Thursday, August 09, 2018

கூட்டணி மாறுதோ! - அ.தி.மு.க.வைத் திணறடிக்கும் தினகரன் திட்டம்

“தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸ் கட்சி விலகி எங்களை அணுகினால் கூட்டணி வைக்கத் தயார்” என்று பெங்களூரு சிறையில் சசிகலாவைச் சந்தித்த பிறகு அதிரடியாக தினகரன் அறிவித்தது, தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

‘‘இது திடீர் அறிவிப்பு அல்ல... திட்டமிட்ட அறிவிப்பு’’ என்கிறார்கள் தினகரன் தரப்பினர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை ஆரம்பித்துவிட்டார்  தினகரன். மண்டல நிர்வாகி களையும், புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களையும் தினகரன் அறிவித்துள்ளார். மாவட்டச் செயலாளர்கள், மண்டல நிர்வாகிகள், தொகுதிப் பொறுப்பாளர்கள் ஆகியோரை அழைத்து ஆகஸ்ட் 9-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தவிருக்கிறார். இந்த நிலையில், காங்கிரஸ் கூட்டணி குறித்த திடீர் அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். இதன் பின்னணி என்ன? தினகரன் வட்டாரத்தில் பேசினோம்.
கூட்டணி மாறுதோ! - அ.தி.மு.க.வைத் திணறடிக்கும் தினகரன் திட்டம்
‘‘தனி அணியாக இயங்கினாலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற பெயரை அறிவித்து, 2018 மார்ச் மாதத்தில்தான் தினகரன் தீவிரமாகச் செயல்பட ஆரம்பித்தார். ஏப்ரல் மாதம் உறுப்பினர் சேர்க்கை தொடங்கியது. சும்மா கணக்குக் காட்டும் நடவடிக்கையாக இது இல்லை. ஆதார் எண்ணுடன் உறுப்பினரின் செல்போன் நம்பரும் படிவத்தில் இடம்பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. பெண் உறுப்பினர்கள் தங்கள் செல்போன் நம்பரைத் தரத் தயங்கினால், கணவர் அல்லது தந்தையின் நம்பரை அளிக்கலாம் என்று விதிவிலக்கு தரப்பட்டது. ‘ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஒரு லட்சம் உறுப்பினர்கள்’ என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

ஜனவரி மாதம் அ.தி.மு.க-விலும் உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டு, மார்ச் 31-ம் தேதி இறுதிசெய்யப்படும் என அறிவித்தார்கள். ஆனால், மார்ச் வரை 30 லட்சம் உறுப்பினர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டனர். அதனால், இதுவரை ஐந்து முறை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இப்போது, ஆகஸ்ட் இறுதிக்குள் உறுப்பினர் சேர்க்கையை முடித்துவிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒன்றரை கோடி உறுப்பினர்களைக் கொண்ட அ.தி.மு.க-வில், இதுவரை 75 லட்சம் பேர் மட்டுமே மீண்டும் உறுப்பினர்களாகி உள்ளனர். ஆனால், தினகரன் கட்சியில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் சராசரியாக 40 ஆயிரம் பேர் இணைந்துள்ளனர். இப்போது, அ.தி.மு.க-வைவிட அ.ம.மு.க-வின் உறுப்பினர் எண்ணிக்கை அதிகம்.

சில நாள்களுக்கு முன்பு, தமிழ்நாடு அரசியல் நிலவரம் குறித்து ராகுல் காந்தி தன் ஆலோசகரான ராஜுவிடம் பேசியுள்ளார். முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜு, ஆந்திராவில் பல ஆண்டு காலம் பணியாற்றியவர். அதனால் அவருக்குத் தமிழக அரசியல் சூழலும் தெரியும். ‘காங்கிரஸ், தினகரன் கட்சி, பா.ம.க கூட்டணி அமைந்தால் எப்படி இருக்கும்’ என்று அவரிடம் ராகுல் கேட்டுள்ளார். இந்தத் தகவல், எங்களுக்குத் தெரியவந்தது. அதையடுத்துதான், ‘தி.மு.க கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால், நாங்கள் கூட்டணி வைக்கத் தயார்’ என்று தினகரன் கூறினார். ஏற்கெனவே, தமிழக அரசியல் நிலவரம் குறித்து சர்வே செய்ய ஒரு குழுவை தமிழகத்திற்கு அனுப்பினார் ராகுல் காந்தி. தினகரன் கட்சிக்குக் கணிசமான செல்வாக்கு இருப்பதை அந்தக் குழுவும் ராகுலிடம் சொல்லியுள்ளது. ஆனால், தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி இன்னும் தொடர்வதால், ராகுல் எந்த முடிவும் எடுக்கவில்லை. நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், தி.மு.க-வுடன் தொகுதிப் பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டால், காங்கிரஸ் கட்சி எங்கள் பக்கம் சாயும் வாய்ப்பு உள்ளது” என்றனர். 

‘‘கூட்டணிப் பேச்சுவார்த்தையை ஆரம்பிப் பதற்கு முன்பாகவே, ஒரு கோடி உறுப்பினர்களை நம் கட்சியில் இணைத்துவிட்டால் போதும். உண்மையான அ.தி.மு.க என் பின்னால்தான் உள்ளது என்ற நிலையை ஏற்படுத்திவிடலாம்’’ என்று தினகரன் சொல்கிறார். ‘‘இதைப் பொறுப்பாளர்களிடம் வலியுறுத்தவே ஆகஸ்ட் 9-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது’’  என்கிறார்கள் தினகரனுக்கு நெருக்கமானவர்கள். 
தனக்கு நெருக்கமானவர்களிடம் சமீபத்தில் பேசிய தினகரன், ‘‘நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வந்துவிடும். அதில் முழுபலத்தையும் காட்டி அ.தி.மு.க-வை வீழ்த்திவிட்டால், நாடாளுமன்றத் தேர்தலில் நாம் மைய சக்தியாக மாறிவிடுவோம். அ.தி.மு.க-வைத் திணறடித்து மொத்தமாகக் கரைத்துவிடலாம்” என்று உற்சாகமாகச் சொல்லியுள்ளார்.

ஆனால், ‘‘தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருக்கிறது’’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சொல்லி, தினகரனுக்கு பிரேக் போட்டிருக்கிறார். இன்னொரு பக்கம் அ.தி.மு.க வட்டாரத்திலும் இதையெல்லாம் மறுக்கிறார்கள். ‘‘தன்மீது இருக்கும் வழக்குகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக எப்படியாவது பி.ஜே.பி பக்கம் போகவேண்டும் என தினகரன் துடிக்கிறார். இதற்காக டெல்லியில் பலரிடமும் பேசிப் பார்த்தார். ஆனால், பி.ஜே.பி தலைவர்களை அவரால் அணுகமுடியவில்லை. அதனால், ‘காங்கிரஸ் கூட்டணிக்குத் தயார், ராகுல் காந்தியுடன் பேசப் போகிறேன்’ என வதந்திகளைப் பரப்புகிறார். இதைப் பார்த்துவிட்டு பி.ஜே.பி தலைவர்கள் அழைத்துப் பேசுவார்கள் என அவர் நினைக்கிறார். சமீபத்தில் அவர் ராகுல் காந்தியைச் சந்திக்க முயற்சி செய்ததாகவும் தகவல் கிடைத்தது. தமிழக காங்கிரஸ் வி.ஐ.பி ஒருவர், இதற்காக ராகுல் காந்தியுடன் பேசினார். ஆனால், தினகரனை சந்திக்க ராகுல் அப்பாயின்ட்மென்ட் கொடுக்கவில்லை’’ என்று அ.தி.மு.க அமைப்புச் செயலாளர் ஒருவர் நம்மிடம் சொன்னார்.  
   
தினகரன் சொன்ன ஒற்றை வரி, தமிழகத்தில் கூட்டணிக் கணக்குகளைப் புதிதாகப் போட வைத்துள்ளது. 

- அ.சையது அபுதாஹிர்

படம்: க.சதீஷ்குமார்
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment