Wednesday, May 08, 2019

சிறுமியைச் சீரழித்த காமுகர்கள்... அடைக்கலம் கொடுக்கிறதா அ.தி.மு.க?

மீப காலங்களாகவே தமிழகத்தின் பல பகுதிகளில், காவல்துறையாலும் அதிகாரம் படைத்தவர்களாலும் அமுக்கி வைக்கப்பட்ட பல பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் வெளிவந்த வண்ணமாக இருக்கின்றன. அந்தப் பட்டியலில் சமீபத்தில் இணைந்திருக்கிறது, கன்னியாகுமரி மாவட்டத்தில் அரங்கேறிய ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம்.

கன்னியாகுமரி மாவட்டம், குலசேகரம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, ஆத்மிகா (பெயர் மாற்றப் பட்டுள்ளது). இவர், கடையாலுமூடு பகுதியில் ஒரு மொபைல் கடையில் வேலைசெய்து வந்திருக்கிறார். கடையாலுமூடு பகுதியைச் சேர்ந்த சுனில்குமார், ஆத்மிகா வேலை செய்து வந்த கடைக்கு ரீசார்ஜ் செய்வதற்காக அடிக்கடி வந்திருக்கிறார். அப்படி வரும்போது, கடையில் தனிமையில் இருந்த ஆத்மிகாவுக்கு காதல் வலை வீசியிருக்கிறார், சுனில்குமார். சுனில்குமாரின் ஆசை வார்த்தைகளில் மயங்கிய ஆத்மிகா, ஒரு கட்டத்தில் சுனில்குமாரைக் காதலிக்கத் தொடங்கியிருக்கிறார். தொடர்ந்து, ‘திருமணம் செய்துகொள்ளலாம்’ என்று ஆத்மிகாவை அழைத்துச் சென்ற சுனில்குமார், தனது நண்பருடன் சேர்ந்து ஆத்மிகாவைச் சீரழித்திருக்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆத்மிகாவின் உறவினர், “கடந்த ஏப்ரல் மாதம் 1-ம் தேதி, குலசேகரத்தில் உள்ள சுஜின்ராஜ் என்பவனது வீட்டுக்கு ஆத்மிகாவை அழைத்துச் சென்றிருக்கிறான் சுனில்குமார். அங்கு வைத்து ஆத்மிகாவை சூறையாடிய சுனில்குமார், சுஜின்ராஜுக்கும் ஆத்மிகாவை இரையாக்கி இருக்கிறான்.
இதற்கிடையில், நாங்கள் ‘ஆத்மிகாவைக் காணவில்லை’ என்று மார்த்தாண்டம் மகளிர் காவல் நிலையத் தில் புகார் கொடுத்தோம். காவல்துறை தேடுவது தெரிந்ததும் சுனில்குமாரும், சுஜின்ராஜும் அவர்களின் தோழி அகிலா ராணியிடம், ஆத்மிகாவை ஒப்படைத்துவிட்டுச் சென்றுவிட்டனர். அகிலா ராணி, எங்களுக்கு போன் செய்து, ‘பெற்றோரிடம் சண்டை போட்டுவிட்டு வந்த ஆத்மிகா எனது வீட்டில்தான் இருக்கிறாள்’ என்று சொன்னார். நாங்கள் காவல்துறைக்குத் தகவல் சொன்னவுடன் ஆத்மிகாவை காவல்துறையினர் மீட்டு வந்தனர். ஆத்மிகாவை விசாரித்தபோது நடந்த உண்மைகளைத் தெரிந்துகொண்ட காவல்துறையினர், காணாமல் போனதாகப் பதிவு செய்த வழக்கை, பாலியல் வன்கொடுமை வழக்காக மாற்றினர். தொடர்ந்து குழித்துறை நீதிமன்ற நீதிபதியிடம் ஆத்மிகா வாக்குமூலம் அளித்திருக்கிறாள். ஆனால், சுனில்குமாரை மட்டும் கைது செய்த காவல்துறை, அவனது கூட்டாளி யான சுஜின்ராஜை இதுவரைக் கைது செய்யவில்லை” என்றார்.

இவ்விவகாரத்தில் காவல்துறை சரியான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று, தக்கலையில் போராட்டம் நடத்த முயன்றனர், தி.மு.க மகளிர் அணியினர். ஆனால், தேர்தல் நடத்தை விதிகளைக் காரணம் காட்டி, போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது. எனவே தேர்தல் முடிந்த பிறகு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர், தி.மு.க மகளிர் அணியினர்.
இதுகுறித்துப் பேசிய கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் டாக்டர் கிளாடிஸ் லில்லி, “சுனில்குமார் போலப் பல இளைஞர்கள், சுஜின்ராஜுடன் தொடர்பில் இருக்கிறார்கள். இவர்கள் இதுபோலப் பல பெண்களை ஏமாற்றி அழைத்துச் சென்று சுஜின்ராஜின் வீட்டில் வைத்துச் சூறையாடி இருக்கிறார்கள். சுனில்குமார், சுஜின்ராஜ் இருவருக்குமே ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டது. இருவருமே மனைவியைப் பிரிந்து வாழ்வதாகச் சொல்லப்படுகிறது. சினிமாத் துறையில் இருக்கும் சுஜின்ராஜ்தான் இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளி. சுனில்குமார் வெறும் அம்புதான். ஆனால், சுஜின்ராஜை தப்பிக்க வைத்துவிட்டு சுனில்குமாரை மட்டும் கைது செய்திருக்கிறார்கள். அதற்குக் காரணம் சுஜின்ராஜ் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர் என்பதுதான். 

துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய் சுந்தரம் ஆகியோருடன் சுஜின்ராஜ் இருக்கும் புகைப்படங்கள் எங்களுக்குக் கிடைத்துள்ளன. சுஜின்ராஜுக்கு அரசியல் தொடர்பு இருப்பதால், அவனைக் கைதுசெய்யாமல் இருக்கிறார்கள். காதல் என்ற போர்வையில் ஏமாந்து வரும் பெண்களைச் சில முக்கிய நபர்களுக்கும் சப்ளை செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. சுஜின்ராஜைப் பிடித்து விசாரித்தால், பொள்ளாச்சி சம்பவத்தை விஞ்சும் அளவுக்குப் பாலியல் குற்றங்கள் வெளிச்சத்துக்கு வரும். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, இச்சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி பெரிய அளவில் போராட்டம் நடத்த இருக்கிறோம்” என்றார்.
அ.தி.மு.க தரப்பில் விசாரித்தபோது, “சுஜின்ராஜ் கட்சியில் முக்கியப்புள்ளி எல்லாம் கிடையாது. பெரிய அளவில் அவருக்குப் பதவியும் கொடுக்கப்படவில்லை. புதிதாகக் கட்சிக்கு வந்தவர் அவர்” என்கிறார்கள்.

குழித்துறை அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் பார்வதியிடம் பேசியபோது, “சுஜின்ராஜின் மொபைல் போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. அவன், சென்னையில் சினிமா ஃபீல்டில் இருப்பதாகச் சொல்கிறார்கள். அவன்மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளோம். அவனைத் தேடிக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

அ.தி.மு.க அரசு, உடனடியாக நடவடிக்கை எடுத்துக் களங்கத்தைப் போக்கிக்கொள்ள வேண்டியது அவசியம்.

-ஆர்.சிந்து,  
படம்: ரா.ராம்குமார்
News2.in
News2.in

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment