Thursday, August 09, 2018

முட்டை ரெய்டு விசாரணை... வசமாகச் சிக்கும் ஐ.ஏ.எஸ்!

நெடுஞ்சாலை கான்ட் ராக்டர் செய்யா துரையின் எஸ்.பி.கே நிறுவனங்களில் நடைபெற்ற வருமானவரித் துறை ரெய்டு, அதற்குமுன்பு நடைபெற்ற முட்டை ரெய்டுகளை மறந்துபோகச் செய்தது. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு, முட்டை விவகாரம் மீண்டும் பரபரப்பு அடைந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே ஆண்டிபாளையத்தில் கிறிஸ்டி நிறுவனம் அமைந்துள்ளது. தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்கு முட்டை மற்றும் பருப்புகள், அங்கன்வாடிகளுக்கு சத்துமாவு ஆகியவற்றை இவர்கள் விநியோகம் செய்து வருகிறார்கள். இவர்கள் பல போலி நிறுவனங்களை உருவாக்கி வரி ஏய்ப்பு செய்துவருவதாக எழுந்த புகாரால், கிறிஸ்டி உரிமையாளர் குமாரசாமி வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு நடந்தது. 76 இடங்களில் 400-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் நடத்திய ரெய்டில், ரூ.17 கோடி அளவுக்கு ரொக்கப் பணம், வெளிநாட்டு கரன்சிகள், 10 கிலோ தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்களை ஐ.டி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
முட்டை ரெய்டு விசாரணை... வசமாகச் சிக்கும் ஐ.ஏ.எஸ்!
இந்நிலையில், வருமானவரித் துறையின் டெல்லி மேலிடத்துக்கு கிறிஸ்டி நிறுவனம் பற்றிப் பல்வேறு ரகசியத் தகவல்கள் சென்றுள்ளன. அதையடுத்து, ஐ.டி அதிகாரிகள் குழு ஒன்று மீண்டும் கிறிஸ்டி நிறுவனத்திற்குச் சமீபத்தில் விசிட் அடித்தது. அங்கே பல நாள்கள் முகாமிட்டு, கணக்குகளைச் சரிபார்த்து வருகின்றனர். ‘‘ரெய்டில் சிக்கியுள்ள பணப் பரிவர்த்தனை பற்றிய விஷயங்களை அவர்கள் கிராஸ் செக் செய்கிறார்கள்’’ என்று நாமக்கல் பிசினஸ் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். 

அதேசமயத்தில் ஐ.டி அதிகாரிகளின் இன்னொரு டீம், வேறு கோணத்தில் விசாரணையில் இறங்கியிருக்கிறது. ‘கோவை’ என்கிற அடைமொழியைத் தன்னுடன் வைத்திருக்கும் இரண்டு எழுத்து பிரமுகர் ஒருவர்தான், இந்த வட்டாரத்தில் உள்ள பிசினஸ் பிரமுகர்களுக்கும் அரசின் உயர் அதிகாரிகளுக்கும் மீடியேட்டராக செயல்படுகிறாராம். இவரின் நடவடிக்கைகளை, கடந்த சில மாதங்களாக ஐ.டி அதிகாரிகள் கண்காணித்துவருகிறார்கள். அதேபோல், திருச்செங்கோட்டைச் சேர்ந்த எதிர்க்கட்சிப் பிரமுகர் ஒருவர், அவர் சார்ந்த கட்சி மேலிடத்துக்கும் சில நிறுவனங்களுக்கும் மீடியேட்டராக செயல்படுகிறாராம். இவரையும் ஐ.டி அதிகாரிகள் கண்காணிப்பு வளையத்தில் வைத்திருக்கிறார்கள். 2016-ம் ஆண்டு நவம்பரில் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு எடுத்தது. ‘அப்போது கிறிஸ்டி நிறுவன உரிமையாளர் குமாரசாமி, அமைச்சர்கள், அரசியல் வி.ஐ.பி-க்கள் என்று பலரிடம் பழைய ரூபாய் நோட்டுகளை வாங்கி, அவற்றைத் தனது போலி நிறுவனங்களின் பெயர்களில் கணக்கில் கொண்டுவந்து, புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொடுத்தாரா’ என்ற கேள்வியுடன் நாமக்கல்லை வட்டமடித்து வருகிறார்கள் ஐ.டி அதிகாரிகள். இதுபற்றி கிறிஸ்டி நிறுவனத்துக்குப் போட்டியாக பிசினஸில் இருக்கும் பிரமுகர்கள், மற்றும் அரசியல்வாதிகளின் மீடியேட்டர்கள் என்று பலதரப்பட்டவர்களிடமும் ரகசிய விசாரணை நடந்துவருகிறது. 

நாமக்கல்லில் முட்டை பிசினஸ் செய்துவரும் ஒரு தொழிலதிபர், ‘‘ரெய்டு விஷயம் கிறிஸ்டி நிறுவனத்தினருக்கு முன்கூட்டியே தெரிந்துவிட்டது. அதனால், கிறிஸ்டி நிறுவன கம்ப்யூட்டர்களில் இருந்த தகவல்கள் அவசர அவசரமாக அழிக்கப்பட்டன. முக்கியமான ஃபைல்களை வெளியிடங்களுக்கு அப்புறப்படுத்தினர். பென் டிரைவ் குவியலை சாக்குப்பையில் கட்டி, ஆழ்துளைக் கிணற்றில் போட்டு மறைத்தனர். அங்கே வேலை செய்யும் சிலர் மூலம், ரெய்டுக்குப் பிறகு இதெல்லாம் எங்களுக்குத் தெரியவந்தது. இந்த பென் டிரைவ்களில் ஒன்று, பல அரசியல் கட்சிகளின் பிரமுகர்களுடன் கிறிஸ்டி நிறுவனத்துக்கு இருக்கும் தொடர்புகளை அம்பலப்படுத்தி யுள்ளதாகத் தெரிகிறது.
முட்டை ரெய்டு விசாரணை... வசமாகச் சிக்கும் ஐ.ஏ.எஸ்!
இதில் விசேஷம் என்னவென்றால், சில மாதங்களுக்கு முன்பே வருமானவரித் துறையின் உளவாளிகள் சிலர், அக்கவுன்ட்ஸ் வேலை பார்ப்பவர்கள் போல அந்த நிறுவனத்தின் உள்ளே புகுந்து கண்காணித்து வந்தனர். ரெய்டுக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்ததே அந்த உளவாளிகள்தான். அதனால்தான், இந்த அளவுக்கு ரொக்கப்பணமும் ஆவணங்களும் சிக்கின. கட்டடத்தின் கூரையில் உள்ள தெர்மகோல் ஷீட்களுக்கு இடையில் ஒளித்து வைத்திருந்த ரகசிய ஃபைல்களையும் அவர்கள்தான் அடையாளம் காட்டினர். அவற்றை ரெய்டின்போது அதிகாரிகள் கைப்பற்றினர். ஆனால், கிறிஸ்டி நிறுவனம் சார்பில் பல்வேறு ஊர்களில் வீடுகளை வாடகைக்குப் பிடித்து, அவற்றில் ஏராளமான ஃபைல்களைப் பதுக்கிவைத்திருந்தார்கள். அந்த விவரங்கள் உரிய நேரத்தில் வருமானவரித் துறையினருக்கு எட்டவில்லை. அவற்றையும் கைப்பற்றியிருந்தால், கிறிஸ்டி நிறுவன மர்மங்கள் பல அம்பலமாகியிருக்கும்’’ என்றார். 

கிறிஸ்டி உரிமையாளர் குமாரசாமியை மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வளைத்துப் பிடித்த வருமானவரித் துறையினர், அவரை நாமக்கல்லுக்கு அருகில் ஒரு பண்ணை வீட்டில் வைத்து விசாரித்தனர். விசாரணையின்போது, ஐ.டி அதிகாரிகள் குமாரசாமி தரப்பினரிடம் லேசாக அதிர்வைக் காட்ட... கடகடவென பல தகவல்களைக் கொட்டித் தீர்த்துவிட்டார்களாம். சென்னை தலைமைச்செயலகத்தில் நிதி விஷயங்கள் எப்படி மின்னல் வேகத்தில் ஓகே ஆகின என்று ஐ.டி அதிகாரிகள் துருவ, முருகக்கடவுள் பெயரைக்கொண்ட சீனியர் அதிகாரி ஒருவர் பெயரைச் சொன்னார்களாம். உச்சபட்சப் பதவிக்கான ரேஸில் இருந்த அந்த அதிகாரியின் நாமக்கல் நெட்வொர்க் பற்றி இப்போது தனி டீம் போட்டு விசாரிக்கிறார்கள் ஐ.டி அதிகாரிகள். 

ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் செல்வாக்கு மனிதராக இருந்தார், தியானேஸ்வரன் ஐ.ஏ.எஸ். பதவியில் இருந்தபோதே, சில குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் வீட்டில் வருமானவரித் துறையினர் ரெய்டு நடத்தினர். அப்போது கிடைத்த ஆவணங்களை வைத்து சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்தது. அதேபோல், தற்போது கிறிஸ்டி நிறுவனங்களில் நடந்த ஐ.டி ரெய்டுகளின் ஒரு கட்டமாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் சுதாதேவி ஐ.ஏ.எஸ் வீடு மற்றும் அலுவலகத்தில் ரெய்டு நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றினர். ஆனால், அவர்மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்யவில்லை. ‘‘டெல்லியிலிருந்து க்ரீன் சிக்னல் கிடைக்கவில்லை’’ என்கிறார்கள் ஐ.டி துறையின் உயர் அதிகாரிகள். 

ஐ.டி அலுவலகத்துக்கு அடிக்கடி விசிட் அடிக்கும் கணக்குப் புலிகள் இருவர், கிறிஸ்டி நிறுவனத்தினருக்குச் சொன்ன அட்வைஸ் என்ன தெரியுமா?

‘‘உங்கள் விவகாரத்தை விசாரிக்கும் டீம் ஹெட் மற்றும் முதன்மை இயக்குநர் (ஐ.டி விசாரணை) சுசீ பாபு வர்கீஸ் ரொம்ப ஸ்ட்ரிக்ட். உங்கள் நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட அனைத்து ஆவணங்களின் விவரங்களையும் டெல்லியில் உள்ள சி.பி.டி.டி (சென்ட்ரல் போர்டு ஆஃப் டைரக்ட் டாக்ஸ்) பார்வைக்கு அனுப்பிவிட்டார். மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் இந்த போர்டுதான், இந்தியாவில் எங்கு ரெய்டு நடத்தாலும், அது தொடர்பான விவரங்களை ஆராயும். முக்கியக் கொள்கை முடிவுகளை அதுதான் எடுக்கும். அங்கிருந்து வரும் உத்தரவுகளை சுசீ பாபு வர்கீஸ் கண்டிப்புடன் செயல்படுத்துவார். 

வேறு வழியில்லை. சென்னை ஐ.டி அலுவலகத்தின் செட்டில்மென்ட் கமிஷனுக்குப் போய்விடுங்கள். ரெய்டுக்கு உள்ளானவர், வரி கட்டிச் சமாதானமாகப்போவதாக இங்கு முறையிடலாம். சீக்கிரமாக பிரச்னை முடிவுக்கு வரும். வாக்குவாதம் செய்து சட்டப்போராட்டம் நடத்தினால், பிரச்னை முடிய பல வருடங்கள் ஆகும். நிம்மதி போய்விடும்’’ என்றார்களாம். 

இதைத் தொடர்ந்து, ரெய்டு தொடர்பான விசாரணைக்குப் போகும் எல்லோரிடமும்,       ‘‘ஐ.டி அதிகாரிகள் விசாரித்தால், எதையும் மறுக்காதீர்கள். தெரிந்த எல்லாவற்றையும் சொல்லுங்கள்’’ என கிறிஸ்டி நிர்வாகம் சொல்கிறதாம். இது, கிறிஸ்டியுடன் தொடர்பில் இருந்து கொழித்துக்கொண்டிருந்த பல உயர் அதிகாரிகளையும் தூக்கமிழக்கச் செய்திருக்கிறது. 

- சூரஜ்

படம்: கே.தனசேகரன்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment