Wednesday, May 08, 2019

ஃபானி புயல்... எதிர்கொண்ட ஒடிசா! - வியந்தது உலகம்... நெகிழ்ந்தது ஐ.நா!

புயல், வெள்ளம், வறட்சி என இயற்கைச் சீற்றங்கள் எதுவும் ஒடிஷாவுக்குப் புதிதல்ல. ஆனால், சமீபத்தில் ஒடிஷாவைத் தாக்கிய ஃபானி புயலானது, கடந்த 150 ஆண்டுகளில் ஒடிஷாவைத் தாக்கிய மிகக் கடுமையான மூன்று புயல்களில் ஒன்று என்கிறார்கள் வானிலை ஆராய்ச்சியாளர்கள். பூரி, குர்தா மாவட்டங்கள் உட்பட ஒடிஷாவின் பல பகுதிகளில் ஃபானி புயல் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

வங்கக்கடலில் உருவான புயல், மே 3-ம் தேதி பூரி பகுதியில் கரையைக் கடந்தது. மணிக்கு சுமார் 200 கி.மீ வேகத்தில் வீசிய காற்று மற்றும் இடி மின்னலுடன் கூடிய கன மழை ஆகியவற்றால் ஒடிஷா கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மின் கம்பங்களும் செல்போன் கோபுரங்களும் சாய்ந்ததால் மின்சாரம், தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டன. ஏராளமானோர் வீடுகளை இழந்தனர்.
கடுமையான புயல் என்றபோதிலும் அங்கு உயிர்ச்சேதம் பெரிய அளவில் இல்லை என்பதுதான் மிகப் பெரிய ஆறுதலான விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இதில், ஒடிஷா அரசு மிகத் திறமையாகச் செயல்பட்டுள்ளது. ‘புயல் வந்து கொண்டிருக்கிறது. அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள்’ என்று பொது ஒலிபெருக்கியில் அறிவித்து, 26 லட்சம் எஸ்.எம்.எஸ் தகவல்கள் அனுப்பி, உரிய நேரத்தில் முன்னெச்சரிக்கை செய்து, 11 லட்சம் பேரைப் பாதுகாப் பான இடங்களுக்கு மாற்றியுள்ளனர். இந்தப் பணியில், தன்னார்வலர்கள் 43,000 பேர் மற்றும் அவசரகாலப் பணியாளர்கள் 1,000 பேர் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஒடிஷா மாநில அரசின் சாதுர்யமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் மூலம் பேரழிவு தவிர்க்கப்பட்டிருக்கிறது. வளரும் நாடான இந்தியாவில் உள்ள ஓர் ஏழை மாநிலத்தில் எடுக்கப்பட்ட இத்தகைய நடவடிக்கையை மிகப் பெரிய சாதனையாக ஐ.நா-வும் பல்வேறு உலக நாடுகளும் பாராட்டியுள்ளன.
1999-ம் ஆண்டு தாக்கிய சூப்பர் புயல், ஒடிஷாவில் பேரழிவை ஏற்படுத்தியது. அதில் ஒடிஷா உருக் குலைந்துபோனது. அந்தப் புயலில் 10,000 பேர் உயிரிழந்தனர். அப்போது அங்கு தன்னார்வலராக மீட்புப்பணியில் ஈடுபட்ட தமிழகத்தைச் சேர்ந்த ஒரிசா பாலுவிடம் பேசினோம்.

“1999-ல் சூப்பர் புயல் வீசியபோது, தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான பாலகிருஷ்ணன், அங்கு பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு ஆணையராக இருந்தார். அவருக்குக் கீழே ஒரு தன்னார்வலராகப் பணியாற்றினேன். இந்த அளவுக்குத் தொழில் நுட்பமோ, தகவல் தொடர்புகளோ அப்போது கிடையாது. அதனால், பாதிப்புகளைச் சரி செய்ய மூன்று மாதங்கள் ஆகின. புயல் வரப் போகிறது என்று சொன்னார்கள். நான் நம்பவே இல்லை. காரணம், மதியம் வெயில் அடித்துக் கொண்டிருந்தது. ஆனால், சாயங்காலம் புயல் வந்துவிட்டது. இப்போது அப்படியல்ல. புயல் எங்கே இருக்கிறது என்பதை மக்கள் செல்போனிலேயே பார்த்துத் தெரிந்து கொண்டனர். உயரமான கட்டடங்களில் ஏற்பட்ட பாதிப்புகளும், செல்போன் கோபுரங்கள் சாய்ந்ததும், உயரமான கிரேன் சாய்ந்ததும் எதிர்பாராதவை. மற்றபடி இந்தப் புயலை அந்த மாநில அரசு சிறப்பாக சமாளித்திருக்கிறது. அது, ஏழை மக்கள் அதிகம் நிறைந்த மாநிலம் என்றாலும், எவ்வளவு பெரிய இயற்கைப் பேரிடர் வந்தாலும் அந்த மக்கள் கலங்கமாட்டார்கள். பாதிப்பிலிருந்து உடனே மீண்டுவிடுவார்கள். அவர்களின் மனஉறுதியைப் பலமுறை ஆச்சர்யத்துடன் பார்த்திருக்கிறேன்” என்கிறார் ஒரிசா பாலு.
ஒடிஷாவில் பல இயற்கைச் சீற்றங்களின் போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மீட்புப்பணிகளில் சிறப்பாகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர், ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தற்போது அந்த மாநில அரசின் தலைமை ஆலோசகராகப் பணியாற்றி வருகிறார். அவரிடம் பேசினோம். “1999-ம் ஆண்டு ஒடிஷாவை புயல் தாக்கியபோது, பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளின் உதவிகள் தேவைப்பட்டன. அந்தப் புயலின் பாதிப்பிலிருந்து பல பாடங்களைக் கற்றோம். அதிலிருந்து புதிய கொள்கை ஒன்றை ஒடிஷா அரசு வகுத்தது. இயற்கைப் பேரிடரால் ஒருவர்கூட உயிரிழந்துவிடக் கூடாது என்பது ஒடிஷா அரசின் முதன்மையான கொள்கை. ஃபானி புயல் வருகிறது என்றவுடன், ‘வரும் முன் காத்தல்’ என்கிற அடிப்படையில் திட்டமிட்டுச் செயல்பட்டோம். முதல்வர் நவீன் பட் நாயக் நேரடியாகக் களத்தில் இறங்கினார். 24 மணி நேரத்தில் 11 லட்சம் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். அரசு அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் என அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட நடவடிக்கை யால்தான், இந்த வெற்றி சாத்தியமானது” என்றார். 

இயற்கைப் பேரிடரை எதிர்கொள்வது பற்றி ஒடிஷா பல பாடங்களைக் கற்றிருக்கிறது... நாம் கஜா புயலில் கற்றக்கொண்டதைப் போல.

- ஆ.பழனியப்பன்
News2.in
News2.in

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment