமே 1,000 கோடி ரூபாய் என்று நிவாரண நிதியை ஓடோடிப்போய் ஒடிசாவுக்குக் கொடுத்துள்ளாரே பிரதமர் மோடி?


வடஇந்தியாவில் இன்னும் இரண்டு கட்டத் தேர்தல்கள் மீதமிருக்கும்போது, வந்த வாய்ப்பை விட்டுவிட முடியுமா?


ஆர்.பழனிசாமி, இராவணாபுரம்.
எல்லைகள் இல்லாத நிருபர்கள் (ஆர்.எஸ்.எஃப்) அமைப்பு ஆய்வறிக்கையில், சுமார் 25 சதவிகித நாடுகளில் ஊடகம் அபாய நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளதே?

உண்மையில் 99 சதவிகித நாடுகளில் அபாய நிலைதான். ஆள்வோர்களும் சரி, அராஜகவாதி களும் சரி... தங்களுக்கு எதிரான நிலைப்பாடுடைய வர்களை விட்டுவைப்பார்களா என்ன?

அ.ச. நாராயணன், பாளையங்கோட்டை.
சன் டி.வி-யின் இடைவிடாத பிரசாரம் தி.மு.க-வுக்குக் கை கொடுக்கும் என்று கருதுகிறீர்களா?


பெரும்பாலான டி.வி-க்களும் தத்தமக்குப் பிடித்தவர்களுக்குப் பிரசாரம் செய்துள்ளன. ஆனால், இது டி.வி-க்களை மிஞ்சும் டிஜிட்டல் விளம்பரங்கள் முளைத்துவிட்ட யூ டியூப் காலம்!

@சி. கார்த்திகேயன், சாத்தூர்.
‘டிஜிட்டல் இந்தியா’  என்று மூச்சுக்கு முந்நூறு தடவை கூறும் பிரதமர் நரேந்திர மோடி, வேட்புமனு, வாக்குப்பதிவு உள்ளிட்ட அனைத்தையும் ஏன் ஆன்லைன் முறைக்கு மாற்றுவதற்கு முயற்சி எடுக்கவில்லை?


ம்க்கும்... ஏற்கெனவே வாக்குப்பதிவு எந்திரங் களுக்கு எதிராகவே பலரும் பேசிக்கொண் டுள்ளனர். அதே எந்திரங்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட தேர்தல்களில் வெற்றிபெற்று ஐந்து ஆண்டுகளுக்கு ஆட்சி புரிந்தவர்கள்கூட, எந்திரங்களின் மீது சந்தேகம் கிளப்பி, ‘வாக்குச் சீட்டு முறையைக் கொண்டுவர வேண்டும்’ என்று லைனில் நிற்கிறார்கள். இந்தச் சூழலில் ‘அனைத்தும் ஆன்லைன்’ என்று கேட்கிறீர்களே!

இ.நாகராஜன், சாத்தூர்.
மே 19 அன்று நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தல்களாவது நேர்மையாக நடக்குமா?


பொதுத்தேர்தல் என்றால் மாநிலம் முழுக்க கவனம் செலுத்தவேண்டியிருக்கும். ஆனால், இடைத்தேர்தல் அப்படியில்லை. ‘துல்லியமாக’க் கவனம் செலுத்த முடியும். அதனால், ஒருவரையும் விட்டுவிடாமல், ‘ரொம்ப நேர்மை’யாகவே நடத்தி முடித்துவிடுவார்கள். அதற்கு நம்முடைய தேர்தல் ஆணையம் ‘100 சதவிகிதம் உத்தரவாதம்’!

பாரதி முருகன், மணலூர்பேட்டை.
ஏமாற்றிவிட்டதே ஃபானி புயல்?


‘தமிழ்நாட்டுக்கு வரப்போகிறேன்’  என்று அதுவாக எங்கேயும் சொல்லவில்லையே!

கி.ரவிக்குமார், நெய்வேலி.
ரயில் தாமதம் காரணமாகக் கர்நாடகாவில் 200 மாணவ, மாணவியர் நீட் தேர்வு எழுத முடியாமல் போனதற்கு மத்திய அரசு பொறுப்பேற்குமா?


கர்நாடகா என்பதால், பொறுப்பேற்றுக் கொண்டுவிட்டார்கள். ‘மே 20 அன்று தனியாகத் தேர்வு நடக்கும்’ என்று அறிவித்துவிட்டனர். தமிழகத்தில் நடந்திருந்தால்... ‘ரயில் தாமதத்துக்கெல்லாம் மத்திய அரசு என்ன செய்ய முடியும்?’ என்று பலரும் வக்காலத்து வாங்கியிருப் பார்கள். நீட்தேர்வுத் தாளுக்கான தமிழ் மொழிபெயர்ப்பில் செய்த குளறுபடிகள் காரணமாக ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையோடு கடந்த முறை விளையாடியது மத்திய அரசு. கண்ணுக்குத் தெரிந்து நடந்த அந்தக் கொடுமைக்கு நீதிமன்றமும் பரிகாரம் செய்யவில்லை என்பதை இந்த நேரத்தில் நினைக்காமல் இருக்கமுடியவில்லை.
News2.in
News2.in

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment