Thursday, August 09, 2018

எடப்பாடி கையில் பன்னீரின் லகான்!

‘ஆண்டு ஒன்று முடிந்தது... ஆனால், ஒரு வழியும் பிறக்கவில்லை’ என்ற புலம்பல் அ.தி.மு.க-வில் உள்ள பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே எழுந்துள்ளது. 

கடந்த ஆண்டு இதே ஆகஸ்ட் மாதம் பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைப்பு நடைபெற்றது. ‘தினகரன் குடும்பத்தைக் கட்சியிலும் ஆட்சியிலும் தலையீடு செய்யவிடாமல் ஒதுக்கிவைக்க வேண்டும்... ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டும்’ என்பவை உள்ளிட்ட சில நிபந்தனைகளை வெளிப்படையாக விதித்தாலும், பதவி பேரங்கள்தான் திரைமறைவில் நடைபெற்றன. அதில் பல விஷயங்களை எடப்பாடி தரப்பு ஒப்புக்கொண்டதால்தான், இணைப்பு சாத்தியமானது. ஆனால், ‘‘எடப்பாடியின் கைப்பிடிக்குள் பன்னீர் சிக்கிவிட்டதால், எங்கள் பாடு திண்டாட்டம் ஆகிவிட்டது’’ என்று புலம்புகிறார்கள் பன்னீர் ஆதரவாளர்கள். 
எடப்பாடி கையில் பன்னீரின் லகான்!
அ.தி.மு.க-வின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளராக இருந்த விஜயகுமார் சமீபத்தில் நீக்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தை கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்து அசோகன், ஜான் தங்கம் என்ற இருவருக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு ஆண்டுக்கும் மேலாக காலியாக இருந்த திருநெல்வேலி மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியில் தச்சை கணேசராஜா நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல தூத்துக்குடி, விருதுநகர், மதுரை புறநகர், திருப்பூர், நீலகிரி, திருவண்ணாமலை வடக்கு, வடசென்னை வடக்கு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் பட்டியலையும் அறிவித்துள்ளது அ.தி.மு.க தலைமை. 

ஆனால், இந்த நிர்வாகிகள் நியமனத்தில் பன்னீர் ஆதரவாளர்கள் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுவிட்டனர். 

இதுகுறித்து பன்னீர்செல்வத்துக்கு நெருக்கமானவர்களிடம் பேசினோம். ‘‘பன்னீர்செல்வம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இணைப்புக்கு ஒப்புக்கொண்டபோதே, அவர் அணியில் இருந்த ஜே.சி.டி.பிரபாகர் மற்றும் ‘மாஃபா’ பாண்டியராஜனைத் தவிர மற்ற அனைவரும் ‘இணைப்புக்கு அவசரப்படவேண்டாம். நமது அணிக்கான முக்கியத்துவத்தை முடிவுசெய்துகொண்டு இணைப்பை நடத்தலாம்’ என்று சொன்னார்கள். எடப்பாடி தரப்பில் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு ஓகே சொல்லிவிட்டு, ‘வழிகாட்டுக் குழு பற்றி பொதுக்குழுவுக்குப் பிறகு பேசிக் கொள்ளலாம்’ என்று சொல்லி இணைப்பை நடத்திவிட்டார்கள். 

அதன்பிறகு செப்டம்பர் மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில், ‘11 பேர் கொண்ட வழிகாட்டுக் குழு அமைக்கப்படும்’ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஐந்து நபர்கள் பன்னீர் அணியிலிருந்தும், ஆறு நபர்கள் எடப்பாடி அணியிலிருந்தும் நியமிக்கப்படுவார்கள் என்று பேசப்பட்டது. அதேபோல், ‘கட்சியில் காலியாக உள்ள பதவிகளுக்கு ஆட்களை நியமிக்க வேண்டும்’ என்று எங்கள் தரப்பில் வலியுறுத்தினோம். இதில் எதையும் எடப்பாடி தரப்பு செய்யவில்லை.
எடப்பாடி கையில் பன்னீரின் லகான்!
கடந்த மாதம் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பன்னீர்செல்வம், ‘கட்சியை வழிநடத்த வழிகாட்டுக் குழுவை உடனே அமைக்க வேண்டும்’ என்று பேசினார். இந்த நிலையில், ‘மாவட்டங்களைப் பிரித்துக் கூடுதல் மாவட்டங்களை உருவாக்க வேண்டும். பதவியில் இல்லாதவர்களை மாவட்டச் செயலாளர்களாக நியமிக்க வேண்டும்’ என்று எடப்பாடி தரப்பிலிருந்து பன்னீருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஃபைலையும் பன்னீரிடம் கொடுத்துள்ளார்கள். அதற்கு பன்னீர்செல்வம், ‘நான் இதே கருத்தைச் சொன்னபோது அமைதியாக இருந்துவிட்டு, இப்போது அதையே நீங்கள் சொல்கிறீர்கள். முதலில் வழிகாட்டுக் குழுவை அமைத்துவிட்டு இதைப்பற்றி பேசலாம்’ என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டார். மேலும், எடப்பாடி தரப்பில் அளிக்கப்பட்ட நிர்வாகிகள் பட்டியலிலும் கையெழுத்து போடாமல் திருப்பி அனுப்பிவிட்டார்’’ என்றனர்.

இந்த நிலையில், சமீபத்தில் டெல்லிக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனைச் சந்திக்கச் சென்ற பன்னீரை, அமைச்சர் சந்திக்க மறுத்ததால் பன்னீருக்கு சரிவு ஏற்பட்டது. ஆனால், அந்தப் பிரச்னை உருவாவதற்குக் காரணமே, எடப்பாடி சென்னையில் அளித்த பேட்டி ஒன்றுதான். இந்தச் சூழ்நிலையில், பன்னீர்மீதான சொத்துக்குவிப்பு தொடர்பான புகார் விஷயம் சென்னை உயர் நீதிமன்றத்துக்குச் சென்றது. ‘இதை ஏன் சி.பி.ஐ விசாரணைக்குப் பரிந்துரை செய்யக்கூடாது’ என நீதிமன்றம் கேள்வி கேட்டது. மறுநாளே, ‘இந்த விவகாரத்தில் தமிழக ஊழல்  தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை ஆரம்ப கட்ட விசாரணை நடத்திக்கொண்டிருக்கிறது’ என தமிழக அரசு சார்பில் சொல்லப்பட்டது. ‘‘ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை முதல்வர் வசம் உள்ளது. அதை, தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு பன்னீரை மடக்கும் வேலையில் எடப்பாடி இறங்கியுள்ளார். இப்போது எடப்பாடி நீட்டும் பட்டியல்களில், பன்னீர் மறுக்காமல் கையெழுத்துப் போடுகிறார்’’ என்கிறார்கள் பன்னீரின் ஆதரவாளர்கள்.  

‘கன்னியாகுமரியை இரண்டாகப் பிரித்து இரண்டு மாவட்டச் செயலாளர்களை நியமிக்க வேண்டும்’ என்று தளவாய் சுந்தரம் எடப்பாடியிடம் நீண்டகாலமாக வலியுறுத்தி வந்துள்ளார். அதற்குப் பலனும் கிடைத்துவிட்டது. கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட அசோகன், பன்னீரின் ஆதரவாளராக அறியப்பட்டாலும், இப்போது தளவாய் சுந்தரத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கிறார். அதேபோல், பிற இடங்களில் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் பலரும் எடப்பாடியின் ஆட்களாகவே இருக்கிறார்கள். மேலும், சில மாவட்டங்களைப் பிரிக்கும் பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன. அதிலும் எடப்பாடி ஆதரவாளர்களுக்குத் தரப்படும் பதவிகளுக்கு பன்னீர் மறுக்காமல் கையெழுத்திடும் நிலையே உள்ளது. பதவி கிடைக்காத ஆதரவாளர்கள் பன்னீரிடம் முறையிட்டபோது, ‘‘இப்போது எதுவும் செய்யமுடியாத நிலையில் இருக்கிறேன்’’ என்று சொன்னாராம் அவர்.  

‘‘வழக்கு ஒருபுறம், பி.ஜே.பி-யின் பாராமுகம் மறுபுறம் என பன்னீருக்கு இறங்குமுகமாகி இருப்பதால், பன்னீரின் லகானை பழனிசாமி கையில் வைத்துக்கொண்டு ஆட்டம் காட்டுகிறார்’’ என்று சொல்கிறார்கள் எடப்பாடி அணியினர்.

- அ.சையது அபுதாஹிர்   படம்: ஆ.முத்துக்குமார்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment