Tuesday, May 07, 2019

கழுகார் பதில்கள்!

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை, சேலம்.
‘இவ்வளவு திறமை’யான தினகரனை, ஜெயலலிதா ஏன் ஓரம் கட்டிவைத்தார்?
‘இவன்,  நம்மையே  தூக்கிச் சாப்பிட்டுவிடுவான் போலிருக்கிறதே’ என்றுபயந்திருப்பாரோ!
@கே.கனகராஜ், தேனி.
துளிர்க்குமா, மலருமா, பழுக்குமா, ஒலிக்குமா?


உதிக்குமா, ஓங்குமா, அடிக்குமா, அறுக்குமா, பொங்குமா, திறக்குமா, ஒளிருமா, இனிக்குமா! (நாங்கனாப்ல யாரு?!) 

இ.முத்துக்குமார், கிருஷ்ணாபுரம்.
அடிமைகளுக்குச் சுயமரியாதை உணர்வு இருக்குமா?


‘அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம்’ என்று உணர்பவர்களுக்கு அந்த உணர்வு நிச்சயமாக இருக்கும்.தாங்களாகவே அடிமையாகிக் கிடப்பவர்களுக்கு வாய்ப்பே இல்லை.

சே.செல்லத்துரை, இளங்காரங்குடி.
நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு குறைந்துவருவதற்குக் காரணம், அரசியல்வாதிகளின் மீதான வெறுப்பா?


நீங்கள் தமிழகத்தைவைத்துச் சொல்கிறீர்கள். ஆனால், கடந்த 2014 தேர்தலைவிட ஒரு சதவிகிதம்தான் குறைந்துள்ளது. இதை வைத்து வாக்குப்பதிவு குறைந்துவிட்டது என்கிற முடிவுக்கு வந்துவிட முடியாது. இந்தியா முழுக்க பார்க்கும்போதும் கிட்டத்தட்ட இதேநிலைதான். சொல்லப்போனால், தற்போது நடந்து முடிந்திருக்கும் 4-ம் கட்டத் தேர்தலில் ஒரு சதவிகிதத்துக்கும் மேல் வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. அதற்காக அரசியல்வாதிகளின் மீது வெறுப்பு இல்லை என்று சொல்லிவிட முடியாது. மக்கள் உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார்கள்தான். என்றாலும், ‘ஜனநாயகக் கடமையை ஆற்றியே தீரவேண்டும்’ என்கிற உணர்வு மேலோங்கியிருப்பதால், அந்த வெறுப்பு உணர்வு சற்று கீழடங்கியே இருக்கிறது.

@சேகர், ஈரோடு.
கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன், தற்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்?


அவர் உதவியாளருக்கும் மேலே. கிட்டத்தட்ட 49 ஆண்டுகளாகக் கருணாநிதியுடன் பயணித்த நிழல். அவ்வப்போது, கோபாலபுரம் வீட்டுக்குச் சென்று கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளைப் பார்த்துச் செல்கிறார். மற்றபடி முழுக்க ஓய்வுதான்.
டி.கே.மோகன், ஆதம்பாக்கம்.
இனி, தி.மு.க-வில் செயல் தலைவர், இளைஞர் அணி மாநிலச் செயலாளர் பதவிகள் யார் யாருக்கு அமையும்?


இப்போதைக்குச் செயல்படும் தலைவர் இருப்பதால், செயல் தலைவர் பதவி காலியில்லை. ஆனால், ‘ஆருயிர் அண்ணன்’, ‘கன்னக்குழி மன்னன்’, ‘புதிய தளபதி’ உதயநிதி ஸ்டாலினுக்கு ஆரத்தி எடுக்கக் காத்திருக்கிறது இளைஞர் அணி மாநிலச் செயலாளர் பதவி. 

கி.தா.துரைசாமி, மேட்டுப்பாளையம்.
நாடாளுமன்றத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் ‘தெலுங்கு தேசம்’, தெலங்கானா மாநிலத்தில் போட்டியிடவில்லையாமே? 


சீச்சீ... அந்தப் பழம் புளிக்கும்.

சீர்காழி சாமா, ஸ்ரீரங்கம்.
கழுகார் ஓட்டு யாருக்கு?

நோட்டுக்குப் போடவில்லை.

டி.சி. இமானுவேல், மயிலாடுதுறை.
நெடுஞ்சாலைகளை ஆக்கிரமித்திருக்கும் கொடிக் கம்பங்களை அகற்றுவதுபோல், தலைவர்களின் சிலைகளையும் அகற்றினால் அசம்பாவிதங்களைத் தடுக்கலாம்தானே?


சிலைகளை மட்டுமல்ல, சாலைகளை ஆக்கிரமித்திருக்கும் அனைத்து மத வழிபாட்டுத்தலங்கள், அரசியல் கட்சிகளின் படிப்பகங்கள், நினைவகங்கள் உள்ளிட்ட அனைத்தையுமே அகற்றவேண்டும். சென்னை உயர் நீதிமன்றம் இதைப் பற்றி உத்தரவிட்டு பல ஆண்டுகளாகின்றன. நிறைவேற்றத்தான் ஆளில்லை. நீதிமன்றம் கூறிவிட்டதே என்பதற்காகக் கடமையே என பொக்லைன் இயந்திரத்தோடு போலீஸாரும் வருவாய்த் துறையினரும் செல்கிறார்கள். சொல்லிவைத்தாற் போல அரசியல்வாதிகள், ஆன்மிக அன்பர்கள், மதவாதிகள் என்கிற போர்வையில் கூட்டமாக மறிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். உடனே இதைப் பற்றி ஒரு குறிப்பை எழுதி கோப்புகளை மூடிவைத்துவிடுகின்றனர். ‘ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் வேலை நீக்கம்’ என்று சட்டம்போட்டால், சரசரவென காரியம் நடக்கும்.

