Wednesday, May 08, 2019

விநோத போதை... விபரீத பாதை! - சிக்கலில் சேலம் சிறுவர்கள்

போதைப்பழக்கம், சிறுவர்களையும் விட்டுவைக்கவில்லை. சேலம் ஜங்ஷன், சின்னம்மாபாளையம், டவுன் ரயில்வே ஸ்டேஷன், பழைய பேருந்து நிலையம், பொன்னம்மாபேட்டை, கிச்சிப்பாளையம் பகுதிகளிலுள்ள சிறுவர்கள், விநோதமான போதைக்கு அடிமையாகியிருப்பதாகச் செய்தி கேள்விப்பட்டு அங்கு விரைந்தோம்.
சேலம் சின்னம்மாபாளையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆட்டோவில் ஐந்து பேர் ஒரு குழுவாக அமர்ந்திருந்தார்கள். அனைவரின் கைகளிலும் காலியான பால் பாக்கெட் கவர்கள் இருந்தன. அதிலிருந்த ஒருவிதமான களிம்பை நிமிடத்துக்கு ஒருமுறை மூச்சை இழுத்து உறிஞ்சிக்கொண்டிருந்தார்கள். அனைவருக்கும் 15 முதல் 20 வயதுக்குள்தான் இருக்கும். அவர்களிடம் பேச்சு கொடுத்தோம். “காலியான பால் கவர் அல்லது தண்ணி பாக்கெட்டுல களிம்பைப் போட்டு சிலபல வேலைகளைச் செய்தால் போதும்... ச்சும்மா குப்புனு போதை ஏறும். நாங்க, ‘போதை கேஸு’னு எல்லோருக்கும் தெரியும். போலீஸ்காரங்க பிடிச்சுட்டுப் போனாலும் ஸ்டேஷன் பக்கத்தில் இறக்கிவிட்ருவாங்க’’ என்றனர், போதை தலைக்கேறியபடி.

இந்த போதைப் பழக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் தாய், “என் மகனுக்கு வயசு 19 தான் ஆகுது. அதுக்குள்ள கிழவன்மாதிரி ஆயிட்டான். நடக்க முடியலை. ரத்த வாந்தி எடுக்கிறான். சூரமங்கலத்தில் இவனை மாதிரியே 40-க்கும் மேற்பட்ட பசங்க இந்தப் போதைக்கு அடிமையாகிக் கிடக்குறாங்க. அன்பு இல்லம் சேவியர், இவுங்களைத் திருத்த அப்பப்ப பிடிச்சுட்டுப் போவாரு. ஆனாலும், தப்பிச்சு ஓடி வந்திருவாங்க’’ என்றார்.
அன்பு இல்லத்தின் முன்னாள் தலைவர் சேவியர், “சேலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்தப் போதைக்கு அடிமையாக இருக்கிறார்கள். இதைத் தடுக்கவோ, கண்காணிக்கவோ யாரும் இல்லை. விளையாட்டுத்தனமாக இந்தப் போதைக்கு அடிமையாகும் குழந்தைகள் ஒருகட்டத்தில், சமூக விரோதச் செயலில் ஈடுபடுகிறார்கள். 18 வயதுக்குள் போதைக்கு அடிமையான சிறார்களுக்குச் சிகிச்சைகொடுப்பது சாதாரணமானது அல்ல. இப்படிப்பட்ட குழந்தைகளை மீட்டு நாங்கள் கவுன்சலிங் மற்றும் சிகிச்சைகொடுத்து அனுப்புகிறோம். ஆனால், அது முழுமையானதாக இல்லை’’ என்றார்.

மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதி, “இந்தப் போதைக்கு அடிமையாகும் குழந்தைகள் மனரீதியாக முழு மனநோயாளியாகின்றனர். உடல்ரீதியாக மூளை, நரம்பு மண்டலம், நுரையீரல் ஆகிய உறுப்புகளும் பாதிப்படையும். இதனால் தற்கொலை செய்யவும் குறைந்த வயதில் மரணம் அடையவும் வாய்ப்பு இருக்கிறது. இவர்களுக்குப் தொடர் சிகிச்சை அளித்தால் மட்டுமே குணப்படுத்த முடியும். தற்போது, இது குழந்தைகள் மத்தியில் புற்றீசல்போலப் பரவி வருவதால், இதைத் தடுக்க வேண்டியது அவசியம்’’ என்றார்.
சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, “இது என் கவனத்துக்கு வரவில்லை. நீங்கள் குறிப்பிடும் பகுதிகளில், விழிப்பு உணர்வு முகாம்கள் அமைத்து அங்குள்ள குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் பொதுமக்களுக்கும் கவுன்சலிங் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்கிறேன். தேவைப்படும்பட்சத்தில் அந்தக் குழந்தைகள் மீது தனிக்கவனம் எடுத்துக் குணப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறோம்’’ என்றார், உறுதியாக.

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: எம்.விஜயகுமார்
News2.in
News2.in

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment