Thursday, August 09, 2018

காவிரி ஆறு... ஈரோட்டில் இது கேன்சர் ஆறு!

‘சாயப்பட்டறை’ என்றால் பலருக்கு திருப்பூர் மாவட்டமும், சாயக்கழிவுகளால் நொய்யல் நதி நாசமானதும் நினைவுக்கு வரும். ‘தோல் தொழிற்சாலை’ என்றால், வேலூர் மாவட்டமும், தோல் தொழிற்சாலைக் கழிவுகளால் பாலாறு பாழானதும் நினைவுக்கு வரும். ஆனால், சாயப்பட்டறைக் கழிவுகளும் தோல் தொழிற்சாலைகளைக் கழிவுகளும் ஒட்டுமொத்தமாகக் கலந்து ஈரோடு மாவட்டத்தில் காவிரி ஆற்றையே சத்தமில்லாமல் கபளீகரம் செய்துகொண்டிருப்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? 

கர்நாடகாவில் கனமழை பெய்து காவிரியில் வெள்ளம் வந்துகொண்டிருக்கிறது. இந்தத் தண்ணீரில் எப்போது கழிவுகளை அதிக அளவில் திறந்துவிடலாம் என்று காத்திருக்கின்றன தொழிற்சாலைகள். ஈரோடு மாவட்டத்தில் பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன்பள்ளம் ஓடை என்ற இரு ஓடைகள் காவிரி ஆற்றில் சென்று கலக்கின்றன. அந்த இரண்டு ஓடைகளுக்கு இடையில் அமைந்திருப்பதால் ‘ஈரோடை’ என்றழைக்கப்பட்டதே ஈரோடு என்றானது. இந்த இரண்டு ஓடைகளுடன், ராஜவாய்க்கால், காளிங்கராயன் வாய்க்கால், சுண்ணாம்பு ஓடை ஆகிய நீர்நிலைகளும் பல்வேறு கிளைகளாகப் பிரிந்து ஈரோடு முழுவதும் பாய்ந்து,  இறுதியாக காவிரியிலும் அதன் கிளை நதியான பவானியிலும் கலக்கின்றன. இந்த ஓடைகள் மற்றும் வாய்க்கால்களுக்கு அருகிலும், அவற்றைச் சுற்றிலும் 468 சாயத் தொழிற்சாலைகளும், 37 தோல் தொழிற்சாலைகளும் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, அவற்றின் கழிவுநீரை இந்த நீர்நிலைகளில்தான் திறந்துவிடுகின்றன. இதனால் நிலக்கடலை, மஞ்சள், கரும்பு, எள் என விவசாயத்துக்குப் பெயர்பெற்ற ஈரோட்டின் நிலங்கள், மலட்டுத்தன்மை அடைந்துவருகின்றன. இன்னொரு பக்கம், புற்றுநோய் போன்ற பயங்கரப் பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
காவிரி ஆறு... ஈரோட்டில் இது கேன்சர் ஆறு!
ஈரோடை என்ற பொதுநல அமைப்பைச் சேர்ந்த மருத்துவர்கள் நடத்திய ஆய்வில், ஈரோடு மாவட்டத்தில் நாளொன்றுக்குக் குறைந்தது 15 பேர் புதிதாகப் புற்றுநோய் சிகிச்சைக்காக மருத்துவமனைகளை நாடுகின்றனர் என்பதும், காய்ச்சல் மற்றும் இதர நீர் சார்ந்த நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஈரோட்டில் அதிகம் என்பதும் தெரியவந்தது. மாநகராட்சியின் குடிநீர் குழாய்களில் வரும் நீரை எடுத்து அவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். அதில், புற்றுநோயை உருவாக்கும் கார்சினோஜன் வேதிப்பொருள்கள் தண்ணீரில் அதிகளவில் இருந்தது தெரியவந்துள்ளது. நீருக்கான பி.ஹெச் மதிப்பு 6.5 முதல் 8.5-க்குள் இருக்க வேண்டும். ஈரோடு மாவட்டத்தில் பாயும் காவிரியின் சில பகுதிகளில், அதன் மதிப்பு பி.ஹெச் மதிப்பு 6  ஆக உள்ளது. திரவத்தின் பி.ஹெச் மதிப்பு 7-க்குக் கீழே என்றால், அது அமிலம் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொழிற்சாலைகளுக்கு அருகில் இருக்கும் பகுதிகளில் உள்ள விவசாயக் கிணறுகளில் சாயத் தண்ணீரே வருகிறது. மாநகராட்சிக் குடிநீர்க் குழாயில் அவ்வப்போது சிக்கும் தோல் திடக் கழிவுகளும் அதற்கான சாட்சிகளாக நிற்கின்றன.
காவிரி ஆறு... ஈரோட்டில் இது கேன்சர் ஆறு!
20 வருடங்களாக இந்தப் பகுதியில் வாழ்ந்துவரும் விவசாயி ஆண்டமுத்து, ‘‘கிணத்துத் தண்ணியதானுங்க முதல்ல குடிக்கறதுக்கு எடுத்துக்கிட்டிருந்தோம். இப்போ பூரா சாயக்கழிவுதான் இருக்கு. இந்த தண்ணிய விட்டுப் பயிரெல்லாம் கருகிடுது. தண்ணிய வாயில வைக்க முடியாது. அவ்ளோ கசப்பு. என்னோட கிணத்து நம்பர் 199. இதே வரிசையில மத்த கிணறுகளுக்கும் இதே நிலைமைதான்’’ என்றார். 

தோல் தொழிற்சாலைகளுக்கு மத்தியில் இருக்கும் குடியிருப்புக்களுக்குச் சென்றோம். அங்கு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்த நாகராஜ், அன்பரசு ஆகியோரின் குடும்பத்தினரைச் சந்தித்தோம். ‘‘கேன்சர்னு சொன்னாங்க. எப்படி கேன்சர் வந்துச்சுன்னு கடைசிவரை சரியா சொல்ல முடியலன்னு டாக்டர்கள் சொல்லிட்டாங்க. சக்திக்குமீறி செலவு செய்தோம். ஆனா காப்பாத்த முடியல’’ என அன்பரசுவின் தாய் பேசிக் கொண்டிருக் கையில் அவர்கள் நமக்குக் கொடுத்த தண்ணீரிலும் அவர்களது வாழ்க்கை யின் கசப்பு எதிரொலித்து, விபரீதத்தை உணர்த்தியது.

தோல் தொழிற்சாலைகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாக இயங்கிவரும் சமூக ஆர்வலர்களான விஜய், வேலுசாமி ஆகியோரின் மூலமாகத்தான் நாகராஜின் குடும்பம் அறிமுகமானது. புற்றுநோயால் இறந்த அவருக்கு மூன்று குழந்தைகள். முதல் பிள்ளைக்கு மூளை வளர்ச்சி இல்லை. வளர வளர கண் பார்வையில் குறைபாடு ஏற்பட்டது. இரண்டாவது பெண்ணுக்கு, ஆறு வயது குழந்தைக்கு இருக்கும் அளவே கர்ப்பப் பை வளர்ச்சியடைந்துள்ளது. அவரால் கருத்தரிக்க முடியாது. இப்படிப்பட்ட பயங்கரப் பாதிப்புகளைச் சுமந்துகொண்டிருக்கும் பலரையும் இந்தப் பகுதியில் பார்க்க முடிந்தது.
காவிரி ஆறு... ஈரோட்டில் இது கேன்சர் ஆறு!
சில தொழிற்சாலைகளுக்கு நேரில் சென்றோம். அவற்றில் ஒன்றிரண்டைத் தவிர மற்ற தொழிற்சாலைகளில் உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டனர். அன்னை சத்யா நகர், அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில், தோல் தொழிற்சாலைகளும் குடியிருப்புகளும் அருகருகே உள்ளன. அங்கு, தொழிற்சாலைக் கழிவுகளின் துர்நாற்றத்துக்கு மத்தியில்தான் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

சுண்ணாம்பு ஓடையின் வழித்தடத்தில் மட்டுமே 40 தொழிற்சாலைகள் உள்ளன. இவற்றில் பலவும் இந்த ஓடையில்தான் கழிவுகளைத் திறந்துவிடுகின்றன. சட்டவிரோதமாகத் தொழிற்சாலைக் கழிவுகள் திறந்துவிடப்படுவது உண்மைதானா என்பதைக் கண்டறிய இரவு நேரத்தில் சென்றிருந்தோம். அப்படித் திறந்துவிடப்படுவதால் ஏற்பட்ட துர்நாற்றம் குடலைக் குடைந்து குமட்டிக்கொண்டு வந்தது. நம் விழியோரம் கண்ணீர்த்துளிகள் கசிந்தன. இந்த அனுபவம், அப்பகுதி மக்களின் துயரத்தை வார்த்தைகளின்றி விளக்கியது. 

சாயத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப் படுவது அசோ சாயங்கள் (Azo dyes). இரண்டிற்கும் மேற்பட்ட வேதிமங்களின் கூட்டுதான் அசோ சாயங்கள். இவை நீரில் கலந்தால், விளைவுகளின் வீரியத்தை அதிகப்படுத்துகின்றன. அந்த நீரைக் குடிப்பவர்களுக்கு நுரையீரல், கல்லீரல், சிறுநீரகப் பாதிப்பு தொடங்கிப் புற்றுநோய் வரை பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

இந்தப் பகுதி தோல் தொழிற்சாலைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வுசெய்த, பாதுகாப்பு குறித்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை கோவை அலுவலக ஆய்வாளர் சின்னண்ணன் கார்த்தி, ‘‘தோல் கழிவுகளில் குரோமியம் அதிகமாக இருக்கும். அது, விவசாய மண்ணில் ஒரு கிலோவுக்கு 0.05 மில்லி கிராம் அளவே இருக்கலாம். ஆனால், இங்கு மிக அதிக கிராம்களில் இருக்கிறது. உலகச் சுகாதார அமைப்பு, குடிநீரிலும் அடர் உலோகங்களின் அளவை வகுத்துள்ளது. ஈரோடு பகுதியில் கிடைக்கும் குடிநீரை அந்த அளவையின்படி ஆய்வு செய்தால், குடிக்கத் தகுதியற்றது என்று சொல்லலாம். இதைச் சரிசெய்வதற்கான ஆராய்ச்சிகள் ஆரம்ப கட்டத்திலேயே உள்ளன’’ என்றார்.
காவிரி ஆறு... ஈரோட்டில் இது கேன்சர் ஆறு!
“தென்னிந்திய நதிகளிலேயே காவிரிதான் அதிகமாக அசுத்தம் அடைந்துள்ளது. முழுமையாகக் கரையக்கூடிய திடப்பொருள்களின் அளவு கங்கையில் 130, காவிரியில் 750. குடிநீரில் லிட்டருக்குக் குறைந்தது 500 மில்லி கிராம் அளவு தாதுப்பொருள்கள் இருக்க வேண்டும். முற்றிலும் சுத்திகரிக்கப்பட்ட நீரை அருந்தக்கூடாது. இதனால் பெரியளவில் பாதிப்புகள் இல்லையே தவிர, காவிரியில் கலக்கும் ரசாயனங்கள் இவற்றைவிட அதிகம். அது இங்குள்ள நீர்வளத்தைக் குடிக்கத் தகுதியற்றதாக மாற்றிவிட்டது” என எச்சரிக்கிறார் அண்ணா பல்கலைக்கழக நிலவியல் பேராசிரியர் இளங்கோ, பிச்சைக்காரன் ஓடையில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் ஆரம்பிக்க, 2017 மார்ச்சில் அடிக்கல் நாட்டப்பட்டது. இன்னமும் இது ஆரம்ப கட்டத்தையே தாண்டவில்லை. அதனால், காவிரியில் இந்தக் கழிவுகள் கலப்பது நிற்கவில்லை.  

ஈரோடு மாநகராட்சி மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர் மலையாண்டியைச் சந்தித்தோம். ‘தொழிற்சாலைகளால் மாசடைவதைக் குறைக்க மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அமைத்துத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலானவர்கள் இரவு நேரங்களில் கழிவுநீரை வெளியேற்றுகின்றனர். ஒரு பகுதியில் ஆய்வுக்குச் செல்லும்போது, மற்ற பகுதிகளில் எச்சரிக்கையடைந்து விடுகிறார்கள். பெரும்பாலானவை சிறு தொழிற்சாலைகள். பெரும் செலவில் சுத்திகரிப்பு முறைகளைச் செய்ய அவர்களால் முடியவில்லை. அதனால், பொதுக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க அரசிடம் கேட்டுள்ளோம். விரைவில் இங்கு ஏழு பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும். அதன்மூலம் சிறு, குறு தொழிற்சாலைகள் பயன்பெறுவதுடன், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்” என்றார்.

அதுவரை காவிரி நஞ்சாவதும், கேன்சரும் தொடரும்!

- க.சுபகுணம்

படங்கள்: ரமேஷ் கந்தசாமி
News2
News2

This is a short biography of the post author. Maecenas nec odio et ante tincidunt tempus donec vitae sapien ut libero venenatis faucibus nullam quis ante maecenas nec odio et ante tincidunt tempus donec.

No comments:

Post a comment