Wednesday, May 08, 2019

அ.தி.மு.க வேட்பாளருக்கு இரண்டு இடங்களில் ஓட்டு!

“கிரிக்கெட் வீரரும் கிழக்கு டெல்லியின் பி.ஜே.பி வேட்பாளருமான கவுதம் கம்பீர், இரண்டு வாக்காளர் அட்டை வைத்திருக்கிறார். ஆகவே, அவரைத் தகுதிநீக்கம் செய்யவேண்டும்” என்று அவரை எதிர்த்துப் போட்டியிடும் ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி, சமீபத்தில் குற்றம்சாட்டியிருந்தார். இதேபோன்ற குற்றச்சாட்டுதான், தமிழகத்தின் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும் எழுந்துள்ளது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனுக்கள் பரிசீலனை யின்போது, “அ.தி.மு.க வேட்பாளர் முனியாண்டிக்கு இரண்டு இடங்களில் வாக்குரிமை உள்ளது. அதை மறைத்து வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். இது விதிமீறல் என்பதால், அவருடைய மனுவை ஏற்கக் கூடாது” என்று திருப்பரங்குன்றம் தேர்தல் அதிகாரி பஞ்சவர்ணத்திடம் தி.மு.க., அ.ம.மு.க மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். அதற்கான ஆதாரத்தையும் தேர்தல் அதிகாரியிடம் காட்டினார்கள். ஆனாலும், தேர்தல் அதிகாரியால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை.
‘ஆளும்கட்சி வேட்பாளரின் மனுவை எப்படித் தள்ளுபடிசெய்வது...’ என்ற குழப்பத்தில் இருந்த அவரிடம், அ.தி.மு.க நிர்வாகிகள், “முனியாண்டிக்கு ஓர் இடத்தில்தான் வாக்குரிமை உள்ளது. மற்றோர் இடத்தில் இருந்த வாக்குரிமையை நீக்கச்சொல்லி ஏற்கெனவே மனுகொடுத்துள்ளார். அதனால், மனுவை ஏற்றுக்கொள்ளுங்கள். வழக்கு வந்தால் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்’’ என்று நெருக்கினர். ஒரு மணிநேர வாக்குவாதத்துக்குப் பிறகு, முனியாண்டியின் வேட்பு மனுவை ஏற்றுக்கொண்டதாகத் தேர்தல் அதிகாரி பஞ்சவர்ணம் அறிவித்தார்.

இதுகுறித்து தி.மு.க வேட்பாளர் சரவணன் நம்மிடம், “அ.தி.மு.க வேட்பாளர் முனியாண்டிக்கு, திருப்பரங்குன்றம் தொகுதிக்குள் அவனியாபுரம், பெருங்குடி ஆகிய இரண்டு இடங்களில் வாக்குரிமை இருப்பதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டினோம். ஆனால், தேர்தல் அதிகாரி கண்டுகொள்ளவில்லை. அவர், மற்றொரு வாக்குரிமையை நீக்க மனு கொடுத்திருப்பதாகக் கூறுவதும் பொய். அதற்கான எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை. இப்படிப்பட்ட நிலையில், அவருடைய மனுவை ஏற்றிருக்கக் கூடாது. அ.தி.மு.க நிர்வாகிகள் தேர்தல் அதிகாரியை மிரட்டி மனுவை ஏற்கவைத்துள்ளனர். கடந்த தேர்தலில், மறைந்த எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் விண்ணப்பத்திலும் இப்படியான நிகழ்வுதான் நடைபெற்றது. அவருடைய விண்ணப்பத்தில் வைக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகையில் சந்தேகம் இருப்பதைச் சுட்டிக்காட்டினோம். அப்போதும், அதிகாரிகள் இப்படித்தான் அலட்சியமாக நடந்துகொண்டார்கள். பின்பு, அது தொடர்பான வழக்கில், ‘ஏ.கே.போஸ் தேர்தலில் வெற்றிபெற்றது செல்லாது’ என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையெல்லாம் மறந்துவிட்டு மீண்டும் மீண்டும் தேர்தல் அதிகாரிகள், ஆளும்கட்சிக்கு ஆதரவாக அதே விதிமீறலைத்தான் செய்கிறார்கள். இதையும் சட்டப்படி அணுகுவோம்’’ என்றார் தெளிவாக.
அ.தி.மு.க நிர்வாகிகள் பேசுகையில், “மற்றோர் இடத்தில் முனியாண்டிக்கே தெரியாமல் இருந்த வாக்காளர் உரிமையை, அவர் ஏற்கெனவே நீக்கச் சொல்லிவிட்டார். அதை அதிகாரிகள் நீக்கவில்லை என்றால், அதற்கு அவர் எப்படிப் பொறுப்பாக முடியும்? தேவை இல்லாமல் இதைவைத்து அரசியல் செய்கிறார்கள். இது திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. இரண்டு வாக்குரிமை என்பது உண்மை அல்ல” என்றனர்.

முனியாண்டிக்கு இரண்டு இடங்களிலும் வாக்கு இருப்பதை, ஆதாரத்துடன் நிரூபிக்கின்றனர், தி.மு.க-வினர். அது மட்டுமல்லாமல், அவர் மாநகராட்சி கவுன்சிலருக்குப் போட்டியிட்டபோது அவனியாபுரம் வாக்குரிமையையும், ஒன்றியக் கவுன்சிலருக்குப் போட்டியிட்டபோது பெருங்குடி வாக்குரிமையையும் பயன்படுத்தியுள்ளார் என்றும் சொல்கின்றனர். இந்த நிலையில், அவருடைய வேட்புமனுவை எந்த ஆய்வுக்கும் உட்படுத்தாமல் ஏற்றுக்கொண்டிருப்பது, தேர்தல் ஆணையத்தின்மீது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
திருப்பரங்குன்றம் தேர்தல் அதிகாரி பஞ்சவர்ணத்தின் முன் இந்தப் பிரச்னை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த தேர்தல் பார்வையாளர் ஓம்பிரகாஷ் ராயிடமும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் இதுகுறித்து முறையிட் டுள்ளார்கள். அவரும், இதுபற்றி விசாரிப்பதாகக் கூறிவிட்டுச் சென்றார். ஆனால், எந்தக் கருத்தும் அவர்கள் இருவரும் தெரிவிக்காத நிலையில், பஞ்சவர்ணத்தை நாம் தொடர்புகொண்டோம். அவர், நமது அழைப்பை ஏற்கவில்லை. இதுதொடர் பாக முனியாண்டியிடமும் பேசினோம். “என் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. எனவே, இதைப் பற்றி பேச விரும்பவில்லை” என்றார். 

இதற்கிடையே, ‘முனியாண்டியின் வேட்பு மனுவை நிராகரித்து, அவரைத் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து தகுதிநீக்கம் செய்ய வேண்டும்’ என்று தமிழகத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் புகார் மனு அளிக்கப் பட்டுள்ளது. இந்த விவகாரமும் உயர் நீதிமன்றம் செல்லுமா என்பது விரைவில் தெரியும்.  

- செ.சல்மான்
படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார், வீ.சதீஷ்குமார்
News2.in
News2.in

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a Comment