கே.ராஜூ, சேங்காலிபுரம், திருவாரூர்.
நாஞ்சில் சம்பத், ‘கனவிலும் அ.தி.மு.க, ம.தி.மு.க-வில் சேரமாட்டேன்’ என்று  கூறியுள்ளாரே?


பாவம்... மிகவும் கஷ்டப்படுகிறார். அவரைப் போய் ஏன் திரும்பத் திரும்பத் தொந்தரவு செய்துகொண்டிருக்கிறீர்கள்?

எம். செல்வராஜ், போரூர், சென்னை-116.
நாங்குநேரி எம்.எல்.ஏ-வாக இருந்துகொண்டே, கன்னியாகுமரி எம்.பி தொகுதிக்கும் போட்டியிடுகிறார் காங்கிரஸின் ஹெச்.வசந்தகுமார். எம்.பி-யாகிவிட்டால், காலியாகும் எம்.எல்.ஏ தொகுதிக்கான இடைத்தேர்தல் செலவுத் தொகையை அவரிடமிருந்து வசூலிக்கலாம்தானே?


அரசியல்வாதிகள் எப்போதுமே தங்களின் வசதிக்கு ஏற்பத்தான் சட்டங்களையும், விதிகளையும் உருவாக்குவார்கள். அந்த வகையில், ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் போட்டியிடுவது, ஏற்கெனவே எம்.எல்.ஏ-வாக இருக்கும்போது எம்.பி தொகுதிக்குப் போட்டியிடுவது என்று அவர்களுக்கு எது வசதியாக இருக்கிறதோ அதை எல்லாம் தடுக்க முடியாத அளவுக்குத்தான் விதிகளை உருவாக்கியும் வைத்துள்ளனர்.

கார்த்தி மொழி,  தஞ்சாவூர்.
பி.ஜே.பி-யின் பிதாமகர்களில் ஒருவரான எல்.கே.அத்வானிக்குத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லையே?


‘கட்சியைவிட நாடு முக்கியம்’ என்று அத்வானியே சொல்லிவிட்டாரே!
@ நவீன் வாசுதேவன், காடுகுடி, பெங்களூரு.
‘எக்ஸ்பிரஸ்ஸோ’ காபி குடித்து மகிழ்ந்ததுண்டா?


எந்த எக்ஸ்ப்ரஷனும் வருவதில்லை. சுடச்சுட கறந்தபாலில் சுடச்சுடப் போடப்படும் ஃபில்டர் காபிக்கு இணையாகுமா?

எஸ்.கே.வர்மன், வாணியம்பாடி.
ஒரு வழியாக மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் விரட்டப்பட்டுள்ளாரே?


இடம்தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உண்மையில், தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். யாருக்காகவோ இந்தத் தகிடுதத்த வேலை நடந்துள்ளது. பாவம், தாசில்தாரும் சில ஊழியர்களும் பலி ஆடுகள் ஆகிவிட்டனர். இதிலும்கூட உயர் நீதிமன்றம் தலையிட்ட பிறகுதான், மாவட்ட ஆட்சித் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு, ‘ஆளுங்கட்சியின் தலைமைச் செயல் அலுவலர் (சி.இ.ஓ)’ போலத்தான் செயல்படுகிறார் என்பது இதன் மூலமும் தெள்ளத் தெளிவாகியிருக்கிறது. எதிர்க் கட்சிகள் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கேட்டால் அதிகாரம் இல்லை என்று சொல்லியே மழுப்பினார். ‘அதிகாரம் இல்லாமல் நீங்கள் நடத்திய தேர்தல் எந்த லட்சணத்தில் இருக்குமோ’ என்று ஆணையத்துக்கு எதிராகக் கொதித்தெழுந்த நீதிமன்றத்தின் உத்தரவுதான்... ‘நடராஜா... நீ நட ராஜா’ என்று மாவட்ட ஆட்சியரை விரட்டியடித்துள்ளது.

@சுந்தரவடிவேலு, மஸ்கட்.
கமல் - டிடிவி தினகரன் இருவரும், எதிர்கால எம்.ஜி.ஆர் - கருணாநிதி என்கிறேன். கழுகாரின் கருத்து என்னவோ?


எம்.ஜி.ஆர் - கருணாநிதி ‘படா மாஸ்’. கமல் - டி.டி.வி ‘பொடி மாஸ்’.

@ இந்து குமரப்பன், விழுப்புரம். 
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எந்தெந்தக் கட்சித் தலைவர்கள் நிம்மதியாகத் தூங்குவார்கள்?
எல்லோருமேதான். தொண்டர்கள்தான் மல்லுக்கட்டிக் கொண்டு நிற்பார்கள். தலைவர்கள் வழக்கம்போல ‘உள் கூட்டணி’ போட்டு விடுவார்கள். அவர்களுக்கு ‘வரவேண்டியது’ தானாக வந்துகொண்டே இருக்கும்.

கேள்விகள் அனுப்ப  வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 
757, அண்ணா சாலை, சென்னை- 600002
kalugu@vikatan.com என்ற இமெயிலுக்கும் அனுப்பலாம்!
News2.in
News2.in

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment