Wednesday, May 08, 2019

தேர்தல் முடிவுக்குப் பிறகு... பவர் காட்டப் போகும் பவார்!

‘‘குஜராத் முதல்வராகப் பதவியேற்ற ஆரம்ப நாட்களில் என் கைப்பிடித்து வழிநடத்திக் கற்றுத் தந்தவர் சரத் பவார்’’ என்று ஒருமுறை புகழ்ந்தார் பிரதமர் நரேந்திர மோடி. ஆனால், இந்தத் தேர்தல் நேரத்தில் நிலைமை வேறு. சரத் பவாரின் சொந்த மண், மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதி. கடந்த 52 ஆண்டுகளாக இங்கு பவார் குடும்பத்தில் யாரோ ஒருவர்தான் ஜெயிக்கிறார்கள். எந்த அலை யிலும் இந்த நிலைமை மாறியதில்லை. இப்போது பவாரின் மகள் சுப்ரியா சுலே இங்கு களத்தில் இருக் கிறார். அவர்தான் இப்போதும் இந்தத் தொகுதியின் எம்.பி. ‘‘இந்த முறை எப்படியாவது இந்தத் தொகுதியை பவார் குடும்பத்திடமிருந்து கைப்பற்ற வேண்டும்’’ என மகாராஷ்டிரா பி.ஜே.பி தலைவர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறார் மோடி.

சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸுக்கு மகாராஷ்டிராவைத் தாண்டி வெளியில் பெரிய செல்வாக்கு இல்லை. காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருக்கும் அவரின் கட்சி, அங்கிருக்கும் 48 தொகுதிகளில், 19 தொகுதி களில்தான் போட்டியிடுகிறது. கிட்டத்தட்ட ஒரு மாநிலக் கட்சியின் தலைவர் போல கருதி அலட்சியம் செய்ய வேண்டிய அவரை மோடி இவ்வளவு தூரம் குறிவைக்கக் காரணம் என்ன? அங்குதான் இருக்கிறது பவாரின் பவர். ‘தேர்தல் முடிவுக்குப் பிறகு அவர் காட்டப் போகும் பவரில், பி.ஜே.பி மீண்டும் ஆட்சி அமைக்க முடியாமல் போகக்கூடும்’ என்ற அச்சம்தான் காரணம்.
பொதுவாக அரசியல் தலைவர்களுக்குக் கண்ணுக்குத் தெரியாத எதிரிகளே எங்கும் நிறைந்திருப்பார்கள். ஆனால், பவாருக்கு கண்ணுக்குத் தெரியாத நண்பர்கள் எல்லா கட்சிகளிலும் இருக்கிறார்கள்.  

‘‘மே 23-ம் தேதி தேர்தல் முடிவு வெளியான உடனோ, அல்லது அதன்பின் ஒரு மாதத்துக்குள்ளோ மாற்று அரசு மத்தியில் அமையும்’’ என்று இப்போது, சொல்லி, பரபரப்புகளுக்குத் தீனி போட்டிருக்கிறார் பவார். ‘பி.ஜே.பி தனியாக 175 தொகுதிகளுக்கு மேல் ஜெயிக்க முடியாமல் போனாலோ, காங்கிரஸ் தனியாக 150 எம்.பி-க்களுக்கு மேல் பெற முடியாமல் போனாலோ, மூன்றாவது அணி ஆட்சியில் அமரும்’ என்பது பவாரின் கணக்கு. ‘தனிப்பெரும்பான்மை உள்ள கட்சி என்ற முறையில் பி.ஜே.பி-க்கு ஆட்சி அமைக்கும் உரிமையை ஜனாதிபதி வழங்குவார். அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியா மல் போகும். அதன்பின் மூன்றாவது அணியின் பிரதமர் பதவியில் அமர்வார். இந்த நடைமுறைகள் முடிய ஒரு மாத காலம் பிடிக்கலாம்’ என தன் நண்பர்களிடம் சொல்கிறார் பவார். ‘‘இப்போது பி.ஜே.பி கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளும்கூட அப்போது எங்கள் பக்கம் வரும்’’ என பவார் சொல்லியிருப்பதுதான் பி.ஜே.பி தலைவர்களை திகிலடைய வைத்திருக்கிறது. 

‘எதிர்க் கட்சிகளின் கூட்டணி’ என இப்போது பலரும் பேசிவரும் விஷயத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் சரத் பவார். 2018 ஜனவரி 26 அன்று ‘அரசியல் சட்டத்தைக் காப்போம்’ என்று மெகா பேரணி ஒன்றை அவர் மும்பையில் நடத்தினார். பி.ஜே.பி-க்கு எதிராகப் பேசினாலும், தங்களுக்குள் முரண்பட்டிருந்த பல கட்சித் தலைவர்களை ஒரே மேடையில் ஏற்றி ஆச்சர்யப் படுத்திக்காட்டினார் அவர். மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்ட்களுக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கும் ஏழாம் பொருத்தம். இருந்தாலும் இரண்டு கட்சிகளும் ஒரே மேடையில் பவாருடன் நின்றன. இந்த மேடையில், பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாடி கட்சியும் ஒன்றாக நின்றன. பிறகு அவர்கள் உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி அமைத்தார்கள். காங்கிரஸ் கட்சியும் தேவ கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இங்கு இணைந்து நின்று, பிறகு கூட்டணியிலும் இணைந்தன. இப்போது பி.ஜே.பி-க்கு சவாலாக இருக்கும் பல கூட்டணிகளை இப்படி உருவாக்கியதில் மறைமுகமாக பவாருக்கு பங்கு உண்டு.
இப்போது பவார் சுட்டிக் காட்டும் பிரதமர் வேட்பாளர்களில் ராகுல் காந்தி பெயர் இல்லை. ‘‘சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி, மாயாவதி ஆகிய மூன்று பேரும் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர்கள்’’ என்கிறார் பவார். ‘தனக்கு பிரதமர் பதவிமீது ஆசையில்லை’ என்றும் சொல்கிறார். மேலும், ‘‘வெறும் 19 தொகுதிகளில் போட்டியிடும் ஒரு கட்சியின் தலைவருக்கு அப்படிப்பட்ட எதிர்பார்ப்பு இருக்க முடியுமா?’’ என்றும் கேட்கிறார். 

ஆனால், நிஜம் அதுவல்ல! ‘மூன்றாவது அணியின் ஆட்சிக்கு காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு அளிக்கும் சூழல் ஏற்பட்டால், இந்த மூன்று பேரையும் காங்கிரஸ் ஆதரிக்காது. சந்திரபாபு நாயுடு சந்திக்கும் தோல்வியே அவரை வீழ்த்திவிடும். மம்தா என்றாலே ராகுல் காந்திக்கு அலர்ஜி. பல மாநிலங்களிலும் காலூன்றி காங்கிர ஸுக்குச் சவாலாக உருவெடுக்கும் மாயாவதியை வளர்த்துவிடும் வேலையையும் காங்கிரஸ் செய்யாது. கம்யூனிஸ்ட்கள் உள்ளிட்ட எல்லோரின் ஆதரவையும் பெற்ற தலைவராக தானே உருவெடுப்போம்’ என பவார் எதிர்பார்க்கிறார். ‘மகாராஷ்டிரா மண்ணின் மைந்தர்’ என்ற முறையில் சிவசேனாவும் தன்னை ஆதரிக்கும். இப்போது பி.ஜே.பி கூட்டணியில் இருக்கும் ராம்விலாஸ் பஸ்வான், பிரகாஷ் சிங் பாதல் போன்றவர்களையும் தன்னால் வளைக்க முடியும் என நம்புகிறார் பவார். 

மே 23-ம் தேதிக்குப் பிறகு சரத் பவாரின் ஆட்டம் டெல்லியில் ஆரம்பமாகும்!
-  தி.முருகன்
News2.in
News2.in

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment