Thursday, August 09, 2018

“தவறு செய்யும் போலீஸார் இனி திருந்துவார்கள்!” - தண்டனை வாங்கித் தந்த கேரளத் தாய்

“என் மகன், காலை 6.30 மணிக்கு லுங்கி கட்டிக்கொண்டு, சட்டை போட்டுக்கொண்டு கண்ணாடியில் பார்த்தான். ‘நான் நன்றாக இருக்கிறேனா’ என்று என்னிடம் கேட்டான். ‘மிகவும் அழகாக இருக்கிறாய்’ என்று சொன்னேன். காலையில் சாப்பிட்டுவிட்டு வெளியே சென்றான். பிறகு அவனை நான் மார்ச்சுவரியில் சடலமாகத்தான் பார்த்தேன். அதிர்ச்சி தாளாமல் நான் மயங்கிவிட்டேன். என் மகன் இப்போது இல்லை என்றாலும் அவனது இதயம் என் நெஞ்சில் குடியிருக்கிறது” என்று கண்கள் பனிக்கப் பேசுகிறார் கேரளாவைச் சேர்ந்த பிரபாவதி அம்மா. 

குற்றம் செய்யாத மகனைச் சித்ரவதை செய்து கொன்ற போலீஸாருக்கு, 13 ஆண்டுகள் சட்டப்போராட்டம் நடத்தி மரண தண்டனை வாங்கிக்கொடுத்துள்ளார் பிரபாவதி அம்மா.
“தவறு செய்யும் போலீஸார் இனி திருந்துவார்கள்!” - தண்டனை வாங்கித் தந்த கேரளத் தாய்
பிரபாவதி அம்மாவின் ஒரே மகன் உதயகுமார் போலீஸ் காவலில் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தொடர்புடைய போலீஸார் ஆறு பேரில், ஒருவர் இறந்துவிட்டார். காவலர்கள் ஜிதகுமார், ஸ்ரீகுமார் ஆகியோருக்கு  மரண தண்டனையும், இவர்களுக்கு உடந்தையாக இருந்த டி.எஸ்.பி அஜித்குமார், முன்னாள் எஸ்.பி-க்கள் ஹரிதாஸ், ஷாபு ஆகியோருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் சி.பி.ஐ நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது. லாக்கப் படுகொலைக்காகப் பணியில் இருக்கும் போலீஸாருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவது இந்தியாவில் இதுவே முதல்முறை. திருவனந்தபுரம் கிள்ளிப்பாலம் கீழாறன்னூரில் வசிக்கும் பிரபாவதி அம்மாவைச் சந்தித்தோம்.
“தவறு செய்யும் போலீஸார் இனி திருந்துவார்கள்!” - தண்டனை வாங்கித் தந்த கேரளத் தாய்
“உங்கள் மகனுக்கு என்ன நடந்தது?”

“உதயகுமாருக்கு ஒரு வயது ஆனபோது, என் கணவர் இறந்துவிட்டார். வீட்டு வேலை செய்து என் மகனை வளர்த்தேன். என் மகன், பழைய மோட்டார் வாகனங்களைப் பிரித்து, ஆக்கர் பொருள்களை லாரியில் ஏற்றும் வேலை செய்துவந்தான். மாலையில் வீட்டிற்கு வந்தவுடன், தகரத்தால் கிழிக்கப்பட்ட கைகளை என்னிடம் காட்டி அழுவான். உணவை எடுத்துச் சாப்பிட முடியாத அளவுக்குக் காயங்கள் இருக்கும். 2005 செப்டம்பர் 27-ம் தேதி, ஓணம் பண்டிகைக்கு 4,000 ரூபாயை எடுத்துக்கொடுத்துப் புத்தாடை வாங்கிவரும்படி என் மகனிடம் கூறினேன். அது அவன் போனஸ் பணம். பணத்தைச் சட்டைப்பாக்கெட்டில் வைத்தவன், சிவன் கோயிலுக்குச் சென்றுவிட்டு ஸ்ரீகண்டேஸ்வரம் பூங்காவுக்குச் சென்றுள்ளான். 

அங்கு, அவன் நண்பன் சுரேஷுடன் பேசிக் கொண்டிருந்தான்.   சுரேஷ், சிறு திருட்டுகளில் ஈடுபடுவதாக போலீஸுக்குச் சந்தேகம். அதனால், அவனுடன் இருந்த என் மகன் உதயகுமாரையும் பிடித்துச் சென்றனர். உதயகுமாரைத் தாக்கிய போலீஸார், அவன் சட்டைப் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டனர். ‘நான் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணம் அது. அதைக் கொடுத்துவிடுங்கள்’ என்று கேட்டிருக்கிறான். அதற்காக அவனை போலீஸ் ஸ்டேஷன் பெஞ்ச்சில் படுக்கப் போட்டு கை, கால்களைக் கட்டி வைத்து இரும்பு பைப்பை உடலில் உருட்டிக் கொடூரமாகச் சித்ரவதை செய்துள்ளனர். அதில் அவன் இறந்துபோனான். உடலை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று போட்டு விட்டு, ‘ரோட்டோரம் இறந்துகிடந்தார்’ என்று கூறியுள்ளனர். அவன் சித்ரவதை செய்யப்பட்டது, பிரேதப் பரிசோதனையில் தெரியவந்தது. இரும்பு பைப்பால் உருட்டியதில் தொடைப்பகுதியில் உள்ள சதை, எலும்பிலிருந்து பிரிந்துவந்துவிட்டது. அப்போது என் மகன் எப்படி கதறியிருப்பான்! அவனுக்கு 18 எலும்புமுறிவுகள் ஏற்பட்டன.”
“தவறு செய்யும் போலீஸார் இனி திருந்துவார்கள்!” - தண்டனை வாங்கித் தந்த கேரளத் தாய்
“போலீஸுக்கு எதிராக நீங்கள் போராடியபோது உதவிகள் கிடைத்தனவா?’’ 

“திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அப்போது, 52 சாட்சிகளில் 32 சாட்சிகள் தடம்மாறிவிட்டனர். இதனால் வழக்கில் நீதி கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டது. சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று கேட்டோம். அப்போது உள்துறை அமைச்சராக இருந்த கொடியேரி பாலகிருஷ்ணன் உதவியதால், சி.பி.ஐ-க்கு வழக்கு மாற்றப்பட்டது. என் சகோதரர் மோகனன் என்னுடன் உறுதுணையாக நின்றார். 13 ஆண்டுகளுக்குமுன், ஓணம் பண்டிகை சமயத்தில் நடந்த சம்பவத்துக்கு, இப்போது ஓணம் பண்டிகையின்போது குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்திருக்கிறது. இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வரை அந்த போலீஸார் சென்றும் பயனில்லை. இனி எந்த கோர்ட்டுக்குச் சென்றாலும், மரண தண்டனையில் மாற்றம் இருக்காது. தவறு செய்யும் போலீஸார், இதைப் பார்த்துத் திருந்துவார்கள்.”
“தவறு செய்யும் போலீஸார் இனி திருந்துவார்கள்!” - தண்டனை வாங்கித் தந்த கேரளத் தாய்
“உங்கள் ஜீவனத்துக்கு  என்ன செய்கிறீர்கள்?”

“என் மகன், சம்பாதிக்கத் தொடங்கிய 26 வயதில் கொலை செய்யப்பட்டு விட்டான். என் நிலை அறிந்து அச்சுதானந்தன் முதல்வராக இருந்தபோது, இந்த வீட்டையும் தந்து, மூன்று லட்சம் ரூபாயும் வழங்கினார்கள். அதை வைத்து வாழ்க்கையை நடத்திவருகிறேன்” என்று கூறிய பிரபாவதி அம்மாவிடம், “புகைப்படம் எடுக்க வேண்டும். வேறு உடை மாற்றிவாருங்கள்” என்றோம். “என் உடை இதுதான். என் மகனின் புகைப்படம்கூட என்னிடம் இல்லை. சிறுவயதிலே புகைப்படம் எடுக்குமாறு அவனிடம் கூறினேன். அவன் எடுக்கவில்லை. இப்போது எல்லோரும் வந்து என்னைப் புகைப்படம் எடுக்கிறார்கள்” என்று கண்கலங்கினார்.

- ஆர்.சிந்து

படங்கள்: ரா.ராம்குமார்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment