Wednesday, May 08, 2019

கோயில் குளங்கள் மாயம்... மழைக்காக நடக்குது யாகம்!

‘தமிழக அறநிலையத்துறைக்குட்பட்ட கோயில்களில் மழை வேண்டி பர்ஜன்ய சாந்தி வருணஜபம் செய்யவேண்டும்; நந்தி பெருமானுக்கு நீர்த்தொட்டி கட்டி நந்தியின் கழுத்துவரை நீர் நிரப்பி வழிபாடு செய்யவேண்டும்; ஓதுவார்களைக்கொண்டு சுந்தரமூர்த்தி நாயனார் இயற்றிய ஏழாம் திருமறை ஓதவேண்டும்’ இப்படி பல்வேறு உத்தரவுகளுடன் கூடிய சுற்றறிக்கையை அனைத்து ஆலயங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார் அறநிலையத்துறையின் செயலாளர் பணீந்திர ரெட்டி ஐ.ஏ.எஸ். இந்த விஷயம், விவாதப் பொருளாக மாறியுள்ளது. ஆன்மிகவாதிகள் வரவேற்பு காட்ட, நாத்திகவாதிகள் எதிர்ப்புக் காட்டி வருகின்றனர்.

இதற்கு நடுவே, ‘யாகமெல்லாம் இருக்கட்டும்... கோயில்குளங்களைக்கூட கூறுபோட்டு அறநிலையத்துறையே விற்றுவிட்டது. மழை வந்தால், கோயிலின் தேவைக்குத் தேக்கி வைக்கக்கூட பல ஊர்களில் குளங்கள் இல்லை. அதை மீட்பதற்கு எந்த முயற்சியையும் அறநிலையத்துறை செய்யவில்லை’ என்கிற குமுறல் குரல்கள் ஆன்மிக அன்பர்களிடமிருந்தே ஓங்கி ஒலிக்க ஆரம்பித்துள்ளன. 

இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகத்தில் 38,645 கோயில்கள் உள்ளன. இவற்றில் 2,359 முக்கிய கோயில்களின் குளங்கள் ஆவணங்களில் மட்டுமே இருக்கின்றன. நிஜத்தில் அவை ஆக்கிரமிப்பில் உள்ளன. சென்னை, வடபழனி வேங்கீஸ்வரர் கோயில், திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோயில், விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் உள்பட பலகோயில்களுக்குச் சொந்தமான குளங்கள் காணாமல் போனவை பட்டியலில் உள்ளன.
கோயில் வருமானத்திலிருந்து சம்பளம் வாங்கும் அதிகாரிகள் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், இந்த ஆக்கிரமிப்பாளர் களிடமும் ‘சம்பளம்’ வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டுள்ளனர். இத்தகைய சூழலில், கோயில் குளங்களை மீட்கவேண்டும் என்று தொடர்ந்து குரல்கொடுப்பதோடு, சட்டப் போராட்டத்தை யும் நடத்திக்கொண்டிருக்கிறார் ‘ஜெபமணி ஜனதாக்கட்சி’யின் பொதுச்செயலாளர் மோகன்ராஜ். இதுகுறித்துப் பேசும் அவர், ‘‘கிட்டத்தட்ட கிணற்றைக் காணோம் கதைதான் வேங்கீஸ்வரர் கோயில் குளத்தின் கதை. ஒரு ஏக்கர் அளவில் இருந்த அந்தக் குளம், நூறடிச்சாலை விரிவாக்கத்துக்குப் பின்பு 11 கிரவுண்ட் என்கிற அளவுக்குச் சுருங்கியது. அதையும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் வீட்டுமனைகளாக மாற்றி விட்டது. கோயில் நிர்வாகமும் இதற்கு உடந்தை.

உயர் நீதிமன்றத்தை நாடி அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பித்தோம். குளம் ஆக்கிரமிப்பில் இருப்பதாக அற நிலையத்துறையும் ஒப்புக்கொண்டது. ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தைத் தூர் வாரும்படி கடந்த ஆண்டு (2018) நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்காக அறநிலையத் துறை எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆனால், ‘அங்கு குளமே இல்லை’ என்று உச்ச நீதிமன்றத்தை நாடியிருக்கிறது அறங்காவலர் தரப்பு’’ என்று கொதிப்போடு சொன்னார்.
கோயில் குளங்களில் உழவாரப்பணி செய்து வரும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பக்‌ஷிராஜனிடம் பேசினோம். ‘‘அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஆயிரக்கணக்கான குளங்கள் இருக்கின்றன. பெரும்பாலானவை பராமரிக்கப்படவே இல்லை. நீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் தூர்வாரவே ஆரம்பித்தார்கள். இப்போதும் பெயரளவுக்குத்தான் தூர்வாருகிறார்கள். பெரும்பாலும் கணக்குக் காட்டும் வேலைகள்தான் நடக்கின்றன. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ராமதீர்த்தத்தைத் தூர்வாரிய வகையில், இரண்டு லட்சம் ரூபாய் செலவு என்று கோயில் நிர்வாகமும், ஏழு லாரிகளில் கழிவுகளை அகற்றிய வகையில், ஏழு லட்சம் ரூபாய் செலவு என்று மாவட்ட நிர்வாகமும் மதுரை உயர் நீதிமன்றத்தில் கணக்குகளைச் சமர்ப்பித்துள்ளன. உண்மையில் இந்தப் பணிகளை ‘க்ரீன் ராமேஸ்வரம்’ என்ற தன்னார்வக் குழுதான் செய்தது. இப்படித்தான் பல கோயில் குளங்களில் கணக்குக் காண்பிக்கப்பட்டுள்ளன. சில ஊர்களில் குளங்களைத் தூர்வாரியுள்ளனர். ஆனால், குளங் களுக்கு நீர் வரும் கால்வாய்களை சீரமைக்கவில்லை. விழாக்காலங்களில் தெப்பத்திருவிழா நடத்த லாரி தண்ணீரைத்தான் கோயில் நிர்வாகங்கள் நம்பி யுள்ளன. ஆக்கிரமிப்பிலுள்ள கோயில் குளங்கள் மற்றும் நீர்வழிப்பாதைகளையும் மீட்டால் மட்டுமே மழை பெய்தாலும் தண்ணீரைத் தேக்க முடியும்’’ என்று எதார்த்த நிலையை எடுத்துவைத்தார்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் கேட்ட போது, ஆக்கிரமிப்புகள் குறித்து நேரடி யாக பதில் தராத அமைச்சர், “கோயில் குளங்களைச் சீரமைப்பது முக்கியமே. அந்தப் பணிகளை விரைவுப்படுத்து வோம்’’ என்று சொன்னதோடு,

‘‘மழைவேண்டி செய்யப்படும் இதுபோன்ற யாகங்களையும் வழிபாடு களையும் விமர்சிக்கக் கூடாது. வறட்சிக் காலங்களில் இப்படியான யாகங்கள் பலகாலமாகவே தமிழகக் கோயில்களில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன’’ என்றார்.

யாகத்தில் காட்டும் வேகத்தை, ஆக்கிர மிப்புகளை அகற்றுவதிலும் காட்டலாமே!

- இ.லோகேஷ்வரி
படங்கள்: வீ.சதீஷ்குமார்
News2.in
News2.in

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment