Sunday, May 12, 2019

மிஸ்டர் கழுகு: ரூட் மாறுகிறாரா ஸ்டாலின்? - ராவ் ரகசியங்கள்!

மின்னல் வேகத்தில் உள்ளே நுழைந்த கழுகார், “என்ன... ஊரெங்கும் உமது பேச்சாகத்தான் இருக்கிறது. நூறு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மு.க.ஸ்டாலின் உமக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகப் பேசிக் கொண்டிருக்கிறார்களே!’’ என்று புன்னகைத்தபடியே கேட்டார்.

‘‘லாட்டரி மார்ட்டின் நிறுவனத்தில் பணியாற்றிய ஒருவர் மர்மமான முறையில் இறந்துபோனார். இந்த விஷயம் தொடர்பாகக் கடந்த இதழில் வெளியான அட்டைப்படக் கட்டுரையில், ‘500 கோடி நிதி? தி.மு.க-வுக்குச் சிக்கல்’ என்று போட்டிருந்தோம். இது மு.க.ஸ்டாலினின் புகழுக்குக் களங்கம் விளைவித்துவிட்டதாம். இதற்காக நூறு கோடி நஷ்டஈடு தரவேண்டுமாம். நமக்கு மு.க. ஸ்டாலின் நோட்டீஸ் அனுப்பியிருப்பதாக ஊரெங்கும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், நம் கைகளுக்கு இந்த நிமிடம் வரை நோட்டீஸ் எதுவும் வந்துசேரவில்லை. ஆனால், அவர்களாகவே ஃபேஸ்புக் உள்பட பலதளங்களிலும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.’’

“நடக்கட்டும் நடக்கட்டும்!’’

“அது சரி, உம்மீது உரிமை மீறல் பிரச்னை ஒன்று வெடித்திருக்கிறது தெரியுமோ?’’

“ஓ... பி.ஜே.பி தலைவர் அமித் ஷாவை, ‘வாமனர்’ என்று நான் வர்ணித்ததற்காக வருத்தப்பட்டு திருநெல்வேலி வாசகர், ராமச்சந்திரன் கடிதம் எழுதியிருப்பதைத்தானே சொல்கிறீர்... அவருடைய வருத்தத்தில் நியாயம் இருக்கிறது. ஆனால், அமித் ஷாவைக் கிண்டலடிக்கும் விதத்தில் சொல்லப்பட்டது அல்ல அது. அடிக்கடி அவர் விஸ்வரூபம் எடுப்பதை மனதில்கொண்டு சொல்லப்பட்ட விஷயம் அது. எந்தப் பக்கம் பந்து வீசினாலும் தூக்கி அடிக்கத் தயாராக இருக்கிறார் அமித் ஷா. அவர் எப்போது அடங்கிக்கிடப்பார்... எப்போது விஸ்வரூபம் காட்டுவார் என்று தெரிவதில்லை என்பதை உணர்த்துவதற்காகச் சொல்லப்பட்டது’’ என்ற கழுகாரிடம், ‘‘சரி ஐந்தாம் கட்ட தேர்தல் முடிவுகள் நீர் சொன்னதுபோல் பி.ஜே.பி–க்குச் சாதகமாக இருந்ததா?’’ என்றோம்.


‘‘கிட்டத்தட்ட அப்படித்தான்... ஆனால் மத்தியப் பிரதேசத்தில் உள்ள 12 தொகுதிகளில் 70 சதவிகிதத்துக்கு மேல் வாக்குப்பதிவு நடந்திருப்பதுதான் பி.ஜே.பி தரப்புக்குக் கொஞ்சம் கலக்கத்தைக் கொடுத்துள்ளது. மலைவாழ் மக்கள் தங்களுக்கு எதிராக வாக்களித்துவிட்டார்களோ என்று பி.ஜே.பி கருதுகிறது!’’

‘‘அது சரி... மூன்றாவது அணி கோஷத்தை சந்திரசேகர ராவ் ஆரம்பித்திருக்கிறாரே... என்ன விஷயம்?’’

‘‘இன்னும் இரண்டு கட்டத் தேர்தல்கள் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில், சந்திரசேகர ராவின் மூன்றாவது அணி கோஷத்தை பி.ஜே.பி தரப்பே எரிச்சலுடன்தான் பார்க்கிறது!’’

‘‘ஆனால், இந்த கோஷமே பி.ஜே.பி தயாரிப்புதான் என்று சொல்கிறார்களே?’’

‘‘அசைன்மென்ட் கொடுத்தது அவர்கள்தான். ஆனால், அவர்கள் சொன்ன நேரத்தில் ராவ் இதைச் செய்யவில்லை என்பதுதான் எரிச்சலுக்குக் காரணம். தேர்தலுக்கு முன்பே பி.ஜே.பி–க்கு எதிராக ஓர் அணியை சந்திரபாபு நாயுடு கட்டமைத்துக்கொண்டிருந்தார். அதை உடைக்கவே சந்திரசேகர ராவ் மூலம்  மூன்றாவது அணிக்கான கோஷத்தை முன்வைக்கச்சொன்னது பி.ஜே.பி. ஆனால், தேர்தல் ஆரம்பித்தும்... நீண்ட நாள்களுக்கு அவர் அமைதியாக இருந்தார். பி.ஜே.பி தரப்பு தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருந்தது.’’

‘‘இருக்கட்டும்... பி.ஜே.பி-க்கு இதில் என்ன லாபம்?’’

‘‘மூன்றாவது அணியை உருவாக்கினால், ஒவ்வொரு மாநிலத்திலும் அந்த அணி காங்கிரஸின் கணிசமான ஓட்டுகளைப் பிரிக்கும் என்று கணக்குப் போட்டது பி.ஜே.பி தலைமை. மாயாவதி, அகிலேஷ் போன்றவர்களைக் கொண்டு பி.ஜே.பி வாக்குகளைப் பிரிப்பதுபோல காங்கிரஸ் வாக்குகளைப் பிரிக்க இந்த யுக்தியை பி.ஜே.பி கையில் எடுத்தது. கடைசியாக பி.ஜே.பி–க்கு ஆப்பு வைத்துவிட்டார் சந்திரசேகர ராவ் என்கிறார்கள்.’’‘‘புரியும்படி சொல்லும்!’’
‘‘ஐந்து கட்ட தேர்தல்கள் முடியும்வரை அமைதியாக இருந்தவர், இப்போது தேர்தல் களத்தை ஓரளவு கணித்துவிட்டார் போலும். மீண்டும் பி.ஜே.பி ஆட்சிக்கு வருவதில் சிக்கல் இருக்கிறது என்பதை உணர்ந்து காங்கிரஸ் தரப்புக்கு ஆதரவாகக் களத்தில் இறங்க முடிவுசெய்துவிட்டார். கேரள முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்து இதுகுறித்து பேசியுள்ளார். பினராயி தெளிவாக, ‘எங்களது கட்சி உயர்நிலை குழு எடுக்கும் முடிவுக்கு மட்டுமே நாங்கள் கட்டுப்பட முடியும்’ என்று சொல்லிவிட்டார். அதன் பிறகுதான் ஸ்டாலின் சந்திப்புக்கு நேரம் கேட்கப்பட்டுள்ளது.’’

‘‘அப்புறம் ஏன் சந்திக்கவில்லையாம்?’’

‘‘சந்திரசேகர ராவ் அலுவலகத்திலிருந்து, ஸ்டாலின் வீட்டுக்குத் தொடர்புகொண்டு சந்திப்புக்கான நேரம் கேட்டிருக்கிறார்கள்.  ஆனால், ‘இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஸ்டாலின் பிஸியாக இருப்பதால், உடனடியாகச் சந்திக்க முடியாது’ என்று சொல்லிவிட்டார்களாம். இதற்குப் பின்னால் வேறு கதை ஒன்றும் இருக்கிறது என்கிறார்கள்.’’

‘‘என்ன... என்ன... சொல்லும்!’’

‘‘ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று முதலில் அறிவித்தவர் ஸ்டாலின். இப்போது சந்திரசேகர ராவ்  மூன்றாவது அணி என்ற கோஷத்துடன் ஸ்டாலினைச் சந்திக்க முற்படுகிறார். ஒருவேளை இவரைச் சந்தித்தால், அது காங்கிரஸ் கூட்டணிக்குள் அதிருப்தியை ஏற்படுத்திவிடுமோ என்கிற அச்சம் ஸ்டாலின் தரப்பிடம் இருக்கிறது. எனவே, இடைத் தேர்தலைக் காரணம் காட்டி சந்திப்பைத் தள்ளிப் போட்டிருக்கிறார்கள். ஆனால், சந்திரசேகர ராவ் தரப்பும் விடவில்லையாம். நாங்கள் தமிழகத்தில் உள்ள கோயில்களுக்குச் சுற்றுப்பயணம் செய்து விட்டு வருகிறோம். ஞாயிறு அன்று சென்னை வரும்போது சந்திப்பை நடத்திக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.’’


‘‘அப்புறம்?’’
“அதற்கு, ‘பார்க்கலாம்... கொஞ்சம் பொறுங்கள்’ என்று பதில் சொல்லப்பட்டதாம். சந்திரசேகர ராவ் தரப்பு ஒருமித்த கருத்துடைய மாநிலக் கட்சிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகச் சொல்லியிருக்கிறது. தேர்தல் முடிவுகளில் மாநிலக் கட்சிகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்ற உளவுத்துறையின் கணிப்புதான் இதற்குக் காரணம். அதன் அடிப்படையில்தான் சந்திரசேகர ராவ் மனதில் இப்போது பிரதமர் பதவி ஆசை வந்திருக்கிறது என்கிறார்கள். ‘வெறும் 14 எம்.பி–க்களை வைத்திருந்த தேவ கவுடா பிரதமரானபோது 17 எம்.பி–க்கள் கிடைக்கக்கூடிய, நான் ஏன் பிரதமராகக்கூடாது?’ என்று தனக்கு நெருக்கமான வர்களிடம் பேசியிருக்கிறார் சந்திரசேகர ராவ். இப்போது புரிகிறதா... இவர் சந்திப்பை ஸ்டாலின் ஏன் தள்ளிப்போட்டார் என்று!’’

‘‘ஒ!’’

‘‘ஸ்டாலினிடமும் தனக்கு ஆதரவு  கேட்கும் மனநிலையில்தான் ராவ் இருக்கிறார். சந்திரபாபு நாயுடுவைப் போலவே சந்திரசேகர ராவும், கருணாநிதி குடும்பத்துக்கு ஏற்கெனவே நன்கு அறிமுகமானவர்தான். சென்னை வந்தபோது மு.க.ஸ்டாலின் வீட்டில் விருந்து சாப்பிட்டு அளவளாவிய காட்சியெல்லாம் இப்போது கண்ணில் வந்து செல்கிறது. இந்த ஜூ.வி அட்டைப்படத்தை அலங்கரிப்பதே அப்படியொரு காட்சிதான். ஆனாலும், இப்போதைய அரசியல் சூழ்நிலையில் பல்வேறு தரப்புகளின் கண்களும் சந்திரசேகர ராவுடன் தி.மு.க நடத்தும் ரகசியப் பேச்சுவார்த்தைகளை வைத்து, ‘ரூட் மாறுகிறாரா ஸ்டாலின்?’ என்று ஸ்டாலினை உற்றுநோக்கத் தொடங்கிவிட்டன. ஆனாலும், இந்த விஷயத்தில் ஸ்டாலின் மிகவும் தெளிவாகவே இருக்கிறார் என்கிறார்கள். அதாவது, ‘ராவ் பின்னால் சென்று ரூட்டை மாற்றுவது எந்த அளவுக்குச் சாதகமாக இருக்கும்’ என்று கட்சிக்காரர்களிடம் சர்வேயே நடக்கிறதாம்.  ‘ராவ் பி.ஜே.பி-யின் பீ டீம் ஆக  இருப்பாரோ’ என்கிற சந்தேகமும் ஸ்டாலினுக்கு இருக்கிறது. அதேசமயம், ‘வடக்கில் பி.ஜே.பி-தான் முன்னிலை வகிக்கும் என்று வரும் செய்திகளால், அந்தப் பக்கமும் ஒரு துண்டு போட்டுவைத்துக்கொள்வது நல்லது’ என கிச்சன் கேபினட் தரும் ஆலோசனைகளையும் ஒதுக்கித்தள்ள முடியவில்லையாம். அதனால், ‘மரியாதை நிமித்தம்’ என்கிற பெயரில், ராவ்- ஸ்டாலின் சந்திப்பு நடக்கும் என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்.’’


‘‘தமிழக பி.ஜே.பி என்ன செய்கிறது?’’
‘‘தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரசார வேன்களில்கூட மோடி படம் இல்லாததை டெல்லிக்கு நோட் போட்டு அனுப்பியிருக்கிறது தமிழக பி.ஜே.பி. ஆனால், ‘அது நாடாளுமன்றத் தேர்தல்... அதனால் பிரதமர் வேட்பாளர் படத்தைப் போட்டோம். இப்போது மாநிலத்தின் ஆட்சி மாற்றத்துக்காக நடக்கும் தேர்தலில், மோடி படத்தைப்போட்டு எங்கள் வாக்குகளைக் குறைத்துக்கொள்ள விரும்பவில்லை’ என்று தைரியமாகவே சொல்கிறதாம் அ.தி.மு.க தரப்பு.’’

‘‘தமிழக காங்கிரஸ் பற்றி எதுவும் தகவல் உண்டா?’’

‘‘தேர்தலில் சரியாக வேலை பார்க்காத மாவட்டத் தலைவர்கள், மாநில நிர்வாகிகளின் பட்டியலை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தயாரித்து வருகிறாராம். தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் பற்றியும் ஒரு புகார் போயிருக்கிறது. ரஜினியுடன் தொடர்பில் இருக்கும் அவர், ரஜினி அரசியல் கட்சி ஆரம்பித்தால், அவர் பக்கம் தாவிவிடுவார் என்றும் திருநாவுக்கரசர் தரப்பு பெட்டிஷன் தட்டியிருக்கிறதாம்.’’

‘‘அரசியலைத் தாண்டி வேறு ஏதேனும் தகவல்..?’’

‘‘சொல்கிறேன்... காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் மறைவுக்குப் பிறகு, இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர் மடத்தின்  தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ளார். ஆனால், விஜயேந்திரரைச் செயல்படவிடாமல் ஒரு சிலர் தடுப்பதாக மடத்துக்கு நெருக்கமானவர்களே புலம்ப ஆரம்பித்திருக்கிறார்கள். காஞ்சி மடத்துக்குச் சொந்தமாக கேரளத்தில் ஒரு மருத்துவக் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரி நிர்வாகத்தை ஜெயேந்திரர் தனக்கு நெருக்கமான சிலரிடம் ஒப்படைத்திருந்தார். இப்போது அந்தக் கல்லூரி நிர்வாகத்தில் சர்ச்சைக்குரிய ஒரு ஆடிட்டரின் தலையீடு அதிகரித்துள்ளதாம். மடத்திலும் அந்த ஆடிட்டர் கை ஓங்கியிருப்ப தால் விரைவில் இந்த விவகாரம் பெரிதாக வெடிக்கும் என்கிறார்கள் மடத்துக்கு நெருக்கமான வர்கள்!’’ என்ற கழுகார் சிறகுகளை விரித்தார்.
News2.in
News2.in

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment