Thursday, August 09, 2018

அப்பாவித்தனம் அதிகம் இருக்கிற சிறுமி அவள்!

சென்னை,அயனாவரம் அப்பார்ட்மென்ட்டில் வசிக்கும் 11 வயது மாற்றுத்திறனாளி சிறுமிக்கு நேர்ந்த அவலம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்தக் குடியிருப்பில் வேலை பார்த்த செக்யூரிட்டி முதல் பிளம்பர் வரை 17 மனித மிருகங்கள் அந்தச் சிறுமியை ஏழு மாதங்களாகப் பாலியல் துன்புறுத்தல் செய்துவந்த கொடுமை அது. ‘குற்றவாளிகளுக்கு மரண தண்டனை தர வேண்டும்’ என்று வலியுறுத்தி, சமூகச் செயற்பாட்டாளர் அப்சரா ரெட்டி தலைமையில், பாதிக்கப்பட்ட சிறுமியின் அக்கா பிரியா, நடிகை சாக்‌ஷி அகர்வால், நடிகர் கணேஷ் வெங்கட்ராம், அவரின் மனைவி நிஷா உள்பட ஏராளமானோர் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.  

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தாருக்கு உதவிகள் செய்துவரும் அப்சரா ரெட்டி, அந்தச் சிறுமிக்கு உளவியல் ஆலோசனை தந்துவரும் மனநல ஆலோசகர் வசந்தி பாபு ஆகியோரிடம் பேசினோம்.

‘‘தன் வயதுக்கே உரிய குதூகலத்துடன் விளையாடிக்கொண்டிருப்பவள், திடீரென ஒரு மூலையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிடுகிறாள். ‘பயமா இருக்கு ஆன்ட்டி’ என்கிறாள். ‘கனவில் பேட் அங்கிள்ஸ் வர்றாங்க’ என்கிறாள். அந்தச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் ஒருவன், இதற்கு முன்னர் மகப்பேறு மருத்துவமனையில் வேலைபார்த்தவன். பிரசவ வலி தெரியாமல் இருப்பதற்கான மயக்க ஊசியை அவளுக்குச் செலுத்துவிட்டு, அந்தக் குழந்தையைப் பயன்படுத்தியிருக்கிறான். தவிர, வலி மரத்துப்போகிற க்ரீம்களை அப்ளை செய்திருக்கிறார்கள். அதனால், அந்தச் சிறுமியால் வலியை உணர முடியவில்லை. அவள் இயல்பாக இருந்ததால், அவள் அம்மாவாலும் தன் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைகளை உணர முடியவில்லை.
அப்பாவித்தனம் அதிகம் இருக்கிற சிறுமி அவள்!
அந்த அப்பார்ட்மென்ட்டில் கிட்டத்தட்ட 380 குடும்பங்கள் வாழ்ந்தாலும், அடுத்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்பதுகூட தெரியாத நிலை. அந்த வளாகம், பகலில்கூட இருட்டாக இருக்கிறது. லிஃப்ட்கள் நிறைய இருக்கின்றன. நிறைய பேர் வேலை பார்க்கிறார்கள். பாதிக்கப்பட்ட சிறுமியின் அப்பா, காலையில் 8.30 மணிக்குத் தன் கடைக்குக் கிளம்பிச் சென்றுவிடுகிறார். இரவு வீடு திரும்ப கிட்டத்தட்ட 11 மணி ஆகிவிடுமாம். சிறுமியின் அக்கா வெளியூரில் படித்துவந்தார் என்பதால், பெரும்பாலான நேரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியும் அவள் அம்மாவும் வீட்டில் தனியாக இருந்திருக்கிறார்கள். மாற்றுத்திறனாளி சிறுமி என்பதால் நல்லவர் யார், கெட்டவர் யார் என்பதெல்லாம் புரியவில்லை. தனக்கு நடக்கிற கொடுமையை அம்மாவிடம் சொல்லவும் தெரியவில்லை. இவையெல்லாம்தான் குற்றவாளிகளுக்கு வாய்ப்பாக அமைந்துவிட்டன.

மூன்றாவது மாடிக்குப் போகவேண்டிய சிறுமியை, ‘உன் அம்மா 15-வது மாடியில் இருக்கிறார். வா’ என்று அழைத்துச் சென்று வக்கிரமாக நடந்திருக்கிறார்கள். சிறுமி மறுத்தால், பாக்கெட் கத்தியை உடலில் வைத்து ரத்தம் வராமல் அழுத்தியிருக்கிறார்கள். கத்தி வைத்து அழுத்திய தடம் தெரியாமல் இருப்பதற்காக, அந்த இடங்களில் பவுடரைத் தடவி அனுப்பியிருக்கிறார்கள். ‘எங்களைப் பத்தி அம்மாகிட்ட சொன்னா, வீட்ல தனியா இருக்கும்போது அவங்களைக் கொன்னுடுவோம்’ என்று பயமுறுத்தியிருக்கிறார்கள். சிறுமி தனக்கு நடந்த கொடுமைகளையெல்லாம் விவரித்தபோது, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கண்கலங்கிவிட்டார்’’ என்று வருத்தத் துடன் சொல்லிமுடித்தார் அப்சரா.
அப்பாவித்தனம் அதிகம் இருக்கிற சிறுமி அவள்!
மனநல ஆலோசகர் வசந்தி பாபு, ‘‘புகைப்படம் உள்பட இதுவரை அந்தக் குழந்தையின் அடையாளங்கள் எதையும் வெளியிடாத ஊடக அறத்துக்கு, அந்தச் சிறுமியின் மனநல ஆலோசகராக நான் நன்றி கூறிக்கொள்கிறேன்’’ என்றவர், இந்தச் சம்பவத்தில் சமூக வலைதளங்களில் பதியப்பட்ட ‘கருத்துகள்’ பற்றிய தன் வருத்தத்தைத் தெரிவித்தார். ‘‘பாதிக்கப்பட்ட குழந்தையின் அம்மா அதை கவனிக்கத் தவறியது எப்படி என்ற கேள்வியை எழுப்புபவர்கள், இதன்மூலம் அந்தத் தாய்க்குக் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துகிறார்கள் என்றுதான் சொல்வேன். ஏதோ ஒரு கவனக்குறைவு அந்தக் குடும்பத்தையும் சிறுமியையும் சுக்குநூறாக்கிவிட்டது. இனி அந்தச் சிறுமி மட்டுமல்ல, அந்தக் குடும்பமும் இந்தத் துயரிலிருந்து மீண்டுவர உதவி செய்வதுதான் முக்கியம். அருவருப்பான கருத்துகள் சொல்வது அந்தக் குழந்தைக்கு மேற்கொண்டு இழைக்கும் அநீதி; பெரும் பாவம். நம் வீடுகளில் 11 வயதில் உள்ள பெண் பிள்ளைகள் எப்படி உலகின் கெடுதல்கள் அறியாதவர்களாக இருக்கிறார்களோ, அப்படித்தான் அந்தச் சிறுமியும். மனநல ஆலோசகராகச் சொல்ல வேண்டுமென்றால், அப்பாவித்தனம் அதிகமாக இருக்கிற சிறுமி அவள்’’ என்றவர், பாதிக்கப்பட்ட சிறுமியை தான் மீட்ட விதத்தையும் பகிர்ந்துகொண்டார்.

‘‘பொதுவாக பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் யாரையும் நம்பிப் பேச மாட்டார்கள். அந்நியர்களை வெறித்து வெறித்துப் பார்ப்பார்கள். இந்தக் குழந்தை விஷயத்திலும் இதுதான் நடந்தது. ஆரம்பத்தில் இரண்டு நாள்கள் அந்தச் சிறுமி என்னிடம் எதுவுமே பேசவில்லை. வெறித்தபடி உட்கார்ந்திருந்தாள். பிறகு எனக்குப் பிடித்த விஷயங்களை அவளிடம் நான் சொல்லச் சொல்ல, அவளுக்குப் பிடித்த உணவு, ட்ரஸ், கார்ட்டூன், ஐஸ்க்ரீம், ஃப்ரெண்ட்ஸ் என்று எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள ஆரம்பித்தாள். அதன் பிறகு, ‘நம்மைச் சுற்றி நிறையக் கெட்டவங்க இருக்காங்க... அவங்களுக்கு தண்டனை வாங்கித் தரணும் இல்லையா’ என்று கேட்டேன். பிறகுதான் தனக்கு நடந்த கொடுமைகளைச் சொன்னதுடன், சம்பந்தப்பட்டவர்களை அடையாளமும் காட்டினாள். அந்தக் கொடுமையிலிருந்து அவள் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறாள். ஆனால், அவள் மனதில் இருக்கிற ஆழமான வடுக்கள் சரியாவதற்கு எத்தனை வருடங்கள் ஆகும் என்பதைக் காலம்தான் அறியும்’’ என்றார் வசந்தி பாபு.

- ஆ.சாந்தி கணேஷ்

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment