Thursday, August 09, 2018

தாய்லாந்தில் ஜாலி... கொடைக்கானலில் ஹேப்பி! - மறுமதிப்பீடு மங்காத்தா!

‘கல்லூரிக்கு தினமும் போய், தலையணை சைஸில் இருக்கும் புத்தகத்தை மாங்கு மாங்கென படித்து, தேர்வு எழுதும் சிரமம் உங்களுக்கு வேண்டாம். எங்களிடம் வாருங்கள். மறுமதிப்பீட்டில் உங்களின் 7 மார்க்கை 70 மார்க்காக மாற்றுகிறோம்’ என விளம்பரம் செய்யாமலேயே அண்ணா பல்கலைக்கழகத்தில் கோடிகளில் மோசடி செய்திருக்கிறார்கள். 

இங்கு மறுமதிப்பீட்டில் நடந்திருக்கும் மோசடிகள் ஒவ்வொன்றும் பதற வைக்கின்றன. பாஸ் ஆக வைப்பதற்கு, ஒரு தேர்வுத் தாளுக்கு ரூ.10 ஆயிரம் வீதமும், அதிக மார்க் போட இன்னும் அதிகப் பணம் என்று பல கோடி வசூல் செய்திருக் கிறார்கள் அண்ணா பல்கலைக் கழகப் பேராசிரியர்கள். அரியர் வந்தால், பல்கலைக்கழகத்துக்கு வருமானம், மறுமதிப்பீடு செய்தால் பேராசிரியர்களுக்கு வெகுமானம், மாணவர் களுக்கோ நேரடித் தேர்வைவிட மறுமதிப்பீட்டில் அதிக மதிப்பெண் என ஒரே கல்லில் பல மாங்காய் டீலிங் செய்து கொண்டாடி மகிழ்ந்திருக் கிறார்கள் மோசடி பேராசிரியர்கள்.
தாய்லாந்தில் ஜாலி... கொடைக்கானலில் ஹேப்பி! - மறுமதிப்பீடு மங்காத்தா!
உலகெங்கும் அறியப்பட்ட பல்கலைக்கழகம் என்ற பெருமை, அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உண்டு. பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த முன்னணி நிறுவனங்களில், அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு தனி மரியாதை உண்டு. இவை அனைத்தையும் குழிதோண்டிப் புதைத்திருக்கிறது இந்த ‘மறுமதிப்பீடு மங்காத்தா’ விவகாரம். திறமையாகப் படித்து, நல்ல மதிப்பெண் பெற்றுத் தேர்வான அத்தனை மாணவர்களையும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கவைத்திருக்கிறது இந்த மோசடி.

தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை இதுதொடர்பாக 10 பேர்மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இவர்களில், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த பேராசிரியர் உமா, உதவிப் பேராசிரியர்கள் விஜயகுமார், சிவகுமார் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். தவிர, குற்றம் சாட்டப்பட்டுள்ள மறுமதிப்பீட்டு தேர்வு ஆய்வாளர்கள் ஏழு பேரிடம் விசாரணையை போலீஸார் தீவிரப்படுத்தியுள்ளனர். அவர்களின் வீடுகளில் நடத்திய சோதனையில் தேர்வுகள் தொடர்பாக சில ஆவணங்களைக் கைப்பற்றி யுள்ளார்கள். விசாரணைக்கு ஆஜராகுமாறு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு செமஸ்டரிலும் சுமார் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள். இவர்களில் சுமார் மூன்று லட்சம் பேர், தங்களுடைய விடைத்தாள் நகல் வேண்டும் என விண்ணப்பிக்கின்றனர். இதற்கான கட்டணம் 300 ரூபாய். இவர்கள் தங்களுடைய விடைத்தாளைப் பார்வையிட்டு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கக் கட்டணம் 400 ரூபாய். ஒரு தேர்வுத்தாளுக்கு 700 ரூபாய் செலுத்தி மறுமதிப்பீடு செய்கின்றனர். இதில் அதிகாரபூர்வமாகப் பல்கலைக்கழகத்துக்கு நல்ல வருமானம். மறைமுகமாக, இதை வைத்துத் தரகர்கள் பேரம் நடத்தி மாணவர்களின் மதிப்பெண்களை அதிகமாக்கித் தருகின்றனர். ஆண்டுக்கு இரண்டு முறை செமஸ்டர் தேர்வுகள் நடப்பதால், ஒவ்வோர் ஆண்டும் மறுமதிப்பீடு செய்யவேண்டி விண்ணப்பம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதற்கு ஏற்றபடி ஊழலின் அளவும் அதிகரித்திருக்கிறது. ஆரம்பத்தில் அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு இப்படிச் செய்துகொடுத்துள்ளனர். இதுவே நாளடைவில் கோடிக்கணக்கில் பணம் பார்க்கும் பாதையாகியிருக்கிறது.

‘‘கடந்த 10 ஆண்டுகளாகவே தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறையில் ஊழல் நடந்துவந்திருக்கிறது. தற்போது பெரிய அளவில் நடந்திருப்பதால் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது’’ என்கிறார் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி.

‘‘துணைவேந்தர் பதவியைப் பணம் கொடுத்துக் கைப்பற்றுவதே இவ்வளவுப் பிரச்னைக்கும் மூல காரணம். துணைவேந்தர் சம்பாதிக்க வேண்டும் என்பதால், பேராசிரியர்களிடம் பல வகையில் கையை நீட்டுகிறார்கள்; தகுதியில்லாதவர்களுக்கு உயர்பதவி வழங்கி அவர்களையும் இடைத்தரகர்களாக மாற்றுகின்றனர். இதில் தேர்வுத்துறையும் தப்பவில்லை. துணைவேந்தருக்குப் பங்கு கொடுப்பவர்கள், அவர்களுக்கு வேண்டிய தொகையையும் சம்பாதித்துக்கொள்கிறார்கள். 

ஒன்றிரண்டு பேரை மட்டும் சஸ்பெண்டு செய்வதால், இந்தக் களங்கத்தைத் துடைத்துவிட முடியாது. இங்கு கடந்த 10 ஆண்டுகளில் துணைவேந்தர்களாகப் பதவி வகித்தவர்கள், பதிவாளர்கள், தேர்வுக்கட்டுப்பாட்டுத் துறை பணியில் இருந்தவர்கள் என அனைவரையும் விசாரிக்க வேண்டும். அப்போதுதான் பல மர்ம முடிச்சுகள் அவிழும். தேர்வு விடைத்தாள் முறைகேடு என்பது அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டுமல்ல, எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் நடக்கிறது. இனியாவது உயர்கல்வித் துறை உஷாராக வேண்டும்’’ என்றார் அவர்.
தாய்லாந்தில் ஜாலி... கொடைக்கானலில் ஹேப்பி! - மறுமதிப்பீடு மங்காத்தா!
‘பொறியியல் கலந்தாய்வின்போது, அனைத்து மாணவர்களும் கல்லூரியின் தரத்தைத் தெரிந்துகொள்ளும்விதமாக, தேர்ச்சி விகிதத்தை வெளியிட வேண்டும்’ என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனால், அனைத்துக் கல்லூரிகளின் செமஸ்டர் தேர்வு முடிவுகளையும் இணையத்தில் வெளியிட்டது அண்ணா பல்கலைக்கழகம். இதனால் பல தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் உண்மை முகம் வெளியே தெரிய ஆரம்பித்தது. தங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்களைக் கூடுதல் மதிப்பெண் எடுக்கவைத்து, தங்கள் கல்லூரியின் ரேங்கை உயர்த்திக்கொள்ள வேண்டும் என பல கல்லூரிகள் வசூலில் இறங்கின. 

தமிழ் மாநில காங்கிரஸ் மாணவர் அணித் தலைவர் சுனில் ராஜா, “3.3.2015 முதல் 2.3.18 வரை தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பேராசிரியர் ஜி.வி.உமா-வை நியமித்தவர், அப்போதைய துணைவேந்தர் ராஜாராம். ஆனால், ராஜாராம் ஓய்வுபெற்ற பிறகு, பதிவாளர் கணேசன் பொறுப்பில் அண்ணா பல்கலைக்கழகம் இருந்தபோதுதான் இந்த மோசடி நடந்துள்ளது. 2013-ம் ஆண்டு பொறுப்புப் பதிவாளராக நியமிக்கப்பட்ட கணேசன், 2014-ம் ஆண்டு முழுநேரப் பதிவாளர் ஆக்கப்பட்டார். மூன்று ஆண்டு பதவிக்காலம் முடிந்தபிறகும் அவரையே பொறுப்புப் பதிவாளராக மீண்டும் இப்போது நியமித்துள்ளார்கள். பல்கலைக்கழகத் தேர்வுக்கட்டுப்பாட்டு அதிகாரியாக உமாவுக்கு முன்பு பணியாற்றிய வெங்கடேசன் என்பவரே இப்போது தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆக்கப்பட்டுள்ளார். இப்படி, குறிப்பிட்ட சிலர்தான் பல்கலைக்கழகத்தின் முக்கியப் பொறுப்புகளை தங்களது, ‘சிறப்புத் திறமைகள்’ மூலம் கைப்பற்றுகிறார்கள். அதிரடி நடவடிக்கை எடுத்தால்தான் பல்கலைக்கழகம் உருப்படும்’’ என்றார்.

சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள பேராசிரியர் ஜி.வி.உமா, ‘‘தேர்வு முறைகளில் வெளிப்படைத் தன்மையை என் காலத்தில் கொண்டுவந்தேன். விடைத்தாள்களைத் திருத்தும் ஒவ்வொரு ஆசிரியரிடமும், ‘கீ’ அடிப்படையில் அவர்கள் போடும் மதிப்பெண்கள் குறித்து ஒப்புதல் சான்று பெறப்படுகிறது. கீழ்மட்ட அளவில் ஏதாவது ஒழுங்கீனம் நடந்தால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. ஒவ்வொரு செமஸ்டரிலும் 64 லட்சம் பேப்பர்கள் திருத்தப்படுகின்றன. 2017 ஏப்ரல், மே செமஸ்டர் முடிவுகளை வைத்து மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பித்த 3,02,380 பேரில் 73,733 மாணவர்கள் பாஸ் ஆகியிருக்கிறார்கள். 16,636 மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார்கள். 10 ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு மதிப்பெண் போட்டோம் என்பது பொய்யான குற்றச்சாட்டு. இதுகுறித்து, துணைவேந்தர் சூரப்பாவிடம் விளக்கம் சொல்லிவிட்டேன். ரிசல்ட்கள் குறித்த சில புள்ளிவிவரங்களை மட்டுமே போலீஸார் என் வீட்டில் எடுத்தனர். வேறு எந்த ஆவணங்களையும் எடுக்கவில்லை’’ என்றார்.  

துணைவேந்தர் சூரப்பா, ‘‘இந்த ஏப்ரல் மாதம்தான் நான் பொறுப்பேற்றேன். மறுமதிப்பீடு முறைகேடு பற்றி மே மாதம் எனக்குத் தகவல் கிடைத்தது. உடனே, ஒரு குழுவை அமைத்து விசாரித்தேன். நாங்கள் நினைத்ததைவிட மிகப்பெரிய அளவில் ஊழல் நடக்கிறது என்பதைக் கண்டுபிடித்தோம். இதற்கிடையே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்கள். மறுமதிப்பீடு முறைகேடு நெட்வொர்க் மிகப்பெரியது. உறவினர்களை, ஒரே சாதியினரை முக்கியப் பொறுப்புகளில் அமர்த்துவதும் நிறையப் பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கிறது. 

அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்கள், குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு தேர்வு எழுதும்போது பாடத்திட்டமே மாறிவிடுகிறது. எனவே, எப்படியாவது பாஸாகிவிட வேண்டும் என்று அலைகிறார்கள். இதற்கென திரியும் இடைத்தரகர்களை வைத்துக் காரியங்களைச் சாதிக்கிறார்கள். இனிமேல் இந்தத் தவறு நிகழாமல் பார்த்துக்கொள்ளப்படும்’’ என்று உறுதியுடன் சொன்னார். 

பல்கலைக்கழகத்தின் இந்த தலைகுனிவுக்கு, தலைமைப் பொறுப்புக்குக் குறுக்கு வழியில் வந்தவர்கள்தான் காரணம் என்கிறார்கள் பல்கலைக்கழக ஊழியர்கள். ‘‘இடைத்தரகர்கள் மூலம் உயர்கல்வித் துறையின் பவர் சென்டர்களைக் கைக்குள் போட்டுக்கொண்டனர். பொருளாதாரத் தேவை முதல் அந்தரங்கத் தேவைகள் வரை முடித்துக்கொடுத்தனர். தாய்லாந்து ஜாலி டூர், கொடைக்கானல் குஷி ட்ரிப் என்று விதவிதமான சர்வீஸ்களை ஏற்பாடுசெய்துகொடுத்து, காரியங்களைச் சாதித்தனர். உயர்கல்வித்துறையில் முக்கியப் பொறுப்பில் இருந்த பெண் அதிகாரி ஒருவர் பெங்களூரில் கட்டிய பங்களாவுக்கு, அனைத்து செலவுகளையும் இடைத்தரகர் ஒருவரே ஏற்றார். அந்த வீட்டின் மதிப்பு ரூ.2 கோடியைத் தாண்டும். 

பல்கலைக்கழக உயர்பதவியில் இருந்த ஒருவர், தாய்லாந்து டூர் சென்றிருந்தபோது அழகிகளுடன் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்துவிட்டார் ஓர் இடைத்தரகர். அதைக் காட்டியே பல காரியங்களைச் சாதித்தார் அவர். அதற்காக, பல்கலைக்கழக விதிகளை மீறி நூற்றுக்கும் மேற்பட்ட நியமனங்களுக்குக் கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்திட்டார் அந்த அதிகாரி. உயர்கல்வித் துறையிலும் பல்கலைக்கழகத்திலும் இதுபோன்ற இடைத்தரகர்கள் வைத்ததே சட்டம். இதுதான் இத்தனை சீரழிவுகளுக்கும் காரணம்’’ என்கிறார்கள் அவர்கள்.

அண்ணா பல்கலைக்கழகம் மீண்டுவர அவசர ஆபரேஷன் தேவைப்படுகிறது.

- எஸ்.முத்துகிருஷ்ணன், ஞா.சக்திவேல் முருகன்

படம்; பிரேம் டாவின்ஸி

சூத்ரதாரி விசு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தேர்வு எழுதிய விடைத்தாள்களை, ஓராண்டு கழித்து ‘பழைய பேப்பர்’ என்று விற்பனை செய்வார்கள். அவற்றை எடுக்கும் வியாபாரியாகப் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்தவர் விசு என்கிற வீரவிஸ்வாமித்திரன். ‘‘பொருளாதாரத்தேவை மட்டுமல்ல, குறிப்பிட்ட அதிகாரியின் அந்தரங்கத் தேவை வரை அறிந்து வைத்துக்கொண்டு, அவற்றை செய்துகொடுத்து காரியம் சாதிப்பதில் கில்லாடி இவர்’’ என்கிறார்கள் பல்கலைக்கழக வட்டாரத்தில். ‘‘பல்கலைக்கழகத் தற்காலிகப் பணியாளர்கள் நியமனம் தொடங்கி, டெண்டர் வரை அனைத்தும் விசு கண் அசைவுக்குக் கட்டுப்பட்டே நடக்கின்றன’’ என்கிறார்கள். ‘கலர் கண்ணாடிகள்’ என்ற படத்தையும் தயாரித்துள்ளார் வீர விஸ்வாமித்திரன். இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் கணேசன் கலந்துகொண்டார்.

மார்ட்டின் ஜவஹர் என்ற அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர், 8.6.18 அன்று தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கும், துணைவேந்தர் சூரப்பாவுக்கும் ஒரு புகார் அனுப்பியுள்ளார். ‘தனியார் கல்லூரிகள் அங்கீகாரம், புதிய பாடங்களை அனுமதித்தல், கூடுதல் மாணவர்கள் சேர்க்கை என்று பல்வேறு நிலைகளில் அண்ணா பல்கலைக்கழகம் வசூல் வேட்டை செய்துள்ளது. இதுதொடர்பாக பதிவாளர் கணேசன் உள்ளிட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அதில் வலியுறுத்தியுள்ளார். இந்தப் புகாரை அடுத்து, பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியுள்ள பேராசிரியர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவர்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

எப்படி நடந்தது?
2017 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ள 593 கல்லூரிகளின் மாணவர்கள் செமஸ்டர் தேர்வு எழுதினார்கள். இந்த விடைத்தாள்கள் தமிழகம் முழுக்க 23 மையங்களில் திருத்தப்பட்டன. ரிசல்ட் வெளியானதும், 3,02,380 மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பம் செய்தார்கள். மறுமதிப்பீடு திண்டிவனத்தில் 2017 ஆகஸ்ட்டில் நடந்தபோதுதான் இந்த முறைகேடு நிகழ்ந்துள்ளது. இதை, சாமர்த்தியமாக செய்துள்ளார்கள்.

அதாவது, முதலில் வெளியான ரிசல்ட்டில் ஒரு மாணவர் ஏழு மார்க் வாங்கியிருக்கிறார் என வைத்துக்கொள்வோம். மறுமதிப்பீட்டில் அவருக்கு 45 மதிப்பெண்கள் போட்டால், அவர் பாஸ். பணம் வாங்கியவர்கள், இதை உறுதிசெய்துவிடுவார்கள். ஆனால், விஷயம் அத்துடன் முடியாது. முதலில் வாங்கிய மதிப்பெண்களைவிட 15 சதவிகிதத்துக்கும் அதிகமாக மறுமதிப்பீட்டில் மார்க் வாங்கினால், மூன்றாவது பேராசிரியர் ஒருவர் அதை மீண்டும் மதிப்பீடு செய்ய வேண்டும். அவர் ஒரு மார்க்கோ, இரண்டு மார்க்குகளோ அதிகமாகப் போட்டு, அதையே இறுதி மதிப்பெண்களாகக் கருதி முடிவெடுக்கலாம். சில மாணவர்கள், கூடுதல் மதிப்பெண்கள் வேண்டும் என டீல் பேசியிருப்பார்கள். அதுபோன்ற சூழலில், இந்த மூன்றாவது பேராசிரியர் 70 மதிப்பெண்கள் போடுவார். 7, 45, 70 என்ற இந்த மூன்று மதிப்பெண்களில் ‘அதிக வித்தியாசம் இல்லாத சிறந்த மதிப்பெண்ணே இறுதி மதிப்பெண்ணாகக் கருதப்படும்’ என்பது விதி. 7-க்கும் 45-க்கும் இடைவெளி அதிகம். 45-க்கும் 70-க்கும் இடைவெளி குறைவு. எனவே, இதை அடிப்படையாக வைத்து, இதில் சிறந்த மதிப்பெண்களான 70 மதிப்பெண்களே அவர் வாங்கியது என இறுதி செய்யப்படும். 

இப்படிச் செய்துவிட்டு, பலரின் விடைத்தாள்களையும் சாமர்த்தியமாக அழித்துவிட்டார்கள். இதனால்தான், எத்தனை பேரின் ரிசல்ட்டில் இப்படி மோசடி நடந்துள்ளது என்பதைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறுகிறது. 

தாய்லாந்தில் ஜாலி... கொடைக்கானலில் ஹேப்பி! - மறுமதிப்பீடு மங்காத்தா!
உமாவை சிக்கவைத்தது யார்?

சர்ச்சைக்குரிய இந்த மறுமதிப்பீட்டில் 73,733 மாணவர்கள் பாஸ் ஆனார்கள். 16,636 மாணவர்கள் கூடுதல் மதிப்பெண்கள் பெற்றனர். இவ்வளவு பேருக்கு மதிப்பெண்களில் வித்தியாசம் வருகிறது என்றால், முதலில் திருத்தியது சரியில்லை என்றுதானே அர்த்தம்! எனவே, விடைத்தாள்களை முறையாகத் திருத்தாத 1,040 பேராசிரியர்களுக்கு மூன்று ஆண்டுவரை விடைத்தாள் திருத்தத் தடை போட்டார், அப்போதைய தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி.உமா. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தச் செய்தி பரபரப்பானது. இதற்குத் தனியார் மற்றும் அரசுக் கல்லூரிப் பேராசிரியர்கள் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படி அதிரடி நடவடிக்கை எடுத்த உமா மீதுதான் இப்போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள பிரபலத் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில், உயர்கல்வித் துறை உயர் அதிகாரி ஒருவரின் மகள் படித்துவந்தார். அவர், இந்த ஆண்டுதான் பொறியியல் படிப்பை முடித்தார். அவர், பல்கலைக்கழக அனுமதி இல்லாமல் மூன்று மாதங்கள் வெளிநாடு சென்றுள்ளார். மேலும், விடைத்தாள் திருத்தும் பணிக்கு அக்கல்லூரி பேராசிரியர்களுக்கு தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஜி.வி.உமா, ‘விலக்கு’ கொடுக்கவில்லை. இந்த இரண்டு விஷயங்களிலும் உயர்கல்வித்துறை அதிகாரிக்கும் உமாவுக்கும் மோதல் இருந்தது. அதற்குப் பழிவாங்கவே இப்போது அந்த அதிகாரி உமாவை சிக்கவைத்துவிட்டார் என்று உமாவின் நெருங்கிய வட்டாரங்களில் சொல்லி வருகிறார்கள்.
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment