Wednesday, May 08, 2019

கைமாறிய கரன்சிகள்... வளைக்கப்பட்ட சாட்சிகள்... நீர்த்துப்போன சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கு!

புதுச்சேரியில்  காவல் துறையினருடன் கைகோத்து, ஒரு கும்பல் சிறுமிகளைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் ஐந்து ஆண்டுகளுக்கு முன் பெரும் புயலைக் கிளப்பியது. இத்தனை ஆண்டுகளாக நடந்துவந்த அந்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 18 நபர்களையும் விடுதலை செய்திருக்கிறது புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றம். இதையடுத்து, ‘இந்த வழக்கில் அரசுத் தரப்பு நியாயமாகச் செயல்படவில்லை’ என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்களிடம் பேசினோம். ‘‘கடந்த 2014-ம் ஆண்டு புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தில் ஒரு வீட்டில் சிறுமிகளை அடைத்துவைத்து விபசாரத்தில் ஈடுபடுத்துவதாக, குழந்தைகள் நலப் பாதுகாப்பு அமைப்பு காவல் துறையில் புகார் அளித்தது. அதைத் தொடர்ந்து, நான்கு சிறுமிகளையும் மீட்ட காவல்துறை, புரோக்கர்களான புஷ்பா, அருள்மேரி, ரகுமான்கான் ஆகியோரையும் விபசாரத்தில் ஈடுபட்ட ஜெயப்பிரகாஷ், விமல்ராஜ், மாணிக்கம், தமிழ்செல்வன், சரவணன், ரவி ஆகியோரையும் கைதுசெய்தது. தொடர் விசாரணையில், அந்தச் சிறுமிகளை காவல் துறையினர் சிலரும் பாலியல் வன்கொடுமை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர்கள் சுந்தர், யுவராஜ், எஸ்.ஐ-க்கள் அனுசு பாட்ஷா, பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர்கள் குமரவேல், பண்டரிநாதன், காவலர்கள் செல்வகுமார், சங்கர், ஓய்வுபெற்ற எஸ்.ஐ ராஜாராம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் நடத்தப்பட்ட அடையாள அணிவகுப்பில், காவல் துறையைச் சேர்ந்த ஒன்பது பேரை சிறுமிகள் அடையாளம் காட்டினர். தொடர்ந்து அந்த ஒன்பது பேரும் தலைமறைவாகினர். உடனே அவர்களைப் பணிநீக்கம் செய்து, தேடப்படும் குற்றவாளிகளாக அறிவித்தது புதுச்சேரி காவல்துறை.

தலைமறைவானவர்கள், முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியபோது, ‘மனுதாரர்கள் மனிதாபிமான மற்ற, ஈவு இரக்கமற்ற கொடூரச் செயல்களில் ஈடுபட்டிருக் கிறார்கள். இவர்கள் குற்றவியல் சட்டத்தில் மட்டுமல்ல... குற்றவாளிகளுடனும் அதிக அனுபவங்களைக் கொண்டவர்கள். வழக்கிலிருந்து தப்பிப்பதற்கான அனைத்து வழிமுறைகளும் தெரிந்தவர்கள் என்பதால் வழக்கு விசாரணையில் குறுக்கீடு செய்யக்கூடும்’ என்று சொல்லி ஜாமீன் மனுவை நிராகரித்தார், அன்றைய நீதிபதியான பி.தேவதாஸ். அதன் பிறகும் அனைவருக்கும் ஜாமீன் கிடைத்தது வேறு கதை. தற்போது உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்ததுபோலவே நடந்துவிட்டது. இந்த வழக்கில், ‘போதுமான ஆதாரம் இல்லை’ என்று சொல்லி சம்பந்தப்பட்ட 18 பேரையும் விடுதலை செய்திருக்கிறது புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றம்.
பாதிக்கப்பட்ட சிறுமிகள் ஆரம்பத்தில் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படை யில்தான் மேற்கண்ட 18 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால், சாட்சிகளை வளைத்து இந்த வழக்கை நீர்த்துப் போகச் செய்வதற்காக லட்சக்கணக் கான பணம் கைமாறி இருக்கிறது. பணம் வாங்க மறுத்தவர்களை மிரட்டிப் பணிய வைத்துள்ளனர். தவிர, திட்டமிட்டே இந்த வழக்கை இத்தனை ஆண்டுகளாக இழுத்தடித்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமிகள், தற்போது திருமண வயதை எட்டிவிட்டனர். சிலருக்குத் திருமணம் ஆகிவிட்டது. அதனால்தான், அந்தப் பெண்களால் தற்போது நீதிமன்றத்தில் முழு உண்மையையும் கூற முடியவில்லை” என்று ஆதங்கப்பட்டனர்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் ஆனந்த், “தகுந்த ஆதாரங்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல், திட்டமிட்டே குற்றவாளிகள் தப்பிக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். புதுச்சேரி மாநிலத்தில் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற உண்மையைத்தான் இந்தத் தீர்ப்பு வெளிப்படுத்தியிருக்கிறது. இந்த வழக்கில், அரசு உடனே மேல் முறையீடு செய்யவேண்டும்” என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராஜாங்கம், “இந்தத் தீர்ப்பு பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர்கள் தங்கள் வாதத்தை முறையாக எடுத்து வைக்கவில்லை. புதுச்சேரி அரசும், அரசு தரப்பு வழக்கறிஞர்களும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்கள்” என்றார்.
சி.பி.சி.ஐ.டி எஸ்.பி செல்வத்திடம் இதுகுறித்துக் கேட்டோம். “வழக்கு தாமதமாக நாங்கள் காரணம் இல்லை. வழக்குப்பதிவு செய்த மூன்று மாதங்களுக்குள் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துவிட்டோம். பணம் கைமாறியதாகக் கூறுவது பொய்யான குற்றச்சாட்டு. தீர்ப்பு நகல் இன்னும் வரவில்லை. வந்தவுடன் மேல்முறையீடு செய்வது குறித்து முடிவுசெய்வோம்” என்றார்.

நீதிமன்றத்தில் வழக்கை நடத்தும்போது சரியான சட்ட வழிமுறைகளை அரசு தரப்பு கையாளவில்லை; திட்டமிட்டே குற்றவாளிகள் தப்பவைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதே புதுச்சேரி மக்களின் குற்றச்சாட் டாக இருக்கிறது. அரசு கடமை தவறலாமா?

- ஜெ.முருகன்
படங்கள்: அ.குரூஸ்தனம்
News2.in
News2.in

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment