Wednesday, May 08, 2019

“9 மாசமா சம்பளம் கொடுக்கலை... அவ்வளவுதான்!” - ‘பொறுப்பு’ அதிகாரியின் பொறுப்பான பதில்!

ரோட்டில் பல்வேறு தனியார் கம்பெனிகளில் கொத்தடிமைகளாக வேலைக்கு வைக்கப்பட்டிருந்த 26 வட மாநிலத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சத்தீஷ்கர் மாநிலம், கொண்டேகான் மாவட்டம் மர்தாபால் கிராமத்தைச் சேர்ந்த மிட்டு - சந்திரிகா தம்பதியரின் 22 வயது இளைய மகள் சோனா தைல் என்பவர் குடும்ப சூழ்நிலையால் ஏஜென்ட் மூலம் தமிழ்நாட்டுக்கு வேலைக்கு வந்திருக்கிறார். கடந்த 2018 ஜூலை மாதம் தமிழகத்துக்கு வந்த சோனா தைலிடமிருந்து எந்தத் தகவலும் இல்லாததால், பதறிப்போன அவருடைய பெற்றோர், ஏஜென்ட் நிர்தர் என்பவர் மீது சத்தீஷ்கர் போலீஸில் புகார் கொடுத்து விசாரித்திருக்கின்றனர். அவரோ, ஈரோட்டில் சரவணன் என்கின்ற ஏஜென்ட்டிடம் சோனா தைலை ஒப்படைத்த தாகக் கூறி, அவருடைய போன் நம்பரைக் கொடுத்திருக்கிறார்.
விபரீதத்தை உணர்ந்த சோனா தைலின் சகோதரர் மஹரு ராம் பஹேல், கொண்டேகான் மாவட்ட கலெக்டரைச் சந்தித்து நடந்த விஷயங்களைச் சொல்லிக் கதற, கலெக்டர் உடனே சப் கலெக்டர் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தார். ஈரோட்டுக்கு வந்து சேர்ந்த இந்தக் குழு, ஈரோடு போலீஸார் துணையோடு மொடக் குறிச்சி பகுதிகளில் உள்ள அட்டைக் கம்பெனி மற்றும் ஸ்பின்னிங் மில்களில் தேடுதல் வேட்டை நடத்தியிருக்கின்றனர். இந்தத் தேடுதல் வேட்டையில் சத்தீஷ்கர் டீமுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி.

பல தனியார் கம்பெனிகளில், 20 வயதுக் கும் குறைவான வட மாநிலத்தவர்கள், ‘சம்பளமின்றி கொத்தடிமைகளாகத் தங்களை வைத்திருப்பதாக’க் கூறி கண்ணீர் விட்டுக் கதறியிருக்கின்றனர். இதைத் தொடர்ந்து பல்வேறு தனியார் கம்பெனி களிலிருந்து 15 பெண்கள் உட்பட 26 வட மாநிலத்தவர்களை மீட்டிருக்கிறது, சத்தீஷ்கரைச் சேர்ந்த இந்தக் குழு. மீட்கப் பட்டவர்களில் பெரும் பாலானோர் 16 வயதுக்கும் குறைவானவர்கள் என்பதுதான் பெரும் கொடுமை.
மீட்கப்பட்ட அப்பாவி வட மாநிலத்தவர் களை இரண்டு நாட்களாக ஈரோடு மாவட் டம், மொடக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில்  பூட்டிய அறையில் வைத்து விசாரித்தனர்.
இதுகுறித்து ஈரோடு வருவாய்க் கோட்டாட்சியர் (பொறுப்பு) இளங்கோ பேசுகையில், “சார்... சம்பளம் கொடுக்காம வேலைக்கு வெச்சிருந்திருக்காங்க. அவ்ளோ தான். மத்தபடி இதுல வேற எந்த கொடுமை யும் நடக்கலை” என்றார். பாதிக்கப்பட்ட வட மாநிலத் தொழிலாளர்களிடம் நாம் பேச முற்பட்டபோது நம்மை அனுமதிக்கவும் மறுத்துவிட்டார்.

சம்பந்தப்பட்ட ஏஜென்ட்டுகள் மற்றும் கம்பெனி முதலாளிகள் மீது எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காமல், மீட்கப்பட்ட தொழிலாளர்களைச் சத்தமில்லாமல் மே 5-ம் தேதி ரயிலில் ஏற்றி சத்தீஷ்கருக்கு அனுப்புவதாகவும் இதன் பின்னணியில் பல லட்சங்கள் பேரம் நடந்துள்ளதாகவும் நமக்குத் தகவல் கிடைத்தது.
வடமாநிலத் தொழிலாளர்கள் ஏற்றப் பட்டிருந்த அதே ரயிலில், இந்தி பேசத் தெரிந்த ஒருவரை துணைக்கு அழைத்துக் கொண்டு நாமும் ஏறிச்சென்றோம். பாதிக் கப்பட்ட வட மாநிலத் தொழி லாளர்களிடம் பேச்சுக் கொடுத் தோம். விசாரணையில் நமக்குக் கிடைத்த தகவல்கள் ஒவ்வொன் றும் பகீர் ரகம். “மாதம் 4 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசி, மூன்று மாத கான்ட்ராக்டாக எங்களை ஏஜென்ட் அழைத்து வந்தார். ஆனால், இங்கு எங்களை கம்பெனிக்குள் வைத்துப் பூட்டி, காலை 8 மணியிலிருந்து இரவு 8 மணி வரை வேலை வாங்கினார்கள். சம்பளம் கேட்டபோது, ‘3 மாத கான்ட்ராக்ட் முடிந்து போகும் போதுதான் தருவோம்’ என்றார்கள். ஆனால், ஒரு பைசாகூட கொடுக்காமல், கிட்டத்தட்ட 9 மாதங்கள் எங்களை அடிமைகளாகவே வைத்திருந்தனர். செல்போனை எல்லாம் பிடுங்கி வைத்துக்கொண்டனர்.

பெண்களை வேலை செய்யச் சொல்லி அடித்தும், மாதவிடாய்க் காலங்களில் நாப்கின்கூட வாங்கிக் கொடுக்காமலும் கொடுமைப்படுத்தினர். ஒன்பது மாசம் வேலை செஞ்சி எங்களுக்கு ஒரு ரூபாய்கூட கொடுக்காம ஊருக்கு அனுப்பி வைக்கிறதுதான் வேதனையாக இருக்கு” என்றனர்.

அடுத்த நிறுத்தத்தில் ரயிலைவிட்டு இறங்கி, சேகரித்த விவரங்களுடன் ஈரோடு கலெக்டர் கதிரவனிடம் பேசி னோம். “சம்பந்தப்பட்ட கம்பெனி மற்றும் ஏஜென்ட் மீது நடவடிக்கை எடுக்கச் சொல்லியிருக்கிறேன். இதில் பேரம் பேசியதாகச் சொல்லப்படும் தகவல் முற்றிலும் தவறானது. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தை மட்டுமே கேட்டோம்” என்றார்.
ஈரோடு எஸ்.பி சக்தி கணேசன், “சம்பந்தப்பட்ட கம்பெனி உரிமையாளர்கள் மற்றும் ஏஜென்ட் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறோம். விரைவில் அவர்களை கைது செய்துவிடுவோம்” என்றார்.

இதற்கிடையே இந்த விவகாரத்தில், சத்தீஷ்கரைச் சேர்ந்த 22 வயதான ஜக்டு என்ற இளைஞனும் காணவில்லை. ஈரோட்டில் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், சத்தீஷ்கரில் இருந்து வந்த சப் கலெக்டர் கெளதம் படேல் தலைமையிலான ஒரு குழு ஈரோடு, நாமக்கல் பகுதிகளில் முகாமிட்டிருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களை அவசர அவசரமாக ரயிலேற்றி ஊருக்கு அனுப்பியது, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது போன்ற நடவடிக்கைகள் அதிகாரிகளின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. இதன் பின்னணியில், பணம் கை மாற்றப்பட்டதாகவும் விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர். ஏஜென்ட் சரவணன் பிடிபட்டால்தான் மாயமான சோனா தைல் மற்றும் ஜக்டு ஆகியோர் என்ன ஆனார்கள் என தெரியவரும்.

- நவீன் இளங்கோவன்
படங்கள்: ரமேஷ் கந்தசாமி
News2.in
News2.in

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment